Showing posts with label கொச்சின். Show all posts
Showing posts with label கொச்சின். Show all posts

Monday, December 21, 2020

பயணம் - கொச்சின், கேரளா TRAVEL - COCHIN, KERALA

கொச்சின் – பயணம்

              கொரோனோ என்கிற நோய் உலக மக்களை எல்லாம் வாட்டி வதைத்து பின் இந்தியாவிற்குள் நுழைந்தபோது அதை முதன்முதலில் வரவேற்றது கேரளம் தான்.நோய்த் தொற்றினை தடுக்க மிகுந்த கட்டுபாடுகளை விதித்து கேரள மாநிலம் முன்மாதிரி மாநிலமாக இருந்தது.ஆனால் போக போக கேரளாவிலும் நோய் பீடித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி போனது.அதனால் மாநிலம் முழுக்க பலத்த கட்டுப்பாடுகள்.கேரளா எப்பவும் சுற்றுலாவை நம்பியே இருக்கிறது.இந்த கொரோனோவினால் சுற்றுலாத்துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகி விட்டிருக்கிறது.

            சுற்றுலாவினை நம்பி இருந்த அத்தனை தொழில்களும் முடங்கி விட்டன.இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாய் தளர்வுகள் விடப்படுகின்றன.இருந்தாலும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றது கேரள கடற்கரையோர தங்குமிடங்கள், ஹோட்டல்கள் அனைத்தும்.

            ஒரு வேலை விசயமாக கொச்சின் வரை சென்றிருந்தேன்.ரயில் பயணம் தான்.(கொரோனோவினால் நாமளும் தான் பாதிக்கப்பட்டு இருக்கோம்.கார்ல போனா பர்ஸ் பழுத்திரும்.அதனால் ரயில் பயணம்.) எப்பவும் ரயில் நிலையங்களில் கூட்டம் அள்ளும்.ஆனால் எர்ணாகுளம் ஸ்டேசன் மிகுந்த பாதுகாப்புடன் ஆள் அரவமின்றி வெறிச்சோடி இருக்கிறது.காவல்துறையும் ரயில்வே துறையும் பலத்த பாதுகாப்பில் பயணிகளை வரவேற்கின்றனர்.


            ரயிலில் பயணித்து வருபவர்களில் உள் மாநில மக்கள் என்றால் விட்டு விடுகிறார்கள்.வெளிமாநிலம் என்றால் ஏதாவது ஐடி காண்பித்து, மொபைல் எண் கேட்டு, எங்கு செல்கிறீர்கள் என்கிற விவரம் வரை வாங்கி கொண்டுதான் ஸ்டேசனை விட்டு அனுப்புகிறார்கள்.கட்டாயம் மாஸ்க் அணிந்து இருக்கவேண்டும்.கேரளாவில் எங்கு சென்றாலும் மாஸ்க்கோடு தான் திரியவேண்டும்.

           ஸ்டேசனை விட்டு வெளியே வந்தால் ரோடும் வெறிச்சோடியே இருக்கிறது.ஆட்டோக்கள் குறைந்தளவே இருக்கிறது.முன்பெல்லாம் ஆட்டோவில் ஏறினாலே மீட்டர் போட்டு மீட்டருக்கு உண்டான காசை வாங்குவார்கள்.இப்பொழுது அவர்கள் இஷ்டத்திற்கு ரேட் வாங்குகிறார்கள்.எல்லாம் ரவுண்ட் ஃபிகர் தொகைதான்.சில்லறை என்பதே இல்லை.ஆட்டோ மற்றும் கார்களில் டிரைவர் சீட் பின்னாடி பாலீதீன் கவர்களால் பார்ட்டிசன் பண்ணி வைத்திருக்கிறார்கள்.காரில் ஏசி போடும் போது பின்னாடி இருப்பவர்களுக்கு ஏசி காற்றே வருவதில்லை.கொச்சின் வேறு கடும் வெயிலில் சிக்கித் தவிக்கிறது,கொச்சின் முழுக்க கான்கீரிட் காடுகளாக ஆகிவிட்டதால் வெய்யில் சற்றே தூக்கலாகவே இருக்கிறது.

            கொச்சினில் இருந்து ஃபோர்ட் கொச்சின் சென்று மாலை நேர சூரியன் மறையும் அஸ்தமன காட்சியை காணலாம் என்று அங்கு போனால் ஆட்கள் ஆரவாரமின்றி இருக்கிறது.கண்குளிர சூரிய அஸ்தமனத்தை மட்டும் கண்டேன்.அந்த பகுதி எப்பவும் மக்கள் நெருக்கமாக இருக்கும்.கடை கண்ணிகள் நிறைய இருக்கும்.இப்பொழுது மருந்துக்கு கூட கடை இல்லை.நிறைய பிளாட்பார கடைகள் இருக்கும்.அவை அனைத்தும் காணாமல் இருக்கின்றன.


            கடற்கரையை ஒட்டி மீன்கடைகளும் நிறைய இருக்கும்.உயிரோடு மீன்களை பிடித்து வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.அதன் அருகிலேயே மீன் சமைத்து தரும் இடங்களும் நிறைய இருக்கும்.இப்போது அவைகளும் இல்லை.

        ஒன்றிரண்டு உப்பு மாங்காய் கடைகள், பட்டம் விற்பனையாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.கூட்டம் மிகக்குறைவாகவே இருக்கிறது.அந்த மாலை வேளையில் சூரியன் எப்படி தனித்து இருக்கிறதோ அதேபோல் மக்கள் கூட்டமும் இருக்கிறது. எப்பவும் வழி நெடுக நிறைய பிளாட்பார கடைகள் இருந்த சுவட்டையே காணவில்லை.

            களையிழந்து பொலிவிழந்து காணப்படுகிறது கடற்கரை பீச்.தாராள மனம் கொண்ட கேரள அம்மணிகளும் அதிகம் காணமுடிவதில்லை.முன்பெல்லாம் சென்றால் திரும்ப மனமின்றி வருவோம்.இப்பொழுதோ ஏன் தான் இங்கே வந்தோம் என்றிருக்கிறது.

        கொச்சினில் புதிதாய் ஓட ஆரம்பித்து இருக்கும் மெட்ரோ ட்ரெயினிலும் ஏக கட்டுப்பாடுகள்.அங்கும் கூட்டம் குறைவாகவே இருக்கிறது.மெட்ரோ ட்ரெயினில் பயணிக்கையிலும் உள்ளே ஒரு செக்யூரிட்டி அனைவரையும் கண்காணித்து கொண்டே வருவதும் போவதுமாக இருக்கிறார்.முக்கியமாக மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்துகிறார்கள்.



            மாஸ்க் அணிவது பிரச்சினை இல்லை.ஆனால் காதுகளில் மாட்டி மாட்டி காது வலி தாங்க முடிவதில்லை. அவதார் படத்தில் வரும் உயிரனங்களின் காது போல் ஆகிவிடும் போல மாஸ்க் அணிந்து அணிந்து.அதே போல் மூக்கும் சைனாக்காரன் மூக்கை போல சப்பை ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.

            கொச்சினின் பிரபலமான லுலு மால் சென்றால் அங்கும் இதே நிலைமைதான்.பரந்து விரிந்த மாலில் கூட்டம் மிக மிக சொற்பமே.லுலு மால் மிக பிரம்மாண்டமாய் ஜொலிஜொலிக்கிறது.இண்டீரியரில் அசத்தி இருக்கிறார்கள்.வெளிநாட்டில் உள்ள மால்களை போன்ற கட்டமைப்பு.மிக நன்றாக இருக்கிறது.என்ன….மக்கள் கூட்டம் மட்டும் இல்லை.மால்களில் அம்மணிகள் அதிகமாக இருப்பார்கள்.பொழுதும் போகும்.ஆனால் இங்கோ தலைகீழ்….




            நல்ல நான்வெஜ் சாப்பிடுவதற்கு ஏற்ற இடம் கேரளா தான்.கடல் உணவுகள் தாராளமாக கிடைக்கும்.அதே போல் கேரளாவின் பாரம்பரிய உணவுகளும் நிறைய கிடைக்கும்,ஆனால் இந்த முறை ஒவ்வொன்றையும் ருசித்துப்பார்க்க பகீரத முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கிறது.நிறைய கடைகள் கொரோனோவினால் பூட்டியே கிடக்கின்றன.மேலும் நான் சென்ற தினமன்று உள்ளூர் பஞ்சாயத்து தேர்தல் நடப்பதால் அன்றும் நிறைய கடைகள் மூடப்பட்டு இருந்தன.

            முக்கியமாய் நம்ம கள்ளுகடை ஷாப்பும், பெவரேஜ் கடைகளும் நான்கு நாளைக்கு மூடப்பட்டிருக்கிறதாம்.அதிசயமாய் திறந்து வைத்திருந்த ஹோட்டல்களில் கிடைத்த உணவினை சாப்பிட்டுவிட்டு வந்தேன்.பீஃப் கறியும் புரோட்டாவும் சிக்கவில்லை கண்ணுக்கு.ஒரு கடையில் மலபார் பிரியாணி கிடைத்தது.ஆனால் அதிக சுவையில்லை.அப்பம் செம்மீன் கறி ஒரு கடையில் கிடைத்தது.இப்படி தேடி தேடி சாப்பிட வேண்டியதாகி இருந்தது.சோடா, கொளுக்கட்டை உருண்டை இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடமாக தேட வேண்டியதாகிப்போனது.




            இந்த கொரோனாவினால் நிறைய பேர் வேலைகளை இழந்து இருக்கின்றனர் என்பது கண்கூடாக தெரிகிறது.லாட்டரி சீட்டு விற்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக ஆகி இருக்கிறது.எங்கு பார்த்தாலும் அவர்கள் தான்.கொரொனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசாங்கம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கிறது.தமிழகத்தினை போல் தட்டி அடித்து வீட்டை தனிமை படுத்துவதில்லை.நோயாளிகள் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதில்லை.கொரோனோவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ரேசன் பொருட்களை தந்துவருகிறது.தனியார் மருத்துவமனைக்கு யாரும் செல்வதில்லை.முழுக்க முழுக்க அரசாங்கமே நல்ல மருத்துவ சிகிச்சையை அளிக்கிறது.

            தமிழக பாலங்களைப் போலவே கேரளாவிலும் பாலங்கள் கட்டுமானப்பணி நடக்கிறது.இங்கு அம்மா ஆட்சி என்பதால் பச்சை கலர் தான் பாலங்கள் முழுக்க.அதே போல் அங்கே சிவப்பு வர்ணங்களை நீல கலரோடு சேர்த்து கம்யூனிஸ்ட் கலர் என்பது தெரியாத அளவுக்கு வர்ணம் பூசி இருக்கின்றனர்.

            இந்த பயணத்தினை பொறுத்தவரை முழுமையான திருப்தி இப்பொழுது கிடைக்கவே இல்லை.100 சதவீதம் கடைகளும், மக்களும் எப்பொழுது இயல்புநிலைக்கு திரும்புகிறார்களோ அப்பொழுது தான் கேரளா பழைய நிலைமைக்கு மாறும்.

இயல்பு நிலை அடைந்தவுடன் மீண்டும் கேரளா பயணப்படவேண்டும்.கேரள உணவுவகைகளை ஒரு பிடி பிடிக்க வேண்டும்.

எண்டே கேரளா....இப்போல் நன்னாயிட்டு இல்லா...

நேசங்களுடன்

ஜீவானந்தம்


 

 

 

 

இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 8, 2020

பயணம் - கோவை - கடற்கரை -கேரளா - சுற்றுலா

              கோவை நகரம் மலைகள் நிறைந்த ஒரு மாநகரம்.கடலும் கடற்கரையும் தவிர மற்ற நீர் நிலைகளான வாய்க்கால், குளம், ஆறு, அருவி என அனைத்தும் இருக்கிற ஊரும் கூட.கோவையில் இருந்து தமிழகத்தில் உள்ள கடல், கடற்கரைக்கு செல்வது என்பது வெகு தொலைவில் இருக்கும் உலகின் நீளமான இரண்டாம் கடற்கரையான மெரினா பீச் இருக்கும் சென்னை, கடைக்கோடியின்  கன்னியாகுமரி மற்றும் வேளாங்கன்னி இப்படி தூரம் உள்ள இடங்களுக்கு தான் செல்ல வேண்டும்.ஆனால் மிக அருகில் உள்ள கடற்பகுதி எதுவென்றால் கேரளாவின் அரபிக்கடல் தான்.



           திருச்சூரில் இருந்து ஆரம்பிக்கிறது கேரளாவின் அரபிக் கடற்கரையோரம்.திருச்சூரில் இருந்து 20 கிமீ தொலைவில் வாடனாபள்ளி பீச் இருக்கிறது.மிக அமைதியான எந்த ஒரு வணிக விளையாட்டுகளும், ஹோட்டல்களும் இல்லாத ஒரு கடற்கரை கிராமம்.தென்னைகள் நிறைந்த இந்த கிராமத்தில் ரோட்டை ஒட்டியே இந்த பீச் இருக்கிறது.மிகவும் சுத்தமாக இருக்கிறது.ஆட்கள் நடமாட்டம் அதிகமின்றி இருக்கிறது.ஆர்ப்பரிக்கும் அலைகளை கண்டவுடன் மனம் குதூகலமாகிறது.கடல் குளிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.ஆனால் குளித்து முடித்தவுடன் நல்ல தண்ணீரில் குளிக்கவும், உடைகளை மாற்றவும் வசதிகள் இல்லை.திருச்சூரில் அறை எடுத்து தங்கி இருந்தால் அங்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.இன்னும் வணிக மயம் ஆகாமல் இருப்பதால் மிகவும் சுத்தமாக இருக்கிறது.உள்ளூர் மக்களுக்கு ஒரு பொழுது போக்கு இடமாக இருக்கிறது.

               திருச்சூரை அடுத்து உள்ள குருவாயூரில் சாவக்காடு பீச் இருக்கிறது.இங்கே மீன் பிடித்தல் அதிகம் நடைபெறும் இடமாகும்,கடற்கரை ஓரங்களில் எப்பவும் பெரிய பெரிய மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும்.சுற்றுலாவாசிகளும் அதிகம் குவிந்து இருப்பர். குருவாயூர் கோவிலுக்கு வந்தவர்கள் ஒரு எட்டு இந்த பீச்சிற்கும் போய்ட்டு வருவர்.இந்த இரண்டு கடற்கரைக்கும் கோவையில் இருந்து செல்ல அதிகபட்சம் நான்கு மணி நேரம் மட்டுமே பிடிக்கும்.அதுவும் வாடனாபள்ளி பீச் மிகவும் அருகில் இருப்பதால் மூன்று மணி நேரத்திற்குள் சென்று விடலாம்.இங்கிருந்து கேரள வரைபடத்தின் மேலும் கீழுமாய் பரந்து விரிந்த அரபிக்கடலின் கடற்கரை ஓரங்கள் இருக்கிறது.
                   இதை அடுத்து எர்ணாகுளத்தில் உள்ள செராய் பீச் தான்.இது மிகவும் வணிக மயமாக்கப்பட்ட ஒரு சுற்றுலாத்தலம்.முழுக்க முழுக்க சுற்றுலாப்பயணிகளை கொண்டே இயங்குகிறது.தங்குவதற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் இங்கே இருக்கின்றன. கோவையில் இருந்து ஐந்து மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.இங்கிருந்தும் கூட கொச்சின் நகரத்திற்கு சென்று விடலாம்.கொச்சினில் இருந்து ஃபோர்ட் கொச்சின் செல்லலாம்.இது முழுக்க முழுக்க ஒரு தீவு என சொல்லலாம்.கடலால் சூழ்ப்பட்ட ஒரு நகரமாய் இந்த ஃபோர்ட் கொச்சின் இருக்கிறது.
                      கோவையில் இருந்து ஒரு நாள் சுற்றுலாவாக கேரளாவின் கடற்கரை பகுதிகளுக்கு செல்லலாம்.நல்ல மீன் உணவுகளை உண்டு விட்டும் வரலாம்.கேரளாவில் தங்கி இன்னும் பல இடங்களை பார்க்க முடியுமென்றால் தாராளமாக முடியும்.கொச்சின் மட்டும் எனில் சாலக்குடியில் உள்ள அதிரப்பள்ளி அருவி, கோவில்கள், படகு பயணம் என அனைத்தையும் அனுபவித்து வரலாம்.கேரளாவின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு சிறப்புகளை கொண்டிருக்கிறது,ஒட்டு மொத்தமாய் நல்ல உணவு, பயணம் மேற்கொள்ள கேரளா எப்பவும் சிறப்பு.




கேரளாவின் பிரசித்தி பரோட்டாவும் பீஃப்கறியும் தான்.சுவைக்க சுவைக்க நாவூறும்..

நேசங்களுடன் 
ஜீவானந்தம்          


இன்னும் கொஞ்சம்...

Friday, September 1, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் சிந்தூரம், செராய் பீச் ஜங்சன் , கொச்சின், CHERAI BEACH, KOCHI

                  கேரளாவிற்கு எப்பொழுது சென்றாலும் கேரளாவின் பழமை மாறாத ஹோட்டல்களில்  சாப்பிடுவதுதான் பிடிக்கும்.ஆதிகாலத்து கண்ணாடி பொருத்தப்பட்ட மர ஷோகேஸில் வைக்கப்பட்டிருக்கும், புட்டு, இடியாப்பம், ஆப்பம், புரோட்டா, வடை வகைகள் போன்றவை நம்மை ஈர்க்கும்.காலையில் புட்டுக்கு காம்பினேசனாக கடலைக்கறியோ அல்லது நேந்திரன் பழமோ சேர்த்து சாப்பிடுவது கொஞ்சம் பிடிக்கும்.அதைவிட மிகவும் பிடித்தது புரோட்டாவும் பீஃப் கறியும் தான். காலையிலேயே இரண்டும் ரெடியாக இருக்கும்.சுட சுடச் சாப்பிடுவதில் அப்படி ஒரு அலாதியான இன்பம் இருக்கிறது.அதே போல் ஆப்பத்திற்கு அசைவம் என்றால் முட்டைக்கறியோ, பீஃப் கறியோ தான். அப்படித்தான் செராய் பீச்சிலேயும் ஒரு கடையை கண்டுபிடித்தோம்.செராய் பீச் ஒட்டி பல மாடர்ன் ஹோட்டல்கள் இருக்கின்றன.நம்மூர் உணவுகள் இட்லி, தோசை, பிரியாணி, சிக்கன் தந்தூரி, சிக்கன் ஷ்வர்மா போன்ற உணவு வகைகளை சாப்பிட சுத்தமாய் பிடிக்கவில்லை.எந்த ஊருக்கு போனாலும் அங்கு உள்ள மண் மணத்தோடு இருக்கும் உணவுகளை ஒரு கை பிடிப்பது தான் வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.அப்படித்தான் இந்த கேரளா பயணத்தின் போது சாப்பிட்ட உணவும்.


மதியம் என்றால் மட்டை அரிசியுடன் மீன் கறி, பொரிச்ச மீன், புளிசெரி, சம்மங்கி துவையல், ஒரு பொரியல், கூட்டு, அப்பளம் என இப்படித்தான் போகும்.இல்லை எனில் கேரளத்து பிரியாணி.சிக்கன், பீஃப், என விரும்பி சாப்பிட பிடிக்கும்.கப்பா எனப்படும் மரவள்ளி கிழங்கு மசியலுடன் பீஃப் கறி சேர்த்து சாப்பிட பிடிக்கும்.இல்லையேல் கப்பாவுடன் டபுள் ஆம்லேட் சேர்த்து சாப்பிட பிடிக்கும்.சரி..விஷயத்திற்கு வருவோம்.செராய் பீச் ஜங்க்சனில் அமைந்துள்ள ஒரு டிரெடிசனல் ஹோட்டலுக்குள் நுழைந்தோம்.அதே மர ஷோகேஸ்.வரிசையாய் வைக்கப்பட்டிருக்கும் புட்டு, ஆப்பம், புரோட்டா என உணவு வகைகள். காலை மதியம் இரவு என எல்லா வேளைகளிலும் அந்த ஹோட்டலிலேயே முடிந்தது.சுடச்சுட புரோட்டா, பீஃப் கறி, முட்டைகறி, கடலைக்கறி, கப்பா, மீன்கறி, மாந்தல், பொரிச்ச மத்தி, அயிலை என விரும்பிய நேரத்தில் எல்லாம் சாப்பிட்டோம்.போட்டி எனப்படும் குடல் கறி செம டேஸ்ட்.








கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கடலில் குளிப்பது, குடிப்பது, சாப்பிடுவது என இளைப்பாறிக் கொண்டிருந்தோம்.பீச் சென்றால் அங்கு அம்மணிகளை ரசிப்பது, இங்கே ஹோட்டல் என்றால் உணவுகளை ருசிப்பது என விரும்பியதை செய்து கொண்டிருந்தோம். கேரள உணவும் சரி, மதுவும் சரி எப்பவும் ஏமாற்றியதில்லை அந்தளவுக்கு ஒரிஜினல். கடவுளின் தேசம் சென்று வந்தாலே போதும் மனம் லேசானதாகி விடுகிறது.மனதும் உடலும் இளமையாய் இருக்க இந்த மாதிரி பயணங்கள் எப்பவும் நமக்கு தேவைப்படுகிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, July 22, 2011

கொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 3

கொச்சின் சாலையில் அங்கமாலி என்ற இடத்தில தங்கினோம்.நான் தங்கின ஹோட்டல் இதுதான்.


அப்புறம் நல்ல கிளைமேட் இருந்ததால் பாருக்கு சென்றோம்.எப்பவும் எனக்கு பிடித்த ரம் ஆர்டர் பண்ணி அதுக்கு மேட்சிங்கா ஸ்ப்ரைட் வாங்கி தாகத்த தீர்த்துகிட்டேன்.வெளியே நல்ல மழை..ஒரு 5 ரவுண்டு வரைக்கும் போச்சு..அப்புறம் நாம ஏன் கேரளா டாஸ்மாக் போக கூடாது அப்படின்னு நினைச்சு அங்க போனோம்.




அங்க ஒரே க்யூ..அங்கயும் கூட்டம்தான்.என்ன நம்மாளுங்க கும்பலா குவிவாங்க.ஆனா இங்க க்யூ ல நிக்கிறாங்க.என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்...அப்புறம் நாமும் நின்று பில் போட்டு (மக்களே கவனிக்கவும் பில் போட்டு ...) ரம் 2 லிட்டர் ( 1 லிட்டர் பாட்டில் இரண்டு ) வாங்கினோம். பின்னர் அதுல ஒன்ன காலி பண்ணினது தனிக்கதை.அப்புறம் அங்க இருந்து தான் கொச்சின் போனோம்..கொச்சின் போனதா முன்பே சொல்லிட்டேன் ரெண்டு பதிவா...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

கொச்சின் என்கிற எர்ணாகுளம் பகுதி 2

எர்ணாகுளம் படகு துறையில் இருந்து அக்கரைக்கு செல்ல (அதான் போர்ட் கொச்சின் ) டிக்கெட் வாங்கி கொண்டு படகு பேருந்தில் ஏறினோம்.இந்த படகு நல்ல உட்புற அழகுடன் இருக்கிறது.





டிரைவர் வந்தார், வண்டியை கிளப்பினார்.அப்புறம் என்ன ....கடலில் போய் கொண்டு இருக்கின்றோம்....இரு பக்கமும் பெரிய கட்டிடங்கள், கப்பல்கள்..நல்ல அனுபவம்...அப்புறம் நம்மளை கொண்டு போற மாதிரியே பஸ், வேன், ஸ்கூட்டர், லாரி அனைத்தையும் ஏற்றிக்கொண்டு இன்னொரு வகையான படகு வருகிறது.அதுவும் ரொம்ப த்ரில்லிங் ஆக இருக்கும் என நினைக்கிறேன்.


அங்கு இறங்கினவுடன் ஆட்டோ பிடித்து போர்ட் கொச்சின் சென்றோம்.
அங்கு சுற்றுலா மற்றும் வெளி நாட்டினரை கவர நிறைய கடைகள் இருக்கின்றன.


நல்ல ஒரு சுற்றுலா தலம்.கடலில் சென்று வர தனியார் படகுகள் வாடகைக்கு கிடைக்கின்றன.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, July 21, 2011

கொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 1

எனக்கு ரொம்ப பிடிச்ச ஊரு இது.ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் நிறைய இருக்கின்றன.பயங்கரமான வளர்ச்சி.கேரளா விற்கே உரித்தான பசுமை , மழை சாரல்,சுத்தமான காற்று..அப்புறம் மலையாள பெண்கள் ..ஆகா ..அற்புதம் ....அப்புறம்


கொச்சின் அருகே போர்ட் கொச்சின் என்கிற ஊர் இருக்கிறது.இங்கே செல்ல இரண்டு வழிகள் உள்ளன.ஒன்று கடல் வழி..மற்றது தரை வழி.கடல் வழி செல்ல படகு போக்குவரத்து உள்ளது.கடலில் செல்லும் போது அங்கே நிற்கின்ற கப்பல்கள் பார்க்கலாம்.அதுவும் இல்லாமல் தண்ணியில் சென்றால் ( போடுகிற தண்ணி இல்ல ) மிகவும் மகிழ்ச்சி கரமாக இருக்கும்.விலையும் குறைவு.வெறும் 2 .50 ரூபாய்தான்.அந்த துறையினை போட் ஜெட்டி என்று அழைக்கிறார்கள்.


அப்புறம் அங்க போய்ட்டு கேரளாவின் பாரம்பரியமான மீன் பிடி தொழிலை பார்க்கலாம்.டச்சு காரர்கள் வந்து இறங்கிய இடம் இதுதான்.இங்கு அவர்களின் அரண்மனை உள்ளது.அப்புறம் அதிகமான வெளிநாட்டு பயணிகள் குவிகின்றனர்.அங்கு பிடிக்கப்படும் மீன்கள் அங்கேயே விற்பனை செய்யபடுகின்றன.விரும்பினால் சமைத்தும் தருவார்கள்.

கப்பல் கட்டும் தளம் வேறு உள்ளது.ஒவ்வொரு வருடமும் கடற்படை ஆண்டு விழா கொண்டாடுவார்கள் .அன்று மக்களுக்கு கப்பலை சுற்றி பார்க்கஅனுமதி இலவசம்.

இன்னும் இருக்கிறது ..தொடரும் ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, March 9, 2011

நடமாடும் ஹோட்டல் - கொச்சின்

கொச்சின் பக்கம் இருக்கிற ஆலுவா அப்படிங்கிற ஊருக்கு போய் இருந்த போது அங்க ஒரு இடத்துல நின்னுகிட்டு இருந்தேன் .அப்போ ஒரு மஞ்ச நிற வண்டி வந்தது .அதை ரோடு ஓரமா நிறுத்தி ரெண்டு சேட்டன் மாரு இறங்கினாங்க .கொஞ்ச நேரத்துல இருக்கிற எல்லா கதவையும் திறந்து நடமாடும் ஹோட்டல் ஆக்கிட்டாங்க



உள்ளே நூடுல்ஸ், பிரியாணி, பீப் கறி, அப்பம், அப்படின்னு ஏகப்பட்ட வகைகள்.வரும் போதே கொண்டு வந்த எல்லாம் சுட சுட ரெடி பண்றாங்க.வெளியே புட்டு , சாயா (டீ)  ரெடியா இருக்கு.வண்டிக்கு மேல இருந்து டேபிள், சேர், எடுத்து போட்டு ஒரு சாமியானா கட்டி ஹோட்டல் ஆக்கிட்டாங்க.11 மணி வரைக்கும் கடை இருக்குமாம்.4 மணிக்கே வந்து கடையை விரிச்சிடறாங்களாம்.நான் புட்டும் சுண்டலும், கப்பா வும் வாங்கி சாப்பிட்டேன் .மறக்காம நம்ம பேவரிட் புல்ஸ் ஐ வாங்கி சாப்பிட்டேன்.எல்லாம் சுவையோ சுவை ....

புல்ஸ் ஐ அப்படீனா நம்ம ஊரு ஆப்பாயில் ங்க..மாட்டோட கண்ணு மாதிரி இருக்கிறதால் இது புல்ஸ் ஐ..எப்படியெல்லாம் பேரு வைக்கிறாங்க பாருங்க.
ரோட்டோர  கடை என்பதினால் நல்ல கூட்டம் அள்ளுது..

நேசங்களுடன் 
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...