Monday, November 30, 2015

கோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில், திருப்பதி, பகுதி - 1

திருப்பதி பயணக்கட்டுரை:

                   அடாது மழையிலும் விடாது பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.நீண்டு செல்லும் இரு கம்பிவேலிகளுக்கு இடையில் மழையின் சாரலில் நனைந்தும், நனையாமலும் சென்று கொண்டிருந்தோம்.செல்லும் வழியில் 300 ரூபாய் தரிசனம், விஐபி தரிசனம் என இரு வழிகள் பிரிக்கப்பட்டு பக்தர்கள் பிரிக்கப்படுகின்றனர்.அங்கு நமது டிக்கெட் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுப்பப் படுகின்றனர்.அங்கும் நம்மை சோதனை செய்கின்றனர்.வெகு தூரம் சென்று கொண்டிருந்தோம் வளைந்தும் நெளிந்தும்.....ஓரிடத்தில் எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை நின்று கொண்டிருக்க, அங்கிருந்து எங்களின் பயணம் வெறும் அங்குலமாக மாறியது.நாங்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்க, அவ்வப்போது கோவிந்தா....... கோவிந்தா என்கிற கோஷம் அதிர ஆரம்பித்தது....செல்லும் வழியில் பக்தர்களை தங்க வைப்பதற்கான அறைகள் நிறைய இருக்கின்றன.கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து இடங்களிலும் பொருத்தி வைத்து சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

                                     சென்று கொண்டிருக்கும் வரிசையில் ஆங்காங்கே பாதுகாப்பு சோதனை வளையங்கள்.பக்தர்கள் இன்னும் கூடுதலாக சோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகின்றனர்....கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரிசையில் மெதுவாய் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தோம்.கடைசியாய் எம்பெருமான் வீற்றிருக்கும் மண்டபத்தில் நுழைய ஆரம்பித்தோம்.பக்தர்கள் கூட்டம் நெருக்கித்தள்ள ஆரம்பிக்கிறது.அப்போது ஏற்படும் தள்ளுமுள்ளுவை சகித்துக்கொண்டு கோவிந்தா..... கோவிந்தா... என கோஷம் போட்டுக்கொண்டு திருப்பதி ஏழுமலையானை மனமுருக வேண்டிக் கொண்டோம்...அதற்குள் ஜர்கண்டி...ஜர்கண்டி ...என தெலுங்கில் உத்தரவு வர அங்கிருந்து நகர்ந்தோம்....

                   திருப்பதி ஏழுமலையானை சந்தித்த மகிழ்ச்சியில் அங்கிருந்த மண்டபம் ஒன்றில் அமர்ந்து கொண்டோம்...பின் அங்கிருக்கும் ஒரு சில தெய்வங்களை வணங்கிவிட்டு, வெளியேறினோம்.அடுத்து லட்டு கவுண்டர்.... ஒரு மண்டபத்தில் இருபுறமும் ரயில்வே கவுண்டர் மாதிரி வரிசையாய் டிக்கட் கவுண்டர்.நாம் வைத்திருக்கும் தரிசன டிக்கெட்டினை வாங்கி பார்கோட் ரீட் பண்ணி டிக்கெட்டுக்கு உண்டான லட்டினை தருகின்றனர்.லட்டினை பெற்றுக்கொண்டு வெளியே வர திருப்பதி மலையின் மழையோடு கூடிய சுதந்திர காற்றினை சுவாசிக்க ஆரம்பித்தோம்...

                 பின் மெதுவாய் நடக்க ஆரம்பித்து கோவிலுக்கு உள்ளே நாம் கொடுத்து வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே இருக்கும் கவுண்டரில் வாங்கிக்கொண்டு எங்களின் தங்குமிடத்திற்கு சென்றோம்....
மாலை ஆறு மணிக்கு கோவில் வரிசையில் செல்ல ஆரம்பித்து, திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு வர இரவு 9 மணி ஆகிவிட்டது.மிக சிறப்பான தரிசனம்...என்ன கொஞ்ச நீண்ட தரிசனம்...பெருமாளை சந்திப்பது என்ன அவ்வளவு சுலபமா...?என்னதான் தள்ளு முள்ளு, நெருக்கடி இருந்தாலும் மீண்டும் அவரை சந்திக்க வேண்டி விரும்புகிறது.இனி அடுத்த முறை அவரை பார்க்க செல்லவேண்டும்...
திருப்பதி ஏழுமலையானை தரிசித்தபின், அலர்மேல்மங்கை தாயார் திருக்கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.திருப்பதி அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.

திருப்பதி செல்ல ஒரு சில முன்னேற்பாடுகள்: 

1) திருப்பதி செல்ல திட்டமிடுபவர்கள் ஆன்லைனில் தரிசன நேரம் புக் செய்து கொள்ளலாம்.செல்லும் நாள், நேரம் ஆகியவற்றை உங்கள் புகைப்படத்தோடு பதிவு செய்து கொள்ளலாம்.லட்டுகள் கூட எத்தனை வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளலாம்.
2) திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்குவதற்கும் ஆன்லைனில் புக் செய்து கொள்ளவேண்டும்.இல்லையேல் திருப்பதியில் தங்கிக்கொண்டு பின் மேல் திருப்பதிக்கு செல்லலாம்.

3) தங்குவதற்கு அறை கிடைக்க வில்லை எனில் திருப்பதி மலையில் இலவச அறைகள் இருக்கின்றன.லாக்கர் வசதிகள் உள்ளன.அங்கு தம் பொருட்களை வைத்துவிட்டு தரிசனம் செய்ய கிளம்பலாம்.

4)தங்களின் உடைமைகள், செல்போன், காலணிகள் இவைகளை லாக்கரிலேயே விட்டு செல்வது நல்லது.

5)செல்போன், உடைகள் மறந்து எடுத்துச் சென்றால் தரிசனம் செல்லும் வழியில் லாக்கர் வசதி இருக்கின்றன.அங்கு ஒப்படைத்து விட்டு, தரிசனம் முடிந்தபின் கோவிலுக்கு வெளியே வந்து பெற்றுக்கொள்ளலாம்.கையோடு ஏதாவது துணிப்பை இருப்பின் நல்லது.

6)லட்டு வாங்க கவர் அங்கேயே பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இல்லையேல் கையில் பை இருந்தால் நல்லது.

7)மாதவா இல்லம் என்கிற தங்குமிடத்தில் பாய், போர்வை வாங்கிக்கொண்டு இரவு தூங்கிக்கொள்ளமுடியும்.இல்லையேல் வெளியே வாடகைக்கு பாய் போர்வை கிடைக்கும்,அதை வாங்கிக்கொண்டு இரவை கழித்துக்கொள்ளலாம்.

8)தங்குமிடங்கள் அனைத்தும் அத்தனை சுத்தம்..24 மணி நேரமும் பணியாளர்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

9) பொது தரிசனம் என்கிற இலவச தரிசனத்தில் போனால் எப்படியும் ஒரு நாள் அல்லது இரு நாள் ஆகிவிடும்.ஆனாலும் சாப்பாடு, குடிநீர் வசதிகள், கழிவறை போன்ற வசதிகள் இருக்கின்றன.

பத்திரமாய் பாதுகாப்பாய் திருப்பதி செல்ல வாழ்த்துக்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



2 comments:

  1. திருப்பதி பாலாஜியைப் பார்த்த புண்ணியம் உங்கள் பதிவைப் படிப்போருக்கு கிடைக்கட்டும்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....