Showing posts with label ஸ்ரீ கந்தவிலாஸ். Show all posts
Showing posts with label ஸ்ரீ கந்தவிலாஸ். Show all posts

Wednesday, October 24, 2018

பஞ்சாமிர்தம் - பழனி - சித்தனாதன் மற்றும் ஸ்ரீ கந்தவிலாஸ் ; PALANI, SIDDANATHAN, SHIRI KANDAVILAS


                            பழனின்னாலே முதலில் ஞாபகம் வருவது பஞ்சாமிர்தம் தான்.திருப்பதிக்கு எப்படி லட்டு பேமஸோ அதே போல் இங்கு பஞ்சாமிர்தம் தான் பிரசித்தி பெற்றது. சித்தநாதன் கடைதான் பேமஸ்.மலை அடிவாரத்திலேயே இருப்பதால் அதிகம் பேர் வாங்குவது இங்குதான்.எப்பொழுது பழனி சென்றாலும் இங்கு வாங்காமல் வருவதில்லை.யாராவது பழனி சென்று வந்து பிரசாதத்துடன் பஞ்சாமிர்தம் கொடுத்தால் போதும், உடனடியாக உள்ளங்கையில் போட்டு நக்கித் தின்பது வழக்கமே.சிறுவயதில் இருந்தே பஞ்சாமிர்தத்திற்கு அடிமையாகி போயிருக்கிறேன்.ஒரு அரைலிட்டர் டப்பாவையே காலி பண்ணும் அளவிற்கு இருந்திருக்கிறேன்.இனிப்பைச் சுற்றி மொய்க்கும் எறும்பைப் போலவே டப்பாவையே மொய்த்திருக்கிறேன்.



                                        பஞ்சாமிர்த டப்பா காலியானாலும் அதில் டீயோ, பாலோ ஊற்றி ஒரு கலக்கு கலக்கி அந்த சுவையோடு அதனை குடித்திருக்கிறேன்.இப்பொழுதும் சுவைக்கத் தவறுவதில்லை எப்பொழுது ப.மி கிடைத்தாலும்.கோவையில் மருதமலை சென்றாலும் அங்கு கிடைக்கும் பஞ்சாமிர்தமும் வாங்கி சுவைப்பதுண்டு.ஆனால் கோவை டூ பழனி எவ்வளவு தூரமோ அதைவிட பலமடங்கு குறைவாக இங்கு கிடைக்கும் பஞ்சாமிர்தத்தின் சுவை.இந்த முறை பழனி சென்ற போது சித்தநாதனிலும், கந்தவிலாஸிலும் பஞ்சாமிர்தம் வாங்கி வந்தேன்.சித்தநாதன் கடையும், கந்தவிலாஸ் கடையும் எதிரெதிரே தான் இருக்கின்றன.இரண்டு கடையிலும் பஞ்சாமிர்தத்தின் சுவைகள் வேறுபட்டே இருக்கின்றன.விலையிலும் அப்படியே.
                                       அரைகிலோ ப.மி சித்தநாதனில் ரூ.35 ம், கந்தவிலாஸில் 400 கிராம் ரூ.40 ம் இருக்கின்றன.வெண்மை நிற டப்பாவில் சித்தநாதனும், மஞ்சள் நிற டப்பாவில் கந்தவிலாஸும் தனித்துவமாய் இருக்கின்றன.சுவையை பொறுத்தவரை கந்தவிலாஸ் ஒருபடி மேலே இருக்கிறது.நன்கு திக்கான கலரில் முந்திரிகள் போட்டு சாப்பிட சுவையாக இருக்கிறது.ஆனால் அதே சமயம் அவ்வப்போது ஏலக்காய் தோல்கள் தொந்தரவு செய்கின்றன.அதையும் மீறி மிக சுவையாக இருக்கிறது.


                          சித்தநாதனில் வெல்லம் மற்றும் முழு கற்கண்டின் சுவை சுவைக்கும் போதே தெரியும்.கொஞ்சம் இளகுதன்மையுடன் இருக்கிறது.பெரிய பெரிய பேரிச்சை துண்டுகள் முழுதாய் இருந்தாலும் சுவையாகவே இருக்கும்.மெலிதான திருநீர் சுவை எப்பவும் இருக்கும்.சித்தநாதன் ப.மி சாப்பிட சுவையாக இருந்தாலும் கந்தவிலாஸ் அதைவிட சிறப்பான சுவையையே கொண்டிருக்கிறது.உள்ளங்கையில் ஊற்றி நுனி நாக்கினால் ஒரு நக்கு நக்கினால் அதன் சுவை அப்படியே உள்ளுக்குள் போகும் பாருங்க..சான்சே இல்ல.. 

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...