Wednesday, March 30, 2016

த்தூ........ள் கேப்டன் - வெல்லட்டும் கேப்டன் - மக்கள் நலக்கூட்டணி

                     ஊடகங்களின் வியாபார உத்திக்கு, மற்ற கட்சிகளின் அரசியலுக்கு அதிகம் பலியாவது நம்ம கேப்டன் தான்.தத்தம் பத்திரிக்கை, டீவி, இண்டர்நெட் ஊடகங்களின் டி ஆர்பி ரேட்டிங்கிற்காக கேப்டனிடம் மல்லுக்கட்டி வாயைக் கிளறுவது நிருபர்களின் வேலையாகிவிட்டது. கேப்டனின் பேச்சானது எதார்த்தமான வெள்ளந்தியான பேச்சு...மனதில் இருப்பதை பேசுபவர்.எழுதி வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக பேசுவது, வார்த்தைகளில் ஜாலம் காட்டி வசியப்படுத்தி பேசுவது என எதுவும் இருக்காது....சொல்ல வந்ததை எதார்த்தமாய் சொல்வதால் என்னவோ இவருக்கு குடிகாரன் பட்டம்.குடிகாரனாம்.... இருக்கட்டுமே... தமிழ்நாடே மதுவை ஊக்குவித்துக் கொண்டு விற்கும் போது கேப்டனைப் பற்றி குறை சொல்வதில் என்ன நியாயமிருக்கிறது?
                        கடந்த தேர்தலில் கேப்டனின் கூட்டணியோடு வெற்றிகண்டு விட்டு பின் அவரை கழற்றி விட்டவர் ஜெயலலிதா.கேப்டன் கூட்டணி இல்லாவிட்டாலும் பெரும்பாலும் ஜெயித்து இருக்கும்.காரணம் திமுக வின் ஊழல், குடும்ப செல்வாக்கு என்கிற காரணத்தினால் மக்கள் அதிமுக வை தேர்ந்தெடுத்தனர்.கேப்டன் ஆதரவு இல்லை என்றாலும் அதிமுக ஜெயித்து இருக்கும்.ஆனால் வாக்கு விகிதங்கள் கொஞ்சம் குறைந்திருக்கும்.இரண்டு கழகங்களின் பொதுவான ஒற்றுமை என்னவெனில் யாரும் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்ததில்லை.புரட்சித்தலைவர் எம்ஜியாரின் மறைவுக்கு பின் இரண்டு கழகங்களுமே ஊழல் செய்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன.

இந்நிலையில் தான் இரு பெரும் திராவிட கழகங்களுக்கு மாற்றாக வந்தவர்தான் கேப்டன்.தனியே கட்சி ஆரம்பித்து இன்று மக்களுக்காக போராடிக்கொண்டிருப்பது கேப்டன் தான். திமுக வின் கலைஞரும் சரி.... அதிமுக வின் ஜெயலலிதாவும் சரி....தனியாய் கட்சி ஆரம்பித்தவர்கள் இல்லை.ஏற்கனவே நன்கு வளர்ந்துவிட்ட இயக்கங்களைத்தான் இருவரும் இப்போது நடத்திக் கொண்டிருக்கின்றனர்.திமுக வில் கலைஞரின் சாணக்கியத்தனம் மேலோங்கி இருக்கிறது.அஇஅதிமுகவில் ஒருவித சர்வாதிகாரம் இருக்கிறது.அஇஅதிமுக வில் இரட்டை இலை என்கிற சின்னத்தினை பார்த்து இன்னமும் எம்ஜியார் க்காக என்று ஓட்டு போடும் தொண்டர்கள் லட்சம் பேர் இருக்கிறார்கள்.ஆனால் கேப்டன் அப்படியல்ல தனிக்கட்சி ஆரம்பித்து பல லட்சக்கணக்கான தொண்டர்களை தன்வசம் வைத்திருப்பவர்.முதலில்  தன் கட்சியில் இருந்து ஒரு எம் எல் ஏ, பிறகு 29 எம் எல் ஏ என வளர்ச்சி கண்டு தற்போது ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர்.
                          ஆமாஞ்சாமிகள் போடும் அடிமைகள் கூட்டம் இருக்கும் இடத்தில் தீவிரமாய் எதிர்த்துக் கேள்வி கேட்டவர். நாக்கை துருத்திகாட்டியதை அடிக்கடி ஒளிபரப்பினார்கள் டிவியில்...ஏன் காட்டினார் எதற்கு காட்டினார் என்பதற்குண்டான ஆதாரங்கள் இல்லை.காரணம் ஆட்சியும் காட்சியும் அவர்களிடத்தில்.அதனால்தான் சட்ட சபை நிகழ்வுகளை பொதுவாய் ஒளிபரப்ப வேண்டும் என்று கேப்டன் போராடிக்கொண்டிருக்கிறார்.இன்னமும்.சட்டசபையில் நொடிக்கொரு முறை அம்மா புராணம் பாடும் அடிமைகளிடம் இருந்து அதை கேட்பதை தவிர்க்க சட்டசபைக்கு போவதையே தவிர்த்தார் கேப்டன்..இதற்கும் பொங்கினார்கள்...எதிர்க்கட்சித்தலைவர் சட்டசபைக்கு வருவதில்லை என்று...திமுக ஆட்சியில் இருக்கும் போது அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும்.அம்மா வரமாட்டார்கள்.அதிமுக ஆட்சியில் இருக்கும் போது திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் அப்போது கலைஞர் வரமாட்டார்.ஆனால் தற்போது எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும் கேப்டன் வராமல் இருப்பதை பெரிது படுத்தி இந்த ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படியே சட்டசபைக்கு வந்தாலும் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவார்களா... அதுவும் இல்லை..அம்மா புராணம் பாடவே அத்தனை அதிமுக எம் எல் ஏக்களும் நேரத்தை எடுத்துக்கொள்வதால் அப்புறம் எங்கே எதிர்க்கட்சி தலைவருக்கு வாய்ப்பு.....மற்ற கட்சி எம் எல் ஏ க்களுக்கு வாய்ப்பு?
              கேப்டனிடம் உரிமையாய் மைக்கை நீட்டி பேசுகிற பத்திரிக்கையாளர்கள் அம்மாவிடம் தைரியமாய் பேசுவார்களா...? கேப்டனிடம் பேட்டி என்கிற பெயரில் அவரை கோவப்படுத்தி, அவர் ஏதாவது சொன்னாலோ செய்தாலோ அதை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி டி ஆர் பி ரேட்டிங்கை எகிற வைப்பதில் எதிர்க்கட்சிகளின் நிருபர்களும் களத்தில் இறங்கி இருப்பது வருத்தத்திற்குரியது.கேப்டன் செய்கிற நற்காரியங்கள் அனைத்தும் மக்களிடையே போய் சேருவதில்லை.அவரை இருட்டடிப்பு செய்வதையே தொழிலாக செய்து வருகின்றன ஊடகங்கள்.அதே சமயம் ஏதாவது மாறாக நடந்துகொண்டு விட்டால் போதும் இடைவிடாது ஒளிபரப்புவார்கள்...கட்டிங், ஒட்டிங், எடிட்டிங்லாம் செய்து ஒளிபரப்புவார்கள்...
                தன் கட்சி எம் எல் ஏவை யே அடித்த கேப்டன்.., சட்ட சபையில் நாக்கை துருத்தி பேசிய கேப்டன், உளறிக்கொட்டும் விஜயகாந்த் என்றெல்லாம் வரிந்து கட்டி ஒளிபரப்புவார்கள்....சமீபத்தில் வெள்ள பாதிப்பை வேனில் பார்வையிட வந்த முதல்வர் அவர்களை நெருங்க முடிந்ததா இந்த பத்திரிக்கையாளர்களால்...இல்லை அவர் வானில் ஹெலிகாப்டரில் பறந்த போது இன்னொரு ஹெலிகாப்டரில் அவர் பின்னாடியே பறந்து சென்று செய்திகளை சேகரித்தார்களா?.நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதை பற்றியும், செம்பரம்பாக்கம் ஏரி பற்றியும் முதல்வர் அவர்களிடம் கேள்விகளை தொடுக்க முடியுமா...
                  பிரதமர் உலகம் உலகமாக சுற்றிக்கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தும் வெள்ள நிவாரண உதவி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி என்று கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். வாட்ஸப்பில் மட்டும் வாய்ஸ் அனுப்புகிறார் மக்களுக்கு..எங்கே மறந்து விடுவார்களோ என்று....
கேப்டன் அவர்கள் சினிமாவில் இருந்தபோதே ஏகப்பட்ட உதவிகள் செய்து கொண்டிருந்தவர்.சிறந்த குடிமகன் விருதை வாங்கியவர்.ஏழை எளிய மக்களுக்கு அதிகம் உதவி புரிந்தவர்.ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே அத்தனையும் செய்தவர்.அனைத்தும் கிடைத்தால் நிச்சயம் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும்.
                 இப்பொழுது இருக்கும் சூழலில் கேப்டன் எது செய்தாலும் அது நியூஸ் தான்.அவர் செய்து வரும் நற்காரியங்களை தவிர.....பத்திரிக்கைகளிடம் நடுநிலைமை என்பது சுத்தமாக இல்லை...பீப் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெள்ள பாதிப்பு சேதங்களை மறைத்துவிட்டன.இளையராஜா விடம் பேட்டி என்கிற பெயரில் பீப் பாடலுக்கு கருத்து கேட்டு அவரை இன்னலுறச்செய்வது, இதோ இப்பொழுது கேப்டன்....பதிலுக்கு அவரும் சொல்லிவிட்டார்........
த்தூ....ஊடகங்கள்.....
தூள் கேப்டன்.....

இப்போது அமைந்து இருக்கிற கூட்டணி நிச்சயம் ஒரு மாற்றத்தினை கொண்டுவரும்.கேப்டன், வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நிச்சயம் ஒரு மாற்றாக இருப்பார்கள்.இவர்களின் கூட்டணியால் திமுக, அஇஅதிமுக ஆகிய இருகட்சிகளின் ஊழல்கள் முற்றாக வெளியே வரும்.நல்ல சிறப்பான நிர்வாகத்தினை இவர்கள் அளிப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.பார்ப்போம் இந்த 2016 ம் ஆண்டின் தேர்தல் முடிவுகளை....




நேசங்களுடன்
ஜீவானந்தம்






  

3 comments:

  1. பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு, அன்புமணி அவர்கள் மாற்றம் முன்னேற்றம் என்கின்ற கோஷத்துடன் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெருகி வருவதைக் காண்கின்றோம்.
    நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும்தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள். இந்த நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலும் படித்த மற்றும் விபரம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் விஜயகாந்தை முதல்வராக ஏற்க மாட்டார்கள். சமீபத்தில் அவர் அடித்த கூத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. களத்தில் இருக்கும முதல்வர் வேட்பாளர்களில் படித்த மற்றும் விபரம் அறிந்த நடுநிலை வாக்காளர்களத் திறமையான தன் பரப்புரைகளால் கவரக்கூடியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு அன்புமணி மட்டுமே. சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெற்றுவரும் இவரின் பெருகிவரும் செல்வாக்கினை யாரும் புறக்கணிக்க முடியாது. பா.ஜ.க. வின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை மறைத்து எப்படி மோடி முன்னிறுத்தப்பட்டாரோ அதைப்போன்றே இவரும் பா.ம.க. வின் சாதிக்கட்சி பிம்பத்தை மாற்ற முன்னிலைப் படுத்தப்படுகிறார். எது எப்படியாயினும் தமிழ் நாட்டின் தற்போதைய அவசியத்தேவை ஒரு படித்த விவரமான இளைஞர் ஒருவரின் தலைமையே. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இவைகளுக்கு மாற்று வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக பேசப்படும் இத்தருணத்தில் இதற்குத் தகுதியான நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பது எனது கருத்து. இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஒரு முறையேனும் மாறி வாய்ப்பளித்துக் காட்டினால்தான் ஆளுபவர்களுக்கு தவறு செய்யாதபடி நெஞ்சில் ஒரு பயம் இருக்கும்.

    ReplyDelete
  2. என்னதான் மாற்றம் முன்னேற்றம் அப்படின்னு சொன்னாலும், ஹைடெக் ஆ பிரச்சாரம் பண்ணினாலும், பாட்டாளி மக்கள் கட்சி சாதிக்கட்சி தான்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....