Monday, November 16, 2015

கோவை மெஸ் - சோற்றுக்கற்றாழை ஜூஸ் (Aloe vera Juice)

சோற்றுக்கற்றாழை ஜூஸ்
                 திருப்பத்தூர்ல இருக்கும் போது காலங்காத்தால கொஞ்சதூரம் பைக்கிங் போய்ட்டு வருவேன்.எல்லாரும் வேர்க்க விறுவிறுக்க வாக்கிங்க் போய்ட்டு இருப்பாங்க..அவங்களை வேடிக்கை பார்த்துகிட்டே நான் மட்டும் பைக்கிங்க் போவேன்.அப்படி போறபோது தான் இந்த ஜூஸ் கடை அறிமுகமாச்சு.மூணு வேளையும் நல்லா பிரியாணியா கட்டுறது, அப்பப்ப நம்ம பகார்டியையும் டேஸ்ட் பார்க்கிறது என திருப்பத்தூர்ல வாழ்ந்துட்டு இருந்ததால், உடம்பையும் கொஞ்சம் கவனிக்கனுமே அப்படிங்கிற நல்லெண்ணத்துல இந்த கடைக்கு போனேன்.
              சிறுவயதில் வீட்டுல தொங்க விடுவதற்காக கத்தாழை செடியை பிடிங்கிட்டு வருவதோட சரி.அதன் பலன் என்ன.... பயன் என்ன என்பதெல்லாம் தெரியாது.ஆனா சாப்பிட்டா செம கசப்பு கசக்கும் என்பது மட்டும் தெரியும்.அதுக்கப்புறம் ஒரு தடவை எதுக்கோ பந்தயம் கட்டி டேஸ்ட் பார்த்துட்டு, கத்தாழை செடி இருந்தபக்கம் கூட போனதில்ல.அப்புறம் மிஷ்கின் படத்துல கத்தாழ கண்ணால பாட்டுல மட்டும் இந்த கத்தாழைங்கிற வார்த்தையை கேள்வி பட்டு இருக்கேன் அவ்வளவு தான் நமக்கும் இதற்கும் சம்பந்தம்.
                 திருப்பத்தூர்ல அடிக்கிற வெயிலுக்கு இதை சாப்பிட்டா உடம்புக்கு நல்ல குளிர்ச்சியாகும் என ஒருத்தர் நம்ம சைட்ல சொல்லவும், அதுக்கப்புறம் தான் இந்த கடைக்கு வர ஆரம்பிச்சேன்.கத்தாழையை சீவி அப்படியே நுங்கு போல வைத்து இருப்பாங்க.அதை மோர்ல போட்டு கை மிக்ஸியில் கொஞ்ச நேரம் சுத்தவிட்டு ஜூஸா குடுப்பாங்க.பாயசத்துல மிதக்கிற ஜவ்வரிசி மாதிரியே இந்த மோர்ல கத்தாழை துண்டுகள் மிதக்கும் பாருங்க....ஆகா...ஆவ்சம்....



பார்க்கிறதுக்கு தான் நல்லாயிருக்கும்..கொஞ்சம் வாயில பட்டா கசப்பு தெரிய ஆரம்பிக்கும் பாருங்க...அப்படியே மூஞ்சி அஷ்டகோணலா  மாறும்...கண்ணை மூடிகிட்டு, வாயை திறந்து ஒரே மடக்கா குடிச்சிட்டு படக்குன்னு டம்ளரை கசக்கி போட்டுடுவேன்..கொஞ்ச நேரம் செம கசப்பு கசக்கும்...அப்புறம் பழைய நிலைமைக்கு வந்துடுவேன்.அவ்ளோ தான் ஒரு ரவுண்ட் தான்...
                                 சரக்கடிக்கும் போது கூட இந்த மாதிரி கசப்பு தெரியமாட்டேங்குது..ஆனா நல்லது பண்ற இந்த கத்தாழை ஜூஸ் குடிச்சா மட்டும் கசப்பு தெரியுது...இவ்ளோ கசப்பு இருந்தாலும் நம் உடலுக்கு தருகிற இதன் பயன் மிக அதிகம்.வயிற்றுபுண், சர்க்கரை நோய், மூலம், அல்சர், சிறுநீரக கோளாறு, பெண்களுக்கு வெள்ளைப்படுதல், முக பொலிவு,கூந்தல் வளர்ச்சி, தோல் நோய், மலச்சிக்கல், கல்லீரல் நோய் குணம் என ஏகத்துக்கும் இதன் பயன்பாடு அதிகம்.இந்த ஜூஸை அங்க போய் தான் குடிக்கணும்னு இல்ல, உங்க வீட்டுலயே தயாரிக்கலாம்.மோர்ல கலந்து குடிக்க விருப்பமில்லாதவங்க, அப்படியே வெறும் வாயில் இரு துண்டுகளை போட்டு முழுங்கி கொள்ளலாம்.உடம்புல இருக்கிற வியாதிகள் குறைவதற்கு இது ரொம்ப பயன்படுகிறது.வீட்டுல கொஞ்சம் இடம் இருந்தால் இதனை நட்டு வையுங்கள்.பாம்பு போன்ற ஜீவராசிகள் வராது என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


2 comments:

  1. கத்தாழையை ஏழு முறை அலசினால் கசப்பு போய்டும்ன்னு படிச்சேனே! போகாதா?!

    ReplyDelete
    Replies
    1. அது தெரியாதே...ஆனா கசப்பு தான் மருந்தே...

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....