Monday, April 23, 2018

விபத்து

                 பொதுவாக விபத்துக்கள் அதிகரிக்கும் மாதங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் தான்.ஏனெனில் இந்த மாதங்களில் தான் குடும்பத்தோடு சுற்றுலா செல்பவர்கள், பள்ளி விடுமுறையை கழிக்க வெளியூர்க்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் என அதிகமாக இருக்கிறார்கள்.
                           இவர்களே அதிகம் விபத்துக்கு உள்ளாகின்றனர்.காரணம் சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் நகரத்தில் மட்டுமே ஓட்டி இருப்பார்கள்.தொலைதூர பயணங்களை மேற்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள்.நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து குறைவாக இருக்கும் காரணத்தினால் வாகனங்களை அதிவேகமாக இயக்குவார்கள்.வேகக்கட்டுப்பாடு இன்றி செல்வதால் விபத்துக்குள்ளாகின்றனர்.அதுமட்டுமல்ல வாகனப் போக்குவரத்து அதிகமாகி விட்டதாலும், சாலை விதிகளை மீறுவதாலும் விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன.
                   வாகனங்களால் விபத்து என்பது பத்து பர்சன்ட்க்கும் குறைவுதான்.வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையினால் தான் அதிகம் விபத்துக்கள் ஏற்படுகின்றன.கடந்த வாரத்தில் மட்டும் மதுரை அருகே குடும்பத்தோடு விபத்தில் சிக்கி பல பேர் இறந்துவிட்டனர்.சேலம் ஓசூர் நெடுஞ்சாலையில் பல பேர் விபத்தில் இறந்திருக்கின்றனர்.இன்று கூட பஸ் கவிழ்ந்து பலர் மரணம் என்று செய்திகள் வருகின்றன.கோவை ஆழியாறில் குளிக்கப் போய் நான்கு இளைஞர்கள் இறந்து இருக்கின்றனர்.திருப்பூரில் ஐந்து பேர் குளத்தில் மூழ்கி இறந்திருக்கின்றனர்.இது எனக்கு தெரிந்த விபத்துக்கள்.தெரியாத விபத்துக்கள் தினமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் மரணங்கள் போலவே ஆறு, குளங்கள், கடல்களில் இறப்பவர்களும் அதிகமாகிக் கொண்டு வருகின்றனர்.
                             காரில் பயணிப்பவர்கள் அதுவும் குடும்பத்தோடு பயணிப்பவர்கள் அளவான வேகத்துடன் பயணிப்பது நல்லது.இரவு நேரங்களில உங்கள் பயணங்களை ஒத்திப் போடுங்கள்.அதிகாலை நேரங்களில் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன.தூக்க கலக்கத்தில் தான் அதிகம் அதிகாலை விபத்துகள் உண்டாகின்றன.ட்ரைவர் வைத்திருந்தால் அவருக்கு ஓய்வு கொடுங்கள்.பணம் தருகிறோம் என்கிற எண்ணத்தில் அவரை வாட்டி வதைக்காதீர்கள்.இரவு நேரங்களில் தங்கும் போது அவர்க்கும் தனி அறையை ஒதுக்குங்கள்.சிலபேர் காரிலேயே ட்ரைவரை படுக்கச் சொல்லிவிடுவர் அப்படி செய்து விடாதீர்கள்.அவரின் ஓய்வில் தான் உங்களின் உயிர் இருக்கிறது.அதே போல் செல்ப் ட்ரைவிங் செல்பவர்கள் மிதமான வேகத்தில் செல்லுங்கள்.சாலை விதிகளை மதியுங்கள்.பாதசாரிகளை, இருசக்கர வாகன ஓட்டிகளை பயமுறுத்தும்படி ஓட்டாதீர்கள்.உங்கள் குடும்பத்தினரை வைத்துக்கொண்டு சாலையில் சாகசம் காட்டாதீர்கள்.மொபைல் போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டாதீர்கள்.குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள்.
                                  தொலைதூரம் செல்பவர்கள் வண்டியை மெக்கானிக்கிடம் விட்டு செக் செய்து விட்டு வண்டியை எடுங்கள்.ஸ்டெப்னி, பஞ்சர் பொருட்கள், ஜாக்கி, டூல்ஸ் மற்றும் முதலுதவி பொருட்களை வைத்திருங்கள்.வாகனத்தினை எப்பொழுதும் இடதுபுறமே இயக்குங்கள்.நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் போது உங்களுக்குண்டான வேகத்தில் குறிப்பிட்ட லேனில் பயணியுங்கள்.முன்னே செல்லும் வாகனத்திற்கும் உங்களுக்கும் 10 மீட்டர் தூரம் இருக்கட்டும்.
                     சாலையில் கட் அடித்து அடித்து ஓட்டாதீர்கள்.வளைவுகளில் முந்தாதீர்கள்.அரைமணி நேரம் தாமதமாக செல்வதால் ஒன்றும் குடி முழுகி போகாது.அதற்கேற்ப முன்கூட்டியே புறப்படுங்கள்.
சிக்னல்களை மதித்து செல்லுங்கள்.
                 டாஸ்மாக்கிலும், திரையரங்குகளிலும் நிற்பதை போல் சிக்னல்களிலும் சில நிமிடங்கள் நில்லுங்கள்.இல்லையேல் ஒரு நிமிடம் இரு நிமிடங்களில் உங்கள் வாழ்க்கையே முடிந்து போனாலும் போகும்
       மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் ஒரே வேண்டுகோள்.ஹெல்மெட் அணியுங்கள்.சாலையில் சாகசம் வேண்டாம்.இரண்டு பேர் செல்லக் கூடிய வாகனத்தில் குடும்பத்தினையே ஏற்றிச் செல்லாதீர்கள்.
பாதுகாப்பாய் பயணங்களை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கை உங்கள் கால்களில்..
ஆம்..சரியாய் ப்ரேக் பிடியுங்கள்...
வேகத்தை குறையுங்கள்.
வாழ்நாட்களை அதிகரியுங்கள்.
உங்களின் இழப்பு வீட்டிற்கு மட்டுமல்ல..நாட்டிற்கும் தான்.
விபத்தில்லாத பயணங்களை மேற்கொள்ளுங்கள்.
                              
எவ்வளவுதான் பாதுகாப்பாய் நாம் பயணித்தாலும் எதிர் வரும் வாகனங்களினால் ஏற்படும் விபத்திற்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது.நம் இவ்வுலகில் வாழ தகுதி முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்


3 comments:

  1. அவசியமான நேரத்தில் விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete
  2. சரியான நேரத்தில் சரியான பதிவு.

    ReplyDelete
  3. Right article at right time. Thousand thanks Ji

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....