Showing posts with label அல்வா. Show all posts
Showing posts with label அல்வா. Show all posts

Sunday, December 21, 2014

கோவை மெஸ் – துதல் அல்வா, பணியம், கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்.

            நம்ம வேலை விசயமா இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ங்கிற ஊருக்கு போயிருந்தேன்.அங்க போனபோதுதான் தெரிஞ்சது பக்கத்துலேயே கடல் இருப்பது.சரி..ன்னு கடல் பார்க்க போலாமே அப்படின்னு போனதுதான் கீழக்கரை என்கிற கடலோர கிராமத்திற்கு....அங்க போனபோதுதான் கூட வந்த நம்ம நண்பர் சொன்னாரு இங்க ஒரு அல்வா கிடைக்கும்னு.பேரு என்னவோ நுதலோ லுதலோ சரியா தெரியல அப்படின்னாரு....
              உடனே நம்ம எட்டாம் அறிவு வேலை செய்ய ஆரம்பித்தது.சாப்பிட்டுப் பார்க்கனுமே என்று எண்ணம் தோன்றியதுமே நாக்கு நம நமக்க ஆரம்பித்தது.மேலும் கோவை மெஸ்க்கு சரியான தீனி கிடைச்சிடுச்சி என்கிற ஆவலில் அதை தேடி பயணித்தோம்.


                திருப்புல்லாணி என்கிற ஊரில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் கீழக்கரை இருக்கிறது.ஊரில் நுழைகையில் வள்ளல் சீதக்காதி அவர்களின் நினைவு நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. அதைத்தாண்டி செல்ல, நெருக்கமான கடைகள், வீடுகள் கொண்ட ஊருக்குள் நுழைந்தோம்.சின்ன ஊருக்குள் ஊர்ப்பட்ட கடைகள்.எங்கு பார்த்தாலும் முஸ்லீம் அன்பர்கள்....மழை வேறு மெலிதாய் பெய்து கொண்டிருக்க, மெதுவாய் நகர்ந்தபடியே நாங்கள் ஊருக்குள் நுழைந்து விட்டிருந்தோம்.நடந்து போன ஒருவரிடம் லுதல் எங்கே கிடைக்கும் என விசாரிக்க, இன்னும் ஊருக்குள் எங்களை கிளப்பிவிட்டார்.
             குறுகிய தெருக்களில் நம்ம ஸ்கார்ப்பியோ ரோட்டை அடைத்தபடி செல்ல, ஒவ்வொருவரிடமும் கேட்டு கேட்டு ஒரு இடத்தினை அடைந்தோம்.ஒரு மளிகைக்கடையில் விசாரிக்க, எங்களையும், எங்களின் கார் அளவையும் பார்த்துவிட்டு பல்க் காக வாங்க வந்திருப்போம் என்றெண்ணி வீட்டில் செய்து தரும் ஒரு பெண்மணியிடம் அழைத்து சென்றார் அந்த கடைக்கார அம்மணி.

            காரை ஓரங்கட்டிவிட்டு இன்னும் குறுகிய சந்துகள், தெருக்களில் நடை போட்டோம்.பெத்திரி தெரு என்ற பெயர்ப்பலகை ஒன்று அடையாளமாய் நின்று கொண்டிருக்க,  அதன் அருகில் உள்ள ஒரு வீட்டில் பெயர் சொல்லி கூப்பிட்டு எங்களை அறிமுகப்படுத்திவிட்டு அந்த மளிகைக்கடை அம்மணி சென்று விட்டார்.
லுதல் இருக்குங்களா என்று கேட்க, அது துதல் என்று சொல்லியபடி டேஸ்ட் பார்க்க கொஞ்சம் கொடுத்தார் அந்த வீட்டு வயதான பெண்மணி.

இவர் வீட்டிலேயே துதல் செய்து கடைகளுக்கு தருபவராய் இருக்கிறார்.கொண்டு வந்து கொடுத்தவுடனே அந்த வாசம் பரவி நம்மை சுவைக்க தூண்டுகிறது.ஒரு வித இனிப்புடன் கூடிய தேங்காய் மணம் நம்மைச்சுற்றிப்பரவுகிறது.மைதா மாவு, பனங்கருப்பட்டி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணைய், முந்திரிப்பருப்பு சேர்த்து செய்யும் ஒரு அல்வா தான் இது.அல்வா போன்று  வழவழப்பு இல்லாமல் கொஞ்சம் மிருதுவாக இருக்கிறது.சாப்பிட்டு பார்க்கையில் பன்ங்கருப்பட்டியின் சுவையுடன் மெதுவாய் கரைந்து ஒரு புதுவித சுவையத்தருகிறது.நாக்கின் சுவை நரம்புகள் இன்னும் மீட்டப்படுகின்றன.அதன் சுவை நல்ல தேங்காய் எண்ணைய் மணத்துடன் ஒரு வித்தியாசமான சுவையைத் தருகிறது.சாப்பிட சாப்பிட அதன் சுவையில் நாம் சிக்குண்டு போகிறோம்.கைகளில் எண்ணைய் வாசம் இன்னும் அகலவே இல்லை.
ஆளுக்கு அரைக்கிலோ துதல் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்றோம்.அந்த வீட்டில் இருந்து காருக்கு வருவதற்குள் ஒரு பாக்கெட் அல்வா எங்களை தின்று விட்டிருந்தது.

            குறுகிய தெருவினில் எப்படியோ கஷ்டப்பட்டு வந்ததுக்கு ஒரு இனிய அனுபவத்தினை பெற்றிருந்தோம்.அந்த வீட்டில் வாங்கிக்கொண்டு வெளியேறி அந்த ஊரிலேயே உள்ள இன்னொரு கடையினை கேள்விப்பட்டு அங்கு சென்றோம்.அந்தக்கடைக்கு சென்றவுடன் தான் தெரிந்தது இது எம்ஜியார் ருசித்த அல்வா என்று அந்த கடையில் ஒட்டியிருந்த விளம்பர பலகையில் இருந்து....அவரிடம் இன்னும் டீடெயிலாக விசாரித்தபோது 103 வருடங்களாக துதல் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம் என்றும் வெளிநாடு மற்றும் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்ற தகவலையும் சொன்னார்.
              
          துதல் போலவே பணியமும் பேமஸ் என்றார்.நம்மூரில் கிடைக்காத பணியாரமா இங்கு கிடைக்கப்போகிறது என்ற எண்ணத்தினை உடனடியாக காலி பண்ணினார் கடைக்காரர்.பணியாரம் என்று சொன்னது ஒரு கார பலகாரத்தினை.அது பணியாரம் இல்லை பணியம் என்று...ஒருவித உருளை வடிவத்தில் இருக்கிறது.சாப்பிட மொறு மொறுவென்று வித்தியாசமான சுவையில் காரத்துடன் இருக்கிறது.முறுக்கு சுவை என்பது கொஞ்சம் கூட இல்லை.அதுவும் நன்றாக இருக்கிறது.அதையும் ஆளுக்கு ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டு வெளியேறினோம்..
          துதல் அல்வா வீட்டில் வாங்கியது கிலோ 180 ரூபாய்..கடையில் வாங்கினது 200ரூபாய்.
வீட்டில் சுவைத்த துதலும், கடையில் சுவைத்த துதலும் சுவை ஒன்றுதான்..ஆனால் நிறம் மட்டுமே கொஞ்சம் மாறியிருக்கிறது.
எப்பவாவது இராமநாதபுரம் போனால் கீழக்கரை சென்று துதல் சாப்பிட்டுப்பாருங்கள்...உடலுக்கு ஆரோக்கியமான ஒரு இனிப்பு பலகாரம்....

கீழக்கரை பற்றி சிறு குறிப்பு: செத்துங்கொடுத்தான் சீதக்காதி என்ற பெயர் தாங்கிய வள்ளல் சீதக்காதி பிறந்த ஊர்.வரலாற்று சிறப்பு மிக்க பழம் பெரும் கடற்கரை நகரம்.கலங்கரை விளக்கம் அமைந்துள்ள இடம்.



நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 13, 2013

கோவை மெஸ் - கடலை மிட்டாய் - கோவில்பட்டி

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...
 இந்த பதிவை கொஞ்சம் இனிப்பா ஆரம்பிப்போம்...போன மாதம் அம்பாசமுத்திரம் போனபோது போற வழியில் இருக்கிற எல்லா ஊர்களிலும் ரொம்ப பேமசா இருக்கிற தின்பண்டங்களை வாங்கினேன்...முதலில் போனது கோவில்பட்டி...இங்க கடலை மிட்டாய் ரொம்ப ஃபேமஸ்.கோவில் பட்டியில் ஜன நெருக்கடி மிகுந்த சாலையான மார்க்கெட் ரோட்டில் உள்ளே நுழைந்தவுடன் ஏகப்பட்ட கடைகள்...எல்லா கடைகளிலும் கடலைமிட்டாய் விற்பனை போர்டுகள் தொங்கிகொண்டு இருக்கின்றன.VVR மற்றும் MNR என்கிற இரண்டு கடைகளில் தான் டேஸ்ட் மிக நன்றாக இருக்கும் என்பதால் அங்கு சென்றேன்.கடைகளின் முகப்பில் ஒரே கூட்டம்..கும்பலாய் வாங்கி குவித்துகொண்டிருந்தனர்.நானும் அப்படியே கொஞ்சம் ஓரமாய் நிற்க சாம்பிளாய் சுட சுட ரெடியாகிக்கொண்டிருந்த கடலை மிட்டாயை இளம் சூட்டில் தந்தனர்.சாப்பிட சுவையாக இருக்கிறது.நம்ம பங்குக்கு கொஞ்சம் வாங்கினேன்..கால் கிலோ 26 ரூபாய் என்பது குறைவான விலை..ஆனால் டேஸ்ட் மிக நன்றாக இருக்கிறது.
 
 
 
 இரண்டு கடைகளிலும் கொஞ்சம் வாங்கிகொண்டு இருக்கையில் பக்கத்து தெருவில் சீனி மிட்டாய் மற்றும் சேவு மிக நன்றாக இருக்கும் என்று நம்ம நண்பர் காதை கடிக்க , அங்கும் ஒரு அட்டனன்ஸ் போடுவோம் என்றெண்ணி சுப்பையா தேவர் மிட்டாய்கடை இருக்கிற  அடுத்த தெருவுக்கு சென்றேன்..
சீனி மிட்டாயில் சர்க்கரை மற்றும் மண்டை வெல்லத்தில் செய்த இரண்டு வகைகள் இருக்கின்றன.சும்மா சுத்தி சுத்தி வைத்து இருக்கின்றனர் ஒரு ஐந்து அடி உயரத்திற்கு....மிட்டாயை சுத்தி பேப்பர் வைத்து இருக்கின்றனர்...
நம்ம முகத்தினை பார்த்தவுடனே வெளியூர்காரன் என்று தெரிந்து விடும் போல...வாங்க வாங்க என்று சொல்லி சாம்பிள் பார்க்க ஒரு பிடி கொடுக்க நன்றாகத்தான் இருக்கிறது..வெளியே கொஞ்சம் கெட்டியாக இருந்தாலும் உள்ளே இனிப்பு பதம் சுவையாய் இருக்கிறது..நம்மூர் தேன்மிட்டாய் போல உள்ளே தேன் போன்ற சர்க்கரை பாகு இருக்கிறது.சுவையாய் இருக்கிறது.

 
சேவு சொல்லவே வேணாம்..அம்புட்டு சாஃப்ட்...மொறு மொறுன்னு இருக்கு..சைட் டிஷ்க்கு சரியான டிஷ்...எதுக்கும் நமக்கு போற வழியில் யூஸ் ஆகுமே அப்படின்னு அதிலயும் கொஞ்சம் வாங்கிகிட்டேன்...எல்லா பலகாரமும் விலை குறைவாகத்தான் இருக்கு..ஆனா சுவை ரொம்ப சூப்பராக இருக்கு...

இதெல்லாம் வாங்கிகிட்டு அடுத்து போனது நம்ம இருட்டுகடை இருக்கிற திருநெல்வெலிக்கு...நெல்லையப்பர் கோவில் கூட தரிசனம் பண்ண போகல..கோவிலில் இருக்கிற கூட்டத்தினை விட எதிரில் இருக்கிற இருட்டுக்கடையில் தான் அதிகமா இருக்காங்க...சாயந்திர நேரம் மங்கலான வெளிச்சத்தில் வியாபாரம் கன ஜோராய் நடந்து கொண்டு இருக்கிறது.அங்கேயே சாப்பிட கொஞ்சம் வாங்க இளம் சூட்டில் வாழையில் வைத்து தருகின்றனர்.மிக நன்றாய் இருக்கிறது..தாமிரபரணி தண்ணீர் சுவையில் அல்வா செம டேஸ்ட்...வழுக்கி கொண்டு செல்கிறது இலையிலும் ....போட்டவுடன் வாயிலிலும்...
 வந்ததுக்கு கொஞ்சம் வரலாறு வேணும் என்பதால் இரண்டு கிலோ அல்வா பார்சல் கோவைக்கு..தெரிந்தவர்களுக்கு அல்வா கொடுக்கலாம் என்பதால்.....
கிலோ 140 ரூபாய்....அப்புறம் .சாந்தி அல்வா பெயரில் ஏகப்பட்ட அல்வா கடைகள் இருக்கு... அதே போல்....ஏகப்பட்ட போலிகளும் இருக்கு.பார்த்து வாங்கணும்...

இன்னும் இருக்கு..இப்போதைக்கு கொஞ்சம் இடைவெளி...

நேசங்களுடன்
ஜீவானந்தம்...


இன்னும் கொஞ்சம்...

Monday, August 15, 2011

கோவை மெஸ் : இருட்டுக்கடை அல்வா, திருநெல்வேலி


திருநெல்வேலி புகழ் இருட்டுக்கடை அல்வா அமைந்திருக்கும் இடம்.
சாயந்திரம் சும்மா கூட்டம் அள்ளும்...சீக்கிரமாகவே அனைத்தும் காலியாகி விடும் ...அப்புறம் அங்கு ஒரே ஒரு லைட் மட்டும் தான் அங்கு எரிந்து கொண்டிருக்கும்.இருட்டுவதற்கு முன்னாடியே எல்லாம் விற்று தீர்ந்துவிடுமாம்..


திருநெல்வேலி போனால் அல்வா சுவைக்க மறந்து விடாதீர்கள். நெல்லை அப்பர் கோவில் அருகே உள்ள கடை மட்டும்தான் ஒரிஜினல்.நிறைய போலிகள் வேற இருக்கின்றன .. ஏமாந்து விடாதீர்கள்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...