Saturday, September 6, 2025

மாலை மங்கிய நேரம்...

செல்வபுரத்தில் நண்பரொருவரிடம் பேசிட்டு இருக்கும் போது அருகில் உள்ள சூப் கடையை காட்டி வாங்க சூப் குடிக்கலாம்னு கேட்ட போது அவரு வேறு ஒரு கடையை பத்தி சொன்னாரு.பேரூர் செட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே விக்கிற சூப் பத்தியும், தலைக்கறி பத்தியும் அவரு சொல்ல சொல்ல அவருக்கே உமிழ்நீர் அதிகம் சுரக்குது...அந்த கடைக்காரரை பத்தியும் அதிகம் சொல்ல சொல்ல நமக்கும் ஒரு டெம்ப்ட் ஏறியது...சரி..போற வழிதானே..ஒரு எட்டு பார்த்திடுவோம்னு சொல்லிட்டு அவர்கிட்ட விடைபெற்றுவிட்டு பூண்டி தேசத்திற்கு பயணமானேன்..பேரூரை தாண்டி அவர் சொன்ன லொகேசனில் வண்டியை ஓரங்கட்டிவிட்டு, சூப் கடையில் தஞ்சமானேன்...

அவரிடம் பேச்சுக்கொடுத்தவாறே செல்வபுரத்து நண்பர் சொன்னதை எல்லாம் அவரிடம் கேட்டபடியே சூப் சொல்ல, சுடச்சுட சூப் வந்தது.நல்ல சுவை...

அளவான சூட்டில் ஆவி பறக்க, உள்ளே ஆட்டுக்கால் மிதக்க, வெந்த வெங்காயத்தோடு ஒரு ஸ்பூன் எடுத்து வாய்க்கு கொண்டு வர சூப்பின் மணத்தினை நாசி உணர, பசி நரம்புகள் ஆட்டம்போட, மெதுவாய் ஊதி ஊதி சூப்பினை  சுவைக்க ஆரம்பிக்க,  மென் மிளகு காரத்துடன் ஜிவ்வென்று இளஞ்சூட்டில் உள்ளிறங்கியது..நாவின் மொட்டுகள் நடனமாட, கை மறுபடியும் அடுத்த ரவுண்டினை ஆரம்பித்தது.நற்

சுவை..அளவான காரம்..ஆவி பறக்கும் சூடு, நன்கு வெந்த ஆட்டுக்கால் மாவு போல் கரைய, அதன் சவ்வுகள் மென்மையாய் கடிவாங்கி உள்ளிறங்கியது..அப்பொழுது தான் செல்வபுரத்து நண்பர் சொன்ன விசயம் புரிந்தது.எந்த ஒரு கடை மசாலாவும் இல்லாமல் அவர்களே அரைத்து பயன்படுத்தும் மசாலாதான் இந்த சுவைக்கு காரணம் என சொன்னது ஞாபகம் வந்தது.

கடைக்காரர் ஒரு முதியவர் தான். அடுத்து தலைக்கறியை ஒரு துண்டு டேஸ்ட் பார்த்ததில் அது இன்னும் சுவையோ சுவை...தலையை பொசுக்கின வாடை இல்லாமல் தலைக்கறியின் சுவை இன்னும் அதீதமாக இருந்தது.








பார்சல் போடச் சொல்லி வாங்கி வந்து வீட்டில் பிரித்து உட்கார்ந்தால் நல்ல மணம் கமழ ஆரம்பித்தது.மட்டன் சுவை அதன் வாசத்தில் தெரிய, ஒரு துண்டினை எடுத்து சாப்பிட, வாவ்..கறி நன்கு மென்மையாய் வெந்திருக்க, உப்பும் காரமும் அளவாய் இருக்க சுவை அள்ளியது...எலும்புகள் அதிகம் இருக்காது என சொன்ன செல்வபுரத்துகாரருக்கு ஒரு ஓ போட்டு விட்டு அடுத்த துண்டினை பதம் பார்க்க ஆரம்பித்தேன்.நல்ல சுவை, நல்ல மணம், அளவான காரம், பஞ்சு போல் மென்மையாக வெந்து எளிதாய் மெல்ல நன்றாக இருக்கிறது...வீட்டில் தலைக்கறியே வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட டேஸ்ட் செய்து விட்டு நன்றாக இருக்கிறதே ஏன் ஒரு பார்சலோடு வந்தீர்கள் என கேட்டு விட்டு ஒவ்வொரு துண்டாய் காலி செய்தனர். நல்ல சுவை. அவர்களின் வீட்டு மசாலாவிற்கு தனி சுவை தான்.

தள்ளுவண்டி கடை கூட இல்லை. சின்ன மர பெஞ்ச். அதில் ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ்..அதில் சூப் பாத்திரம்.ஒரு சம்படத்தில் தலைக்கறி.வெளிச்சம் வேண்டி ஒரு நீண்ட குச்சியில் எல்ஈடி பல்ப்...அவ்வளவுதான் கடை..ஆனால் ஒரு பால் கேனில் 30 லிட்டர் இருக்கலாம்.

அதில் தான் வீட்டில் தயாரித்த சூப்பினை கொண்டுவருகிறார்கள்.இங்கே ஸ்டவ்வில் வைத்து சுடச்சுட தருகின்றனர்.

சூப்பின் விலை ரூ.40/  எலும்பில்லா தலைக்கறி ரூ.200/ 

விலை அதிகமாய் தோணலாம்..கால்கிலோவிற்கும் மேலே தருகிறார்கள்..நல்ல சுவை வேறு...ஒர்த் தான்..

பேரூர் செட்டிபாளையம் பஸ்நிறுத்தம் அருகில் முதல் கடை...

அங்கே இரண்டு கடைகள் இருக்கின்றன..அதில் முதலாவது கடை. மாதம்பட்டியில் இருந்து வரும் போது முதல் கடை..பேரூரில் இருந்து போகும் போது கடைசி கடை.

தெலுங்குபாளையத்து காரர் கடை.அந்த பக்கமா போனீங்கன்னா

நம்பி போங்க..

டேஸ்டுக்கு நானும் கேரண்டி..மென் மழைக்காலம் என்பதால் இதமாய் இருக்கும்.உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது இந்த ஆட்டுக்கால் சூப்.அப்படியே அந்த தலைக்கறியும் சாப்பிட்டு பாருங்க..

அட அட ன்னு சொல்வீங்க..


#ஆட்டுக்கால்சூப் #மட்டன்வறுவல் #தலைக்கறிவறுவல் #கோவைநேரம் #அசைவம் #பேரூர் #nonveg #nonvegetarian #mutton #soup #muttonlover #goats #foodie #foodblogger #foodlover #food #foodphotography

இன்னும் கொஞ்சம்...

Friday, September 5, 2025

தள்ளுவண்டி இட்லி கடை , சூலூர், கோவை

இன்னொரு தள்ளுவண்டி கடையை பார்க்கலாம்..

சூலூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு தள்ளுவண்டி கடை இருக்கு.கரூர் போறப்ப எதேச்சையாய் ஆவி பறக்கும் இட்லி குண்டாவினை பார்க்கும் போது அப்படியே வண்டியை ஓரங்கட்டினேன்.

சுடச்சுட இட்லி, அதுக்கு சிக்கன் சேர்வா..செம காம்பினேஷன்...இட்லி போட்டு சேர்வாவை ஊற்றி இட்லியை மூழ்கடிக்கிறாங்க..சூடான இட்லி சேர்வாவில் ஊறி அப்படியே பஞ்சு மாதிரி ஆயிருது.அப்படியே வழுக்கிகிட்டு உள்ள போகுது..அப்பவே இந்த கடையைப்பத்தி எழுதலாம்னு நினைச்சேன்..டைம் இல்ல..இப்ப இன்னிக்கு வர்ற வழியில் சாப்பிடலாம்னு நினைக்க, சூலூர் வந்திருந்தது..அந்த கடைய பார்க்கும் போது அப்பதான் முதல் ஈடு எடுத்துட்டு இருந்தாங்க..ஏழு ஏழரை இருக்கும் மணி...சுடச்சுட இட்லியை பார்த்ததுமே பசி எடுக்க ஆரம்பித்தது..மூணு இட்லி வச்சி சேர்வையை ஊற்றி சட்னியை ஊற்றி தர, இட்லி மிதக்குது சேர்வா கூட்டணியில்..இட்லி நனைந்து நன்கு ஊறி பிய்த்து சாப்பிட கொழ கொழன்னு வருது..சுடச்சுட வாயில போட, இட்லியில் இருக்கும் ஆவி வாயில் வர ஆரம்பிக்குது...நல்ல டேஸ்ட்..அன்னிக்கு சாப்பிட்ட அதே டேஸ்ட் தான்...மூணு இட்லி, நிறைய சிக்கன் சேர்வை, வயிறு புல் ஆகிடுது..கடைசியா டச்சப்புக்கு ஒரு ஆஃபாயில் உள்ள தள்ளிட்டு வண்டியை எடுத்தா இரண்டு மணி நேரத்துல கரூர் வந்திருச்சு...


அந்தப்பக்கமா இரவு நேரம் வந்தீங்கன்னா இட்லி சேர்வையை டேஸ்ட் பண்ணி பாருங்க...டேஸ்ட் நல்லாவே இருக்கும்.என் வாரிசுவுக்கும் இட்லி ரொம்ப பிடிச்சது. அதுவும் தண்ணி மாதிரியான சிக்கன் சேர்வாவை ரொம்ப விரும்பி சாப்பிட்டான்..


சூலூருல இருந்து திருச்சி ரோட்டில் கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர்  பூர்விகா மொபைல் கடைக்கு எதிரில் ஒரு மஞ்சள் கலர் தள்ளுவண்டி...


#இட்லி


கடை #தள்ளுவண்டி #idli #sulur #கோவைநேரம் #kovaineram

இன்னும் கொஞ்சம்...

Thursday, September 4, 2025

ஆன்லைன் ரம்மி

 ஆன்லைன் ரம்மி மொத்தமா இழுத்து மூடினதால அதுல இருந்த தொகை எல்லாம் ரீபண்ட்பண்ணிட்டாங்க...

கஷ்டப்பட்டு குருவி சேர்க்குற மாதிரி ஒரு ரூபாய்,2 ரூபாய்னு ஃபிரீ கேம்லாம் ஆடி சேர்த்துவச்ச அமெளண்ட்... அதிகமில்லை ஜெண்டில்மேன் 58 ரூபாய் தான்..வந்து விட்டது.அதே போல் இன்னொரு ரம்மி ஆப்பில் இருந்து 3.58 ரூபாய் கிரடிட் ஆகி இருக்கிறது.

நல்ல டைம்பாஸ் கேம் ரம்மி தான். இதுவரைக்கும் அதிகபட்சமாய் 200 ரூபாய் இன்வெஸ்ட் செய்திருப்பேன். 2009 ல் இருந்து ரம்மி சர்க்கிள் கம்ப்யூட்டரில் ஆட ஆரம்பித்தது. மொபைல் ஆப் வரவும் இன்னும் வசதியாக போனது...அதிகபட்ச கேம் தொகையே 5 ரூபாய் தான்.அப்புறம் சனி ஞாயிறுகளில் மெகா ஃபிரீ கேம்...அவ்வப்போது 10 ரூ இருவது ரூபாய் ஜெயிப்பது உண்டு...அதிக பணம் கட்டி ஆடினால் அதிகம் பணம் வரும் என்கிற பேராசை இல்லை...அது ஸ்கேம் என்பது தெரியும்.ஒரு பொழுது போக்குக்காகவே ஆடியது தான்...

நல்ல டைம்பாஸ்...

அவ்வப்போது ஆப்பினை டெலிட் செய்துவிடுவேன்.. ஆளைக்காணோம் என்று 25 ரூ 50 ரூ போட்டு கூப்பிடுவார்கள் ஆன்லைன் லாட்டரிகள்...அந்த அமெளண்டை வைத்து ஒரு மாதமோ இரண்டு மாதமோ விளையாடுவது உண்டு..

அவ்வளவுதான் இதன் ஒர்த்..ஆனாலும்இதையும் நம்பி லட்சக்கணக்கில் பணம் கட்டி ஆடி உயிரை மாய்த்தவர்கள் பல நூறு பேர்.அதிக பட்ச பேராசை காரணமாக கூட இருக்கலாம்..

மொத்தத்தில் தடை நல்லது தான். என்னைப் போன்ற டைம்பாஸ் செய்பவர்களுக்கு இது இழப்பு தான்... ஆரம்ப கால கட்டங்களில் வீட்டிலோ , மற்ற இடங்களிலோ கையில் கார்டு வைத்து விளையாடும் போது முதுகு வலி பின்னி எடுக்கும்.பந்தயம் கட்டி 7'S, ரம்மி 240/320 என ஆடுவோம். பந்தயமாய் மிட்டாய், ஆம்லெட், சினிமா டிக்கெட் என வைத்து ஆடுவோம்..

கொஞ்சம் பணம் வந்த வுடன் 50/100 என ஆட ஆரம்பித்தோம்..

அதற்கப்புறம் அந்த தொடர்பு அறுந்து போனது. நண்பர்களுடன் இருக்கும் போது ஆடுவது அப்படித்தான் போனது. ஆன்லைன் வரவும் தொடர்பு சுருங்கி போனது..வேலை பெருகிப் போனதில் ஆன்லைன் வசதியானது ஆனாலும் அது ஒரு கட்டுக்குள்ளே இருந்தது..ஏன் எனில் அது சூதாட்டம்..பணம் வருவது போல் வந்து மொத்தமாய் வாரிச்சுருட்டிப் போய் விடும்...அதனாலாயே பணத்தை இழந்தது இல்லை.

இப்பவும் ரம்மி மிகவும் பிடித்த விளையாட்டு தான். ஞாயிறுகளில் குடும்பத்தினருடன் ஆடுவது உண்டு.ஏதாவது விசேசங்களில் மட்டும்  வாய்ப்புக்கள் அமைகின்றன.

இந்த மாதிரி எப்பொழுதும்

மனமகிழ்ச்சியினை தருவது ரம்மியும் ரம்மும் தான்...


#ஆன்லைன்ரம்மி #onlinegaming #rummynew #rummy #kovaineram #rummygold 

#rummygames #சூதாட்டம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, February 18, 2025

கோவை மெஸ் - EMBIRE BIRIYANI, R.S.PURAM, COIMBATORE

 EMPIRE BIRIYANI - R.S.PURAM


பாசுமதி அரிசி பிரியாணி தேடலில் இந்த ஹோட்டல் அகப்பட்டது... பர்த்டே கொண்டாட்டங்கள் இன்னும் தொடர்வதால் நண்பரின் அழைப்பிற்கேற்ப இங்கே நுழைந்தோம்.

ஹோட்டல் அட்மாஸ்பியர் பெயருக்கேற்றவாரே நல்ல இண்டீரியர் அமைப்புடன், ஏசியின் மென் குளிருடன் அழகாய் இருக்கிறது. அதிக பட்சம் 35 - 40 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் படி டேபிள்கள் நல்ல இட வசதியுடன் போட்டு இருக்கின்றனர்.வாஷ் ஏரியாதான் மிக சிறிது..

அந்தளவுக்கு கூட்டம் இல்லாததால் ஓகே தான்...  உணவுக்கு வருவோம்..

மெனு கார்டில் வெரைட்டிகள் பலதும் கண்ணை உறுத்த, நாம் எதிர்பார்த்த, மிகவும் விரும்பும் பாசுமதி பிரியாணியை ஆர்டர் செய்தோம்...அதற்கு துணையாய் இறால் சில்லி, அல்பஹாம் சிக்கன், லாலி பாப் போன்றவையும் ஆர்டரிட்டோம்.

முதலில் வந்தது இறால் சில்லி... அளவான காரம்.. குறைவான உப்பு.. குழந்தைகளுக்கு ஏற்றதாய் இருந்தது.

அளவு தான் குறைவு..

அடுத்து லாலிபாப்..

அது எப்பவும் போல ஓகே ரகம் தான்..

தொட்டுக் கொள்ள கொடுத்த சில்லி சாஸ் உடன் லாலிபாப் சுவையும் ஓகே..

அடுத்து வந்தது அல்ஃபகாம் சிக்கன். இதுவும் நன்றாகவே இருந்தது.சிக்கன் நன்கு மென்மையுடன் அளவான காரத்துடன் நல்ல டேஸ்டுடன் இருந்தது..அடுத்து நம் ஆவலை தூண்டிய பாசுமதி பிரியாணி...

ஒரு பாத்திரத்தில் பொன்னிறமாய் பிரியாணி வர, எடுத்து கொட்டியதும் உதிரி உதிரியாய் சிதறியது..நீளமான பிரியாணி அரிசி யின் நிறமும் திடமும் ஓகே.. சுவை கொஞ்சம் குறைவுதான்.அளவும் குறைவுதான் ஆனாலும் சாப்பிட நன்றாகவே இருக்கிறது.சிக்கன் துண்டுகள் நன்கு மென்மையுடன் இளம் பஞ்சு கணக்காய் வெந்திருந்தது.பாத்திரத்தில் இரண்டு பெரும் சிக்கன் துண்டுகளும், முட்டையும் இடத்தை ஆக்ரமித்துக் கொள்ள பாசுமதி பிரியாணி அளவு குறைவாக இருக்கிறது.ஒரு ஆள் நன்றாக சாப்பிடக்கூடிய அளவிற்கு இருக்கிறது.ஆனால் மற்ற பிரியாணி ஹோட்டல்களில் இரண்டு பேர் தாராளமாய் சாப்பிடக்கூடிய வகையில் வைக்கிறார்கள்.விலையும் அதே தான்.இங்கு குறைவே.. இதனோடு வந்த கத்தரி கட்டா செம அல்டிமேட்..நல்ல சுவை..பிரியாணிக்கு ஏற்ற செம காம்பினேசன்..ரொம்பவும் குழைந்து போகாத கத்தரியுடன் சிறிது புளிப்பும், காரமும் நல்ல சுவையை தந்தது. பைனல் டச்சாய் பிரட் அல்வா..இதுவும் நல்ல டேஸ்ட்..நன்றாக இருக்கிறது திகட்டாமல்...


நிறைய மெனுக்கள் இருக்கிறது.நமது ஒரே மோட்டிவ் பாசுமதி பிரியாணிதான்..இதை ருசிக்கதான் ஒவ்வொரு ஹோட்டல்களாக தேடிப் போவது..இந்த எம்பையர் ஹோட்டல் பிரியாணி ஓகே ரகம் தான்..விலை கொஞ்சம் அதிகம் தான் ஆனாலும் ஓகே தான்.

அந்தப்பக்கம் போனீங்கன்னா சாப்பிட்டுப் பாருங்க.

உங்களை ருசிக்க வைக்கும்..

RSPURAM டிவி சாமி ரோடு முடிவில் பால்கம்பெனி ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கிறது.









நேசங்களுடன்

ஜீவானந்தம்.

#EMBIREBIRIYANI #NONVEG #KOVAINERAM #biriyani #biriyanilovers #CHICKENBIRIYANI #NONVEG #prawns #alfaham #lollypop  #foodblogger #foodie #foodlover #food #blogger #bloggerlife #bloggerstyle #KOVAINERAM  #கோவைநேரம்

இன்னும் கொஞ்சம்...

கோவை - வெள்ளியங்கிரி மலை தரிசனம் போவோர் கவனத்திற்கு

கோவை வெள்ளியங்கிரி மலை ஈசனை தரிசிக்க பிப்ரவரி ஒன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டு பக்தர்கள் மலை ஏறிக் கொண்டு இருக்கின்றனர்.இப்பொழுது கூட்டம் குறைவாக இருப்பதால் நிறைவாக தரிசனம் காண முடியும்.மஹா சிவராத்திரி அன்று லட்சோப லட்சம் மக்கள் ஈஷா விற்கு கூடுவார்கள். அன்றிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.


வெள்ளியங்கிரி மலை ஏறுபவர்களுக்கு டிப்ஸ்.


1) மலையில் கடும் குளிர் இருக்கும்.

எனவே கம்பளி, ஜெர்கின், குல்லா, போர்வை தேவை.


2) மலையில் சுனை நீர் உண்டு.

இருந்தாலும் வாட்டர் பாட்டில் கொண்டு செல்வது நல்லது.


3) கடை கண்ணிகள் ஒவ்வொரு மலையிலும்  இருக்கும். தாகம் தணிக்க, டீ , சோடா வாங்க காசு வைத்துக் கொள்ள வேண்டும். 


4) செங்குத்தான மலைப்பாதை என்பதால் அடிவாரத்தில் மூங்கில் தடி வாங்கிக் கொள்ள வேண்டும்


5) தாகம் அடிக்கடி எடுக்கும் என்பதால் ஆரஞ்சு புளிப்பு மிட்டாய் வைத்துக் கொள்ளுங்கள்.


6) பூஜை செய்ய விருப்பப்பட்டால் தேவையான பொருட்களை அடிவாரத்தில் வாங்கிக் கொள்ளவும்.


7) கேமரா அனுமதி இல்லை.மொபைல் எடுத்து செல்லலாம்


8) கஞ்சா, பீடி, மது, மாமிசம், அனுமதி இல்லை


9) மலையேறும் பக்தர்கள் மிகவும் குறைவான எடையுள்ள பொருட்கள், பேக் எடுத்துச் செல்வது நல்லது.


10) டார்ச்லைட், பவர் பேங்க் வைத்துக் கொள்ள வேண்டும்.


11) முடிந்தவரை பாலீதீன் பைகளை தவிர்ப்பது நல்லது. 


12) மெடிக்கல் எமர்ஜென்சிக்காக ஒரு சில மருந்துகளை கைவசம் வைத்திருப்பது நல்லது.


13) செருப்பு அணியாமல் மலை ஏற வேண்டும் என்பதால் அடிவாரத்தில் விட்டுச் செல்வது / தவிர்ப்பது நல்லது.


14) மலைகளில் குப்பை போடாமல் இருப்பது நல்லது.

பழைய துணிகள், பாட்டில்கள், பாலீதீன் பைகளை மலைகளில் விட்டுச் செல்வது தவிர்க்க வேண்டும்.


15) அடிவாரத்தில் லாக்கர் வசதி உள்ளது.விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.


16) வயதானவர்கள், குழந்தைகள், இதய நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.


17) மொபைல் நெட்வொர்க் வேலை செய்யாது.


18) அட்டைப்பூச்சிகள் இருக்கும்.பாதுகாப்பாய் சுனை நீர்களில் குளிப்பது நல்லது.


எல்லாம் வல்ல வெள்ளியங்கிரி ஈசனை தரிசித்து அருள் பெற வாழ்த்துகிறேன்.

ஓம் நமசிவாய


மலை அடிவாரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுக் கொண்டு வருகிறது.

கோவிலுக்குச் செல்பவர்கள் வெள்ளியங்கிரி அடிவாரத்தில் சிவனை தரிசனம் செய்து விட்டு அன்னதானம் உண்டு விட்டு வாருங்கள்.

ஓம் நமசிவாய..


நேசங்களுடன்

ஜீவானந்தம்


#பூண்டிதேசம்

#வெள்ளியங்கிரி 

#சிவனேபோற்றி

#கோவை #ஈஷா #ishayoga #velliyangirihills #trekking #devotional

இன்னும் கொஞ்சம்...