சமீபத்தில்
திண்டுக்கல் சென்றிருந்த போது காலை வேளை அப்பொழுதுதான் விடிய தொடங்கி இருந்தது.எங்கு
நான் வெஜ் சாப்பிடலாம் என தேடல் தொடங்கியது.காலையில் எந்த கடையில் கிடைக்கும் என ஒரு
கட்ட தேடலுக்கு பின் மாரியம்மன் கோவில் அருகில், தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள தெற்கு
ரதவீதியில் இருக்கும் ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டரை அருகில் உள்ளவர்கள் பரிந்துரைத்தனர்.
8.30
மணி சுமாருக்கு அந்த ஹோட்டலை அடைந்துவிட்டேன்.பிச்சை மொய்தீன் சந்தில் இந்த கடை இருக்கிறது.
அக்ரஹாரத்தில் நுழைந்த மாதிரி இருக்கிறது,கடையின் அமைப்பும் அப்படித்தான் இருக்கிறது,பழங்கால கட்டிடம்.உள்ளே இடவசதி தாராளமாக இருக்கிறது.கடைக்குள்
நுழைந்ததும் இங்கு கறிக்குழம்பெல்லாம் கிடைக்குமா என்கிற சந்தேகத்துடனே சுற்றும் முற்றும்
பார்த்தேன்.தெய்வ மணம் கமழும் வகையில் கடையில் சாமி புகைப்படங்கள், சாம்பிராணி வாசம்
என நம்மை வரவேற்றது.உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும், பொங்கல் இட்லி, மசால்
தோசை என சாப்பிடவும், மருந்துக்கு கூட கறியின் வாசமோ, கறிக்குழம்போ கண்ணுக்கு தெரியவில்லை.எதற்கும்
சந்தேகத்துடனே அமர்ந்தேன், குடலும், கறியும் சாப்பிடலாம்னு வந்ததுக்கு, நம்மளை சைவத்தை
சாப்பிட வச்சிட்டாங்களே என்ற ஆதங்கத்துடனே அமர்ந்தேன்.
இலை போட வந்தவரிடம், நான்வெஜ்
ஹோட்டல் தானே இது என்று கேட்க, ஆமாம் என வயிற்றில் பால் வார்த்தார்.பச்சை பசேலென்ற
வாழையிலை போட்டு, தண்ணீர் தெளித்து விட்டு, இரண்டு இட்லியை வைக்க, கூடவே இரண்டு வகை
சட்னியை வைத்துவிட்டு நகர்ந்தார் சர்வர்.தேங்காய் சட்னிதான் அதில் ஒன்று கார தேங்காய்
சட்னியும்.இரண்டும் செம டேஸ்ட்.தேங்காய் சட்னியை இவ்ளோ சுவையாக செய்ய முடியுமா என்பதே
ஆச்சரியம் தான்.கெட்டிச் சட்னிதான் இரண்டும்.இரண்டும் செம டேஸ்ட்.சுடச் சுட இட்லிக்கு
தோதாக இருக்கிறது இந்த சட்னிகள்.
அடுத்து மட்டன் குழம்பினை கொண்டு வர, அது சப்பாத்திக்கு
செய்யும் குருமா மாதிரி வெள்ளை வெளேரென்று இருக்கிறது.கொஞ்சம் கூட மசாலா சேர்க்காமல்,
அவர்கள் சொந்த தயாரிப்பில் செய்யும் மசாலாக்களை உபயோகித்து செய்கின்றனர்.சுவையும் மிக
நன்றாகவே இருக்கிறது.இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கிறது.தேங்காய் சட்னி, கொஞ்சம்
குழம்பு என்று கலந்து கட்டி அடிக்க, அது பாட்டுக்கு இட்லி இறங்கி கொண்டு செல்கிறது.சங்ககிரி
ஏரியா பக்கம் இந்த மாதிரி மட்டன் குழம்பினை செய்வார்கள்.அடுத்து மட்டன் சாப்ஸ் ஆர்டர்
செய்ய, அதுவும் மசாலாக்கள் இன்றி வெள்ளை வெளேரென்று வருகிறது.நன்கு பஞ்சு மாதிரி வெந்து
இருக்கிறது.காரத்திற்கு மிளகும் அரைத்துவிட்ட பச்சை மிளகாயும் சேர்த்திருக்கிறார்கள்.காரமும்
அளவாய் இருக்கிறது.
எலும்பு நன்றாக வெந்து இருக்கிறது.சாப்பிடும் போது பச்சைக்கறியினை
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது.ஆனால் சுவையும் மணமும் செமயாக
இருக்கிறது.அடுத்து அவர்களின் ஸ்பெசலான சின்ன வெங்காய ஊத்தாப்பம் ஆர்டர் செய்ய, அதுவும்
அடுத்த கண நேரத்தில் வந்து சேர்ந்தது.சின்ன வெங்காயத்தினை அழகாய் ரவுண்ட் ரவுண்டாய்
கட் பண்ணி, மெலிதாய் ஊத்தாப்பத்தில் தூவி பொன்னிறமாய் வேக வைத்து சுட சுட இலையில் வைக்கின்றனர்,இதற்கும்
அந்த தேங்காய் சட்னி செம காம்பினேசன்.கார சட்னியும் செமயாக இருக்கிறது.பிறகு அந்த வெள்ளை
மட்டன் குருமா…அதுவும் இதற்கு செம மேட்ச் ஆகிறது.
காலை
வேளையில் மட்டன் சாப்ஸ் மட்டும் கிடைக்கிறது.பிறகு மீண்டும் மாலையில் தான்.நிறைய நான்வெஜ்
மெனுக்கள் கிடைக்கின்றன.மாலை வேளையில் செல்லுங்கள் உங்களுக்கு நிறைய அசைவ வகைகளை உண்டுவிட்டு வரலாம்.
திண்டுக்கல்லில் கிட்டத்தட்ட இருவது வருடங்களுக்கும் மேலாக
இந்த உணவகத்தினை நடத்தி வருகின்றனர்,திண்டுக்கல்லின் முக்கிய பிரமுகர்களான எம் எல் ஏ, எம்பி, கலெக்டர் போன்றவர்களின் பேவரைட்டாக
இருக்கிறது இந்த உணவகம்.
அந்தப்பக்கம்
போனீங்கன்னா ஒரு எட்டு போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.சுவை நன்றாகவே இருக்கிறது.விலையும் குறைவாகவே இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்.
எப்போது இது...?
ReplyDeleteஆஹா..
ReplyDeleteபச்சை பசேலென்ற வாழையிலை போட்டு!
ReplyDelete