Showing posts with label குடல் வறுவல். Show all posts
Showing posts with label குடல் வறுவல். Show all posts

Wednesday, January 9, 2019

கோவை மெஸ் - குழந்தை கடை, C.R பிரியாணி, டவுன்ஹால்,கோவை C.R BIRIYANI, TOWNHALL, KOVAI


C.R பிரியாணி
குழந்தை கடை, டவுன்ஹால்

நிறைய பேரு இந்த கடையப்பத்தி சொல்லி இருந்ததால் நேற்றைய மதியம் இங்கு போய் இருந்தோம்.கடைக்கு முன்னால் சிலர் நின்று கொண்டிருந்தனர்.கூட்டமா இருக்கும் போல என்று நினைத்தபடியே கடைக்குள்ளே எட்டிப் பார்த்தோம்.ரொம்ப சின்ன கடைதான்.நான்கு டேபிள்கள்.மொத்தம் பதினாறு பேர் அமர்ந்து சாப்பிடலாம்.முதல் பந்தி அப்பொழுது தான் ஆரம்பித்திருந்தது.அதனால் அடுத்த பதினாறில் நாங்களும் இருவராய் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.டேபிள்கள் ஒவ்வொன்றாய் காலி ஆக ஆக அடுத்த பதினாறும் ஆக்ரமித்தது அடுத்த பந்தியை.

                  வாழை இலை வைத்து பேப்பர் கப்பில் தண்ணீர் வைக்க, என்ன வேண்டும் என கேட்க பிரியாணி என சொல்ல, காலி ஆகிவிட்டது, பிளைன் தான் என சொல்ல, அதனுடன் வறுவல், குடல் குழம்பு கலக்கி என ஆர்டரிட்டோம்.ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது. பிளைன் பிரியாணி.சீரகசம்பாவின் குருணை அரிசிதான்.ரொம்ப சிறிதாக இருக்கிறது.சாப்பிட கொஞ்சம் சுவையாக இருக்கிறது.மற்றபடி கொஞ்சம் காரசாரமாய் இருக்கிறது.இதற்கு கொடுக்கப்படும் குழம்பு நல்ல காரம்.இரண்டும் காம்பினேசனில் மேட்ச் ஆகிறது.அளவாய் தான் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி இருக்கும் போல.
பிளைன் தான் அதிகமாக ஓடுகிறது.அடுத்த முறை மட்டன் பிரியாணியை சுவைத்துப் பார்க்க வேண்டும்.



                      மட்டன் வறுவல்..திக்கான வறுவல் எல்லாம் கிடையாது.வறுவல் நல்ல பதத்தில் இல்லை.எண்ணிப் பார்த்ததில் எட்டுதுண்டுகள் தான்.அளவும் பெரிதும் சிறிதுமாய் இல்லை.எல்லாம் ஒரே சைசில் இருக்கின்றன.வெங்காயம்தான் அதிகம் இருக்கின்றன.கறி கொஞ்சம் மென்மையாய் இருக்க, காரசாரமாக இருக்கிறது.
குடல் வறுவல்.இதுவும் அதே தான்.குழம்புடனே வந்து சேர்கிறது.வறுவலை இலையில் வைத்தால் குழம்பு ஆறாக ஓடக் கூடாது.திக்கான மசாலா ஆமையை விட மெதுவாய் நகரவேண்டும்.வெறும் மசாலா கலந்த எண்ணைய் தான் லைட்டாய் பிரிய வேண்டும்.அது தான் வறுவலுக்கு உண்டான பதம்.அப்படி இல்லை. குடலுடன் வெங்காயமும் போட்டி போடுகிறது.சுவையாக இருக்கிறது.

                                 குழம்பு கலக்கி சுமார்தான்.செக்க செவேல் என்று வருகிறது.குழம்பின் மணமும் இல்லை முட்டையின் மணமும் இல்லை.சரியான காம்பினேசனில் இரண்டும் இல்லை.மொத்தமாய் நாலைந்து முட்டையை உடைத்து ஊற்றி, குழம்பையும் சேர்த்து,ஒரே தடவையாய் கல்லில் ஊற்றி அங்கு அளவாய் பிரித்து இலைக்கு இலை தருகின்றனர்.அதில் தான் சுவை மிஸ் ஆகிறது. 

                             ஆட்டின் பெரும்பாலான பார்ட்ஸ்கள் இருக்கின்றன.மட்டன் சாப்ஸ், குடல் ஈரல், ரத்தப்பொறியல் என. மதுரை தவிர்த்து தேனி மாவட்டத்தில் கிடைக்கும் சுவை போலத் தான் இருக்கின்றன.ரொம்ப எதிர்ப்பார்ப்போடெல்லாம் செல்ல தேவையில்லை.முனியாண்டி விலாஸில் கிடைக்கும் ருசி தான்.காரசாரமாக கிடைக்கும்.பிரியாணி டேஸ்ட் நார்மல் தான்.சிட்டிக்குள் இருக்கும் ஒரு முனியாண்டி விலாஸ் தான் இது.விலை கோவைக்கு ஏற்றார் போல் இருக்கிறது.
மட்டன் பிரியாணி -120, குடல் -90 வறுவல் -110 ( இது வெறும் எட்டு துண்டுகள் தான்.) பிளைன் - 60 
                        
மதியம் ஒரு மணி சுமாருக்கு சென்றால் ரஷ் ஆக இருக்கும்.ஆற அமர சாப்பிடனும் என்றால் இரண்டரை மணிக்கு மேல் போனால் போதும்.

அமைவிடம் :
டவுன்ஹால் டூ வைசியாள் வீதி செல்லும் போது இடதுபுறம் அங்காளம்மன் கோவில் வீதி. அங்கே ஒரு ஜங்சன்.அதில் வலதுபுறம் இருக்கிறது இந்த கடை.மேலும் விவரங்களுக்கு 
கூகுள் மேப்பிடவும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Saturday, November 4, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் PR, காமக்காபட்டி, கொடைக்கானல் ரோடு, தேனி மாவட்டம்

KOVAI MESS : HOTEL PR, KAMAKKAPATTI, KODAIKANAL ROAD, BATLAKUNDU, THENI DISTRICT
                ஒரு வேலை விஷயமாக வத்தலகுண்டு வரைக்கும் செல்ல வேண்டி இருந்தது.ஞாயிறு மாலை பகார்டி துணையோடு சுற்றிக்கொண்டிருந்ததில் பசி தெரியவில்லை.ஆனாலும் சாப்பிட்டு ஆகவேண்டும் என்று அடம்பிடித்ததால் கூட வந்த நண்பர் ”பக்கத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பாடு விடிய விடிய கிடைக்கும், அதுமட்டுமல்ல, மட்டன் சுக்கா, குடல், தலைக்கறி ன்னு எல்லாம் கிடைக்கும்” என்று சொன்னதால் அந்த ஹோட்டலுக்கு வண்டியை திருப்பினோம்.
          காமக்காபட்டி என்கிற ஊர் தான்.வத்தலகுண்டு தாண்டி தேனி ரோட்டில் செல்லும் போது வலதுபுறமாக கொடைக்கானல் செல்லும் ரோடு பிரிகிறது.அங்கிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஹோட்டல் இருக்கிறது.மொத்தம் மூணு ஹோட்டல்கள் இருக்கின்றன.
எந்த ஹோட்டலுக்கு பெயர் இல்லையோ அந்த ஹோட்டலில் தான் விடிய விடிய சாப்பாடு சூடா கிடைக்கும்.மதியம் 12 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நான்வெஜ் கிடைக்கும்.உங்கள் அதிர்ஷ்டம் இருந்தால் இரவு நேரங்களில் ஒரு வேளை கிடைத்தாலும் கிடைக்கும்.



           ரோட்டோரத்தில் இருக்கிற ஒரு சாதாரண ஹோட்டல் தான்.நான்கைந்து டேபிள்கள் போடப்பட்டு இருக்கின்றன.தோசைக்கல் எப்பவும் சூடாகவே இருக்கிறது.அவ்வப்போது புரோட்டா, ஆம்லெட், ஆஃப்பாயில், மட்டன் ஃப்ரை என ஏதோ ஒன்று வெந்து கொண்டோ இருக்கிறது.போர்டு என்பது இல்லை.ஆனால் மதிய நேரங்களில் கூட்டம் எப்பவும் போல சேர்ந்து விடுகிறதாம்.
        கரும்பச்சை வாழையிலையில் நீர் தெளித்து காத்திருக்கையில் சுடச்சுடச் சாதத்தினை பொலபொலவென்று கொட்டும் போது சாதத்தின் ருசி நம் நாசியை பதம்பார்க்கிறது.என்ன குழம்பு வேண்டும் என்று கேட்கையில், குழம்புகளின் எண்ணிக்கை ஆச்சர்யப்படுத்துகிறது. சாதத்தினை கையைவிட்டு அளாவி தேவையான சாதத்திற்கு மட்டும் குடல் குழம்பு ஊற்றி சாப்பிடும் போது குடல் குழம்பின் மணம் பட்டையை கிளப்புகிறது.ருசி நம்மை இழுக்கிறது.அளவாய் காரம் இருந்தாலும் நன்கு சுறுசுறுவென இருக்கிறது.அடுத்து தலைக்கறிக் குழம்பு இதுவும் அதே மாதிரியே தலைக்கறி சுவையுடன் பட்டையை கிளப்புகிறது.மூன்றாவதாக மட்டன் குழம்பு செம டேஸ்ட்.கெட்டியாக இல்லாமல் சாறு போல் இருக்கிறது.சாப்பிட சாப்பிட சுவை அதிகமாகிக் கொண்டே போகிறது.மட்டனிம் வெரைட்டி என்ன இருக்கிறது என்ன கேட்க, குடல்கறி, தலைக்கறி, மட்டன் சுக்கா, மூளை ஃப்ரை இருக்கிறது என சொல்ல, அனைத்திலும் ஒன்று தரச்சொன்னோம்.



           நன்கு காய்ந்த தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம் போட்டு வதக்கி, பின் கறிவேப்பிலை போட்டு, மட்டன் துண்டுகளை போட்டு வதக்கி, கொஞ்சம் மசாலாத்தூள்களை போட்டு, கடைசியாய் மிளகுப் பொடி போட்டு வாழை இலையில் வைத்து தரும்போது அதன் மணம் நம் நாசியை பதம் பார்க்கிறது.சூடான மட்டன் அந்த வாழையிலையோடு சேர்ந்து ஒரு வித சுவையையும் மணத்தினையும் தந்து பசியை அதிகப்படுத்துகிறது.
            இதே போல் தான் குடல்கறி, தலைக்கறி, மூளை ஃப்ரை என அனைத்தும் ஒவ்வொன்றும் தனித்தனி சுவை.வதங்கிய வெங்காயத்தோடு மிளகு காரத்தோடு கறித்துண்டுகளை சாப்பிடும் போது ஏற்படுகிற சுவை நம் நாவை விட்டு போவதில்லை.சாதத்துடன் குழம்பை ஊற்றி சாப்பிட்டுக் கொண்டு அவ்வப்போது குடல் ஃப்ரையோ, மட்டன் துண்டுகளையோ, தலைக்கறியோ எடுத்து கடித்துக்கொள்ளும் போது அதன் சுவை ஆஹா…அற்புதம்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே காரத்தின் விளைவால் மூக்கில் ஒழுகுவது கூட அழகுதான்…சாப்பாடு அப்படியே இறங்குகிறது ஒவ்வொரு குழம்புக்கும்..வஞ்சனையில்லாமல் வந்து கொட்டுகிறார்கள் சாதத்தினை...அதுபாட்டுக்கு போகிறது.குடல் குழம்பு அருமையோ அருமை...வயிறு முட்ட சாப்பிட்டதற்கு அப்புறம் தான் போதும் இத்தோடு நிறுத்திக்கலாம் என்று தெரியவருகிறது...
           அனைத்து கறி குழம்புகளையும் டேஸ்ட் பண்ணிவிட்டு சாம்பார் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கிறது.சாதத்தோடு ரசம் மிக அருமை.டம்ளரில் வாங்கி குடித்தது அதை விட அருமை..
சாப்பிட்ட அனைத்திற்கும் விலை என்பது மிகக்குறைவு தான்.காலையில் டிபன் புரோட்டா கள் கிடைக்கும்.மதியம் 12 மணி முதல் இரவு வரை அனைத்தும் கிடைக்கும்.சாப்பாடு அதிகாலை மூணு மணி, நான்கு மணி வரை கிடைக்கும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்
    
இன்னும் கொஞ்சம்...

Friday, July 31, 2015

கோவை மெஸ் - மங்களவிலாஸ், புதிய பேருந்து நிலையம் எதிரில், சேலம் - 4

                              திருப்பத்தூரில் இருந்து சேலம் வந்தபோது சாப்பிடலாம்னு வண்டியை ஓரம் கட்டின இடம் சேலம் பஸ் ஸ்டாண்ட்.பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்க்க ஒவ்வொரு சந்துலயும் ஏதாவது ஹோட்டல் இருக்கும்.ஒரு சில ஹோட்டல்களில் தான் நல்ல காரஞ் சாரமா இருக்கும்.ஏற்கனவே சேலம் கொஞ்சம் ஹாட்டான இடம்..அடிக்கிற வெயிலுக்கு நல்லா காரஞ்சாரமா சாப்பிட்டா மூக்குல தண்ணீ வரும்.....அப்படிப்பட்ட காரஞ்சாரமான ஹோட்டல் தான் இந்த மங்களவிலாஸ்.சேலத்துல மொத்தம் ஐந்து கிளைகள் வச்சிருக்காங்க... நாங்க போனது செல்வி மெஸ் இருக்கிற சந்தில்...செல்வி மெஸ்ஸில் ஏற்கனவே சாப்பிட்ட அனுபவம் இருப்பதாலும், மங்களவிலாஸில் டேஸ்ட் கொஞ்சம் கூடுதலாய் இருப்பதாலும் மீண்டும் மங்களவிலாஸ் கடைக்கே சென்றோம்....
ஒரே ஒரு ஒத்த போஸ்ட்..அதுல ஏகப்பட்ட போர்டு போட்ட மங்களவிலாஸ் ஹோட்டல் நம்மை வரவேற்கிறது.
                     உள்ளே நுழைந்ததும் சாம்பிராணி மணம் மணக்க மணக்க சாப்பிடும் ஹால் இருக்க, ஒரு ஒரமாய் டேபிளை தேர்ந்தெடுத்து அமர்ந்தோம்.சர்வர் வாழை இலை போடவும், பிரியாணியும், நாட்டுக்கோழி சுக்கா வருவலும், ஏற்கனவே இந்த ஹோட்டலில் மிக டேஸ்டாக குடல் ஃப்ரை சாப்பிட்ட அனுபவம் இருப்பதால் குடல் ஃப்ரையும் சொல்ல, ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது.
                        பிரியாணி எப்பவும் போலதான்.சீரகசம்பா அரிசியில் மட்டன் துண்டுகள் நன்றாக பஞ்சு போல மென்மையாக வெந்து இருக்க, சாப்பிடவும் சுவையாக இருந்தது.சுக்கா குழம்பினை கொஞ்சம் தொட்டு பிரியாணியோடு சாப்பிட செம டேஸ்ட் தான்..என்ன திண்டுக்கல்லில் தருவது போல் கத்திரிக்காய், மட்டன் எலும்பு துண்டுகள் போட்ட தாழ்ச்சா தருவதில்லை. வெறும் தயிர் வெங்காயம் மட்டும்தான்..ஆனால் சுக்கா குழம்போடு பிரட்டி சாப்பிட பிரியாணி ஏகத்திற்கும் இறங்குகிறது உள்ளே...
நாட்டுக்கோழி சுக்கா...நன்கு கெட்டியான மசாலா சேர்த்த குழம்புடன் சுக்கா செம டேஸ்ட்...பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரோ சூப்பர்....
அடுத்து குடல் ஃப்ரை...
                      சான்சே இல்லை....இப்படி ஒரு டேஸ்ட் இருக்குமா என்றால் அது இந்த குடல் ஃப்ரை டேஸ்ட்தான்...குடல் தோசைக்கல்லில் போட்டு நன்கு வறுத்து மசாலாவெல்லாம் சுண்டவைத்து பெப்பரும் காரமும் நன்கு கலந்து சூடாய் சாப்பிட ......செம டேஸ்ட்...கூட அந்த கறிவேப்பிலை... ஆஹா...செம பொருத்தம்...குடல் கறி என்றாலே கொஞ்சம் குடலின் ஒரு வித வாசம் வீசும்...அந்த மணம் கொஞ்சம் கூட இல்லை..நன்கு மசாலா சுண்ட வைத்தது சாப்பிட சாப்பிட ஏ..ஒன்...குடலின் ஒவ்வொரு துண்டும் செம டேஸ்ட்...நன்றாக இருக்கிறது குடல் ஃப்ரை....என்ன...அளவுதான் குறைவாக இருக்கிறது...ஆனால் டேஸ்ட்...செம...
                    இதெல்லாம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் சாதம் வாங்கி ரசம் ஊற்றி சாப்பிட்டால் அமிர்தம் தான்...நன்கு ஹெவியாய் சாப்பிட்டு இருந்தால் நன்கு ஜீரணமாகும்.அதுவும் ரசம் செம டேஸ்ட்...எக்ஸ்ட்ரா ஒரு கிளாஸ் வாங்கி குடித்துவிட்டுதான் இலையை விட்டு.... இடத்தினை விட்டு..... எழுந்திரிச்சேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...
                இந்த ஹோட்டலில் நாட்டுக்கோழி மட்டும் தான் உபயோகப்படுத்துகிறார்கள். பிராய்லர் கிடையாது.அதனால்தான் விலையும் சற்று கூடுதல்.
                    சாப்பாடு சாப்பிட்டால் விதவிதமான குழம்பு வகைகள் உண்டு..அவை அனைத்தும் ரொம்ப கெட்டியாய் மிக சுவையாய் இருக்கும்.அவ்வளவு டேஸ்ட்...

அந்தப்பக்கம் போனால் கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க...
குடல் ஃப்ரையும், அந்த ரசமும் சான்சே இல்ல.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...

Tuesday, March 24, 2015

கோவை மெஸ் - வம்சாவளி பிரியாணி, காளவாசல் பைபாஸ் ரோடு, மதுரை

                         போன வாரம் மதுரைக்கு போயிருந்த போது அந்த ஊர்ல இருக்கிற முக்காவாசி ஹோட்டல்களில் சாப்பிட்ட அனுபவம் இருப்பதால் ஏதாவது புது ஹோட்டலில் ட்ரை பண்ணுவோமே அப்படின்னு நைட் ஷிப்ட் போய்ட்டு வந்து குப்புறபடுத்து தூங்கிட்டு இருந்த மதுரை புகழ் தமிழ்வாசி அவர்களை தட்டி எழுப்பி விசாரித்த போது, இருப்பா நானே வர்றேன் என ஒரு பத்து நிமிடத்தில் வந்தார்.
அவர், ” காளவாசல் வழியாக போகும் போது வம்சாவளி என்கிற ஹோட்டல் பார்த்து இருக்கேன், அங்க கூட்டம் அள்ளுது.நானும் அங்க போகனும்னு நினைச்சிகிட்டே இருக்கேன்...அதனால் அங்க போலாமா என கேட்க, அடுத்த இரண்டு நிமிடங்களில் அங்கு இருந்தோம்.ஏனெனில் நாங்க சந்தித்த இடமே அந்த ஹோட்டலுக்கு எதிர்ப்புறம் தான்.அப்புறம் என்ன....அடுத்து ஹோட்டலுக்குள்தான்....
                                  
பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என உள்ளே நுழைந்தோம்.கடையின்
வாசலிலேயே  ஆளுயுரத்திற்கு மிகப்பெரிய போர்டு வரிசை கட்டிய மெனுக்களோடு வரவேற்கிறது.ஆட்டின் அத்தனை ஸ்பேர் பார்ட்ஸும், சிக்கனின் சின்ன சின்ன மெனுக்களும் அதில் இருக்கின்றன.படித்து முடிக்கவே மூச்சு வாங்குகிறது...சின்ன கடைதான்.ஆனால் கொஞ்சம் விசாலமாக இருக்கிறது.நம் முஸ்லீம் அன்பர்கள் நடத்துகின்ற கடை.ஆனால் பெயர் வித்தியாசமாக இருக்கிறது.
கடையில் மொத்தமே ஐந்து டேபிள்கள் தான்.அதில் இரண்டு ஏசிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.அந்த இரண்டு டேபிள்களில் ஒன்று ஒரு பேமிலியால் இடம் பிடிக்கப்பட்டு களை கட்டிக்கொண்டு இருந்தது.நாங்கள் இருவரும் அடுத்த டேபிளில் அமர்ந்து அவர்களின் மெனுக்களை காதில் வாங்கிக் கொண்டிருந்த போது சர்வர் எங்களிடம் வர  என்ன இருக்கிறது என கேட்க, அவருக்கு மனப்பாடமாய் இருந்த மெனுக்கள் வெளியே வர ஆரம்பித்தன...

அவரை பேச விட்டு, பிறகு உங்க கடையின் ஸ்பெசல் என்னவென்று கேட்க, பிரியாணி என்றார்,,,சரி..ஆளுக்கு ஒரு கால் பிளேட் அப்புறம் என்ன சைட் டிஷ் கேட்கலாம் என நினைக்கையில் குடல்பிரை, மூளை பிரை, ஈரல் பிரை இருக்கு என சொல்ல, அனைத்தையும் கொண்டு வர சொன்னோம்.மதுரையில் அடித்த வெயிலுக்கு சிக்கன் செம சூடு என்பதால் அதை சாப்பிடவே இல்லை.
முதலில் வந்தது பிரியாணிதான்.பிரியாணி நல்ல டேஸ்டாக இருக்கிறது.சீரக சம்பா அரிசியில் நன்கு மசாலா பிடித்து செம டேஸ்டாக  இருந்தது.மட்டன் கறியும் நன்றாக வெந்து இருந்தது,முஸல்மான் வீட்டு பிரியாணி எப்படி இருக்குமோ அப்படி இருந்தது,நல்ல சுவை...கால் பிளேட் என்பதால் குறைவாகத்தான் இருக்கிறது.எங்கிருந்துதான் இந்த மாதிரி சின்ன கப் பிளேட்லாம் கண்டுபிடிக்கிறாங்களோ....
அடுத்து வந்தது குடல் பிரை..கொஞ்சம் கிரேவியோடு வர , பிரை பண்ணித்தர சொல்லி திருப்பி அனுப்பினோம்..அதுவும் வந்தது..பிரை பண்ணியதால் நல்ல சுவை இருந்தது.என்ன...குடல்கறியை விட வெங்காயம் தான் அதிகமாக இருக்கிறது,ஏதோ வாசத்திற்காக குடல்கறி போட்டு இருப்பார்கள் போல....ஆனால் சுவை ஓகே...


மூளை பிரை நல்ல சுவையாக இருந்தது.வெங்காயம் போட்டு வறுத்து இருந்த மூளை செம டேஸ்டாக இருந்தது.பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள குடல் வறுவலும், மூளை பிரையும் சூப்பராக இருந்தது.

தமிழ்வாசியின் விருப்பத்திற்கு ஏற்ப ஈரல் பிரை வந்தது,அதுவும் செம டேஸ்ட்,.என்ன..... வாங்கின அனைத்து சைட் டிஷ்சும் கொஞ்சம் கூட எலும்பு இல்லாததால் பல்லுக்கு அதிகம் வேலை இல்லாமல் போய்விட்டது. அனைத்தும் சூப்பராக இருந்தது.




சிக்கன் வகைகளில் புது வித மெனுக்கள் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. சிக்கன் 777  மற்றும் சிக்கன் ஆர் டி எக்ஸ்... இப்படி... என்னங்க....சிக்கன் வெடிக்குமா என கேட்க..அவர் கொஞ்சம் புன்னகை செய்துவிட்டு, நம்மூர் பள்ளிபாளையம்  சிக்கனைத்தான் அப்படி போட்டு இருக்கிறோம் என்றார்.

எல்லாம் திருப்தியாய் சாப்பிட்டு இருக்க, இருங்க சார்,,,சாதம் வச்சி ரசம் ஊத்திக்கிங்க என அன்போடு ஒரு பிளேட் சாதம் வைக்க அதை இருவரும் பகிர்ந்து கொண்டு ரசம் ஊற்றி சாப்பிட மிக சுவையாக இருந்தது.நான்வெஜ் சாப்பிட்ட பின் கொஞ்சம் ரசம் சாப்பிட்டு பாருங்கள்...அதை விட இன்பம் வேறு எதுவும் இருக்காது....நான்வெஜ் சாப்பிட்ட வயிற்றின் ஜீரணத்திற்கு ரசம் சூப்பராக இருக்கும்...

நன்றாய் திருப்தியாக சாப்பிட்டு வெளியே வர வெயில் சுள்ளென்று அடித்தது..வெயிலுக்கு இதமாக ஏதாவது குடிக்கலாமே என்று கிளம்பி விளக்குத்தூண் சென்று பேமஸ் ஜிகர்தண்டாவில் ஒரு கை சாரி...ஒரு வாய் பார்த்தோம் இருவரும்.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Thursday, December 6, 2012

சமையல் - அசைவம் - குடல் குழம்பு

போன வாரம் ஞாயிறு அன்னிக்கு வீட்டுல நம்ம கைவண்ணம் தான்.(அன்னிக்கு மட்டும் நம்ம அம்மணிக்கு ரெஸ்ட்)குடல் குழம்பு, பெப்பர் மட்டன் பிரை.இரண்டும் செய்தேன்..செம டேஸ்ட்.சூடான இட்லிக்கு இது செம மேட்ச்.இதுல குடல் குழம்பு மட்டும் செய்முறை சொல்லிடறேன்.

வேண்டிய பொருட்கள்:
ஆட்டு குடல் - 750 கிராம்
பெ.வெங்காயம் - 4
தக்காளி - 4
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது (கசகசா வுடன் )
இஞ்சி பூண்டு - விழுது
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - கொஞ்சம்
மிளகாய்த்தூள்- தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொ.மல்லி, புதினா - தேவையான அளவு

செய்முறை :
முதலில் ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.(தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும் )
குக்கரில் கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை கிராம்பு, சோம்பு, போட்டு பின் நறுக்கின வெங்காயம் வதக்கி கொள்ளவும். பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.(பூண்டு பல் கொஞ்சம்) நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும். இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.ஒரு கொதி வந்தவுடன் குக்கரில் இருந்து வெந்த குடலை இதில் போட்டு பிரட்டவும். இதுவும் நன்கு கொதித்தவுடன் கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்...இட்லிக்கு சரியான டிஷ் இது தான்.

 
 
 
 
 

 
 

வெறும் குடல் வறுவல் மட்டும் என்றால் தேங்காய் சேர்க்காமல் இருந்தால் போதும். நன்கு வதக்கியவுடன் பரிமாறலாம்.

இதைவிட மிக எளிய முறை ஒன்று இருக்கிறது.
(பதினைந்து டு இருபது நிமிடம்).

குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, சோம்பு, இதெல்லாம் போட்டு பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, குடல், உப்பு, மிளகாய்,மஞ்சள், மல்லித்தூள், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா தழை இதெல்லாம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கலக்கிவிட்டு மூடி போட்டு மூன்று அல்லது நான்கு விசில் விட்டு இறக்கி விடவும்.அப்புறம்  விசில் இறங்கியவுடன் பரிமாறலாம்.
இதுவும் நன்றாக இருக்கும்.ஆச்சி, அன்னபூர்ணா, போன்ற மட்டன் மசாலாக்களையும் சேர்த்துக்கொண்டால் இன்னும் ருசி அதிகமாகும்..

இட்லியும் பெப்பர் மட்டன் பிரை : புகைப்படம் மட்டும்.

கிசுகிசு : ஞாயிறு அன்னிக்கு எப்பவும் விசேசம் தான்...காலையில் எட்டு எட்டரை மணிக்குள் குடல் வறுவல் ரெடி ஆகிவிடும்..அப்போ இருந்து மதியம் மூணு மணி வரை பொழுது நல்லாப்போகும்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


இன்னும் கொஞ்சம்...