Monday, October 16, 2017

கோவை மெஸ் - எண்டே கேரளம் ( ENTE KERALAM , RACE COURSE, COIMBATORE), ரேஸ்கோர்ஸ், கோவை

எண்டே கேரளம்
          சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் கேரள பாரம்பரிய உணவுகளுக்கான ஒரு மல்டி குஷன் ரெஸ்டாரண்ட் எண்டே கேரளம்.
சென்னையில் இருந்து வந்திருந்த நண்பருடன் ஒருநாள் நானும் உள்ளே நுழைந்தேன்.கேரளா சாரி உடுத்தி நம்மை வரவேற்ற அம்மணியின் புன்சிரிப்பிலும் இன்முகத்திலும் கவரப்பட்டு உள்ளமர்ந்தோம்.கேரள பாணியில் இண்டீரியர் அமைக்கப்பட்டு உணவகத்தின் சூழல் நம்மை பரவசத்திற்குள்ளாக்குகிறது.மெலிதான இன்னிசையில் ஒலிக்கும் கேரளத்தின்80 மற்றும் 90 களில் வெளிவந்த பிரபல மலையாள பாடல்கள் நம் மனதை லேசாக்குகிறது.
             பார்வையை நாலாபுறமும் ஓடவிட்டு ரசித்துக்கொண்டு இருக்கையில் கேரள நேந்திர சிப்ஸ் சினேக்ஸாய் வந்து சேர, அதை கொறித்துக்கொண்டே மெனு கார்டினை நோக்கினோம்.கேரளத்தின் உணவு வகைகள் ஒவ்வொன்றாய் வரிசை கட்டி இருக்க, எதை ஆர்டர் செய்வது எதை விடுப்பது என்கிற எண்ணம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
               இதனிடையில் எண்டே கேரளத்தின் செஃப் வந்து சேர அவரது ஆலோசனைப்படி அவர் தயாரித்து கொடுத்த உணவுகள் ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது.வெல்கம் டிரிங் காக நன்னாரி மற்றும் இளநீர் சர்பத் வந்து சேர்ந்தது.ருசித்து முடிக்கையில் ஸ்குயிட் மீன் எனப்படும் கூந்தல் மீன் ப்ரை வந்தது.ரவுண்ட் ரவுண்டாய் அழகாய் பார்க்கவே பசியை தூண்டியது.ருசித்ததில் சுவை அள்ளியது.அடுத்து செம்மீன் பிரை…இது செம டேஸ்ட்.மொறு மொறுவென பார்க்கவே பசியை தூண்டியது.எடுத்து வாயில் இட்டதும் சுவை நரம்புகள் நாட்டியமாடின.
 







 
                 அடுத்து கறிமீன்.வாழையிலையில் மசாலாக்கள் சேர்த்து பொதிக்கப்பட்டு நன்கு வேகவைக்கப் பட்டு ஆவி பறக்க தட்டில் வைக்க, மீனின் சுவை நாலாபக்கமும் பரவியது.கொஞ்சம் எடுத்து வாயில் வைக்க, சுவை நம் நாடி நரம்புகள் ஒவ்வொன்றிலும் பரவியது.அளவான காரத்துடன் செம டேஸ்ட்.இலையின் மணத்துடன் மீனின் வாசமும் சேர்ந்து நம்மை மோன நிலைக்கு தள்ளியது.ரசித்து சுவைத்ததின் முடிவில் மீனின் முள்ளு மட்டுமே மிஞ்சியது.




              அடுத்து கேரள புகழ் புரோட்டா, பீஃப் கறி, அப்பம் மீன் கறி, வெஜிடபிள் குருமா, கேரள மட்டை அரிசி சாதம் என அனைத்தும் சுவையில் பட்டையை கிளப்பியது.கேரள மட்டை அரிசியுடன் மீன் கறி அடி பொலி…அதுவும் அந்த மீன் கறி ஆலப்புழா ஸ்பெசல்…புளிக்கு பதிலாக மாங்காய் அரைத்து சேர்ப்பது.அப்பத்திற்கும், மட்டை அரிசிக்கும் இந்த மீன் கறி செம டேஸ்ட்…சுவையில் நரம்புகள் நர்த்தனம் ஆடுகின்றன…


கடைசியாய் டிசர்ட்….பாலடை பிரதமன், தேங்காய்பால் பாயாசம்…இரண்டும் சுவையில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல…
                எண்டே கேரளம் கேரள நாட்டின் பாரம்பரிய உணவுகளை மிகச்சிறப்பாய் ருசிக்க ஏற்ற இடம்.கேரளத்தின் பாரம்பரிய உணவுகளை கேரள சுவையோடு ரசித்து சாப்பிட புதிதாய் ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் எண்டே கேரளம் உணவகத்திற்கு தாராளமாய் செல்லலாம்.

            
        விலை எப்பவும் போல கோவை மாநகரத்திற்கு ஏற்றார் போல் இருக்கிறது.கேரள சேட்டன்கள் சேச்சிகள் சனி ஞாயிறுகளில் படையெடுப்பார்கள் என்பது உண்மை..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

  1. என் புரட்டாசி விரதத்தை குலைக்குறதுக்குன்னே இப்படி பண்றியா நீ?!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....