Sunday, December 21, 2014

கோவை மெஸ் – துதல் அல்வா, பணியம், கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்.

            நம்ம வேலை விசயமா இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ங்கிற ஊருக்கு போயிருந்தேன்.அங்க போனபோதுதான் தெரிஞ்சது பக்கத்துலேயே கடல் இருப்பது.சரி..ன்னு கடல் பார்க்க போலாமே அப்படின்னு போனதுதான் கீழக்கரை என்கிற கடலோர கிராமத்திற்கு....அங்க போனபோதுதான் கூட வந்த நம்ம நண்பர் சொன்னாரு இங்க ஒரு அல்வா கிடைக்கும்னு.பேரு என்னவோ நுதலோ லுதலோ சரியா தெரியல அப்படின்னாரு....
              உடனே நம்ம எட்டாம் அறிவு வேலை செய்ய ஆரம்பித்தது.சாப்பிட்டுப் பார்க்கனுமே என்று எண்ணம் தோன்றியதுமே நாக்கு நம நமக்க ஆரம்பித்தது.மேலும் கோவை மெஸ்க்கு சரியான தீனி கிடைச்சிடுச்சி என்கிற ஆவலில் அதை தேடி பயணித்தோம்.


                திருப்புல்லாணி என்கிற ஊரில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் கீழக்கரை இருக்கிறது.ஊரில் நுழைகையில் வள்ளல் சீதக்காதி அவர்களின் நினைவு நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. அதைத்தாண்டி செல்ல, நெருக்கமான கடைகள், வீடுகள் கொண்ட ஊருக்குள் நுழைந்தோம்.சின்ன ஊருக்குள் ஊர்ப்பட்ட கடைகள்.எங்கு பார்த்தாலும் முஸ்லீம் அன்பர்கள்....மழை வேறு மெலிதாய் பெய்து கொண்டிருக்க, மெதுவாய் நகர்ந்தபடியே நாங்கள் ஊருக்குள் நுழைந்து விட்டிருந்தோம்.நடந்து போன ஒருவரிடம் லுதல் எங்கே கிடைக்கும் என விசாரிக்க, இன்னும் ஊருக்குள் எங்களை கிளப்பிவிட்டார்.
             குறுகிய தெருக்களில் நம்ம ஸ்கார்ப்பியோ ரோட்டை அடைத்தபடி செல்ல, ஒவ்வொருவரிடமும் கேட்டு கேட்டு ஒரு இடத்தினை அடைந்தோம்.ஒரு மளிகைக்கடையில் விசாரிக்க, எங்களையும், எங்களின் கார் அளவையும் பார்த்துவிட்டு பல்க் காக வாங்க வந்திருப்போம் என்றெண்ணி வீட்டில் செய்து தரும் ஒரு பெண்மணியிடம் அழைத்து சென்றார் அந்த கடைக்கார அம்மணி.

            காரை ஓரங்கட்டிவிட்டு இன்னும் குறுகிய சந்துகள், தெருக்களில் நடை போட்டோம்.பெத்திரி தெரு என்ற பெயர்ப்பலகை ஒன்று அடையாளமாய் நின்று கொண்டிருக்க,  அதன் அருகில் உள்ள ஒரு வீட்டில் பெயர் சொல்லி கூப்பிட்டு எங்களை அறிமுகப்படுத்திவிட்டு அந்த மளிகைக்கடை அம்மணி சென்று விட்டார்.
லுதல் இருக்குங்களா என்று கேட்க, அது துதல் என்று சொல்லியபடி டேஸ்ட் பார்க்க கொஞ்சம் கொடுத்தார் அந்த வீட்டு வயதான பெண்மணி.

இவர் வீட்டிலேயே துதல் செய்து கடைகளுக்கு தருபவராய் இருக்கிறார்.கொண்டு வந்து கொடுத்தவுடனே அந்த வாசம் பரவி நம்மை சுவைக்க தூண்டுகிறது.ஒரு வித இனிப்புடன் கூடிய தேங்காய் மணம் நம்மைச்சுற்றிப்பரவுகிறது.மைதா மாவு, பனங்கருப்பட்டி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணைய், முந்திரிப்பருப்பு சேர்த்து செய்யும் ஒரு அல்வா தான் இது.அல்வா போன்று  வழவழப்பு இல்லாமல் கொஞ்சம் மிருதுவாக இருக்கிறது.சாப்பிட்டு பார்க்கையில் பன்ங்கருப்பட்டியின் சுவையுடன் மெதுவாய் கரைந்து ஒரு புதுவித சுவையத்தருகிறது.நாக்கின் சுவை நரம்புகள் இன்னும் மீட்டப்படுகின்றன.அதன் சுவை நல்ல தேங்காய் எண்ணைய் மணத்துடன் ஒரு வித்தியாசமான சுவையைத் தருகிறது.சாப்பிட சாப்பிட அதன் சுவையில் நாம் சிக்குண்டு போகிறோம்.கைகளில் எண்ணைய் வாசம் இன்னும் அகலவே இல்லை.
ஆளுக்கு அரைக்கிலோ துதல் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்றோம்.அந்த வீட்டில் இருந்து காருக்கு வருவதற்குள் ஒரு பாக்கெட் அல்வா எங்களை தின்று விட்டிருந்தது.

            குறுகிய தெருவினில் எப்படியோ கஷ்டப்பட்டு வந்ததுக்கு ஒரு இனிய அனுபவத்தினை பெற்றிருந்தோம்.அந்த வீட்டில் வாங்கிக்கொண்டு வெளியேறி அந்த ஊரிலேயே உள்ள இன்னொரு கடையினை கேள்விப்பட்டு அங்கு சென்றோம்.அந்தக்கடைக்கு சென்றவுடன் தான் தெரிந்தது இது எம்ஜியார் ருசித்த அல்வா என்று அந்த கடையில் ஒட்டியிருந்த விளம்பர பலகையில் இருந்து....அவரிடம் இன்னும் டீடெயிலாக விசாரித்தபோது 103 வருடங்களாக துதல் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம் என்றும் வெளிநாடு மற்றும் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்ற தகவலையும் சொன்னார்.
              
          துதல் போலவே பணியமும் பேமஸ் என்றார்.நம்மூரில் கிடைக்காத பணியாரமா இங்கு கிடைக்கப்போகிறது என்ற எண்ணத்தினை உடனடியாக காலி பண்ணினார் கடைக்காரர்.பணியாரம் என்று சொன்னது ஒரு கார பலகாரத்தினை.அது பணியாரம் இல்லை பணியம் என்று...ஒருவித உருளை வடிவத்தில் இருக்கிறது.சாப்பிட மொறு மொறுவென்று வித்தியாசமான சுவையில் காரத்துடன் இருக்கிறது.முறுக்கு சுவை என்பது கொஞ்சம் கூட இல்லை.அதுவும் நன்றாக இருக்கிறது.அதையும் ஆளுக்கு ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டு வெளியேறினோம்..
          துதல் அல்வா வீட்டில் வாங்கியது கிலோ 180 ரூபாய்..கடையில் வாங்கினது 200ரூபாய்.
வீட்டில் சுவைத்த துதலும், கடையில் சுவைத்த துதலும் சுவை ஒன்றுதான்..ஆனால் நிறம் மட்டுமே கொஞ்சம் மாறியிருக்கிறது.
எப்பவாவது இராமநாதபுரம் போனால் கீழக்கரை சென்று துதல் சாப்பிட்டுப்பாருங்கள்...உடலுக்கு ஆரோக்கியமான ஒரு இனிப்பு பலகாரம்....

கீழக்கரை பற்றி சிறு குறிப்பு: செத்துங்கொடுத்தான் சீதக்காதி என்ற பெயர் தாங்கிய வள்ளல் சீதக்காதி பிறந்த ஊர்.வரலாற்று சிறப்பு மிக்க பழம் பெரும் கடற்கரை நகரம்.கலங்கரை விளக்கம் அமைந்துள்ள இடம்.



நேசங்களுடன்
ஜீவானந்தம்



8 comments:

  1. காருக்குள் எத்தனை கிலோ தீர்ந்தது...?

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி தனபாலன் சார்...கோவை வரும் போது கொஞ்சம் தான் இருந்துச்சு...

      Delete
  2. படமே எச்சில் ஊற வைக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மணிமாறன்...சாப்பிட்டு பாருங்க...இன்னும் ஊறும்....

      Delete
  3. கோவை நேரத்தில்...... சைவமா????......உங்களிடம் இன்னும் நிறைய அசைவம் எதிர்ப்பார்க்கிறோம்..... நீங்கள் பாரத ரத்னா வாங்கும் வரை.... உங்கள் ரசிகர்கள் ஆகிய நாங்கள் ஓய மாட்டோம்..... தீவிர ரசிகர் பட்டாளம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி கார்த்திக்.....கண்டிப்பா அடுத்த பதிவு அசைவம் தான்...ஹாஹாஹா....நன்றி...

      Delete
  4. visit our Blog.
    oorsutrii.blogspot.com

    ReplyDelete
  5. visit our Blog.
    oorsutrii.blogspot.com

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....