Wednesday, July 11, 2018

பயணம் - நெல்லியம்பதி, பாலக்காடு, கேரளா NELLIAMPATHI, PALAKKAD, KERALA


                      சனிக்கிழமை.காலை விடிந்த போதே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருக்க, இரவு பெய்த மழையின் தொடர்ச்சியாய் இன்னும் தூறல்கள் தூறிக் கொண்டிருந்தன.எப்பவும் போல காலை அலுவலகம் கிளம்ப ரெடியான தருணத்தில், தூறலில் நனைந்து கொண்டிருந்த கோவையின் சில்லென்ற கிளைமேட்டை பார்த்தவுடன், எப்பொழுதோ கேள்விப்பட்ட கேரளாவில் பாலக்காட்டில் இருக்கின்ற நெல்லியம்பதி ஞாபகத்திற்கு வர, அங்கு பைக்கில் சென்றால் செமயாக இருக்குமே, நாமும் வண்டியில் லாங்க் ட்ரைவ் போய் நிறைய நாட்களாகி விட்டனவே என்று எண்ணி வண்டியை கிளப்ப, ஆன் செய்தால் கோமாவில் படுத்த தமிழக அரசு போல் பேட்டரி வீக்காகி இருந்ததால் வண்டி துளி கூட அசையவில்லை.சரி் காரிலேயே போய்விடலாம் என்றெண்ணி அதில் கிளம்பினோம்.
               கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து குனியமுத்தூர் வரும் வரை கொஞ்சம் நேரம் செலவாகி விட்டிருந்தது.காரணம் உக்கடம் மேம்பால பணி காரணமாக வாகன நெரிசல் அதிகமாக இருந்தது.குனியமுத்தூரில் பாலக்காடு ரோட்டில் இருந்து விரைவாக வண்டியை செலுத்தினோம்.வானம் இன்னும் அப்படியே தான் மப்பும் மந்தாரமுமாய் மழைத்தூறலுடனே இருந்தது.

வாளையார் சென்றவுடன் கொஞ்சம் மழை வலுக்க ஆரம்பித்தது.நெல்லியம்பதிக்கு போகிற ரூட்டை கேட்போம் என்று அங்கிருந்த சேட்டனிடம் விளிக்க, அவர் ஊர் சுற்றி செல்லுகின்ற பாதையை சொல்லிவிட்டார்.
             வாளையார், கோழிப்பாறா, கொழிஞ்சாம்பாறை, வழியில் கொல்லங்கோடு, சித்தூர் வழி சென்று நெம்மாராவினை அடைந்தோம்.இது மிக சுற்றுவழி என்பது திரும்ப வந்த போது தான் தெரிந்தது.அந்த சேட்டனிடம் லாட்டரி டிக்கெட் வாங்காததன் காரணம் என்பது இப்பொழுது தான் புரிந்தது.
                   நெம்மாரா வரும் வழியிலேயே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையும் மலைத்தொடர்களும் நம்மை வரவேற்றன.நீண்ட தூரம் வந்த களைப்பினால் நெம்மாராவில் ஒரு மலையாள டீ குடித்துவிட்டு கிளம்பினோம்.நெம்மாராவில் இருந்து ஒரு சில கிலோ மீட்டரில் போதுண்டி என்கிற அணைக்கட்டினை அடைந்தோம்.அந்த அணைக்கட்டு மலைகள் சூழ்ந்த இடத்தில் மிக ரம்யமாய் இருக்கிறது.சுற்றிலும் பசுமை.இயற்கை வழி எங்கும் பரவிக்கிடக்கிறது.



                  அந்த அணைக்கட்டில் இருந்து கொஞ்ச தூரம் பயணித்ததில் மலைப்பாதை ஆரம்பிக்கிறது.தொடக்கத்தில் வனச்சரகத்தில் வண்டியை செக் செய்கிறார்கள். பயணிக்கும் வண்டியின் நம்பரை குறித்துக் கொண்டு அனுப்புகிறார்கள்.அங்கிருந்து ஆரம்பமாகிறது.
                    இயற்கையின் அதிசயங்கள்.பசுமை… பசுமை பசுமை..பசுமையைத் தவிர வேறொன்றுமில்லை.வழி நெடுக அருவியின் ஆரவாரங்கள் வரவேற்கின்றன.பாறைகள் கசிந்து கொண்டு இருக்கின்றன.சாலையெங்கும் ஈரப்பதங்கள்.ஒன்றிரண்டு ஹேர்பின் பெண்டுகள் மட்டும் உள்ள மலைப்பாதையில் பயணிக்க, இரு புறமும் அடர்ந்த மரங்கள், பசுமை போர்வை அணிந்து கண்களுக்கும் மனத்திற்கும் ஒரு புத்துணர்ச்சியை அளிக்கின்றன.சிறிதும் பெரிதுமாய் அருவிகள் வழியெங்கும் இருக்கின்றன.மலை முகட்டில் இருந்து வெள்ளியை உருக்கி ஊற்றுவது போல் அருவியின் நீரானது வழிந்து கொட்டுகிறது.












                ஆங்காங்கே சின்ன சின்ன வியூ பாய்ண்ட்கள் இருக்கின்றன.இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளையும், பனி பாயும் பள்ளத்தாக்குகளையும் கண்டு மகிழலாம்.ரப்பர் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன.நாங்கள் சென்றபோது நல்ல மழை பெய்ததால் பல இடங்களுக்கு செல்ல முடியவில்லை.நெல்லியம்பதி ஒரு சில கடைகள் கொண்ட ஒரு சின்ன மலைவாசஸ்தலம்.ஆனால் அவ்வூரைச் சுற்றி நிறைய இயற்கை அதிசயங்களை கொண்டிருக்கிறது.நிறைய வியூபாய்ண்ட்கள் இருக்கின்றன.ஒவ்வொன்றும் பல திரில்களை கொண்டது.ஜீப்பில் மட்டுமே சென்று காணக்கூடிய இடங்கள் அவை. யானை புலி போன்ற விலங்குகளை அங்கு தங்கியிருந்தால், உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கண்டு ரசிக்க முடியும்.மழை பெய்தமையால் சீக்கிரம் திரும்ப வேண்டியிருந்தது.இரண்டு மூன்று நாட்கள் தங்கி அனைத்தையும் சுற்றிப்பார்க்க வேண்டும்.நெல்லியம்பதி மீண்டும் காணவேண்டிய ஆர்வத்தினை தூண்டியிருக்கிறது
அங்கு காண வேண்டிய இடங்கள்
சீதாகுண்டு வியூ பாய்ண்ட்  
காராசூரி வியூ பாய்ண்ட் 
மாம்பாறா பீக்
கேசவன்பாறா வியூ பாய்ண்ட்
கீரின் லேண்ட் பார்ம் ஹவுஸ்
மற்றும் ட்ரெக்கிங் செய்ய சில இடங்கள் இருக்கின்றன.ஜீப் சவாரி சென்றால் மட்டுமே இதை அனைத்தையும் காண முடியும்.இங்கு சென்றால் தவறாமல் செல்லவேண்டியது ஜீப் சவாரி தான்.மாலை 4 மணி வரைக்கும் ஜீப் சவாரி செல்லலாம்.ரூ 1800 வரை ஆகும்.
நிறைய ரிசார்ட்கள் இருக்கின்றன.திரும்ப வருகையில் நெம்மாராவில் இருந்து கொல்லங்கோடு, வந்து பாலக்காடு பைபாஸ் பிடித்து கோவை வந்து சேர்ந்துவிட்டோம்.மொத்தம் நூறு கிலோமீட்டர்தான்.இது போன்ற இயற்கை கொட்டிக்கிடக்கும் இடங்களுக்கு சென்று வந்தால் மனமும் உடலும் புத்துணர்ச்சியாவது உறுதி.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



1 comment:

  1. நான் பல வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன். நல்ல அமைதியான இடம்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....