Thursday, June 22, 2017

கோவை மெஸ் - வாடா, தம்மடை, ஓட்டு மாவு, பலகாரம்,சிக்கன் சமோசா, காயல்பட்டினம், தூத்துக்குடி

காயல் பட்டினம் :
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சென்றிருந்தோம்.முருகனின் அருள் பெற்றுவிட்டு திரும்ப வருகையில் தூத்துக்குடி வழியாக மதுரை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தோம்.
காயல் பட்டினம் :
       திருச்செந்தூரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற ஒரு புராதன வரலாற்று ஊரான காயல்பட்டினம் அடைந்தோம்.மிகப்பெரும் வரலாற்று நிகழ்வுகளை கொண்டிருக்கும் இந்த ஊரின் சிறப்புகளை பட்டியலிட்டால் இந்த பதிவு ஒரு வரலாற்று பதிவாகிவிடும் என்பதால் இந்த வரியை இத்தோடு நிறுத்திவிட்டு சாப்பாட்டினை கவனிப்போம்.போன நேரமோ மதிய வேளை வேறு, இருக்கின்ற ஊரோ முஸ்லீம் அன்பர்கள் பெருவாரியாக இருக்கிற ஊர்.எப்படியாவது எங்கேயாவது பிரியாணி ஹோட்டல் இருக்கும், கண்டுபிடித்து சாப்பிட்டு விடலாம் என்றெண்ணி உள்ளூர் ஆட்களிடம் விசாரித்தோம்.அவர்கள் சொன்ன ஒரே கடை ஜம் ஜம் பிரியாணி கடை.

        மெயின் ரோட்டிலேயே இருக்கிறது இந்த கடை.நாங்கள் சென்றிருந்த போது கடையில் எல்லாம் காலியாகி இருந்தது.மதியம் நான்கு மணிக்கும் மேலாகி இருந்ததால் அனைத்தும் காலி.ஆனால் சுடச்சுட சமோசா போட்டு கொண்டிருந்தனர்.மாலை நேரம் ஆகிவிட்டதால் இதையே சாப்பிட்டு விட்டு இப்போதைக்கு பசியை கட்டுப்படுத்துவோம் என்று சமோசா ஆர்டர் செய்தோம்.சிக்கன் சமோசாவா…வெஜ் சமோசாவா என்று கேட்க, ஓ…சிக்கன்ல  இருக்கா என்று கேட்டபடியே சிக்கன் சமோசாவையே ஆர்டர் செய்தோம்.


          சுடச்சுட ஒரு பிளேட்டில் சமோசாக்களை கொண்டு வந்து வைக்க, ஒட்டு மொத்தோரின் ஒவ்வொரு கைகளும் நீண்டு தட்டை உடனடியாக காலி செய்தது.சுடச்சுடச் சிக்கன் சமோசா மணத்தோடு நல்ல ருசியைத்தர, பாகுபாடின்றி இறங்கியது வயிற்றுக்குள்..காலியாகிப் போன தட்டைக்கண்டு மீண்டும் கடைக்காரர் நிரப்பி வைக்க, முதல் ரவுண்ட் முடித்து அடுத்த ரவுண்டுக்கு தயாராகி இருந்தனர் நம்மாட்கள்.முதல் ரவுண்டைப்போலவே இப்பொழுதும் சீக்கிரம் காலியாகிப்போனது தட்டு..இப்படி அப்படி ஒரு சில ரவுண்டுகள் போனதும் கைகளை கழுவ ஆரம்பித்து அக்கடா என்று உட்கார ஆரம்பித்தனர்.
        சும்மா இருக்கையில் கடைக்காரரிடம் விசாரிக்கையில் அப்பொழுது தான் காயல் பட்டினத்தில் ஃபேமஸ், வாடா, தம்மடை, ஓட்டு மாவு, பட்டர் பிஸ்கட் இப்படி  நிறைய ஸ்னேக்ஸ் வகைகள் இருக்கின்றன என தெரிந்து கொண்டோம்,வாடா எனப்படும் பேரைக் கேட்டவுடன் ஆச்சரியப் பட்டோம்.வாடா எங்கு கிடைக்கும் என்று கேட்கையில், பீச் பக்கம் போங்க, நிறைய முஸ்லீம் பெண்மணிகள் விற்க ஆரம்பித்து இருப்பார்கள் என சொல்லி அனுப்பினார்கள்.அடுத்த சில நிமிடங்களில் பீச்சினை அடைந்தோம்.ஆட்கள் அதிகமற்ற கடற்கரை.உள்ளூர் மக்கள் மட்டும் கொண்டாடும் பீச் ஆக இருக்கிறது.ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் பீச்சில் விளையாடிக்கொண்டிருந்தனர்.கடை போடும் மும்முரத்தில் ஒரு சிலர் இருந்தனர். நாங்களும் கொஞ்ச நேரம் பீச்சில் விளையாடிவிட்டு வருகையில் கறிக் கஞ்சியுடன் வாடா விற்பனை ஆகிக்கொண்டிருந்தது.



                   வாடா மட்டும் எங்களை கவர்ந்த படியால் அதை வாங்கி ருசிக்க ஆரம்பித்தோம்.இதன் வடிவமே வித்தியாசமாக இருக்கிறது,பறக்கும் தட்டு போல் மேல் பக்கம் உருண்டையாகவும், அடிப்பக்கம் தட்டையாகவும் இருக்கிறது.அரிசிமாவு மற்றும் தேங்காய்த்துருவல் கொண்டு இந்த வாடா தயாரிக்கப்படுகிறது.இதனுள் வைக்கப்படும் பூரணம் இங்கு அடக்கம் என்று சொல்கின்றனர்.வெஜ் அடக்கம் தான் இங்கே கிடைக்கிறது.வெங்காயம் மற்றும் ஒரு சில காய்கறிகள், மிளகாய், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கி இந்த அடக்கம் செய்கின்றனர்.இதை அரிசி மாவினுள் வைத்து அடக்கம் செய்து எண்ணையில் பொரித்து தருகின்றனர், வாடா  ஆக…..
                  ருசி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.அரிசிமாவு எண்ணையில் பொரிந்ததும் கொஞ்சம் கெட்டிப்பட்டு,மொறு மொறுவாகிறது. உள்ளே இருக்கும் அடக்கம் சாஃப்டாக இருக்கிறது.சாப்பிடும் போது இது ஒரு தனிச்சுவையைத் தருகிறது.முதல் முறை சாப்பிடுவதால் என்னவோ அதிகம் இதன் சுவை பழக்கப்படவில்லை.கொஞ்சம் கெட்டித்தன்மை இருக்கிறது.
                அந்த ஊர் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுப்பண்டமாக இந்த வாடா இருக்கிறது.நோன்புக்கஞ்சி அல்லது கறிக்கஞ்சியுடன் இதை சேர்த்து விற்கின்றனர்.விலை பத்து ரூபாய் ஆக இருக்கிறது.இதனை ருசி பார்த்து விட்ட படியால் அடுத்து தம்மடையை நோக்கி நகர ஆரம்பித்தோம்…
தொடரும் போடுவோம்….

நேசங்களுடன்

ஜீவானந்தம்

2 comments:

  1. வாடா?! அடுத்த வாரம் மதுரை, திருச்செந்தூர் செல்லலாம்ன்னு இருக்கோம். அப்ப ட்ரை பண்ணி பார்க்குறோம்.

    ReplyDelete
  2. வாடா தங்களை வா... வா... என்று அழைத்ததோ???

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....