Saturday, November 4, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் PR, காமக்காபட்டி, கொடைக்கானல் ரோடு, தேனி மாவட்டம்

KOVAI MESS : HOTEL PR, KAMAKKAPATTI, KODAIKANAL ROAD, BATLAKUNDU, THENI DISTRICT
                ஒரு வேலை விஷயமாக வத்தலகுண்டு வரைக்கும் செல்ல வேண்டி இருந்தது.ஞாயிறு மாலை பகார்டி துணையோடு சுற்றிக்கொண்டிருந்ததில் பசி தெரியவில்லை.ஆனாலும் சாப்பிட்டு ஆகவேண்டும் என்று அடம்பிடித்ததால் கூட வந்த நண்பர் ”பக்கத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பாடு விடிய விடிய கிடைக்கும், அதுமட்டுமல்ல, மட்டன் சுக்கா, குடல், தலைக்கறி ன்னு எல்லாம் கிடைக்கும்” என்று சொன்னதால் அந்த ஹோட்டலுக்கு வண்டியை திருப்பினோம்.
          காமக்காபட்டி என்கிற ஊர் தான்.வத்தலகுண்டு தாண்டி தேனி ரோட்டில் செல்லும் போது வலதுபுறமாக கொடைக்கானல் செல்லும் ரோடு பிரிகிறது.அங்கிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஹோட்டல் இருக்கிறது.மொத்தம் மூணு ஹோட்டல்கள் இருக்கின்றன.
எந்த ஹோட்டலுக்கு பெயர் இல்லையோ அந்த ஹோட்டலில் தான் விடிய விடிய சாப்பாடு சூடா கிடைக்கும்.மதியம் 12 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நான்வெஜ் கிடைக்கும்.உங்கள் அதிர்ஷ்டம் இருந்தால் இரவு நேரங்களில் ஒரு வேளை கிடைத்தாலும் கிடைக்கும்.



           ரோட்டோரத்தில் இருக்கிற ஒரு சாதாரண ஹோட்டல் தான்.நான்கைந்து டேபிள்கள் போடப்பட்டு இருக்கின்றன.தோசைக்கல் எப்பவும் சூடாகவே இருக்கிறது.அவ்வப்போது புரோட்டா, ஆம்லெட், ஆஃப்பாயில், மட்டன் ஃப்ரை என ஏதோ ஒன்று வெந்து கொண்டோ இருக்கிறது.போர்டு என்பது இல்லை.ஆனால் மதிய நேரங்களில் கூட்டம் எப்பவும் போல சேர்ந்து விடுகிறதாம்.
        கரும்பச்சை வாழையிலையில் நீர் தெளித்து காத்திருக்கையில் சுடச்சுடச் சாதத்தினை பொலபொலவென்று கொட்டும் போது சாதத்தின் ருசி நம் நாசியை பதம்பார்க்கிறது.என்ன குழம்பு வேண்டும் என்று கேட்கையில், குழம்புகளின் எண்ணிக்கை ஆச்சர்யப்படுத்துகிறது. சாதத்தினை கையைவிட்டு அளாவி தேவையான சாதத்திற்கு மட்டும் குடல் குழம்பு ஊற்றி சாப்பிடும் போது குடல் குழம்பின் மணம் பட்டையை கிளப்புகிறது.ருசி நம்மை இழுக்கிறது.அளவாய் காரம் இருந்தாலும் நன்கு சுறுசுறுவென இருக்கிறது.அடுத்து தலைக்கறிக் குழம்பு இதுவும் அதே மாதிரியே தலைக்கறி சுவையுடன் பட்டையை கிளப்புகிறது.மூன்றாவதாக மட்டன் குழம்பு செம டேஸ்ட்.கெட்டியாக இல்லாமல் சாறு போல் இருக்கிறது.சாப்பிட சாப்பிட சுவை அதிகமாகிக் கொண்டே போகிறது.மட்டனிம் வெரைட்டி என்ன இருக்கிறது என்ன கேட்க, குடல்கறி, தலைக்கறி, மட்டன் சுக்கா, மூளை ஃப்ரை இருக்கிறது என சொல்ல, அனைத்திலும் ஒன்று தரச்சொன்னோம்.



           நன்கு காய்ந்த தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம் போட்டு வதக்கி, பின் கறிவேப்பிலை போட்டு, மட்டன் துண்டுகளை போட்டு வதக்கி, கொஞ்சம் மசாலாத்தூள்களை போட்டு, கடைசியாய் மிளகுப் பொடி போட்டு வாழை இலையில் வைத்து தரும்போது அதன் மணம் நம் நாசியை பதம் பார்க்கிறது.சூடான மட்டன் அந்த வாழையிலையோடு சேர்ந்து ஒரு வித சுவையையும் மணத்தினையும் தந்து பசியை அதிகப்படுத்துகிறது.
            இதே போல் தான் குடல்கறி, தலைக்கறி, மூளை ஃப்ரை என அனைத்தும் ஒவ்வொன்றும் தனித்தனி சுவை.வதங்கிய வெங்காயத்தோடு மிளகு காரத்தோடு கறித்துண்டுகளை சாப்பிடும் போது ஏற்படுகிற சுவை நம் நாவை விட்டு போவதில்லை.சாதத்துடன் குழம்பை ஊற்றி சாப்பிட்டுக் கொண்டு அவ்வப்போது குடல் ஃப்ரையோ, மட்டன் துண்டுகளையோ, தலைக்கறியோ எடுத்து கடித்துக்கொள்ளும் போது அதன் சுவை ஆஹா…அற்புதம்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே காரத்தின் விளைவால் மூக்கில் ஒழுகுவது கூட அழகுதான்…சாப்பாடு அப்படியே இறங்குகிறது ஒவ்வொரு குழம்புக்கும்..வஞ்சனையில்லாமல் வந்து கொட்டுகிறார்கள் சாதத்தினை...அதுபாட்டுக்கு போகிறது.குடல் குழம்பு அருமையோ அருமை...வயிறு முட்ட சாப்பிட்டதற்கு அப்புறம் தான் போதும் இத்தோடு நிறுத்திக்கலாம் என்று தெரியவருகிறது...
           அனைத்து கறி குழம்புகளையும் டேஸ்ட் பண்ணிவிட்டு சாம்பார் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கிறது.சாதத்தோடு ரசம் மிக அருமை.டம்ளரில் வாங்கி குடித்தது அதை விட அருமை..
சாப்பிட்ட அனைத்திற்கும் விலை என்பது மிகக்குறைவு தான்.காலையில் டிபன் புரோட்டா கள் கிடைக்கும்.மதியம் 12 மணி முதல் இரவு வரை அனைத்தும் கிடைக்கும்.சாப்பாடு அதிகாலை மூணு மணி, நான்கு மணி வரை கிடைக்கும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்
    

2 comments:

  1. வாயூறும் பதிவு
    சிறந்த வழிகாட்டல்

    ReplyDelete
  2. Valthukkal.. Anna.. ungalathu payanathodu.. pala hotelgalin vibarangal arinthu kolla mudigirathu..
    payanam thodarattum

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....