Friday, March 17, 2017

பயணம் - கேரளா முதல் கோவை வரை - 1

                திருவனந்தபுரத்தில் காலை டிபனை முடித்துவிட்டு நாகர்கோவில் மதுரை வழியாய் கோவை செல்லலாம் என முடிவெடுத்து அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு கிளம்பினோம்.கேரளத்தலைநகரின் சட்டசபையை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் சாலைகளில் சேச்சிகளின் வரவு அதிகமாக இருந்தது. காலை நேரம் சர்ச்க்கு செல்லும் கேரள அம்மணிகள், ஷாப்பிங் சென்டரில் பணிக்கு ஒரே யூனிபார்மில் செல்லும் அம்மணிகளையும் கண்டு ரசித்தபடி கிளம்பினோம்.
                       அன்றைய தினம் கறி தினம் ஆதலால் நிறைய மாட்டிறைச்சிக்கடைகள் வழியெங்கும் கும்பல்களால் நிறைந்திருந்தது.பெரும் பெரும் மாட்டுச் சப்பைகள் தொங்கிக்கொண்டிருந்தன ஒவ்வொரு கடையிலும்..... அரைக்கிலோ மீட்டருக்கு ஒரு மாட்டிறைச்சிக்கடை இருக்கிறது.
                  ஆட்டிறைச்சிக்கடை மிக சொற்பமாகவே காணப்படுகிறது இந்த கேரளத்தலைநகரில்.கடல் அருகில் இருந்தாலும் மீன் கடைகள் கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை.ஆலப்புழாவில் இரவு நேரத்தில் கண்டது.அதற்கப்புறம் எங்கேயும் மீன் கடைகளையே காணவில்லை.
செல்லும் வழிகளில் ஆங்காங்கே கள்ளுக்கடைகள் நிறைய திறந்து இருக்கின்றன.கடமை கண்ணுக்கு  நேரே தெரிந்ததால் கள்ளினை ருசிக்க முடியாமல் பயணித்தோம்.
                          செல்லும் வழியில் ஏதோ ஒரு இடத்தில் செம கூட்டம்.அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் நம் பங்காளிகள் என்று.கேரள  ஸ்டேட் பெவரேஜ் கடை முன்புதான் இவ்ளோ கூட்டம்.ஒரு மணி நேரப்பயணத்தில் களியக்காவிளை என்கிற ஊரை அடைந்தோம்.தமிழ்நாட்டு பார்டரும், கேரள பார்டரும் இணைகிற ஊர்.ஒரே ஒரு ரோடு.ரோட்டுக்கு இந்தப்பக்கம் கேரளா அந்தப்பக்கம் தமிழ்நாடு.கேரள பக்கம் நிறைய லாட்டரி சீட்டுக்கடைகள்.அங்கு ஒரு இடத்தில் நமது டாஸ்மாக் கடையும், கேரள கடையும் எதிர் எதிர் இருக்கின்றன.நமது கடை காத்து வாங்குகிறது.ஆனால் கேரள கடையோ நம்மாட்களால் நிரம்பி வழிகிறது.
                  களியக்காவிளை தாண்டி குழித்துறை அடைந்தோம்.அங்கிருந்து மார்த்தாண்டம் செல்லலாம் என நினைக்கையில், தேங்காய்ப்பட்டிணம் அருகில் இருக்கிறது, மீன்பிடி துறைமுகம் ஆரம்பித்து இருக்கிறார்கள் என அங்கிருக்கும் நமது நண்பர் ஒருவர் சொல்லவும், அங்கு கிளம்பினோம்.
புதுக்கடை என்கிற ஊரை அடைந்து கடலை அடைந்தோம்.இப்பொழுதுதான் பணி நடந்து கொண்டிருக்கிறது,ஞாயிறு ஆதலால் அங்கு மீன் விற்பனை இல்லை.கடலில் இரு மீன்பிடி போட்கள் நின்று கொண்டிருந்தன.கடலை ஆழப்படுத்தும் ஒரு போட் வேறு நின்று கொண்டிருந்தது.ஒரு சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.



                 கடல் பார்க்க மிக அழகாய் நீலநிறத்தில் இருக்க, வானமும் அதில் செல்லும் மேகமும் ஒரு அழகை உண்டாக்கி இருந்தன.கடலின் நீர் மிகத்தெளிவாய் கிரிஸ்ட்ல் கிளியர் போல் இருக்கிறது.
                      வானமும் கடலும் சேர்ந்த இடம் மிக அழகு.இந்த தேங்காய்ப்பட்டிணம் அருகில் இன்னொரு இடமான குளச்சல் என்கிற இடத்திலும் மீன்பிடி துறைமுகம் வேலை நடைபெற்று வருகிறது.மணற்பாங்கான இடம் இப்போது கான்கிரீட் கற்களால் நிறைந்திருக்கிறது.
                   சில மணி நேரம் கடலின் அழகை ரசித்தபடி இருந்துவிட்டு பின் அங்கிருந்து கிளம்பினோம்.மதியம் ஆகிவிட்டதால் அருகில் உள்ள ஒரு ஊரில் மதிய உணவை முடித்து விட்டு கிளம்பினோம்.
                                 அங்கிருந்து நேராய் நாகர்கோவில் அடைந்தோம்.நாகர் கோவிலில் பணியை முடித்துவிட்டு அங்கிருந்து திருநெல்வேலி கிளம்பினோம்.திருநெல்வேலி வந்தபோது மணி ஐந்தை நெருங்கி இருந்தது.அவ்வூரின் புகழ்பெற்ற இருட்டுக்கடை இன்னும் திறக்காத காரணத்தில் அங்கு எதுவும் வாங்க முடியவில்லை.அங்கிருந்து மதுரைக்கு அடுத்த ஒரு சில நிமிடங்களில் கிளம்ப ஆரம்பித்தோம்.கட்டபொம்மன் தூக்கிலிட்ட இடமாக கயத்தாறு அடைந்த போது மழை தூற ஆரம்பித்தது.அங்கிருந்து கோவில்பட்டி சாத்தூர், விருதுநகர் வரை பைபாஸ் ரோட்டில் மழை ஒரு காட்டு காட்டியது.
                    மிக கனத்த மழையில் வண்டியில் விரைந்தபடியே வந்தோம்.அதற்கப்புறம் மதுரை வரை மழையே இல்லை.மதுரை வந்தடைந்த பின் மிக லேசாக தூறல் போட்டது வானம்.
                           மதுரையில் பிரேமாவிலாஸ் அல்வா நன்றாக இருக்கும் என்று சொன்னதால் அங்கு சென்றோம்.அந்த நேரத்திலும் கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.சிலர் சுடச்சுட அல்வாவினை சுவைத்துக்கொண்டிருந்தனர்.
திருநெல்வேலியில் வாங்காமல் விட்ட அல்வாவினை இங்கு வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.
                       இரவு நேர உணவை மதுரை நண்பருடன் முடித்துவிட்டு இரவு நேரம் கோவை வந்தடைந்தோம்.பயணம் எப்போதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது. இந்தப்பயணமும் அப்படித்தான் குறுகிய காலம் தான்.வழி நெடுக புதுப்புது மனிதர்கள், இடங்கள், உணவுகள் என அனைத்தையும் ரசித்ததால் மனமும் கொஞ்சம் இலகுவாகி நம்மை லேசாக்குகிறது.இயற்கையும் பயணமும் எப்போதும் நம்மை மகிழ்விக்க கூடியவை தான்.இந்தப் பயணமும் அப்படித்தான்.1030 கிலோமீட்டர் தொலைவினை ஒரு நாள் முழுக்க பயணம் செய்து கடந்தாலும் அலுப்பு என்பதே இல்லை.அதுதான் பயணத்தின் சிறப்பு.

முந்தைய பதிவு

நேசங்களுடன்
ஜீவானந்தம்






7 comments:

  1. 1030 km பயணம்...! சிறப்பு... மிகச் சிறப்பு...

    ReplyDelete
  2. கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடம் எட்டயபுரம் இல்லை ... அது கயத்தாறு ...

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கனும்,,,மாத்திடறேன்...

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Dei Anony,
    thevai illatha peychu....have some respect for people. Every experience is unique and special to the concerned person. It's his travel blog...He can write whatever he wants. If you don't like it, just leave. Stop this disparaging comments.

    ReplyDelete
  5. கடற்கரை படங்கள் அழகு...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....