Monday, December 21, 2020

பயணம் - கொச்சின், கேரளா TRAVEL - COCHIN, KERALA

கொச்சின் – பயணம்

              கொரோனோ என்கிற நோய் உலக மக்களை எல்லாம் வாட்டி வதைத்து பின் இந்தியாவிற்குள் நுழைந்தபோது அதை முதன்முதலில் வரவேற்றது கேரளம் தான்.நோய்த் தொற்றினை தடுக்க மிகுந்த கட்டுபாடுகளை விதித்து கேரள மாநிலம் முன்மாதிரி மாநிலமாக இருந்தது.ஆனால் போக போக கேரளாவிலும் நோய் பீடித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி போனது.அதனால் மாநிலம் முழுக்க பலத்த கட்டுப்பாடுகள்.கேரளா எப்பவும் சுற்றுலாவை நம்பியே இருக்கிறது.இந்த கொரோனோவினால் சுற்றுலாத்துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகி விட்டிருக்கிறது.

            சுற்றுலாவினை நம்பி இருந்த அத்தனை தொழில்களும் முடங்கி விட்டன.இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாய் தளர்வுகள் விடப்படுகின்றன.இருந்தாலும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றது கேரள கடற்கரையோர தங்குமிடங்கள், ஹோட்டல்கள் அனைத்தும்.

            ஒரு வேலை விசயமாக கொச்சின் வரை சென்றிருந்தேன்.ரயில் பயணம் தான்.(கொரோனோவினால் நாமளும் தான் பாதிக்கப்பட்டு இருக்கோம்.கார்ல போனா பர்ஸ் பழுத்திரும்.அதனால் ரயில் பயணம்.) எப்பவும் ரயில் நிலையங்களில் கூட்டம் அள்ளும்.ஆனால் எர்ணாகுளம் ஸ்டேசன் மிகுந்த பாதுகாப்புடன் ஆள் அரவமின்றி வெறிச்சோடி இருக்கிறது.காவல்துறையும் ரயில்வே துறையும் பலத்த பாதுகாப்பில் பயணிகளை வரவேற்கின்றனர்.


            ரயிலில் பயணித்து வருபவர்களில் உள் மாநில மக்கள் என்றால் விட்டு விடுகிறார்கள்.வெளிமாநிலம் என்றால் ஏதாவது ஐடி காண்பித்து, மொபைல் எண் கேட்டு, எங்கு செல்கிறீர்கள் என்கிற விவரம் வரை வாங்கி கொண்டுதான் ஸ்டேசனை விட்டு அனுப்புகிறார்கள்.கட்டாயம் மாஸ்க் அணிந்து இருக்கவேண்டும்.கேரளாவில் எங்கு சென்றாலும் மாஸ்க்கோடு தான் திரியவேண்டும்.

           ஸ்டேசனை விட்டு வெளியே வந்தால் ரோடும் வெறிச்சோடியே இருக்கிறது.ஆட்டோக்கள் குறைந்தளவே இருக்கிறது.முன்பெல்லாம் ஆட்டோவில் ஏறினாலே மீட்டர் போட்டு மீட்டருக்கு உண்டான காசை வாங்குவார்கள்.இப்பொழுது அவர்கள் இஷ்டத்திற்கு ரேட் வாங்குகிறார்கள்.எல்லாம் ரவுண்ட் ஃபிகர் தொகைதான்.சில்லறை என்பதே இல்லை.ஆட்டோ மற்றும் கார்களில் டிரைவர் சீட் பின்னாடி பாலீதீன் கவர்களால் பார்ட்டிசன் பண்ணி வைத்திருக்கிறார்கள்.காரில் ஏசி போடும் போது பின்னாடி இருப்பவர்களுக்கு ஏசி காற்றே வருவதில்லை.கொச்சின் வேறு கடும் வெயிலில் சிக்கித் தவிக்கிறது,கொச்சின் முழுக்க கான்கீரிட் காடுகளாக ஆகிவிட்டதால் வெய்யில் சற்றே தூக்கலாகவே இருக்கிறது.

            கொச்சினில் இருந்து ஃபோர்ட் கொச்சின் சென்று மாலை நேர சூரியன் மறையும் அஸ்தமன காட்சியை காணலாம் என்று அங்கு போனால் ஆட்கள் ஆரவாரமின்றி இருக்கிறது.கண்குளிர சூரிய அஸ்தமனத்தை மட்டும் கண்டேன்.அந்த பகுதி எப்பவும் மக்கள் நெருக்கமாக இருக்கும்.கடை கண்ணிகள் நிறைய இருக்கும்.இப்பொழுது மருந்துக்கு கூட கடை இல்லை.நிறைய பிளாட்பார கடைகள் இருக்கும்.அவை அனைத்தும் காணாமல் இருக்கின்றன.


            கடற்கரையை ஒட்டி மீன்கடைகளும் நிறைய இருக்கும்.உயிரோடு மீன்களை பிடித்து வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.அதன் அருகிலேயே மீன் சமைத்து தரும் இடங்களும் நிறைய இருக்கும்.இப்போது அவைகளும் இல்லை.

        ஒன்றிரண்டு உப்பு மாங்காய் கடைகள், பட்டம் விற்பனையாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.கூட்டம் மிகக்குறைவாகவே இருக்கிறது.அந்த மாலை வேளையில் சூரியன் எப்படி தனித்து இருக்கிறதோ அதேபோல் மக்கள் கூட்டமும் இருக்கிறது. எப்பவும் வழி நெடுக நிறைய பிளாட்பார கடைகள் இருந்த சுவட்டையே காணவில்லை.

            களையிழந்து பொலிவிழந்து காணப்படுகிறது கடற்கரை பீச்.தாராள மனம் கொண்ட கேரள அம்மணிகளும் அதிகம் காணமுடிவதில்லை.முன்பெல்லாம் சென்றால் திரும்ப மனமின்றி வருவோம்.இப்பொழுதோ ஏன் தான் இங்கே வந்தோம் என்றிருக்கிறது.

        கொச்சினில் புதிதாய் ஓட ஆரம்பித்து இருக்கும் மெட்ரோ ட்ரெயினிலும் ஏக கட்டுப்பாடுகள்.அங்கும் கூட்டம் குறைவாகவே இருக்கிறது.மெட்ரோ ட்ரெயினில் பயணிக்கையிலும் உள்ளே ஒரு செக்யூரிட்டி அனைவரையும் கண்காணித்து கொண்டே வருவதும் போவதுமாக இருக்கிறார்.முக்கியமாக மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்துகிறார்கள்.



            மாஸ்க் அணிவது பிரச்சினை இல்லை.ஆனால் காதுகளில் மாட்டி மாட்டி காது வலி தாங்க முடிவதில்லை. அவதார் படத்தில் வரும் உயிரனங்களின் காது போல் ஆகிவிடும் போல மாஸ்க் அணிந்து அணிந்து.அதே போல் மூக்கும் சைனாக்காரன் மூக்கை போல சப்பை ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.

            கொச்சினின் பிரபலமான லுலு மால் சென்றால் அங்கும் இதே நிலைமைதான்.பரந்து விரிந்த மாலில் கூட்டம் மிக மிக சொற்பமே.லுலு மால் மிக பிரம்மாண்டமாய் ஜொலிஜொலிக்கிறது.இண்டீரியரில் அசத்தி இருக்கிறார்கள்.வெளிநாட்டில் உள்ள மால்களை போன்ற கட்டமைப்பு.மிக நன்றாக இருக்கிறது.என்ன….மக்கள் கூட்டம் மட்டும் இல்லை.மால்களில் அம்மணிகள் அதிகமாக இருப்பார்கள்.பொழுதும் போகும்.ஆனால் இங்கோ தலைகீழ்….




            நல்ல நான்வெஜ் சாப்பிடுவதற்கு ஏற்ற இடம் கேரளா தான்.கடல் உணவுகள் தாராளமாக கிடைக்கும்.அதே போல் கேரளாவின் பாரம்பரிய உணவுகளும் நிறைய கிடைக்கும்,ஆனால் இந்த முறை ஒவ்வொன்றையும் ருசித்துப்பார்க்க பகீரத முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கிறது.நிறைய கடைகள் கொரோனோவினால் பூட்டியே கிடக்கின்றன.மேலும் நான் சென்ற தினமன்று உள்ளூர் பஞ்சாயத்து தேர்தல் நடப்பதால் அன்றும் நிறைய கடைகள் மூடப்பட்டு இருந்தன.

            முக்கியமாய் நம்ம கள்ளுகடை ஷாப்பும், பெவரேஜ் கடைகளும் நான்கு நாளைக்கு மூடப்பட்டிருக்கிறதாம்.அதிசயமாய் திறந்து வைத்திருந்த ஹோட்டல்களில் கிடைத்த உணவினை சாப்பிட்டுவிட்டு வந்தேன்.பீஃப் கறியும் புரோட்டாவும் சிக்கவில்லை கண்ணுக்கு.ஒரு கடையில் மலபார் பிரியாணி கிடைத்தது.ஆனால் அதிக சுவையில்லை.அப்பம் செம்மீன் கறி ஒரு கடையில் கிடைத்தது.இப்படி தேடி தேடி சாப்பிட வேண்டியதாகி இருந்தது.சோடா, கொளுக்கட்டை உருண்டை இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடமாக தேட வேண்டியதாகிப்போனது.




            இந்த கொரோனாவினால் நிறைய பேர் வேலைகளை இழந்து இருக்கின்றனர் என்பது கண்கூடாக தெரிகிறது.லாட்டரி சீட்டு விற்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக ஆகி இருக்கிறது.எங்கு பார்த்தாலும் அவர்கள் தான்.கொரொனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசாங்கம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கிறது.தமிழகத்தினை போல் தட்டி அடித்து வீட்டை தனிமை படுத்துவதில்லை.நோயாளிகள் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதில்லை.கொரோனோவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ரேசன் பொருட்களை தந்துவருகிறது.தனியார் மருத்துவமனைக்கு யாரும் செல்வதில்லை.முழுக்க முழுக்க அரசாங்கமே நல்ல மருத்துவ சிகிச்சையை அளிக்கிறது.

            தமிழக பாலங்களைப் போலவே கேரளாவிலும் பாலங்கள் கட்டுமானப்பணி நடக்கிறது.இங்கு அம்மா ஆட்சி என்பதால் பச்சை கலர் தான் பாலங்கள் முழுக்க.அதே போல் அங்கே சிவப்பு வர்ணங்களை நீல கலரோடு சேர்த்து கம்யூனிஸ்ட் கலர் என்பது தெரியாத அளவுக்கு வர்ணம் பூசி இருக்கின்றனர்.

            இந்த பயணத்தினை பொறுத்தவரை முழுமையான திருப்தி இப்பொழுது கிடைக்கவே இல்லை.100 சதவீதம் கடைகளும், மக்களும் எப்பொழுது இயல்புநிலைக்கு திரும்புகிறார்களோ அப்பொழுது தான் கேரளா பழைய நிலைமைக்கு மாறும்.

இயல்பு நிலை அடைந்தவுடன் மீண்டும் கேரளா பயணப்படவேண்டும்.கேரள உணவுவகைகளை ஒரு பிடி பிடிக்க வேண்டும்.

எண்டே கேரளா....இப்போல் நன்னாயிட்டு இல்லா...

நேசங்களுடன்

ஜீவானந்தம்


 

 

 

 

No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....