Saturday, June 2, 2018

கோவை மெஸ் - சட்னி முறுக்கு, நாமக்கல், CHUTNEY MURUKKU, NAMAKKAL


நாமக்கல் ரவுண்ட் அப் :
சட்னி முறுக்கு :
                 நாமக்கல்லை சுற்றி உள்ள திருச்செங்கோடு ரோடு, சேலம் ரோடு, சேந்தமங்கலம் ரோடு, துறையூர் ரோடு, மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு, திருச்சி ரோடு போன்ற அத்தனை ரோடுகளிலும் தள்ளுவண்டி கடைகள் நிறைய இருக்கின்றன.இட்லி முதல் சிக்கன் சில்லி, பீஃப் சில்லி வரை பெரும்பாலான கடைகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.இத்தகைய தள்ளுவண்டிகளில் புதுவித மெனுவினை கண்டது துறையூர் ரோட்டில் தான்.சட்னி முறுக்கு எனும் ஸ்பெசல் மெனுவை ருசித்துப் பார்த்தேன்.கரூரில் எப்படி கரம் மிகப்பிரபலமோ அது போல சேலம் மற்றும் நாமக்கல்லில் தட்டுவடை செட் பிரபலம்.அப்படித்தான் தட்டுவடை செட் ருசிக்க செல்லும் போது தான் சட்னி முறுக்கினை சுவைக்க நேர்ந்தது.

                 சின்ன சின்ன முறுக்கினை, தக்காளி சட்னி வாளியில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கின்றனர்.பின் அதை எடுத்து தட்டில் வைத்து கேரட் வெங்காயம் பீட்ரூட் தூவல்களை தூவி தருகின்றனர்.சாப்பிடும் போது முறுக்கின் மொறு மொறு தன்மை குறைந்து அதன் சுவை தக்காளி சட்னியோடு சேர்ந்து காரம் மற்றும் இனிப்பு கலந்த இன்னொரு சுவையை தருகிறது.கூடவே வெங்காயம் கேரட், பீட்ரூட் சுவைகளும் சேர்ந்து புது விதமாக சுவையை தருகிறது.இந்த சட்னி முறுக்கு சாப்பிட நன்றாகவே இருக்கிறது.மென்மையாகவும், இனிப்பாகவும் கொஞ்சம் காரமாகவும் இருக்கிறது.


                     இதைப் போலவே தான் தட்டு வடை செட்டும்.தட்டு முறுக்கில் இரண்டு வகை சட்னிகளை தோய்த்து, கேரட் பீட்ரூட், வெங்காய துருவல்களை வைத்து, பின் அதன் மேல் இன்னொரு சட்னி தோய்த்த தட்டு முறுக்கினை வைத்து தருகின்றனர்.மேலும் கீழும் உள்ள தட்டு முறுக்கினை அப்படியே அலேக்காக சிந்தாமல் சிதறாமல் தூக்கி வாய்க்குள் போட்டு சுவைக்க ஆரம்பித்தால் அத்தனை சுவைகளும் வரிசை கட்டி நாவில் நாட்டியமாடும்.கொஞ்சம் கொஞ்சமாய் வயிற்றுக்குள் இறங்கும் வரையிலும் சுவை இருக்கும்.




                  நாமக்கல்லில் தள்ளுவண்டி தவிர்த்து, கடைவீதிக்குள் ஒரு சட்னி முறுக்கு கடை இருக்கிறது. M.தங்கராஜ் சட்னி முறுக்கு கடை.இந்த கடை மிக பிரபலம் அந்த பகுதிக்குள்.பெண்கள் மட்டுமே இதை நடத்துகிறார்கள்.மாலை வேளையில் இருந்து இரவு பத்து மணி வரை இங்கு அனைத்து சாட் வகைகளும் கிடைக்கும்.விலை பத்து ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.சட்னி முறுக்கு ரூ 20 விலையில் இருக்கிறது.அந்தப்பக்கம் போனீங்கன்னா, மாலை வேளையில் ஸ்நாக்ஸ் சாப்பிடனும்னு தோணுச்சின்னா, மறக்காம போய் சாப்பிட்டு பாருங்க…


நேசங்களுடன்
ஜீவானந்தம்.

2 comments:

  1. கண்டிப்பா சாப்டுருவோம், அண்ணா அந்த சுவையான தாபா உணவகம் ஒன்னு அறிமுகப்படுத்துங்கள் அண்ணா

    ReplyDelete
  2. Valakkam pola supper boss. Oru chinna suggestion. Unga websitela district wise category create pannunga. Puthusa oru oorukku porappo anga thedi poi saapida easy irukkum.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....