Thursday, November 26, 2015

கோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில், திருப்பதி

                      திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்கவேண்டி கடந்த வாரம் பயணப்பட்டேன்.அதிகாலை கோவை ரயில் நிலையத்தில் கோவை திருப்பதி எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் கிளம்பினோம்.எங்களை மழை வாழ்த்தி வழியனுப்பியது.கோவையில் ஆரம்பித்த மழை திருப்பதி செல்லும் வரை நீண்டு கொண்டிருந்தது.பத்து நிமிடம் மழை நிற்பதுவும் பின் தொடர்வதுமாய் எங்களுடனே பயணித்தது மழை.திருப்பதி ரயில் நிலையத்தினை மதியம் 2 மணிக்கு அடைந்தோம்.ஸ்டேசனை விட்டு வெளியே வர, தூறலாய் பெய்து கொண்டிருந்த மழை எங்களை வரவேற்க கொஞ்சம் கனமாய் சட சடவென பொழிய ஆரம்பித்தது.கொட்டும் மழையில் கொஞ்சம் நனைந்தும் நனையாமலும் அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் ஓரம் ஒதுங்கி நின்றோம்.
  
                 ரயில் நிலையத்திற்கு வெளியே திருப்பதி தேவஸ்தான பஸ் அந்த மழையிலும் பக்தர்களை ஏற்றிக்கொண்டிருந்தது.ஒரு பஸ் நிரம்பி கிளம்பியதும் உடனடியாக அடுத்த பஸ் நிரம்பிக்கொண்டிருந்தது.நாங்களும் அடுத்து வந்த ஒரு பேருந்தில் ஏறிக்கொள்ள பஸ் கிளம்பியது.கிளம்பி இரண்டு நிமிடம் கூட இருக்காது, அருகில் உள்ள பஸ்ஸ்டாண்டில் ஓரங்கட்டினர். வெளியே இருக்கும்  டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கிக்கொள்ள தெலுங்கில் மாட்லாடினார் அந்த பேருந்தின் ஓட்டுனர். குடும்பம் குடும்பமாக வந்திருப்பதால் யாராவது ஒருத்தர் போய் வாங்கினால் போதும் என சொல்ல, நானும் என் பங்குங்கு டிக்கெட் வாங்கினேன்.போக மட்டும் 50 ரூபாய். போக வர சேர்த்து வாங்கிக்கொண்டால் 90 ரூபாய்.மூன்று நாட்கள் வரை இந்த பயணச்சீட்டை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

                          அனைவரும் டிக்கெட் வாங்கி வந்தவுடன் பஸ் கிளம்பியது.ஒரு பத்து நிமிட பயணம்.மீண்டும் வண்டி நின்றது.பார்த்தால் செக் போஸ்ட். மலைக்கு மேல் செல்பவர்களை சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு செக்போஸ்ட்.ஏர்போர்ட்டில் இருப்பது போன்று மின்னணு சோதனை.நமது அத்தனை உடைமைகள், லக்கேஜ், பிறகு நம்மையும் செக் செய்துவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஏற்றுகின்றனர்.ஒரு மணி நேர பயணம்.மலைப்பாதையில் கொட்டும் மழையினூடே பயணிக்கிறது பேருந்து.இருபுறமும் மழையைத்தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை.பேருந்து மேல் திருப்பதியை அடைந்த நேரம் மதியம் மூன்று மணி தான் இருக்கும் ஆனால் இருட்டுவதற்குண்டான அறிகுறியில் சாலைகளில் மழையுடன் மேகம் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.இருட்டை பகலாக்கும் முயற்சியில் தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. சாலைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசித்தவர்கள், தரிசிக்க போகிறவர்கள் என பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் நகர்ந்து கொண்டிருந்தனர்.
                           

         

                  நாங்களும் பேருந்தை விட்டு இறங்கி குடை பிடித்துக்கொண்டு மழையில் நடக்க ஆரம்பித்தோம்.பஜார் போன்ற கடைவீதிகளில் மழையையும் மீறி கூட்டம் மொய்த்துக்கொண்டு இருந்தது.கார்கள்,ஜீப்கள், பேருந்துகள், என எல்லாம் பக்தர்களை சுமந்து கொண்டு இயங்கிக்கொண்டிருந்தன.பேருந்து நிலையத்திற்கு பக்கத்திலேயே உள்ள மாதவா இல்லம் என்கிற தங்குமிடத்திற்கு சென்றோம்.அங்குதான் லாக்கர் வசதியும், மொட்டை போடுவதற்கான இடமும் இருப்பதால் அங்கு சென்றோம்.முதலில் லாக்கர் வசதியை பெற்றுக்கொண்டு ஈர துணிகளை மாற்றிக்கொண்டு மொட்டை போட சென்றோம்.
                           மொட்டை போட இலவச டோக்கன் தான்.டோக்கனோடு அரை பிளேடு ஒன்றும் தருகிறார்கள்.மொட்டை போடும் இடத்தில் வரிசையாய் அமர்ந்திருக்கின்றனர் நாவிதர்கள்.அவர்களுக்கு முன்னால் தலைகுனிந்தபடி இழந்து கொண்டிருக்கின்றனர் பக்தர்கள், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வெங்கடாசலபதிக்காக நேர்ந்து விட்ட தத்தம் முடிகளை.... பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அறையில் பலரும் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.ஆங்காங்கே சிதறிக்கொண்டிருந்த முடிகளை வாக்குவம் கிளினர் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர் கோவில் பணியாளர்கள்.டோக்கனில் உள்ள நம்பர் படி நாங்களும் தலைகுனிந்தபடி ஆஜரானோம். கண நிமிட நேரம் தான்.வழித்து தள்ளியது நாவிதரின் கத்தி.ஏழுமலையானுக்கான மொட்டையுடன் வெளியேறினோம்.
              குளித்து முடித்து புத்தாடை அணிந்து ஏழுமலையானை தரிசிக்க கிளம்பினோம்...ஏற்கனவே ஆன்லைனில் தரிசன நேரம் புக் செய்துவிட்டபடியால் அந்த நேரத்திற்கு முன்கூட்டியே சென்றுவிட்டோம். வளைந்தும் நெளிந்துமாய் வரிசை ஓடுகிறது.வெளியே மழை பெய்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது.

தொடரும் போடனும் போல இருக்கு....போட்டுடறேன்

நேசங்களுடன்
ஜீவானந்தம்





2 comments:

  1. படங்களுடன் பயணப்பதிவு அருமை
    சமீபத்தில்தான் சென்று வந்தேன் என்பதாலும்
    வருகிற மாதம் போக இருப்பதாலும்
    கொஞ்சம் கூடுதல் அக்கறையுடன் தொடர்கிறேன்
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....