Friday, February 12, 2016

கோவை மெஸ் - அடைபிரதமன் , பிரியா பாலடை பாயாசம்,ஜி.பி சிக்னல், கோவை

கேரளாவின் மிக பிரசித்தி பெற்ற ஒரு உணவு அடைபிரதமன்.ஓணம் திருவிழாவில் படைக்கப்படுகிற மிக சுவையான உணவு இந்த அடைபிரதமன்.நம்மூர்ல பண்ற பாயாசம் போல இருக்காது.அரிசி மாவை வேகவைத்து அடை செய்து பின் தேங்காய்பால், பால், சர்க்கரை சேர்த்து செய்யப்படுகிற மிக சுவையான பதார்த்தம் இது...குடிக்க குடிக்க தெவிட்டாத ஒரு வகை உணவு.
கேரளாவில் மட்டும் கல்யாணம் மற்றும் வீட்டு விழாக்களில் இது முக்கியமாய் இடம் பெறும்.நம்மூரில் இது கிடைப்பது அரிதே..ஏதாவது கேரள ஹோட்டல்களில் மட்டும் கிடைக்கும்.நம்மூரில் வசிக்கின்ற மலையாளிகள் வீட்டில் ஏதாவது விசேசத்திற்கு செய்வார்கள்.
                எனக்கு மிகவும் பிடித்த பாயாசம் இது.கேரள நண்பர்கள் வீட்டில் ஏதாவது விசேசம் என்றால் அங்கு ஆஜராகிவிடுவேன்.கடைசியாய் என் நண்பரின் திருமணத்தில் சுவைத்தது.அதற்கப்புறம் வாய்ப்பு கிட்டவில்லை. கடந்த ஒரு சில மாதங்களாகவே மாலை நேரத்தில் நூறடி ரோட்டில் சிக்னலுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும் போது, இந்த பிரியா பாலடை பாயசம் கடை பூட்டியே இருக்கும்.ஆனால் விளம்பர போர்டு மட்டும் நம்மை வரவேற்றுக்கொண்டிருக்கும்.எப்போ திறப்பார்கள் என்கிற விவரம் எதுவும் தெரியவில்லை...இப்படியே ஒரு சில மாதங்கள் ஓடிவிட்டன..
கடைசியாய் இரு தினங்களுக்கு முன் ராமகிருஷ்ணா மருத்துவமனை ஐயப்பன் கோவில் வழியாய் ஜி.பி சிக்னல் வரும் போது அதிசயமாய் திறந்து கிடந்தது.உடனே வண்டியை ஓரங்கட்டி கடைக்குள் நுழைந்து விட்டேன்.

                மலையாள சேச்சி தான் நம்மை வரவேற்றது.அடைபிரதமன் இருக்கான்னு கேட்டதும், ஓ....இருக்கே என தமிழுமலையாளத்தில் பறைஞ்சு, ஒரு டீ கப்பில் ஊற்றிக் கொடுக்க, எடுத்து உதட்டில் வைத்து ஒரு சிப் அருந்த,  ஆஹா....ஆஹா....செம டேஸ்ட்...நாவில் அதன் சுவை பரவ பரவ என்ன ஒரு ஆனந்தம்...பால் பருக பருக, இடையிடையே வரும் அரிசி மாவின் அடை சுவையும் பாலுடன் கலந்து ஒன்றாய் இறங்க அமிர்தம்...... போங்கள்....
கெட்டியான பாலில் நன்கு வெந்திருந்த அடையின் சுவை இன்னமும் நம் நாவில் கலந்திருக்கிறது.ஒரு கப் குடித்து முடித்தவுடன், மீண்டும் இன்னொரு கப்  என ஆட்டோமேடிக்காய் கேட்க ஆரம்பித்தது நம் மனது.இன்னொரு கப் ஊற்றித்தர பொறுமையாய் ரசித்து ருசித்து கொண்டபடியே சேச்சியிடம் சம்சாரிக்க ஆரம்பித்தேன்...
ஏன்  சேச்சி,,,எப்போ பார்த்தாலும் கடை பூட்டியே கிடக்கே..என விளிக்க, இல்லை... இல்லை... காலை  10 டூ 6  தான்...பூட்டிட்டு கிளம்பிடுவேன்.ஆறு மணிக்கு மேல் ஒரு நிமிசம் கூட இருக்கமாட்டேன் என அரசாங்க உத்தியோஸ்தர் ரேஞ்சில் பறைஞ்சது சேச்சி...


            கடையை சுற்றி முற்றி பார்த்ததில் ஏகப்பட்ட ரெடிமேட் வகையறாக்கள்..அதில் இந்த அடைபிரதமனும் இருக்க, எப்படி செய்வது என கேட்க, 3 லிட்டர் பாலில் இந்த ரெடிமேட் அடையை போட்டு குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் கொதிக்க வைத்து, பாலின் நிறம் மாறினதுக்கு அப்புறம் கொஞ்சம் முந்திரி, ஏலக்காய் போட்டு இறக்கினால் அடை பிரதமன் ரெடி என்றது சேச்சி....
எல்லாம் கேட்டு முடிக்கையில் கப்பில் இருந்த அடைபிரதமனும் காலியாகி இருந்தது.காலையில் வாங்க...நல்லா சூடா இருக்கும் செம டேஸ்டா இருக்கும் என சொல்ல,  அடைபிரதமனுக்கு உண்டான காசினை கொடுத்து விட்டு, ரெடிமேட் பாக்கெட் ஒன்றும் வாங்கிகொண்டு, மீண்டும் வருவேன் என சொல்லிவிட்டு விடைபெற்றேன் சேச்சியிடம்...வீட்டிற்கு வந்தவுடன், அந்த அடை பிரதமன் பாக்கெட்டில் அரைபாக்கெட் மட்டும் எடுத்து கொஞ்ச நேரம் சுடுநீரில் ஊறவைத்து, பின் 2 லிட்டர் பாலில் போட்டு கொதிக்க வைக்க, இரண்டு மணி நேரம் கழித்து பார்க்க பால் கெட்டியாக, அதில் அடையும் வெந்து இருந்தது.பின் முந்திரி கொஞ்சம் கலந்து பின் சூடாய் ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்க,, ஆஹா அதே சுவை...கொஞ்சம் கூட மாறாமல்.....பேஷ்...பேஷ்...ரொம்ப நன்னாயிருக்கு....

அடை பிரதமன் ஒரு கப் விலை.20ரூபாய்.ரெட்மேட் பாக்கெட் விலை 45 ரூபாய்.இன்ஸ்டெண்ட் பாக்கெட் விலை 120.
இன்னும் நிறைய வெரைட்டி ரெட்மேட் உணவு பொருட்கள் இருக்கின்றன  இந்த பிரியா பாலடை பாயாச கடையில்..

ஜி.பி சிக்னல் அருகில் உள்ள நியூசித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அருகில் இந்த கடை இருக்கிறது.கேரள உணவான அடைபிரதமனை ருசிக்கனுமா, 12 மணிக்கு மேல வாங்க...சூடா சாப்பிடலாம்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

1 comment:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....