Friday, January 1, 2021

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2021 HAPPY NEW YEAR

கடந்த வருடம் 2020 உலக மக்களின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குறியாக்கி பொருளாதாரத்தையே ஆட்டி படைத்து மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்திய கொரோனோ எனும் கிருமி தந்த பலத்த பாதிப்புகள்  மிக மோசமானவை.இன்னும் இந்த பாதிப்பிலிருந்து நிறைய பேர் மீளவே இல்லை.சராசரி மனிதனில் ஆரம்பித்து மிகப்பெரிய கம்பெனி வரை கடுமையான பாதிப்புகள் இதனால்.

இதற்கு நானும் விதிவிலக்கல்ல.மிகப் பெரிய பொருளாதார பாதிப்பினை தந்து விட்டு சென்றிருக்கிறது.கிட்டத்தட்ட 10 மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் கிடைத்த வேலைகளை செய்து, விவசாய பணியிலும் ஈடுபட்டு, தேங்காய், எண்ணெய், போன்ற பொருட்களை விற்று எப்படியோ உயிரை தக்க வைத்து கொண்டது தான் இந்த வருடத்தின் சாதனை.

என்னால் முடிந்த வரையில் கொரோனோ காலத்தில் நிறைய பேருக்கு பசி ஆற்றி இருக்கிறேன்.உதவும் எண்ணத்தினை கொஞ்சம் அதிகரித்து வைத்திருக்கிறது கொரோனோ.

ஆனாலும் 2020 என்ற ஒரு வருடம் ஒன்று இருந்ததையே மறக்க நினைக்கிறேன்.எப்படி இந்திய வரைபடத்தில் அத்திப்பட்டி என்கிற கிராமமே தொலைந்து போனது போல, இந்த வாழ்க்கை பயணத்தில் 2020 என்கிற வருடமே இல்லை என்கிற நினைக்கிற அளவிற்கு வைத்து விட்டது.

இந்த வருடத்தில் நிறைய இழப்புகள், பொருளாதார பாதிப்புகள், நண்பர்களின் உதவி, உறவினர்களின் அலட்சியம், சில பேர்களின் துரோகம், கந்துவட்டி காரர்களின் கொடுமை என அனைத்தையும் இந்த கொரோனோ காட்டிவிட்டது.

இருந்தாலும் ஒரு சில பேர் பொருளாதார பாதிப்பில் இருந்து கொஞ்சம் மீள கை கொடுத்தார்கள்.ஆபிஸ், குடோன், வீட்டு உரிமையாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் எனது பணியாட்கள் என அனைவரும் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு, என்னை கொஞ்சம் சுவாசிக்க வைத்தனர்.அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தவுடன் அவர்களுக்கு உரியதை செய்து விடவேண்டும்.



இனி வரும் இந்த 2021 புத்தாண்டில் அனைத்து பொருளாதார சரிவுகளையும் மீட்டெடுத்து புதிதாய் வாழ்க்கையினை ஆரம்பிக்க வேண்டும்.

ஜீரோவில் இருந்து ஆரம்பித்தேன்.இருவது வருடங்களுக்கு பின் மீண்டும் ஜீரோவில் இருந்து ஆரம்பிக்கிறேன்.இனி உழைப்பதற்கு ஏற்ற காலம் குறைவு என்றாலும் மிகவும் நல்ல ஆயுளையும், ஆரோக்கியத்தையும் குறைவில்லாமல் தரக்கூடிய ஆண்டாய் இந்த 2021 இருக்க வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை கேட்டுக்கொள்கிறேன்.


என் தளம் வந்து வாசிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அனைவரும் ஆரோக்கியமும் நல்ல வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.


நேசங்களுடன்

ஜீவானந்தம்








4 comments:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....