இனிப்பு பலகாரம்-துப்பதிட்டு அல்லது எண்ணெயிட்டு:
சமீபத்தில்
நீலகிரியின் மலைப்பிரதேசங்களில் ஒன்றான கோத்தகிரிக்கு சென்றிருந்தேன்.அங்கிருந்து
20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொதுமுடி என்கிற ஒரு கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு
நண்பரின் அழைப்பின் பேரில் அங்கு போய் இருந்தேன்.சுற்றிலும் தேயிலைக்காடுகள்.இயற்கை
அன்னை பசுமை போர்வை போர்த்தியிருந்தாலும், ஆங்காங்கே மழை இன்மை காரணமாக போர்வையில்
கிழிந்து இருக்கும் பொத்தல்கள் போல காடுகள் வறண்டு கிடந்தன கான்கீரீட் காடுகள் நிறைய
ஆக்கிரமித்து இருக்கின்றன.
இருந்தாலும் நீலகிரிக்கே உண்டான மிதமான குளிரும், கொஞ்சம்
வழக்கத்திற்கு மாறாகவே வெப்பநிலையும் இருக்கின்றன.
படுகர்
இன கோவில் திருவிழாவானது ஒவ்வொரு ஊருக்கும் பிப்ரவரி இறுதியில் இருந்து ஆரம்பிக்கிறது.மார்ச்
அல்லது ஏப்ரல் மாதம் வரை ஒவ்வொரு ஊரிலும் மிக
சிறப்பாக நடைபெறுகிறது.
படுகர்
இன விசேசங்களில் மிகவும் தவறாமல் இடம்பிடிப்பது உருளை மற்றும் மொச்சை கொட்டை குழம்பும்,
இனிப்பு வகைகளில் துப்பதிட்டு அல்லது எண்ணையிட்டு என அழைக்கப்படும் ஒரு வகை இனிப்பு
பலகாரம்.இவை இரண்டும் இல்லாத விழாக்கள், விசேஷங்கள் நடைபெறுவதில்லை.
மைதா
மாவு மற்றும் சர்க்கரை கொஞ்சம் சோடா உப்பு
சேர்த்து இந்த பலகாரம் தயாரிக்கப்படுகிறது. துப்பம் என்றால் நெய்.நெய்யில் பொரித்து
எடுப்பதால் துப்பதிட்டு என்று பெயர்.இப்பொழுது நெய்க்கு பதிலாக எண்ணையில் பொரிப்பதால்
எண்ணையிட்டு என்றும் அழைக்கின்றனர்.
மூன்று
பங்கு மைதா மாவுடன் ஒரு பங்கு சர்க்கரை சேர்த்து, கூட கொஞ்சம் சோடா உப்பு சேர்த்து,
தண்ணீர் கலந்து பூரி மாவு பதத்தில் பிசைகின்றனர்.இந்த மாவு பிசையும் பதத்தில் தான்
இந்த பலகாரத்தின் மென்மை இருக்கிறது.நன்கு பிசைந்து ஊறவைக்கின்றனர்.பின்னர் தேவையான
அளவில் உருண்டை பிடித்து கையினாலே தட்டி அகலமாக்கி அப்படியே எண்ணையில் பொரிக்கின்றனர்.பூரி
போல் உப்பி வருகிறது,இருபுறமும் பதமாய் வெந்தபின் எடுத்து தட்டில் போடுகின்றனர்.
இந்த
பலகாரத்தினை சுட சுட பிய்க்கும் போது பறக்கும் ஆவியில் ஒளிந்திருக்கும் வெந்த மாவின்
வாசம் நம் நாசியை தொடுகிறது.உள்ளே மென்மையாய் இருக்கிறது.சுவைக்கும் போது இனிப்பு சுவையோடு
மிக சாப்ட்டாய் உள்ளிறங்குகிறது.மைதாவிற்கே உண்டான இழுவைத் தன்மை இந்த பலகாரத்தில்
குறைவாக இருக்கிறது.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கிறது.மொச்சை கொட்டை குழம்போடு இதனை
சேர்த்து சாப்பிடும் போது கூடுதலாக இன்னொரு சுவை கிடைக்கிறது.இனிப்பும் காரமும் இணைந்து
புதியதொரு சுவையை தருகிறது.ஊருக்கு வரும் ஒவ்வொரு விருந்தினருக்கும் இந்த பலகாரத்தினை
தந்து உபசரிக்கின்றனர்.
வேறு
எங்கும் கிடைக்காத இந்த இனிப்பு வகை படுகர் இன மக்களிடையே மிக பிரசித்தம்.இந்த முறை
எங்களுக்கு சுவைக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்.
நம்ம ஊர் சொஜ்ஜி மாதிரி...?
ReplyDelete