Monday, May 25, 2015

கோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, ஆம்பூர், வேலூர் மாவட்டம்

                        பெங்களூர் ஹைவேஸ் வழியா சென்னை செல்லும் போதெல்லாம் ஆம்பூர்ல ஸ்டார் பிரியாணி போர்டு பார்த்துட்டு போயிருக்கேன்.அதுமட்டுமல்ல ஆம்பூர்ல ஸ்டார் பிரியாணிதான் பேமஸ் என்று கேள்விப்பட்டு இருப்பதால் என்னிக்காவது போகனும் என்கிற ஆவலும் இருந்தது.அந்த ஆவல் போன வாரம் நிறைவேறியது.மதியம் இரண்டு மணிக்கு ஆஜராகிவிட்டேன்.ஆம்பூர் பைபாஸில் இரண்டு கிளைகள் இருக்கின்றன புதிதாக திறக்கப்பட்ட ஸ்டார் பிரியாணி ஹோட்டல், அப்புறம் தியேட்டர் அருகில் இருக்கிற பழைய கிளை ஸ்டார் பிரியாணி ஹோட்டல்..


                               ஆம்பூர்ல வண்டிய நிறுத்திட்டு காலாற நடந்து சென்று எதிர்ப்பட்ட லோக்கல் ஆட்களிடம் விசாரிக்க, ஸ்டார் பிரியாணிலாம் இப்போ டேஸ்ட் கம்மியாடுச்சி...ரொம்ப ஆடம்பரமா புதுசா கட்டி இருக்காங்க...விலையும் ஏத்திட்டாங்க....பேப்பர், டீவி பேஸ்புக்கு ன்னு விளம்பரம் படுத்திட்டு டேஸ்ட்டுல கோட்டை விட்டுட்டாங்க, எப்பவோ பேமஸ் ஆன ஸ்டார் பேரைத் தெரிஞ்சிகிட்டு வழியில வர்ற கார்வாசிகள் இந்தப்பக்கமும் பழைய கடையிலயும் அந்தப்பக்கம் புதுக்கடையிலயும் சாப்பிட்டுட்டு போறாங்க  என ஆதங்கத்தினை சொல்ல, பக்கென்றானது நமக்கு....
                         சரி..இவ்ளோ தூரம் வந்து இருக்கோம், ஒரு வாய் சாப்பிட்டு நம்ம கடமையை ஆத்துவோம் என்றெண்ணி பழைய கிளையில் உள்ளே புகுந்தோம்.கடைக்கு வெளியே நிறைய கார்கள் நின்று கொண்டிருந்தன.
ஸ்டார் பிரியாணி ஹோட்டல் என்பதால் என்னவோ கடையின் உட்புறங்கள் நட்சத்திரங்கள் கொண்டு வர்ணம் பூசப்பட்டிருந்தது.ஒரு சில டேபிள்களில் மட்டும் ஆட்கள் நிறைந்த படி இருக்க, மற்றவை காலியாக கிடந்தன...குடும்பம் சகிதமாக வந்தவர்கள் பிரியாணியை மற்றும் இன்ன பிற வஸ்துகளை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர்.


நமக்கு தோதான இடத்தில் அமர்ந்து கொண்டு பிரியாணியை ஆர்டர் செய்தேன்.வாழையிலையில் சூடாய் வந்து விழுந்தது பிரியாணியும் சில சிக்கன் துண்டுகளும்.

               பிரியாணி.....பார்த்தவுடனே தெரிந்து விட்டது இது சுமார் தான் என்று...வெளியே விசாரித்தபோது உள்ளூர்க்காரர் சொன்னது உண்மைதான்... மசாலா மணமின்றி வெளிறிப்போய் கிடந்தது.நீர் கோர்த்தது போல சல சல என்றிருக்க, பிரியாணியின் தரம் அப்போதே தெரிந்து விட்டது.
பிரியாணி டேஸ்ட் சுத்தமாக பிடிக்கவே இல்லை.பிரியாணி மசாலா போட்ட தக்காளி சாதம் போன்று இருந்தது. அதற்கு காம்பினேசாக தரும் தாழ்ச்சா....சத்தியமாய் நன்றாகவே இல்லை...கத்தரிக்காய், கொஞ்சம் எலும்பு, மாங்காய் போட்டு, புளிப்பும் காரமும் நன்கு கெட்டியாக இருக்கும் தாழ்ச்சாவைத்தான் சாப்பிட்டு இருக்கிறேன்.ஆனால் இங்கோ சுத்தமாய் சரியில்லை...தயிர்ப்பச்சடி.....தயிர் மோராகி நன்றாக இல்லை..
           சிக்கன் நன்றாக வெந்து இருந்தது..அளவான உப்பிட்டு வேகவைத்து இருப்பார்கள் போல, நன்றாக இருந்தது.ஆனால் பிரியாணி கொஞ்சம் கூட ஒட்டவில்லை....எப்பவும் பிரியாணி கொஞ்சம் டேஸ்ட் பண்ணிவிட்டு அப்புறம் அதிகமாக சாப்பிட பிடிக்கும்..இங்கு டேஸ்ட் பண்ணியதும் குறைவாகவே சாப்பிட தோணுகிறது..
சீக்கிரமாகவே எழுந்து விட்டேன்...சர்வீஸ் வேறு சுத்தமாய் சரியில்லை..இரண்டே பேர்..பத்துக்கும் மேற்பட்ட டேபிள்களுக்கு....எப்படி கவனிக்க முடியும்...எது சொன்னாலும் லேட்டாக வருகிறது...இலையில் பரிமாறிவிட்டு நாம் கூப்பிடும் வரை நம் பக்கம் வருவதே இல்லை....திடம் மணம்  சுவை என்பது சுத்தமாய் இல்லை...
பில் கொடுக்கிறபோது ஏன் பிரியாணி நன்றாகவே இல்லை என கேட்க, அவரிடமிருந்து அப்படியா என்கிற ஆச்சர்யக்குறி மட்டும் வெளியேறியது.
ஒரு பிரியாணி மணம் சுவை எப்படி இருக்கவேண்டும் எனில், சாப்பிடும் போதும் அதன் சுவை நம் நாவில் அமர வேண்டும்.இன்னும் வேண்டும் வேண்டும் என வயிறு சொல்ல வேண்டும். சாப்பிட்டு முடித்தபின் கை கழுவியவுடன் ஒரு அரைமணி நேரம் கையில் பிரியாணி மணம் வீசிக்கொண்டிருக்க வேண்டும்.அது தான் பிரியாணி... 

எதுக்கும் அந்தப்பக்கமா போனீங்கன்னா சாப்பிட்டு பாருங்க...ஒரு வேளை அன்னிக்கு நல்லா இருந்தாலும் இருக்கும்....


நேசங்களுடன்
ஜீவானந்தம்




1 comment:

  1. அந்தப்பக்கம் இனி யாரும் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள்...!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....