Showing posts with label தூக்கிலிடுபவரின் குறிப்புகள். Show all posts
Showing posts with label தூக்கிலிடுபவரின் குறிப்புகள். Show all posts

Tuesday, February 24, 2015

பு(து)த்தகம் - வாசித்தவை - தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

              சமீபத்தில் திருப்பூர் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை இரு டஜனுக்கும் மேல் இருக்கும்.இப்போது தான் வாசிக்க தொடங்கியிருக்கிறேன்.
         புத்தக விமர்சனம் எழுதற அளவுக்கு நாம ஒண்ணும் பெரிய இலக்கியவாதி கிடையாது.ஆனால் படித்த ரசித்த வியந்த புத்தகங்களைப்பற்றி கொஞ்சமாவது எழுதி நாமளும் அந்த வட்டத்துக்கு வெளியில இருக்கிறோம் அப்படிங்கிறதை காட்டிக்கத் தெரியும். இருந்தாலும் வாசித்த புத்தக அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
                
தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

         ஜனார்த்தனன் பிள்ளை...1940ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆரம்பித்து இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் கிட்டதட்ட முப்பதாண்டுகள் தூக்கிலிடுபவராக வேலை செய்து 117 மனிதர்களை தூக்கிலிட்டவர்.இவரைப் பற்றிய குறிப்புகளை அவரையே எழுத வைத்து ஒரு நூலாக ஆங்கிலத்தில் (Hangman’s Journal ) வடித்தவர் சசி வாரியர்.பின் அதனை தமிழில் மொழி பெயர்த்தவர் இரா.முருகவேள்.
              இந்த நூலில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் விரவிக்கிடக்கின்றன. தூக்கிலிடப்படும் அதிகாலை நேரம் பற்றிய விவரங்கள், தந்தையின் ஓய்வுக்குப்பின் தன் குடும்பத்தினருக்காக இந்த தொழிலை ஏற்றுக்கொண்டதாய் இருக்கும் விவரக்குறிப்புகள், தூக்குதண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பாக பயன்படுத்தப்படும் கயிற்றின் பலத்தினை கல் கொண்டு சோதிக்கும் முறை, தூக்குமேடை அமைப்பு, எடிசன் கண்டுபிடித்தது மின்சார பல்பு எனத்தெரியும், ஆனால் உலகின் முதல் மின்சார நாற்காலியை கண்டுபிடித்தது அவர்தான் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும் என்கிற விவரக்குறிப்புகள், தூக்கு உறுதி செய்யப்பட்ட கைதியின் முதல் நாள் நடவடிக்கைகள்,  தூக்குகயிற்றின் முடிச்சினை தண்டனைக் கைதியின் வலது காதுக்கு பின் எதற்காக நிறுத்துவது, தான் செய்த முதல் தூக்கின் போது ஏற்பட்ட மனக்காயம், என புத்தகம் முழுக்க இப்படி குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அவைகளை படிப்பதற்குள் மொத்தமும் தொகுப்பட்ட விதம் நம்மை அயர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆனாலும் அவ்வப்போது அவரின் வாயிலாக தூக்கு தண்டனை பற்றிய விவரங்கள் கொஞ்சம் கொஞ்சம் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது.

                      ” லிவரை அழுத்துகிறேன்..பொறிக்கதவு படாரென்று கீழே திறந்து இருபுறமும் உள்ள தூண்களில் மோதிக்கொள்ளும் ஓசை.....அந்த மனிதர் குழிக்குள்ளே மறைகிறார்...அது உதறுகிறது...உதறுகிறது...உதறிக்கொண்டே இருக்கிறது... கீழிலிருந்து அந்த மனிதர் தனக்குள் இருக்கும் அனைத்தையும் வெளியேற்றும் சத்தங்கள் வருகின்றன....முதலில் சிறுநீர்ப்பை பின்பு குடல்கள்...அந்த மெல்லிய சத்தங்களாலும்.....திறந்திருந்த பொறிக்கதவு வழியாய் மிதந்து வந்த மெல்லிய நாற்றத்தாலும் கூனி குறுகிப்போகிறேன்....
நீண்ட....நீண்ட நேரத்திற்கு பின் இறுதியாக கயிறு உதறுவது நிற்கிறது.....அவர் இறந்து விட்டார்.....

எதிர் வெளியீடு             பக்கங்கள் 272              விலை ரூ 220

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...