Thursday, May 7, 2015

கோவை மெஸ் - புகாரி ஹோட்டல், குரோம்பேட்டை, சென்னை

                   மே தினம் அன்று என்னோட பொழுது சென்னையில் ஈ சி ஆர் ரோட்டில் உள்ள முட்டுக்காடு, மற்றும் கோவளம் பீச்சில் கழிந்தது.திரும்ப ஊர் திரும்புவதற்காக தாம்பரத்தில் இருந்து இரவு ட்ரெயினில் புக் செய்து இருப்பதால் தாம்பரத்தை ஒட்டி இருக்கிற ஹோட்டல்களில் சாப்பிடலாம் என்று முடிவு செய்து டிரைவரை கேட்டதில், புகாரி ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று சொல்ல, அன்றைய இரவு உணவு குரோம்பேட்டையில் இருக்கிற புகாரி கிளையில் முடிந்தது.ஹோட்டல் படு பிரம்மாண்டமாக இருக்கிறது எதிரே உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி.

              மக்கள் கூட்டம் அங்கு மட்டுமல்ல, இங்கும் ஆளாய் பறக்கிறது.கார்களில் இருந்து குடும்பம் குடும்பமாய் இறங்குகின்றனர். உள்நுழைவதும், உண்ட திருப்தியுடன் வெளியேறுவதும் என மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் அம்மணிகள் கூட்டம் அதிகம்….விதவிதமாய் ரகம் ரகமாய் கண்ணைக் கவரும் உடைகளுடன்…சென்னையைப்பற்றி சொல்லவே தேவையில்லை….எல்லா ஊர் அம்மணிகளின் சொர்க்க பூமி….திகட்ட வைக்காத பூமி…..
               காரினை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய ஆரம்பிக்க வாசலில் பணியாளர் ஒருவர் தலை தாழ்த்தி நம்மை வரவேற்கிறார்.குளிரூட்டப்பட்ட ரிசப்சன் அறையில் கோட் சூட் போட்ட பணியாளர் நம் வருகையை குறித்துக்கொண்டு காலியாக கிடக்கும் சேரில் அமர வைக்கிறார்.ஏற்கனவே காத்துக் கொண்டிருந்த கும்பலில் நாங்களும் ஐக்கியமானோம்.
                  கொஞ்ச நேரம் அப்படியும் இப்படியும் வந்து சென்ற அம்மணிகளை பராக் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நமக்கான அழைப்பு வருகிறது.
உள்ளே நுழைகையில் கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும் மக்கள் உணவருந்திக் கொண்டிருக்கின்றனர்.ஒரே சமயத்தில் இருநூறுக்கும் மேல் சாப்பிடும் வசதி இருக்கிறது.பேமிலி டேபிள், குரூப் டேபிள், பேச்சுலர் டேபிள் என நிறைய இருக்கிறது.அதற்கேற்றவாறு மக்களை பிரித்து உட்கார வைக்கின்றனர்.சாப்பிடும் ஹால் மிக சுத்தமாக இண்டீரியர் வசதியுடன், நல்ல ஏசி குளிருடனும் இருக்கிறது.பத்து நிமிடத்திற்கொரு முறை வாசனை பரவுகிறது ஏசி குளிருடன்.

              நிரம்பி வழிந்த உணவுக்கூடத்தில் ஒவ்வொரு டேபிளிலும் நிறைய உணவுகள் வகை வகையாய் இருக்கிறது.ரசித்து சுவைத்தபடி அமர்ந்திருக்கின்றனர் வாடிக்கையாளர்கள்.கையிலோ வாயிலோ ஏதோ ஒரு உயிரினத்தின் மெனு அமர்ந்திருக்கிறது.வாசனை சுற்றி பரவியிருக்க, அதை கடந்தபடி சென்று எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தோம்.
              சுற்றிலும் அடர்ந்த கூட்டம்…..பிசியாய் பணியாளர்கள் செவ்வனே சேவையை செய்து கொண்டிருந்தனர்.எங்களுக்குண்டான மெனு கார்டு வரவும், அதுவோ பக்கம் பக்கமாக இருக்கிறது.புகாரியின் ஸ்பெசலான பிரியாணியை ஆர்டர் செய்தோம்.மட்டன் பிரியாணி….கூடவே சிக்கன் கபாப், ஹரியாலி கபாப், செட்டிநாடு சிக்கன் என மற்ற வெரைட்டிகளும் ஆர்டர் செய்தோம்.
ஆர்டர் எடுத்து விட்டு நகர்ந்தவுடன் இன்னும் அதிகமாய் பசிக்க ஆரம்பித்தது.சுற்றிலும் பார்வையை ஓட்ட ஆரம்பிக்க, அம்மணிகள் அழகழகாய் தெரிந்தனர்.எல்லா டேபிள்களிலும் ஏதோ ஒரு அம்மணி மிக அம்சமாய் நம் கவனத்தை கவர்கின்றவராக இருக்கிறார். ரசித்துக்கொண்டிருந்த வேளையில் நமக்கான மெனுக்கள் வந்து இறங்க ஆரம்பித்தன…
                 மட்டன் பிரியாணி...பொலபொலவென்று உதிரி உதிரியாய் பாசுமதி அரிசியில் மணம் திடம் சுவை என திரி ரோசஸ் போல சாப்பிட சுவையாய் இருக்கிறது.ஒவ்வொரு பருக்கையிலும் மட்டன் மணமும் மசாலா மணமும் ஒன்று சேர்ந்து சுவையை அதிகப்படுத்தி இருக்கிறது.மசாலாவின் நிறமும் மணமும் ஒவ்வொரு பருக்கையிலும் கலந்து நம் சாப்பிடும் வேகத்தையும் ஆர்வத்தையும் அதிகப்படுத்துகிறது. மட்டன் துண்டுகள்…ஒவ்வொன்றும் பெரிய பெரிய துண்டுகளாய் இருக்கிறது.அனைத்தும் நன்கு வெந்து இருக்கிறது.லேசாய் பிய்த்தாலே எலும்பிலிருந்து உதிர்ந்து சாப்பிட ஏதுவாக இருக்கிறது.பிரியாணி மசாலாவின் மணமும் சுவையும் மட்டன் துண்டுகளில் கலந்து சாப்பிட ஒரு வித இன்பத்தினை தருகிறது.எலும்புகளை கடித்து மென்று திங்கும் அளவுக்கு நன்றாக வெந்து இருக்கிறது.




                   பிரியாணியின் அளவும் மட்டன் துண்டுகளும் சாப்பிட போதுமான அளவு இருக்கிறது.திருப்தியாய் இருக்கிறது.கூடவே இலவச இணைப்பாய் அவித்த முட்டை ஒன்றும் இடம்பிடித்து இருக்கிறது.முட்டையுடன் பிரியாணியையும் சேர்த்து சாப்பிட அது ஒரு தனிச்சுவையைத் தருகிறது.
               அடுத்து சிக்கன் கபாப்…பார்க்கவே பசி தீர்ந்தது போல் இருக்கிறது.தந்தூரியில் வைக்கப்பட்ட சிக்கன் துண்டுகள் மெது மெதுவாய் பஞ்சு போல் இருக்கிறது.பிய்த்து சாப்பிட சுவையாய் இருக்கிறது.நல்ல சைட் டிஷ் ஆக இருக்கிறது.அது போலவே ஹரியாலி சிக்கனும்.பார்க்கவே பச்சைக்கலரில் பரவசப்படுத்துகிறது.இதுவும் நல்ல சுவையுடன் இருக்கிறது.
                நன்கு சாப்பிட்டுவிட்டு திருப்தியாய் கை கழுவிவிட்டு அமர பில் வந்தது.கூடவே புகாரி பெயரிட்ட பாக்கு பொட்டலமும்…
                 பில் கொடுத்து விட்டு அந்த நீண்ட தூர ஹாலை கடக்கும் போது மீண்டும் லேசாய் பசிக்க ஆரம்பிக்கிறது.வெளியே ரிசப்சன் ஹாலை வந்து சேரும் போது இன்னமும் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.உட்கார இடமின்றி நிறைய பேர் நின்று கொண்டிருக்க, எப்பவும் போல வாசலில் உள்ள அந்த பணியாளர் தலை குனிந்தும் நிமிர்ந்தும் வரவேற்றுக்கொண்டிருக்க அவர் கையில் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு நகர்ந்தோம்.

இடம் - சரவணா ஸ்டோர்ஸ் எதிரில், குரோம்பேட்டை

நேசங்களுடன்
ஜீவானந்தம்









5 comments:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....