ராமசேரி இட்லி, கேரளா
பாலக்காட்டில்
உள்ள ராமசேரி இட்லியை சுவைத்துவிடலாம் என்றெண்ணி சமீபத்தில் ஒரு அதிகாலைப் பொழுதில்
அங்கு கிளம்பினோம்.வாளையார் தாண்டி கஞ்சிக்கோடு என்னும் ஊரை அடைந்தவுடன் அங்கிருந்து
சில பல கிலோமீட்டர்களில் ராமசேரி என்கிற ஊரை அடைந்தோம்.
இட்லிக்கு மிகவும் பெயர்போன ராமசேரி மிகவும் அமைதியாக இருக்கிறது.ஊரின்
ஒதுக்குபுறமாய் ஒரு கோவில் இருக்க அதன் அருகே நாங்கள் தேடி வந்த இட்லிக்கடை இருக்க,
அக்கடைக்கு முன்னே சேட்டன்கள் அதிகாலைக் குளிருக்கு இதமாக பீடியையும், சூடாய் டீயையும்
வலித்துக் கொண்டிருந்தனர். சரசுவதி டீ ஸ்டால் தான்..ஆனால் இட்லிக்கடையாய் உருவெடுத்து
உலக பிரசித்து பெற்று இருக்கிறது.
கடைக்குள்
முதல் ஆளாய் நுழைந்தோம் இட்லி சாப்பிட.இட்லி சாப்பிடவே கோவையில் இருந்து வருகிறோம்
என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தோம்.சில்வர் தட்டில் இரண்டு இட்லிகளை கொண்டு
வைத்துவிட்டு, பொடியையும் தேங்காய் எண்ணையும் ஊற்றிவிட்டு செல்ல, தேங்காய் எண்ணையின்
மணம் நம் நாசியை துளைக்கிறது.இட்லி யின் வடிவம் நம்மை ஆச்சர்ய மூட்டுகிறது.இட்லியின்
மேல் குறுக்கும் நெடுக்குமாய் வரிகள்...ஆப்பம் அளவிற்கு பெரிதாய் இருக்கிறது.இட்லி
செம மென்மை..சிறிதாய் இட்லியை பிய்க்க, அலுங்காமல் குலுங்காமல் வருகிறது கையில்..கொஞ்சம்
பிய்த்து பருப்பு பொடியில், எண்ணையுடன் சேர்த்து தொட்டு சாப்பிட செம டேஸ்ட்..அடுத்து
காரச் சட்னி கொஞ்சம் ஊற்றிவிட்டு போக, அது இன்னும் பெஸ்ட் காம்பினேசன்.அதிகாலைக் குளிருக்கு
செம காரமாய் இதமாய் சட்னி இருக்க, இட்லி உள்ளே போவது கூட தெரியாமல் போய்க்கொண்டிருந்தது..இட்லிக்கு
தேங்காய் சட்னியும் செம அருமை…சீக்கிரம் காலியான
இட்லியை பார்த்துவிட்டு இன்னும் இரண்டு வைத்து விட்டு போக அதுவும் பரபரவென்று காலியானது.
இந்த
இட்லியை எப்படி தயாரிக்கிறார்கள் என்று அடுக்களை வரை எட்டிப்பார்த்ததும் இன்னும் கொஞ்சம்
ஆச்சர்யமானது.மண் சட்டி பானையில் இட்லி தயார் ஆகிக் கொண்டிருந்தது.ஒரு இட்லிதான் வேக
வைத்து எடுக்க முடியும்.நான்கு பானைகள் அடுப்பில் வெந்து கொண்டிருந்தன.பானையில் சணல்
கட்டி அதில் துணி போட்டு பின் மாவு ஊற்றி மூடி வைத்து வேக வைக்கின்றனர்.ஒவ்வொரு இட்லியையும்
கண்ணும் கருத்துமாக வேக வைத்து பரிமாறுகின்றனர்.
இந்த
இட்லி இரண்டு நாள்கள் கூட கெடாது எனவும், வெளிநாடுகளுக்கு பறந்து போகின்றன என்றும்
ஆச்சர்யமான தகவல்களை அள்ளிக் கொட்டிக்கொண்டே இருக்க, நாங்களும் இட்லியை ஒரு கை சாரி…ஒரு
வாய் பார்த்துக்கொண்டிருந்தோம்..பின் சுடச்சுட உளுந்து வடை ரெடியாக, அதையும் ரசித்து ருசித்து விட்டு வெளியேறினோம்…
இட்லியின்
விலை ஒரு செட் ரூ 14 மட்டுமே…மிகவும் விலை குறைவுதான்..ஆனால் சுவை மிக அதிகம்..
அந்தப்பக்கம் போனீங்கன்னா சாப்பிட்டு விட்டு வாங்க..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
nice share .
ReplyDelete