நம்ம நண்பரோட எஸ்டேட்ல
கொஞ்சம் வேலை இருப்பதால் போன வாரம் ஊட்டிக்கு பயணமானேன்.காலை 7மணிக்கெல்லாம்
ரெடியாகி மாருதி ஜிப்சி வேனில் கிளம்பினோம்.கோத்தகிரி வழியே தான் பயணமானோம்.இந்த ரோடு
கொடநாடு உபயோகத்தில் மிக நன்றாக இருக்கிறது.மேலும் மேலும் ரோட்டினை செப்பனிட
ஜல்லி, தார் ஏற்றின டிப்பர் லாரிகள் எங்களுக்கு முன்னே வரிசை கட்டி சென்று
கொண்டிருந்தன.கொடுத்த வைத்த மக்கள் கோத்தகிரியில் இருப்பவர்கள்...
மலைப்பாதை இருபுறமும்
பசுமை அன்னை....பரந்து விரிந்து தேயிலைத் தோட்டங்களாக அமைந்து இருக்கிறாள்.இந்த
தேயிலைத் தோட்டத்தினை காண பாலாவின் பரதேசிதான் ஞாபகத்திற்கு வந்தது.இருப்பினும்
அழகு கொட்டிக்கிடக்கிறது இருபுறத்திலும்..
வேகமாய் சென்று
கொண்டிருந்த வண்டி கொஞ்சம் பிரேக்கடிக்கவே என்ன ஏதுவென்று பார்க்க ஒரு காட்டெருமை
உல்லாசம் வேண்டி ஒற்றை ஆளாய் வந்து தேயிலைத்தோட்டத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது. அய்யோ...எம்மாம்
பெரிய சைசு....முதல் முதலாய் ஒரு காட்டெருமையை காட்டில்....ஜூவுல கூட இன்னும்
பார்த்தது இல்ல. ஆனா இங்க எவ்வித பாதுகாப்புமின்றி பார்க்கிறேன்...மனதிற்குள்
கருக்.....மெதுவாய் ஆடி அசைந்து இறங்கி எங்கள் பக்கத்தில் வர இன்னும்
பயமாகிப்போனது முட்டித்தள்ளினால் முன்னூறு மீட்டருக்கும் கீழே விழ
வேண்டியதுதான் எங்கள் காரை ஒட்டியே ஐந்தடி தூரத்தில் மெதுவாய் சென்றது.. நல்லவேளை
ரொம்ப சமர்த்தாக இறங்கிப்போய்விட்டது.நாம் சமர்த்தாக இருந்தால் அதுவும்
சமர்த்துதான்.ஹாரன் அடிப்பது , இறங்கி நின்று காட்டு விலங்குகளுக்கு ஹாய் சொல்வது
என சேட்டை செய்யும் போதுதான் அவைகளும் நமக்கு ஆப்படிக்கின்றன.
ஒரு காட்டுவிலங்கை
சந்தித்த மகிழ்ச்சியுடன் பயணத்தினை தொடர்ந்தோம்.கோத்தகிரி வந்து தொட்டபெட்டா
அடையவும் இந்த ஊரின் ஒரு சிறந்த தத்துவ பாடலை
தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா.....
முணுமுணுத்தபடியே.....இருக்க தொட்டபெட்டா சிகரம் காண அப்போதுதான் வந்து
இறங்கிய அம்மணிகளை கண்டதும் மனம் இன்னும் ஊட்டியை விட குளிர்ச்சியானது. நாமளும்
கொஞ்சம் சிகரம் பார்க்கலாமா என்று கேட்கவும் எஸ்டேட் போக நேரமாகிவிடும் பிறிதொரு
நாளில் தரிசிக்கலாம் என்று சொல்லவும், மனசுக்குள் மத்தாப்பு மங்கிவிட்டிருந்தது.சரி
ஒரு டீயாவது குளிருக்கு இதமாய் குடிப்பமே என்று தொட்டபெட்டா அருகில் ஒரு கடையில் ஒரு
மசாலா டீ சாப்பிட்டு கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு பயணம் ஆரம்பிக்க சிறிது
நேரத்தில் சேரிங்கிராஸ் வந்தடைந்தோம். பொட்டானிக்கல் கார்டன் வழியே செல்லவும்
அங்கயும் ஏகப்பட்ட அம்மணிகள்..விதவிதமாய்...மாநிலம் வாரியாய்....இங்கயும் அதே
நிலைமைதான்..பார்வை ஒன்றே போதுமே ....மனதின் ஏக்கம் கண்களில் விரிந்தது.மனசை
அங்கேயே கழட்டி விட்டபடி எஸ்டேட்டுக்கு கிளம்பினோம்.
ஊட்டியில் இருந்து 27
கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.இந்த எமரால்டு எஸ்டேட்.குறிப்பிட்ட தொலைவிற்கு
மேல் கரடு முரடான பாதை.அப்போது தான் யோசித்தேன்...நண்பர் ஏன் ஜிப்ஸி வண்டியில்
வருகிறார் என்று...
இருபுறமும்
பசுமை...எமரால்டு ஏரி தண்ணீர் குறைவாக இருக்கிறது.பச்சை நிறத்தில் ரொம்ப ஆழத்தில்
இருக்கிறது நீர்.இந்த ஏரிப்பகுதியில் தான் தெய்வத்திருமகள் படம் சூட்டிங் நடந்தது
என்று உபரித்தகவல் ஒன்றையும் சொன்னார்.அதுபோலவே இன்னொன்றும் புரட்சித்தலைவருக்கு இந்த ஏரியில் இருந்து தான் மீன் போகுமாம்.அவ்ளோ ருசியான மீன் மற்றும் அந்த விசயத்திற்கு ஏற்றதாம்.. ஹி ஹி ஹி
ஒரு மணி நேர
பயணத்திற்கு பின் எஸ்டேட்டை அடைந்தோம் ஆகா....கண்களுக்கு என்னா
குளிர்ச்சி... தேயிலைத்தோட்டம் ...அழகாய் அற்புதமாய் பரந்து விரிந்து கிடந்தது... மலைகளின்
நடுவே இப்படி ஒரு அழகான தோட்டம்... பசுமை..பசுமை...எங்கெங்கும்....மேலிருந்து
பார்க்கும் போது ஏரியின் அட்டகாசமான காட்சி....
பொழுது உறைய
ஆரம்பித்தது..மணி 2.30 தான் இருக்கும் கிளைமேட் மங்க ஆரம்பித்தது.கொஞ்சம் வெயிலும்
கொஞ்சம் சாரலும் அந்த இடத்தினை மிக ரம்மியமாக்கி விட்டிருந்தது.
மிக அற்புதமான இயற்கைக்காட்சி...தேயிலைத்தோட்ட்த்தின்
நடுவே ஓடிவரும் ஒரு சுனை...அதில் இருந்த சுவை, நீரின் குளிர்ச்சி இன்னும் அகலவில்லை.
வந்த வேலையை
முடித்துவிட்டு 4 மணி அளவில் அங்கிருந்து கிளம்பினோம்..இன்னும் பசுமையாய்
இருக்கிறது மனதில் அந்த எஸ்டேட்டின் எழில் மிகு இயற்கை...
கூடிய விரைவில் இங்கு
சுற்றுலா வரும் நபர்கள் இயற்கையோடு இணைந்து தங்குவதற்காக குடில் அமைப்பதற்கான
ஏற்பாடுகள் செய்யவிருக்கிறார்கள்.அதன் பின் தான் இந்த எஸ்டேட்டினை கண்டுகளிக்க
முடியும்.அதுவரை பொறுத்தருள்க..இந்த எஸ்டேட் செல்லும் வழியில் நிறைய காட்டேஜ்கள்
இருக்கின்றன.அங்கும் தங்கலாம்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்