Showing posts with label தோசை. Show all posts
Showing posts with label தோசை. Show all posts

Tuesday, July 18, 2017

கோவை மெஸ் - சட்னிஸ், பஞ்சகுட்டா, ஹைதராபாத், KOVAI MESS - CHUTNEYS, PANJAGUTTA, HYDERABAD

                     ஹைதராபாத்தின் மிகப் பிரபலமான, தென்னிந்திய உணவு வகைகளுக்கு ஃபேமஸான, நகரம் முழுக்க ஏகப்பட்ட கிளைகளை கொண்டிருக்கிற  சட்னிஸ் என்கிற ஹோட்டலுக்கு விசிட்டடித்தோம்.
பஞ்சகுட்டா என்று அழைக்கப்படும் இடத்தில் இருக்கிற ஒரு கிளைக்கு தான் சென்று இருந்தோம்.சைவ ஹோட்டல் தான்.சட்னி வகைகளுக்கு மிகவும் பிரபலம் என்று கேள்விப்பட்டதால் அங்கே ஆஜராகி இருந்தோம்.உள்ளே ஆரவாரமற்ற மெல்லிய இசையில் மூழ்கி கொண்டிருந்தபடியே வாடிக்கையாளர்கள் உணவினை ருசி பார்த்துக் கொண்டிருந்தனர்.
                 


    ஹோட்டலின் உள் அலங்காரம் மிகுந்த ஆடம்பரத்தினை கொண்டிருந்தது.அமர்ந்திருந்த வாடிக்கையாளர்களும் அவ்விதமே இருந்தனர்.உள்நுழைந்த எங்களை வரவேற்று ஒரு டேபிளில் அமரவைத்தனர்.மெனு கார்டினை பார்த்தவுடன் கொஞ்சம் மயக்கம் வராத குறைதான்.இருந்தாலும் சமாளித்தபடி மெனுக்களை ஆராய ஆரம்பித்தோம்.ஏகப்பட்ட வெரைட்டிகள்... இட்லி மற்றும் தோசை வகைகளில்..இட்லிக்களின் வெரைட்டிகள், மற்ற மெனுக்களின் வெரைட்டிகளில் மனம் ஒன்றிப்போனாலும் விலையில் கொஞ்சம் கவனம் இருக்கவே செய்தது.ஒவ்வொன்றும் செம விலையில் இருக்க, எதை தேர்ந்தெடுப்பது எதை விடுப்பது என்று மனம் குழம்பினாலும், சட்னி வகைகளின் ருசியை அறிந்திடாமல் இங்கிருந்து சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தோம்.


                     ஆந்திரா குண்டூர் இட்லி என்று ஒரு மெனு இருக்க, அதையும், ஸ்டீம் தோசை என இன்னொரு அயிட்டத்தினையும் ஆர்டர் செய்தோம்.ஆர்டர் வர லேட்டாகும் என்பதால் டேபிளிலேயே சுடோகு அட்டவணை வைத்திருக்கிறார்கள்.உணவுகள் வரும் வரை நாம் அதை பூர்த்தி செய்து கொண்டிருக்கலாம்.அப்படித்தான் நாங்களும் சுடோகினை ஆரம்பிக்க, சிறிது நேரத்திலேயே ஆறு விதமான சட்னிகள் வந்து சேர்ந்தன.பின் சுத்தமான வாழையிலையில் சற்றே பெரிய சைசில், வத்தலாய் சுட்டு விரல் தடிமனில் இரண்டு இட்லிகள், மேலே பொடி தூவப்பட்டு வந்து சேர்ந்தன.



                    சட்னியில் ஒவ்வொன்றும் எடுத்து இலையில் ஊற்றி…மன்னிக்கவும் ஊற்ற முடியாது, கெட்டி சட்னி தான், எடுத்து வைத்து, இட்லியை ஒரு விள்ளல் பிய்த்து முதலில் ஒரு சட்னியை தொட்டு ருசி பார்ப்பது, பின் ஒவ்வொரு சட்னியாய் தொட்டு ருசிபார்த்ததில் இட்லி சீக்கிரம் காலியாகிப்போனது.
இட்லியா அது…..கை வைத்தவுடனே அழகாய் பிய்கிறது.அவ்வளவு மென்மை.பெண்களின் இடைப்பிரதேசம் எப்படி மென்மையாய் இருக்குமோ அதை விட மென்மை.


                ஒவ்வொரு விள்ளலுக்கும் ஒவ்வொரு சட்னி ருசி பார்த்ததில் இட்லி சீக்கிரம் காலியாகிப்போனது.சட்னியும் இட்லிக்கு இளைத்தது அல்ல.தேங்காய் சட்னிதான்.ஆனால் அதிலும் பலவிதம்தான்.நிலக்கடலை போட்டு ஒரு வகை, பொட்டுக்கடலை போட்டு ஒரு வகை, இஞ்சியும் மிளகாயும் போட்டு ஒரு வகை, மைய அரைத்த வெறும் தேங்காய் உடன் இனிப்பு சேர்த்த ஒரு வகை, இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து புளிப்பும் இனிப்புமாய் ஒரு வகை, பருப்பு காய்கறிகள் சேர்த்து ஒரு வகை என ஆறு வித சட்னிகள் நாவை கொள்ளை கொண்டன.
           முதலில் வந்த இரண்டு இட்லியை பதம் பார்த்தபின்னும், சட்னியின் தாகம் அடங்கவில்லை.மீண்டுமொரு இட்லியை ஆர்டர் செய்து தாகத்தினை தீர்த்துக்கொண்டேன்.ஆப்பம் எனப்படும் நம்மூர் தோசையைத்தான் ஸ்டீம் தோசை என்கிற பெயரில் தருகின்றனர்.தோசையும் இட்லிக்கு சளைத்ததல்ல.அதுவும் மென்மையோ மென்மை.ஒவ்வொரு விள்ளலுக்கும் ஒவ்வொரு வகை சட்னி…செம டேஸ்ட்.இட்லி இலையில் தீர்ந்தபின்னும், வெறும் சட்னியை தொட்டு விரலை வாய்க்குள் விட்டு சப்பி சப்பி சாப்பிட்டதில் எதிரே அமர்ந்திருந்த ஒரு அம்மணியின் கண்களில் வெட்கத்துடன் கூடிய ஒரு ஏக்கப்புன்னகை மின்னலாய் மறைந்து போனதை கண்டவுடன் அதிகம் விரல்கள் சட்னியை பற்றிக்கொண்டு ஒவ்வொரு விரலாய் வாய்க்குள் வந்து சென்றன.அதிலும் நடுவிரல் இருக்கிறதே அதை சட்னியோடு சப்பி உள்ளிருந்து வெளியே இழுத்ததில் இருக்கும் சுவை இருக்கிறதே ஆஹா…அற்புதம்….
                       ஆறு வகை சட்னியில் அதிகம் காலியானது நிலக்கடலை சட்னியும், இஞ்சி சட்னியும் தான்.இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு முதலிடத்தில் இருக்கின்றன.மற்ற சட்னிகளும் விதிவிலக்கில்லை.அதுவும் செம டேஸ்ட்தான்.
       ஹைதராபாத் போனால் ஒரு முறை சென்று சாப்பிட்டு பாருங்கள்.
தென்னிந்திய உணவுகளின் சுவையில் புதிய அனுபவத்தினை உணர்வீர்கள்.இந்த சட்னீஸ் ஹோட்டலுக்கு அடிக்கடி சாப்பிட போகனும்னு நினைச்சால் கண்டிப்பா எல்லா சொத்தும் காலியாகிடும்னு நினைக்கிறேன்.விலை செம...எப்பவாது போய் சாப்பிட்டு விட்டு வரலாம்.எப்பவும் சாப்பிடனும்னு நினைச்சா அதிகமா சம்பாதிக்கனும்னு தோணுது....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Thursday, July 2, 2015

கோவை மெஸ் - திருமூர்த்தி டீ ஸ்டால், இட்லி கடை, அவினாசி

                கோவையில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில், என்னுடன் பயணித்த நண்பர் ஒருவருடன் பொதுவாய் அரசியல் முதல் சாப்பாடு வரை அலசியபடி வந்து கொண்டிருக்க லேசாய்ப்பசி எடுக்க ஆரம்பித்தது.அப்போது தான் அவர் சொன்னார், அவினாசியில் ஒரு ஹோட்டல் இருக்கிறது ஆனால் சைவம் மட்டும் தான்...இட்லி, தோசை இது மட்டும் தான் கிடைக்கும்.இட்லி குருமா அவ்வளவு டேஸ்டாக இருக்கும் என சொல்ல, காலை நேர உணவை இங்கு முடித்து கொள்ளலாம் என பைபாஸில் வந்து கொண்டு இருந்த நாங்கள் அவினாசிக்கு வண்டியை ஓரங்கட்ட ஆரம்பித்தோம்.
                    அவினாசியில் இன்னும் பரபரப்படையாத காலைப்பொழுது..மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.பி.எஸ் என் எல் ஆபிஸ் எதிரில் வண்டியை நிறுத்திவிட்டு ரோட்டை கடந்து அந்த ஹோட்டலுக்கு வந்தோம். ஹோட்டல் என்கிற அமைப்பே இல்லை.ஒரு டீக்கடை தான்.ஓடு போட்ட சின்ன வீடு...முன்புறம் டீ பாய்லர்...ஆனால் அந்த ஹோட்டல் முன்பு வித விதமான கார்களின் வரிசை.

ஆச்சர்யமாகி கடைக்குள் பார்த்தால் உள்ளே நான்கு பெஞ்ச் போடப்பட்டிருக்கிறது. காலையிலிலேயே ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. இரண்டு சீட் மட்டும் காலியாக இருக்க, நாங்கள் அமர்ந்து கொண்டோம்...ஒரு பத்து நிமிட்த்திற்குள்....வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, கடையின் ஓனர் இலை அனைவருக்கும் வைத்தார்.பின் தண்ணீர்.பின் ஆளுக்கு இரண்டிரண்டு இட்லி.பின் சட்னி , சாம்பார்..அதாவது குருமா...


ஒரு பந்தியில் எப்படி பரிமாறுவார்களோ அப்படி அனைவருக்கும் வரிசையாய் பரிமாறிக்கொண்டிருந்தார்..
இட்லிக்கு அந்த குருமா செம....அரைத்துவிட்ட தேங்காயுடன் சோம்பு பட்டை வாசத்துடன் மிக மிக செம டேஸ்ட் உடன்...இட்லிக்கு ஏதுவாக அந்த குருமா...இட்லியும் சாப்டாக இருக்க, இரண்டும் ஒரு சில நொடிகளில் இலையை விட்டு காணாமல் போய்விட்டிருந்தது.அடுத்த சில நிமிடங்களில் ஆவி பறக்க தோசை ஒவ்வொன்றாய் இலையில் வைத்து விட்டு பின் சட்னி சாம்பார் என வரிசைகட்டி வர, ஒருத்தரே தான் அத்தனையும் பரிமாறுகிறார்.
தோசைக்கும் அதே குருமா தான்...இரண்டும் செம காம்பினேசன்.சாப்பிட்டுக் கொண்டிருக்க அதற்குள் வாடிக்கையாளர்கள் கூட்டம் மொய்க்கிறது.காத்திருக்க ஆரம்பிக்கின்றனர்.முதல் பந்தி முடிந்தவுடன் அடுத்த பந்தி ஆரம்பிக்கிறது.சில நிமிடங்களில் மீண்டும் நிறைகிறது அந்த நான்கு பென்ச்கள்.மீண்டும் அதே வரிசையாய் பரிமாறப்பட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர்.


நாங்கள் இரண்டு இட்லி இரண்டு தோசை சாப்பிட்டு விட்டு பொறுமையாய் வெளியேறினோம்.நல்ல சுவை, சுடச்சுட தோசை...சூடான குருமா..நன்றாக இருக்கிறது.
குருமா சாப்பிட்டவுடன் உடனே சொன்னேன்..இந்த மாதிரி தான் என் அம்மா குருமா வைப்பார்கள் என்று....
கடையை விட்டு வெளியேற வரிசையாய் நிறைய கார்கள் வருகின்றன அவர் கடைக்கு ஒரு கெளரவத்தினை அளிக்கின்றன.

நண்பர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக அங்கு சாப்பிட்டு வருகிறாராம்.டேஸ்ட் அப்படியே தான் இருக்கிறது எனவும், ஒரு சில முகூர்த்த தினங்களில் அரைமணி நேரம் கூட காத்திருந்து சாப்பிட்டுவிட்டு வருவாராம்.கார்களின் வரிசை நிறுத்தக்கூட இடம் இருக்காதாம்...

அவினாசி போனா சாப்பிட்டு பாருங்க...செம டேஸ்ட்...

பி எஸ் என் எல் ஆபிஸ் அருகில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 8, 2014

கோவை மெஸ் - ஜூனியர் குப்பண்ணா, ஈரோடு

ஈரோட்டில் ஒரு இரவு வேளை.... பத்து மணிக்கு மேல் ஆகிக்கொண்டிருந்தது. பசி வயிற்றை பதம் பார்க்கவே எங்காவது ஹோட்டல் தட்டுப்படுமா என்று பார்வைகள் அலைமோதிக்கொண்டே வர, பார்க் செல்லும் வழியில் ஜூனியர் குப்பண்ணாவின் பச்சை போர்டு கண்களில் தட்டுப்பட்டது.ஏற்கனவே மற்றொரு பச்சை போர்டு கடையால் அதிகமாய் பசியின் தீவிரத்தில் இருந்தோம்.வியாபாரம் முடிவடையும் நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்த கடையில், ஆள் அரவமின்றி இருந்த கடையில் எதுவும் கிடைக்காது போல என எண்ணிக்கொண்டே அங்கிருந்த பணியாளர்களை நெருங்கி சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்க, வாங்க சார் எல்லாம் இருக்கு என சொல்லி எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்.சந்தோசமாய் உள்ளே நுழைந்தால் நம்மளைப் போலவே நிறைய பேர் இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அதில் அம்மணிகளும் அடக்கம்...




அமர்ந்த உடனே இலை வந்து சேர்ந்தது.என்ன இருக்கு என்று கேட்க, எல்லாம் ஒப்பித்த சர்வரிடம், நாங்கள் நான்கு பேரும் பிளைன் பிரியாணி, மட்டன் தலைக்கறி, கொத்துக்கறி, சிக்கன் 65, தோசை, முட்டை தோசை, கோதுமை உப்புமா என ஆளாளுக்கு ஆர்டர் பண்ண ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது.
பிளைன் பிரியாணி குஸ்கா ரகத்தில் தான் இருந்தது.மணம் குணம் சுவை எல்லாம் ஓகே....மட்டன் பீஸ் இல்லாததால் அதைப்பற்றிய குறிப்புகள் நஹி....
அடுத்து தோசை....செம சாஃப்ட்....பிய்ப்பது கூட தெரியாமல் இருக்கிறது.ஒவ்வொரு விள்ளலாய் பிட்டு பிட்டு சட்னியிலும் கொத்துக்கறியிலும், தலைக்கறி சாந்திலும் தோய்த்து தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்..அதிலும் கொடுத்த குருமா இருக்கே செம டேஸ்ட்..பஞ்சு போல் மென்மையாக இருக்கிறது தோசை..சாப்பிட சாப்பிட செம டேஸ்ட்.கொஞ்சம் தோசை பிய்த்து ஈரல் கறியில் மடக்கி அப்படியே வாயில் போட்டால் கரைகிறது...சுவை நரம்புகள் அதிகமாய் மீட்டப்பட்டதால் சீக்கிரம் காலியாகி அடுத்த ஆர்டரும் தோசையாகிப்போனது....

பக்கத்து இலைக்கு கோதுமை உப்புமா வர அதை எடுத்து டேஸ்ட் பார்க்கையில் அதுவும் செம டேஸ்ட்...வழுக்கிக்கொண்டு போகிறது.முந்திரிலாம் போட்டு நெய் வாசத்துடன் இருக்க ஆஹா செம டேஸ்ட்..அட இது ரொம்ப நல்லாஇருக்கே என்று சொல்லவும் சுத்தியிருந்த கைகள் நீண்டு சீக்கிரம் தட்டைத் துடைத்துவிட்டன.....








சிக்கன் 65, கொத்துக்கறி, ஈரல் வறுவல் என எல்லாம் நன்றாகவே இருந்தது.
எல்லாம் சாப்பிட்டுவிட்டு கைக்கழுவச் செல்லும் போது ஒரு இடத்தின் சுவற்றில் குளிர்ந்த பாயாசம் கிடைக்கும் என எழுதியிருக்க, இதை எப்படி கைவிட்டோம் என்றெண்ணி கைகழுவி வந்தவுடன் பாயாசம் ஆர்டர் செய்தேன்..ஒரே ஒரு பாயாசம் போதும் என்று சொல்லிவிட்டபடியால் ஒன்று மட்டும் வர குடித்து விட்டு ஆகா,..சூப்பரோ சூப்பர் என சொல்ல, மற்றவர்களும் ஆர்டர் செய்ய மீண்டும் அவர்களின் ருசி அறிய வந்தது.வறுத்த சேமியா, முந்திரிலாம் போட்டு பாயாசம் ரொம்ப டேஸ்டியாக இருந்தது.ஊர் வந்து சேரும் வரை அதன் சுவை நாக்கைவிட்டு அகலவே இல்லை...
எல்லாம் முடிந்து பில் வர, விலை கொஞ்சம் கூடுதலாகவே தெரிந்தது.ஈரோட்டில் ரொம்ப பேமஸான ஹோட்டல் வேற, விலையும் அப்படித்தான் இருக்கும்....செட்டில் செய்து விட்டு வெளியேறி ரோட்டில் நின்று ஆசுவாசமாய் பேசிக்கொண்டிருக்க ஹோட்டலுக்கு எதிரில் ஈரோட்டின் பிரபல மரப்பாலம் முதலியார் மெஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு பலகை கண்ணில் பட....ஒரு நாள் இங்கு வரணும் என்று சொன்னபடியே கிளம்பினோம்.

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...