Wednesday, November 30, 2016

சாணை பிடிக்கலையோ...சாணை...பேஸ்புக் பதிவு

சாணை பிடிக்கலையோ..சாணை...                     காலையில் இந்தக்குரலை கேட்டு ஓடோடி வெளியே வந்தேன்.பல நாட்களாகவே வீட்டில் நிறைய கத்திகள் பதமின்றி இருக்க, இந்தமுறை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று சாணை பிடிக்கும் பையனை நிறுத்தினேன். எப்பவாது ஒரு முறை எங்கள் தெருப்பக்கம் வரும் சாணை பிடிப்பவர்கள் குரல் கேட்டு, அவர்களை நிறுத்தி, இருக்கும் ஓரிரண்டு கத்திகளை காட்டி சாணை பிடித்து தர விலை கேட்டால், புதிய கத்திகளே வாங்குமளவுக்கு விலை சொல்வார்கள்.வேண்டாம் என்று சொல்லி மீண்டும் பழைய கத்திகளோடு சமையலறையில்போராட்டம் தொடரும்.
                                        அவ்வப்போது இரண்டு கத்திகளை ஒன்றோடொன்று தேய்த்து உரைத்து பயன்படுத்தி கொண்டிருப்போம்...இப்படியே நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதங்கள் ஆகின.மாதங்கள் வருடங்கள் ஆகிவிடக்கூடாது என்கிற கட்டாயம்.நாளை ஞாயிறு வேறு.கண்டிப்பாய் மட்டனோடு போராட வேண்டியிருக்கும்.ஊரிலிருந்து வாரா வாரம் வரும் ஜிலேபி மீனை வெட்ட வேண்டியிருக்கும்.சிக்கனும் பீஃப் பும் வேறு வரிசை கட்டி காத்திருக்கும்.
                                  அதனால் இம்முறை சாணை பிடித்தே ஆகவேண்டும் என பையனை நிறுத்தி விலை கேட்டேன்.எப்பவும் போலவே புதிய கத்திகள் வாங்குமளவுக்கு சொன்னான்..இப்பொழுது இருக்கும் நாட்டின் நிலைமையில் பணம் செலவழிப்பது வேறு ஒரு பிரச்சினை.இருந்தாலும் சா. பையனிடம் பேச்சு கொடுத்து பேரத்தில் இறங்கினேன்.கத்திக்கு பத்து ரூபாய் கொடுங்க பண்ணித்தரேன் என சொல்ல, சரி இன்றைய இவனது உழைப்பு என்னிடத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும் என்று கத்திகளை கொடுத்தேன்.
                                          சைக்கிள் வீலில் பெல்ட்ஐ மாற்றி பெடல் பண்ண ஆரம்பிக்க, சாணைச்சக்கரம் வேகமாய் சுழல ஆரம்பித்தது.கத்தியை அதில் வைத்து லாவகமாய் இருபுறமும் பிடித்து நெருப்பு பொறி சிதற கத்தியை கூர் தீட்டிக்கொண்டிருந்தான்.காலும் கையும் ஒரு சேர இயங்கிக்கொண்டிருக்க, அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.
                    எங்கிருந்து வர்றீங்க, எங்க இருக்கீங்க, என கேள்விகளை கேட்கவும், சொந்த ஊர் ராம்நாடு, இங்கு காந்திபுரத்தில் தங்கியிருக்கிறோம்.வீடா, இல்லை லாட்ஜா என கேட்க, இல்லை ஆம்னி பஸ்ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில்தான் எனவும் கிட்டத்தட்ட 25 பேர் இப்படி தங்கியிருக்கிறோம்.ஒரு நாள் வருமானம் ரூ 250 க்குள் தான் வரும், எங்காவது திருட்டு நடந்து விட்டால் சந்தேக லிஸ்ட்லில் கொண்டு போவார்கள்,அட்ரஸ் வாங்கிக்கொண்டு விட்டுவிடுவார்கள் என்றும் தினமும் ஒவ்வொரு ஏரியாவாக சென்று தெருத்தெருவாய் கூவிக் கூவி கிடைக்கும் பணத்தை சேர்த்து ஊருக்கு போவோம்.
                                   இது எங்கள் குலத்தொழில் இதை விட எங்களுக்கு மனசில்லை எனவும் ஊரில் ஏகப்பட்ட நிலபுலன்கள் இருக்கின்றன ஆனால் வறட்சி காரணமாக எந்த வேலையும் கிடைப்பதில்லை என சொல்லிமுடிக்கையில் சாணைக்கல்லும் சுத்துவதை நிறுத்தியிருந்தது.முடிவில் அவனது உழைப்புக்கான ஊதியத்தை இருமடங்காய் தந்தபோது அவனின் முகம் கொஞ்சம் பளபளத்தது கூர் தீட்டப்பட்ட கத்தியை போல..பதம் பார்த்த கத்தியை வாங்கியதில் அவனது உழைப்பின் சூடு என் கைகளில் ஏறியிருந்தது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


5 comments:

 1. அருமையான பதிவு

  ReplyDelete
 2. சாணை பிடிக்கலீயோ .. சா ணே ய்...
  தெருக்களில் சைக்கிள் பின் வீ லின் ரிம்மில் சாணை பிடிக்கும் கல் (கார்போரண்டம்) இணைத்து தீப்பொறிப் பறக்க கத்தி, கத்தரிக்கோல், வெட்டரிவாள், இவற்றை சாணை பிடிப்பது பார்க்க பேரானந்தம் போல் இருக்கும் நம் குழந்தை பருவத்தில்..
  தற்போது அதை மீண்டெடுக்கும் விதமாய் அமைத்தது இந்த பதிவு, Touching Lines "பதம் பார்த்த கத்தியை வாங்கியதில் அவனது உழைப்பின் சூடு என் கைகளில் ஏறியிருந்தது". கலக்கு நண்பா...

  visit our blog
  http://oorsutrii.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...உங்க பிளாக் அவ்வப்போது படிக்கிறேன்

   Delete
 3. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
  ACCA Qualifications and Courses | ACCA courses Chennai | Best ACCA training institutes

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....