Friday, May 29, 2020

ஊரடங்கு - மது (சுய) புராணம்

ஊரடங்கு - மது (சுய) புராணம்

தமிழக மதுபானங்களை அடியோடு நிறுத்தி ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.அதற்காக குடியை விட்டுவிட்டேன் என்பது அர்த்தமல்ல.தமிழகத்தினை தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாட்டு மதுவகைகளையே உண்டு வருகிறேன்.காரணம் கல்லீரல் மேல் கொண்ட அதீத பற்று தான்.

ஏர்போர்ட்டில் நண்பர் ஒருவர் இருக்கிறார்.அவரின் தயவின் காரணமாக மாதம் எனது கோட்டாவினை பெற்று கொள்கிறேன்.கடந்த முறை கர்நாடகா சென்றிருந்த போது நிறைய மதுவகைகளை அள்ளிப் போட்டு கொண்டு வந்தேன்.அங்கே யுனைட்டடு டிஸ்டில்லரீஸ் தான் உற்பத்தி.பெங்களூரிலேயே உற்பத்தி மையம் இருப்பதால் விலையும் குறைவு.அதே போல் ஆரோக்கியமான மதுவாகவும் இருக்கிறது.அதே போல் கோவையிலிருந்து பாலக்காடு செல்வதும் பக்கம் என்பதால் கஞ்சிக்கோட்டில் உள்ள பெவரேஜ் கடையில் வேண்டிய மது வகைகளை வாங்கி வர முடிகிறது.நம் நண்பர் பாண்டியில் இருந்து வந்த போது அவரும் தன் பங்கிற்கு தானமளித்து விட்டு போனார்.மேலும் எனது மைத்துனர் மனைவி பாண்டியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிவதால் அவரும் தன் பங்கிற்கு இந்த அண்ணனிற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்.

எமது பணியாட்கள் வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களுக்கு சென்று வரும் போது எனக்காக மது வகைகளை வாங்கி வருவது என்பது எழுதப்படாத ஒப்பந்தம்.அதே போல் பேஸ்புக் நண்பர்களும், தொழில் முறை நண்பர்களும் அவ்வப்போது மது பாட்டில்களை அன்பளிப்பர்.வெளிநாட்டு நண்பர்களும் இதில் அடக்கம்.

அதனால் தான் இந்த பாழாய் போன தமிழகத்தில் மட்டும் எதையும் வாங்குவதில்லை.ஒரு காலத்தில் தமிழகத்தில் அளவான மது உற்பத்தி மையங்கள் இருந்தபோது நல்ல தரமும் ஆரோக்கியமும் இருந்தது.ஆனால் இப்போது போட்டி போட்டுக்கொண்டு ஆளாளுக்கு தயாரிக்கின்றனர்.அதனால் தரமும் இல்லை உறுதியும் இல்லை.மேலும் இந்த தமிழகம் மட்டும்தான் குடிகாரனை மிகவும் கேவலமாக நடத்தி வருகிறது.ஆனால் தமிழகத்தில் பெரும் விற்பனை வருவாயை இந்த கேவலமான குடிகாரர்கள் தான் அளித்து வருகின்றனர்.அந்த மனசாட்சி இன்றி டாஸ்மாக் பாரில் இருந்து, கேவலமான பூச்சி கொல்லி மதுவகைகளை உற்பத்தி செய்வதில் வரை இந்த தமிழகம் மிகவும் நாசமாய் போய் விட்டது.அதனாலாயே தமிழக மதுவகைகளை தொடுவதில்லை.

பக்கத்து மாநிலங்களோடு நட்புறவு பேணுவதால் எப்போதும்
மது பிரச்சினை இல்லை.மதுவை அருந்துவதும் அளவாகத்தான். அதனால் கையிருப்பு எப்பவும் இருக்கிறது.இந்த லாக்டவுன் என்னை பொருளாதார ரீதியாக மட்டும் தான் பாதிக்க வைத்துள்ளது.மது ரீதியாக இல்லை.

மேலும் இதைப் படித்து விட்டு என்னிடம் ஏதாவது தேற்றலாம் என்றால் அதற்கு மிகப்பெரிய வருத்தங்களுடன் கூடிய வணக்கங்கள்..
இந்த கொரோனோ முடிந்தவுடன் தாரளமாய் தங்களோடு மதுவருந்த வருகிறேன்.செலவுகளிலும் பங்கெடுத்து கொள்கிறேன்...

எச்சரிக்கை : மது உடலுக்கு தீது


நேசங்களுடன்
ஜீவானந்தம்

No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....