Thursday, May 16, 2019

இரங்கல்


தர்மா
                            

                        வட இந்திய தொழிலாளி.எங்களிடம் பல வருடங்களாக கார்பெண்டராக பணி புரிந்தவன்.நல்ல வேலைக்காரன்.ஆனால் தாமதம் செய்பவன்.உடனே வாடா என்றால் இரண்டு மணி நேரம் கழித்து தான் வருவான்.சொன்னபடி வேலையை தரமாய் செய்வான்.சின்ன வயது தான்.இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது.வருடத்திற்கு இரு தடவை உ.பி சென்று வருவான்.ரத்தினபுரியில் வாடகைக்கு இருக்கிறான்.இந்த முறையும் ஊருக்கு சென்று வந்து விட்டு வேலை கேட்டான்.
                           சென்னையில் நண்பரின் வீட்டு இன்டீரியர் ஒர்க் அப்பொழுது தான் வந்தது.அன்று புதன் கிழமை.நானும் இவனை அலுவலகத்திற்கு வரச் சொல்லி சென்னை நண்பரின் முகவரி மற்றும் மொபைல் எண்ணினை தந்து நல்லபடியாக அவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தந்து விட்டு வா என சொல்லி, உடனே கிளம்பு இன்றே ரயிலை பிடித்து நாளை சென்னை போனதும் கூப்பிடு என்று அனுப்பி வைத்தேன்.
                     இரு நாட்களாக போன் வரவில்லை.ஆனால் சென்னையில் இருந்து என் நண்பர் கூப்பிட்டிருந்தார், கார்பென்டர் வரவே இல்லை என.சரி நானும் விசாரித்து விட்டு வருகிறேன் என சொல்லி தர்மாவினை அழைத்தேன்.மொபைல் சுவிட்ச் ஆஃப்.இன்னொரு எண்ணை அழைத்ததில் அது உ.பி க்கு போனது.ஹிந்தியில் பாத் கர்த்ததும் பேசி விட்டு வைத்துவிட்டேன்.புதனன்று ஆபிசுக்கு வந்த போது கூட அவனது நண்பனும் வந்திருந்தான்.அவனை தொடர்பு கொண்டதும் "சார்..தர்மா கேஸ் பத்திகிச்சி " என அரை குறை தமிழில் சொல்ல அதிர்ச்சியானது.
             அப்புறம் முழுக்க விசாரித்ததில், வியாழன் அன்று மாலை சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பத்த வைத்ததில் அது வெடித்து இருக்கிறது. பலத்த தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.அவனே ஆட்டோ பிடித்து கங்கா ஆஸ்பத்திரிக்கு வந்து அட்மிட் ஆயிருக்கிறான்.90% அவனது உயிருக்கு ஆபத்து என சொல்லி விட்டனர்.ஒரு நாள் வைத்திருந்து மருத்துவம் பார்த்திருக்கின்றனர்.மருத்துவ செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் கங்காவில் இருந்து உ.பிக்கு செல்ல ஏற்பாடு செய்து விட்டனர்.
                              சனிக்கிழமை அவனது தம்பி மற்றும் நண்பர்களின் உதவியோடு ஆம்புலன்ஸ் பேசி உ.பி க்கு அவனை அழைத்து சென்றிருக்கின்றனர்.திங்கட்கிழமை மதியம் நம்ம நண்பர் கெளசிக் ஆபிசுக்கு வந்தார்.ஆம்புலன்ஸ் சேவை நடத்தி கொண்டு வருபவர்.கோவையின் ரட்சகன் எனலாம்.பேச்சு வாக்கில் அவரும் இந்த விசயத்தை சொல்ல, அவரது வண்டி தான் அவனை கொண்டு சென்றிருக்கிறது என்றார்.இவர் நேரடியாக அவனை பார்த்திருக்கிறார்.நெருப்பில் அவனது உடம்பு இரு மடங்காக ஊதியிருக்கிறது.உருவமே தெரியவில்லையாம்.கண்கள் மட்டும் தான் தெரிகின்றன என சொல்ல சொல்ல பரிதாபம் ஏற்பட்டது.இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு ஒரு போன் கால்.ஆம்புலன்ஸ் ட்ரைவர் தான்..இறந்து விட்டான் என..கோரக்பூர் எட்ட இன்னும் பத்திருவது கிலோமீட்டர் இருக்கையில் அவனது உயிர் பிரிந்திருக்கிறது.மூன்று நாட்களுக்கு முன் உயிரோடு பார்த்தவன் இன்று இல்லை.அவன் அன்று வந்து சென்ற வீடியோ காட்சிகளை கெளசிக் க்கு காட்ட., அவர் ஆச்சர்யப்பட்டு போனார்..என்ன இவன் இவ்ளோ அழகா சிகப்பா ஒல்லியா இருக்கான் என்று..
                  கிட்டத்தட்ட பத்து வருடங்களாய் அவன் வந்து போயிருக்கிறான் என்னிடம் வேலைக்காக.கடைசியாய் நான் சொன்னபடி சென்னை சென்றிருந்தால் அவன் ஒருவேளை பிழைத்திருப்பானோ.. ஒரு நாள் தாமதிக்காமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்குமோ..
விதி வலியது.
ஆழ்ந்த இரங்கல்கள்


நேசங்களுடன்
ஜீவானந்தம்3 comments:

  1. ஆழ்ந்த இரங்கல்கள். மனம் கனத்து விட்டது

    ReplyDelete
  2. ஆழ்ந்த அனுதாபம்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....