Wednesday, February 24, 2016

மலரும் நினைவுகள் : தேர்தல் அனுபவங்கள்

தேர்தல் அனுபவங்கள்
                   என் பால்ய காலம்...அரை டிரவுசர் அணிந்து கொண்டு வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருந்த காலம்.ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.தேர்தல் அறிவிப்பு வந்தாலே போதும் எங்களது கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுவிடும்.ஒவ்வொரு கட்சிக்காரர்களும் அவரவர் கொடிக்கம்பங்களை கட்சி பெயிண்ட் அடித்து ஒரு பொதுவான இடத்தில் நட்டு வைத்து கட்சிக்கொடி தோரணங்களை குறுக்கும் நெடுக்குமாக கட்டி தொங்க விடுவர்.கொடிக்கம்பங்களும் அருகருகே இருக்கும்.பொதுவான இடம் என்பது ரோட்டோரப்பகுதி. பிரச்சாரத்திற்கு வரும் முக்கிய தலைவர்கள் வேனில் நின்றபடியே கொடி ஏத்துவார்கள்.
            அதற்காகவே அத்தனை கட்சி கொடி மரங்களும் ஒரு இடத்தில் அருகருகே வைத்து இருப்பார்கள்.ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டும் இறங்கி வந்து கொடி ஏத்துவர்.எங்கள் கிராமத்திற்கு எம்ஜியார் கருணாநிதி தவிர அரசியலில் உள்ள அத்தனை பிரபலங்களும் வந்து இருக்கின்றனர். அரசியல்வாதிகளை விட நடிகர்களை பார்க்கத்தான் கூட்டம் அலைமோதும்.எப்படியும் இரவு நேரத்தில் தான் ஒவ்வொரு கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்துவிட்டு வருவார்கள்.அவர்கள் வரும் வரை பிரச்சார பாடல்களுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்போம்.

                  சிறுவர்களான எங்களுக்கு ஊரிலுள்ள சுவர்களில் கட்சி சின்னங்களை வரைவது தான் பொழுது போக்கு.போதாக்குறைக்கு கட்சிக்காரர்களும் சொல்லிவிடுவார்கள் ரிசர்வ் பண்ணுவதற்கு.நாங்களும் கரிக்கட்டையை எடுத்து சின்னங்களை வரைய ஆரம்பித்து விடுவோம்.எங்களுக்கு அப்புறம் தான் பக்கா ஸ்பெசலிஸ்ட் ஓவியர்கள் வந்து சின்னங்களை வரைந்து வேட்பாளர் பெயர்களை எழுதிவைப்பார்கள்.அதற்கு முன் சுவர்களில் எங்கள் கைவண்ணம்தான்.
                      இப்போது இருக்கிற மாதிரி நிறைய கட்சிகள் அப்போது இல்லை.இருந்திருந்தாலும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.இரட்டை இலை, உதயசூரியன் அப்புறம் காங்கிரஸ்.இதுமட்டும் தான் தெரியும். சுயேட்சையாக ஒரு சிலர் நிற்பார்கள்.அவர்கள் அந்த தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள்.சட்டமன்ற தேர்தலா இல்லை பாராளுமன்ற தேர்தலா என்று கூட தெரிந்து இருக்க மாட்டோம்.ஆனால் எலெக்சன் என்று வந்துவிட்டால் போதும் எல்லா வகையான சின்னங்களையும் வரைய ஆரம்பித்து விடுவோம்.
                         ஆங்கில எழுத்து M மாதிரி இரண்டு மலையை போட்டு ஒரு வட்டம் போட்டு கதிர்களை வரைந்து விட்டால் உதயசூரியன் ரெடி..அதே மாதிரி இரட்டை இலையும் வரைவது ஈஸிதான்.ஒரு கோடு போட்டு இரண்டு இலைகளை வரைந்துவிட்டால் எம்ஜியார் சின்னம் ரெடி.கை சின்னம் வரைவது கூட மிக எளிதுதான்.கூட இருப்பவனின் வலதுகையை சுவற்றில் வைத்து அவுட்லைன் போட்டு விட்டால் கை சின்னம் ரெடி…
                        இப்படித்தான் கிராமத்தில் இருக்கிற சுவர்களில் கிறுக்கி வைத்துக் கொண்டிருப்போம்.இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.வீட்டுக்காரர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த  கட்சியின் சின்னத்தினை வரைய வேண்டும்.இல்லையெனில் மாத்து தான்..ஒரு சில வீட்டில் சின்னத்தினை மாற்றி வரைந்து விட்டு கன்னாபின்னா பேச்சுக்களை வாங்கியதும் உண்டு.
                 தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தால் போதும் ஊரெல்லாம் கட்சி கொள்கை பாட்டுகள் ஒலிக்க ஆரம்பித்துவிடும்.அதில் முன்னாடி இருப்பது திமுகவின் நாகூர் ஹனிபாவின் வெண்கலக்குரல் தான்.

கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே.

ஓடி வருகிறான் உதயசூரியன்…

பாளையங்கோட்டை சிறையினிலே…..பாம்புகள் பல்லிகள் நடுவினிலே….

இப்படி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்.அதிகம் முணுமுணுத்துக் கொண்டிருப்பது திமுகவின் பிரச்சார பாடல்களைத்தான்.ஆனால் எம்ஜிஆர் கட்சியைப் பொறுத்தளவு அவரது திரைப்பட பாடல்கள் தான் பிரச்சார பாடல்கள்.எம்ஜிஆரின் பாடல்கள் அது ஒரு தனி ரகம்.நாகூர் ஹனிபா குரல் ஈர்த்த அளவுக்கு எம்ஜிஆரின் பாடல்கள் ஈர்க்கவில்லை.மிகவும் கருத்து செறிந்த பாடல்கள் என்றாலும் அதென்னவோ பிடித்ததில்லை. எம்ஜிஆர் படம் மட்டும் விரும்பி பார்ப்போம்.கத்திச்சண்டை மட்டும் எங்களை இரு நாட்டு அரசர்களைப் விளையாட வைத்துக் கொண்டிருக்கும்.எம்ஜிஆர் சினிமாப் பாடல்கள் ஒலித்தாலும் விரும்பிக் கேட்டதில்லை.ஆனாலும் எம்ஜிஆரின் தனிப்பட்ட செல்வாக்கே அவரை தொடர்ந்து முதலமைச்சர் ஆக்கியது.
                  தேர்தல் நாள் அன்று ஊரே திருவிழாக்கோலம் தான்.ஆங்காங்கே கட்சிகளின் தற்காலிக பந்தல், கொடி மற்றும் தோரணைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.அவரவர் கட்சியின் பிரமுகர்கள் வாக்காளர் லிஸ்ட்டை வைத்துக்கொண்டு பூத் சிலிப் தந்து கொண்டிருப்பர்.நாங்களும் எங்கள் பங்குக்கு நாங்களும் பூத் சிலிப்பில் பேர் எழுதிக் கொடுத்துக்கொண்டு இருப்போம்.எப்பவும் போல ரேடியோ அலறிக்கொண்டிருக்கும்.பாதுகாப்புக்கு ஒரு சில காவல் அதிகாரிகள். வாக்குச்சாவடியை நாங்கள் படித்த பள்ளியிலேயே அமைத்து இருப்பார்கள்.பள்ளிக்கூட பென்ச் நாற்காலிகள் போட்டு நான்கைந்து அரசுப்பணியாளர்கள் அமர்ந்து வரிசையாய் வாக்காளர்களுக்கு சின்னங்களை கொடுத்து உள்ளே ஓட்டுப் போட அனுப்புவர்.விரலில் மை வைத்து ஓட்டு போட்ட பெருமிதத்துடன் வெளியில் வருபவர்களை குத்துமதிப்பாக விசாரித்து கொள்வோம்.
              வீட்டில் உள்ள வயசானவர்கள், நடக்க முடியாதவர்களை தூக்கிக்கொண்டு வாக்குச்சாவடிக்கு கொண்டு வரும் பழக்கம் அன்று முதல் இன்றும் தொடர்ந்து கொண்டு வருகிறது.பக்கத்து ஊர்களுக்கும் சேர்த்து எங்களது ஊரிலேயே வாக்குசாவடி அமைத்து இருப்பார்கள்.அதனால் அந்த ஊர்க்காரர்கள் வேன் வைத்து வாக்காளர்களை கூட்டி வந்து கேன்வாஸ் செய்வார்கள்.வாக்கு தினத்தன்று கூட வாக்குச்சாவடி முன் நின்று வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டுக் கொண்டிருப்பர் உள்ளூர் கட்சிக்காரர்கள்.உள்ளூரிலேயே ஒரு சில வீடுகளில் பந்தி பரிமாறிக்கொண்டு இருப்பார்கள்.ஓட்டு போட வருபவர்கள் மூக்கு பிடிக்க தின்றுவிட்டு தான் ஓட்டு சாவடிக்கு செல்வார்கள்.
                    வாக்கு போட்டவுடனோ அல்லது போடுவதற்கு முன்போ பதுக்கி வைத்து இருக்கும் சாராயங்கள் வெளிவரும் இவர்கள் போடுவதற்காக.எப்படியோ எதோ ஒரு வகையில் கேன்வாஸ் செய்துகொண்டே இருப்பார்கள்.கொஞ்சம் லேட்டாகிப் போகிறவர்களின் ஓட்டு இன்னும் இருக்குமா என்றால் அது சந்தேகமே….அதற்குள் கள்ள ஓட்டினை குத்தி இருப்பார்கள்.
              சிறுவர்களான எங்களுக்கு வேறு வேலை இல்லை.அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருப்போம்.எங்களுக்கு பிடித்த கட்சியின் பிட் நோட்டிஸை ஓட்டு போட வருபவர்களிடம் கொடுத்துக் கொண்டிருப்போம்.தேர்தல் முடியும் வரை எங்களுக்கு ஒரே ஜாலியாக இருக்கும்.தேர்தல் முடிந்தவுடன் யார் ஜெயிப்பார் என்று பந்தயம் கட்டுவோம்.என்ன இருந்தாலும் எம்ஜிஆர் தான் ஜெயிப்பார் என்று சொல்கிற அளவுக்கு எங்களுக்கு அவரைப்பிடித்து இருந்தது.அவர் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் என்பெதெல்லாம் தெரியாது,ஆனால் எம்ஜிஆரை பிடிக்கும்.
              தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் அன்று எம்ஜிஆரின் திரைப்படங்கள் எங்கள் ஊர் மைதானத்தில் திரை கட்டி போடுவர்.பாயை எடுத்துக்கொண்டு முன்கூட்டியே இடம்பிடிக்க சென்றுவிடுவோம்.

                  ஆக மொத்தத்தில் சிறுவயதில் தேர்தல் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான விசயமாகவே எங்களுக்கு தெரிந்தது.அப்படிப்பட்ட தேர்தல் நிகழ்வுகள் இன்று ஒரு சடங்காக ஆகி இருக்கிறது.எங்களை பால்ய காலத்தில் மகிழ்வித்த தேர்தல் இன்று சுத்தமாய் இல்லை.தேர்தல் என்றாலே பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கும் நிலைமைக்கு ஆட்சியாளர்கள் வந்துவிட்டனர்.பணத்தை எதிர்பார்த்து வாக்காளர்களும் மாறிவிட்டனர்.. எண்ணிலடங்கா கட்சிகள் பெருகிவிட்டன. வாக்குசீட்டுக்கு பதில் ஓட்டு மெசின் வந்துவிட்டது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என மாறி மாறி ஆட்சியாளர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துவிட்டனர். இலவசங்கள் மட்டுமே நாட்டை ஆளுகின்றன.ஒரு சில நல்லவைகள் நடந்தாலும் நாட்டின் பொருளாதாரம் உயர்கிறதோ இல்லையோ ஆனால் மாறி மாறி ஆளுகின்ற ஆட்சியாளர்களின் பொருளாதார நிலைமை மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது இன்றைய காலகட்டத்தில்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்



 


3 comments:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....