Showing posts with label பீச். Show all posts
Showing posts with label பீச். Show all posts

Monday, December 21, 2020

பயணம் - கொச்சின், கேரளா TRAVEL - COCHIN, KERALA

கொச்சின் – பயணம்

              கொரோனோ என்கிற நோய் உலக மக்களை எல்லாம் வாட்டி வதைத்து பின் இந்தியாவிற்குள் நுழைந்தபோது அதை முதன்முதலில் வரவேற்றது கேரளம் தான்.நோய்த் தொற்றினை தடுக்க மிகுந்த கட்டுபாடுகளை விதித்து கேரள மாநிலம் முன்மாதிரி மாநிலமாக இருந்தது.ஆனால் போக போக கேரளாவிலும் நோய் பீடித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி போனது.அதனால் மாநிலம் முழுக்க பலத்த கட்டுப்பாடுகள்.கேரளா எப்பவும் சுற்றுலாவை நம்பியே இருக்கிறது.இந்த கொரோனோவினால் சுற்றுலாத்துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகி விட்டிருக்கிறது.

            சுற்றுலாவினை நம்பி இருந்த அத்தனை தொழில்களும் முடங்கி விட்டன.இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாய் தளர்வுகள் விடப்படுகின்றன.இருந்தாலும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றது கேரள கடற்கரையோர தங்குமிடங்கள், ஹோட்டல்கள் அனைத்தும்.

            ஒரு வேலை விசயமாக கொச்சின் வரை சென்றிருந்தேன்.ரயில் பயணம் தான்.(கொரோனோவினால் நாமளும் தான் பாதிக்கப்பட்டு இருக்கோம்.கார்ல போனா பர்ஸ் பழுத்திரும்.அதனால் ரயில் பயணம்.) எப்பவும் ரயில் நிலையங்களில் கூட்டம் அள்ளும்.ஆனால் எர்ணாகுளம் ஸ்டேசன் மிகுந்த பாதுகாப்புடன் ஆள் அரவமின்றி வெறிச்சோடி இருக்கிறது.காவல்துறையும் ரயில்வே துறையும் பலத்த பாதுகாப்பில் பயணிகளை வரவேற்கின்றனர்.


            ரயிலில் பயணித்து வருபவர்களில் உள் மாநில மக்கள் என்றால் விட்டு விடுகிறார்கள்.வெளிமாநிலம் என்றால் ஏதாவது ஐடி காண்பித்து, மொபைல் எண் கேட்டு, எங்கு செல்கிறீர்கள் என்கிற விவரம் வரை வாங்கி கொண்டுதான் ஸ்டேசனை விட்டு அனுப்புகிறார்கள்.கட்டாயம் மாஸ்க் அணிந்து இருக்கவேண்டும்.கேரளாவில் எங்கு சென்றாலும் மாஸ்க்கோடு தான் திரியவேண்டும்.

           ஸ்டேசனை விட்டு வெளியே வந்தால் ரோடும் வெறிச்சோடியே இருக்கிறது.ஆட்டோக்கள் குறைந்தளவே இருக்கிறது.முன்பெல்லாம் ஆட்டோவில் ஏறினாலே மீட்டர் போட்டு மீட்டருக்கு உண்டான காசை வாங்குவார்கள்.இப்பொழுது அவர்கள் இஷ்டத்திற்கு ரேட் வாங்குகிறார்கள்.எல்லாம் ரவுண்ட் ஃபிகர் தொகைதான்.சில்லறை என்பதே இல்லை.ஆட்டோ மற்றும் கார்களில் டிரைவர் சீட் பின்னாடி பாலீதீன் கவர்களால் பார்ட்டிசன் பண்ணி வைத்திருக்கிறார்கள்.காரில் ஏசி போடும் போது பின்னாடி இருப்பவர்களுக்கு ஏசி காற்றே வருவதில்லை.கொச்சின் வேறு கடும் வெயிலில் சிக்கித் தவிக்கிறது,கொச்சின் முழுக்க கான்கீரிட் காடுகளாக ஆகிவிட்டதால் வெய்யில் சற்றே தூக்கலாகவே இருக்கிறது.

            கொச்சினில் இருந்து ஃபோர்ட் கொச்சின் சென்று மாலை நேர சூரியன் மறையும் அஸ்தமன காட்சியை காணலாம் என்று அங்கு போனால் ஆட்கள் ஆரவாரமின்றி இருக்கிறது.கண்குளிர சூரிய அஸ்தமனத்தை மட்டும் கண்டேன்.அந்த பகுதி எப்பவும் மக்கள் நெருக்கமாக இருக்கும்.கடை கண்ணிகள் நிறைய இருக்கும்.இப்பொழுது மருந்துக்கு கூட கடை இல்லை.நிறைய பிளாட்பார கடைகள் இருக்கும்.அவை அனைத்தும் காணாமல் இருக்கின்றன.


            கடற்கரையை ஒட்டி மீன்கடைகளும் நிறைய இருக்கும்.உயிரோடு மீன்களை பிடித்து வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.அதன் அருகிலேயே மீன் சமைத்து தரும் இடங்களும் நிறைய இருக்கும்.இப்போது அவைகளும் இல்லை.

        ஒன்றிரண்டு உப்பு மாங்காய் கடைகள், பட்டம் விற்பனையாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.கூட்டம் மிகக்குறைவாகவே இருக்கிறது.அந்த மாலை வேளையில் சூரியன் எப்படி தனித்து இருக்கிறதோ அதேபோல் மக்கள் கூட்டமும் இருக்கிறது. எப்பவும் வழி நெடுக நிறைய பிளாட்பார கடைகள் இருந்த சுவட்டையே காணவில்லை.

            களையிழந்து பொலிவிழந்து காணப்படுகிறது கடற்கரை பீச்.தாராள மனம் கொண்ட கேரள அம்மணிகளும் அதிகம் காணமுடிவதில்லை.முன்பெல்லாம் சென்றால் திரும்ப மனமின்றி வருவோம்.இப்பொழுதோ ஏன் தான் இங்கே வந்தோம் என்றிருக்கிறது.

        கொச்சினில் புதிதாய் ஓட ஆரம்பித்து இருக்கும் மெட்ரோ ட்ரெயினிலும் ஏக கட்டுப்பாடுகள்.அங்கும் கூட்டம் குறைவாகவே இருக்கிறது.மெட்ரோ ட்ரெயினில் பயணிக்கையிலும் உள்ளே ஒரு செக்யூரிட்டி அனைவரையும் கண்காணித்து கொண்டே வருவதும் போவதுமாக இருக்கிறார்.முக்கியமாக மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்துகிறார்கள்.



            மாஸ்க் அணிவது பிரச்சினை இல்லை.ஆனால் காதுகளில் மாட்டி மாட்டி காது வலி தாங்க முடிவதில்லை. அவதார் படத்தில் வரும் உயிரனங்களின் காது போல் ஆகிவிடும் போல மாஸ்க் அணிந்து அணிந்து.அதே போல் மூக்கும் சைனாக்காரன் மூக்கை போல சப்பை ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.

            கொச்சினின் பிரபலமான லுலு மால் சென்றால் அங்கும் இதே நிலைமைதான்.பரந்து விரிந்த மாலில் கூட்டம் மிக மிக சொற்பமே.லுலு மால் மிக பிரம்மாண்டமாய் ஜொலிஜொலிக்கிறது.இண்டீரியரில் அசத்தி இருக்கிறார்கள்.வெளிநாட்டில் உள்ள மால்களை போன்ற கட்டமைப்பு.மிக நன்றாக இருக்கிறது.என்ன….மக்கள் கூட்டம் மட்டும் இல்லை.மால்களில் அம்மணிகள் அதிகமாக இருப்பார்கள்.பொழுதும் போகும்.ஆனால் இங்கோ தலைகீழ்….




            நல்ல நான்வெஜ் சாப்பிடுவதற்கு ஏற்ற இடம் கேரளா தான்.கடல் உணவுகள் தாராளமாக கிடைக்கும்.அதே போல் கேரளாவின் பாரம்பரிய உணவுகளும் நிறைய கிடைக்கும்,ஆனால் இந்த முறை ஒவ்வொன்றையும் ருசித்துப்பார்க்க பகீரத முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கிறது.நிறைய கடைகள் கொரோனோவினால் பூட்டியே கிடக்கின்றன.மேலும் நான் சென்ற தினமன்று உள்ளூர் பஞ்சாயத்து தேர்தல் நடப்பதால் அன்றும் நிறைய கடைகள் மூடப்பட்டு இருந்தன.

            முக்கியமாய் நம்ம கள்ளுகடை ஷாப்பும், பெவரேஜ் கடைகளும் நான்கு நாளைக்கு மூடப்பட்டிருக்கிறதாம்.அதிசயமாய் திறந்து வைத்திருந்த ஹோட்டல்களில் கிடைத்த உணவினை சாப்பிட்டுவிட்டு வந்தேன்.பீஃப் கறியும் புரோட்டாவும் சிக்கவில்லை கண்ணுக்கு.ஒரு கடையில் மலபார் பிரியாணி கிடைத்தது.ஆனால் அதிக சுவையில்லை.அப்பம் செம்மீன் கறி ஒரு கடையில் கிடைத்தது.இப்படி தேடி தேடி சாப்பிட வேண்டியதாகி இருந்தது.சோடா, கொளுக்கட்டை உருண்டை இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடமாக தேட வேண்டியதாகிப்போனது.




            இந்த கொரோனாவினால் நிறைய பேர் வேலைகளை இழந்து இருக்கின்றனர் என்பது கண்கூடாக தெரிகிறது.லாட்டரி சீட்டு விற்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக ஆகி இருக்கிறது.எங்கு பார்த்தாலும் அவர்கள் தான்.கொரொனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசாங்கம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கிறது.தமிழகத்தினை போல் தட்டி அடித்து வீட்டை தனிமை படுத்துவதில்லை.நோயாளிகள் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதில்லை.கொரோனோவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ரேசன் பொருட்களை தந்துவருகிறது.தனியார் மருத்துவமனைக்கு யாரும் செல்வதில்லை.முழுக்க முழுக்க அரசாங்கமே நல்ல மருத்துவ சிகிச்சையை அளிக்கிறது.

            தமிழக பாலங்களைப் போலவே கேரளாவிலும் பாலங்கள் கட்டுமானப்பணி நடக்கிறது.இங்கு அம்மா ஆட்சி என்பதால் பச்சை கலர் தான் பாலங்கள் முழுக்க.அதே போல் அங்கே சிவப்பு வர்ணங்களை நீல கலரோடு சேர்த்து கம்யூனிஸ்ட் கலர் என்பது தெரியாத அளவுக்கு வர்ணம் பூசி இருக்கின்றனர்.

            இந்த பயணத்தினை பொறுத்தவரை முழுமையான திருப்தி இப்பொழுது கிடைக்கவே இல்லை.100 சதவீதம் கடைகளும், மக்களும் எப்பொழுது இயல்புநிலைக்கு திரும்புகிறார்களோ அப்பொழுது தான் கேரளா பழைய நிலைமைக்கு மாறும்.

இயல்பு நிலை அடைந்தவுடன் மீண்டும் கேரளா பயணப்படவேண்டும்.கேரள உணவுவகைகளை ஒரு பிடி பிடிக்க வேண்டும்.

எண்டே கேரளா....இப்போல் நன்னாயிட்டு இல்லா...

நேசங்களுடன்

ஜீவானந்தம்


 

 

 

 

இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 8, 2020

பயணம் - கோவை - கடற்கரை -கேரளா - சுற்றுலா

              கோவை நகரம் மலைகள் நிறைந்த ஒரு மாநகரம்.கடலும் கடற்கரையும் தவிர மற்ற நீர் நிலைகளான வாய்க்கால், குளம், ஆறு, அருவி என அனைத்தும் இருக்கிற ஊரும் கூட.கோவையில் இருந்து தமிழகத்தில் உள்ள கடல், கடற்கரைக்கு செல்வது என்பது வெகு தொலைவில் இருக்கும் உலகின் நீளமான இரண்டாம் கடற்கரையான மெரினா பீச் இருக்கும் சென்னை, கடைக்கோடியின்  கன்னியாகுமரி மற்றும் வேளாங்கன்னி இப்படி தூரம் உள்ள இடங்களுக்கு தான் செல்ல வேண்டும்.ஆனால் மிக அருகில் உள்ள கடற்பகுதி எதுவென்றால் கேரளாவின் அரபிக்கடல் தான்.



           திருச்சூரில் இருந்து ஆரம்பிக்கிறது கேரளாவின் அரபிக் கடற்கரையோரம்.திருச்சூரில் இருந்து 20 கிமீ தொலைவில் வாடனாபள்ளி பீச் இருக்கிறது.மிக அமைதியான எந்த ஒரு வணிக விளையாட்டுகளும், ஹோட்டல்களும் இல்லாத ஒரு கடற்கரை கிராமம்.தென்னைகள் நிறைந்த இந்த கிராமத்தில் ரோட்டை ஒட்டியே இந்த பீச் இருக்கிறது.மிகவும் சுத்தமாக இருக்கிறது.ஆட்கள் நடமாட்டம் அதிகமின்றி இருக்கிறது.ஆர்ப்பரிக்கும் அலைகளை கண்டவுடன் மனம் குதூகலமாகிறது.கடல் குளிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.ஆனால் குளித்து முடித்தவுடன் நல்ல தண்ணீரில் குளிக்கவும், உடைகளை மாற்றவும் வசதிகள் இல்லை.திருச்சூரில் அறை எடுத்து தங்கி இருந்தால் அங்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.இன்னும் வணிக மயம் ஆகாமல் இருப்பதால் மிகவும் சுத்தமாக இருக்கிறது.உள்ளூர் மக்களுக்கு ஒரு பொழுது போக்கு இடமாக இருக்கிறது.

               திருச்சூரை அடுத்து உள்ள குருவாயூரில் சாவக்காடு பீச் இருக்கிறது.இங்கே மீன் பிடித்தல் அதிகம் நடைபெறும் இடமாகும்,கடற்கரை ஓரங்களில் எப்பவும் பெரிய பெரிய மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும்.சுற்றுலாவாசிகளும் அதிகம் குவிந்து இருப்பர். குருவாயூர் கோவிலுக்கு வந்தவர்கள் ஒரு எட்டு இந்த பீச்சிற்கும் போய்ட்டு வருவர்.இந்த இரண்டு கடற்கரைக்கும் கோவையில் இருந்து செல்ல அதிகபட்சம் நான்கு மணி நேரம் மட்டுமே பிடிக்கும்.அதுவும் வாடனாபள்ளி பீச் மிகவும் அருகில் இருப்பதால் மூன்று மணி நேரத்திற்குள் சென்று விடலாம்.இங்கிருந்து கேரள வரைபடத்தின் மேலும் கீழுமாய் பரந்து விரிந்த அரபிக்கடலின் கடற்கரை ஓரங்கள் இருக்கிறது.
                   இதை அடுத்து எர்ணாகுளத்தில் உள்ள செராய் பீச் தான்.இது மிகவும் வணிக மயமாக்கப்பட்ட ஒரு சுற்றுலாத்தலம்.முழுக்க முழுக்க சுற்றுலாப்பயணிகளை கொண்டே இயங்குகிறது.தங்குவதற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் இங்கே இருக்கின்றன. கோவையில் இருந்து ஐந்து மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.இங்கிருந்தும் கூட கொச்சின் நகரத்திற்கு சென்று விடலாம்.கொச்சினில் இருந்து ஃபோர்ட் கொச்சின் செல்லலாம்.இது முழுக்க முழுக்க ஒரு தீவு என சொல்லலாம்.கடலால் சூழ்ப்பட்ட ஒரு நகரமாய் இந்த ஃபோர்ட் கொச்சின் இருக்கிறது.
                      கோவையில் இருந்து ஒரு நாள் சுற்றுலாவாக கேரளாவின் கடற்கரை பகுதிகளுக்கு செல்லலாம்.நல்ல மீன் உணவுகளை உண்டு விட்டும் வரலாம்.கேரளாவில் தங்கி இன்னும் பல இடங்களை பார்க்க முடியுமென்றால் தாராளமாக முடியும்.கொச்சின் மட்டும் எனில் சாலக்குடியில் உள்ள அதிரப்பள்ளி அருவி, கோவில்கள், படகு பயணம் என அனைத்தையும் அனுபவித்து வரலாம்.கேரளாவின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு சிறப்புகளை கொண்டிருக்கிறது,ஒட்டு மொத்தமாய் நல்ல உணவு, பயணம் மேற்கொள்ள கேரளா எப்பவும் சிறப்பு.




கேரளாவின் பிரசித்தி பரோட்டாவும் பீஃப்கறியும் தான்.சுவைக்க சுவைக்க நாவூறும்..

நேசங்களுடன் 
ஜீவானந்தம்          


இன்னும் கொஞ்சம்...

Tuesday, January 28, 2014

பயணம் - கோல்வா பீச் (COLVA BEACH), கோவா (GOA) - 1

  எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.



காலையில் இருந்து கடலில் குளித்த டயர்டில் எங்காவது ஒதுங்கலாமே என்று ஒரு கடையில் ஒதுங்கி சில்லென தொண்டையை நனைத்தோம்...கூட என்ன சாப்பிடலாம் என்று யோசித்ததில் கிங் ஃபிஷ் ஞாபகத்திற்கு வந்தது..அது ஆர்டர் செய்யவும் பீர் தீர்வதற்குள் வந்து சேர்ந்தது.சாப்பிட்டு பார்த்ததில் சுவையோ சுவை....கிங் ஃபிஷருக்கும் கிங் ஃபிஷ் க்கும் பொருத்தமோ பொருத்தம்.....


நேரம் ஆக ஆக கடற்கரையில் கூட்டம் கூட ஆரம்பித்தது.வாட்டர் ஸ்போர்ட்ஸ் படகுகள் மும்முரமாய் வாடிக்கையாளர்களை வசப்படுத்தி கொண்டிருந்தன.பாரா செயிலிங் எனப்படும் பாராசூட் அனுபவத்தில் பங்கு கொள்ள மனம் ஆசைப்பட்டாலும் அவ்ளோ உயரத்தில் செல்ல கொஞ்சம் பயமாகவே இருந்தது.அதனால் அந்த ஆசையை நிராகரித்து விட்டு உயரே செல்லும் பாராசூட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்...



வெயில் சுள்ளென பட்டாலும் கடற்கரை மணலில் கடற்காற்று வாங்கிக்கொண்டிருப்பது சுகமாகவே பட்டது.என்னதான் வெயில் அடித்தாலும் சில்லென இருந்தது கடல் நீரும் அவ்வப்போது கடந்து செல்லும் அரை குறை அம்மணிகளும்.... சாய்வு நாற்காலிகளில் ஓய்வெடுத்துக்கொண்டு அவ்வப்பொழுது உடலினை சூரியனின் சுட்டெரிப்பால் திருப்பி திருப்பி போட்டபடி காய்ந்து கொண்டிருந்த வெளிநாட்டு வெள்ளைத்தோல் அம்மணிகள்.அவர்கள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததை காணுகையில் நம் உள்ளம் என்னவோ குளிர்ச்சியால் நிறைந்து கொண்டிருந்தது.

வேடிக்கை பார்த்து பார்த்து கண்களும் சோர்வடைந்ததால் கால்கள் தன்னிச்சையாக கடையை நோக்கி பயணித்தன.கோவாவின் புகழ்பெற்ற மதுவான ஃபென்னி எனப்படும் சரக்கினை ருசி பார்ப்போமே என்று.... கோகனட் ஃபென்னி, முந்திரி ஃபென்னி என்கிற இரு வகையில் முந்திரியினை தேர்ந்தெடுத்து ஓரமாய் அமர்ந்தோம்.நம்மூர் பட்டை சாராயம் போல காய்ச்சின வகை என்று கடைக்காரர் சொல்லவும் ஆஹா என மனம் குதூகலித்தது.இதற்கு கலந்து கொள்ள எது சூப்பராக இருக்கும் என்று கேட்க, லிம்கா தான் பெஸ்ட் என சொல்ல அதையும் வாங்கி இரண்டையும் மிக்ஸ் பண்ணி சாப்பிட்டதில் செம டேஸ்ட்..அங்கும் மீன் சாப்பிடலாமே என்று நம்மூர் ஜிலேபியின் பெரிய வகையினை ஆர்டர் செய்ய அது மசாலா மணத்தோடு செம தூக்கலாக வந்தது.காரமும், இனிப்பும் கலந்த கலவையுடன் மீனின் சுவை செம டேஸ்டாக இருந்தது.ஃபென்னியுடன் மீனும் நம்ம மனமும் சேர்ந்து நீச்சலடிக்க ஆரம்பித்தது.....

கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் கடற்கரை நோக்கி பயணமானோம்.இப்பொழுது கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது.மாலை நேர சூரியனின் மறைவினைக் காண கூடியிருந்தனர்..குடும்பம் குடும்பமாக கூட்டங்கள், அரை குறை ஆடையுடன் ஆடவர்கள் மற்றும் வெளிநாட்டு அம்மணிகள்..முழு உடை தரித்திருந்தாலும் அங்கங்கள் அனைத்தும் நனைந்தபடி நம்மூர் அம்மணிகள் என மிக ரம்மியமான மாலைப்பொழுதாக ஆகிக்கொண்டிருந்தது கடற்கரை.




  
மயங்குகின்ற மாலை வேளையில் சைக்கிளில் ஒய்யாரமாய் வரும் அம்மணிகள், பாய்ந்து வரும் அலைக்கு பயந்து கடற்கரையில் வெறும் பார்வையோடு நிறுத்திக்கொண்ட நிறைய பேர், கடற்கரையில் கிடக்கும் சிப்பிகள், கிளிஞ்சல்கள் என அனைத்தையும் பொறுக்கிகொண்டு கடலோரமாய் நடந்து செல்லும் பல பேர், அவ்வப்போது மக்களின் பாதுகாப்புக்காக குறுக்கும் நெடுக்குமாய் சென்ற கோஸ்டல் ஜீப், கடலில் குளிப்பவர்களின் ஆர்வமிகுதியால் கடலில் வெகு தூரம் செல்பவர்களை திரும்பி வரவைக்கும் விசில் சத்தம் என பரபரப்பாக இருந்த கடற்கரை சூரியனின் மறைவினால் கொஞ்சம் பொலிவிழக்க ஆரம்பித்தது.


கொஞ்சம் கொஞ்சமாக தன் உயரத்தை இழந்து, சுடும் வெப்பத்தினையும் குறைத்து பொன்னிற கதிர்களால் கடற்கரையினை மிக ரம்மியமாய் மாற்றிக்கொண்டிருந்த சூரியன் கடலோடு அஸ்தமிக்கும் அந்த நொடிகள் மிக அழகாய் இருந்தது.அனைத்தையும் ரசித்தபடி இரவின் சுவடுகள் ஆரம்பித்த சமயத்தில் கடலுடன் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோம்.

இதுக்கு முன்னாடி கோவா

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Sunday, January 19, 2014

பயணம் - கோல்வா பீச் ( COLVA BEACH ), கோவா (GOA)

கோல்வா பீச், கோவா...
கோவாவில் மட்கான் (MADGOAN) என்றழைக்கப்படும் ஊரின் ரயில்வே ஸ்டேசனில் வந்து வலது காலை வைத்து இறங்கிய போது மணி அதிகாலை மூன்றாகியிருந்தது.அந்த நேரத்திலும் ரயில்வே ஸ்டேசன் ஆட்கள் நடமாட்டத்தால் மிகவும் பிஸியாக  இருந்தது.எந்தவித முன்னேற்பாடும் இல்லாத காரணத்தினால் அதிகாலை குளிரினை தடுக்க ஏதாவது செய்யனுமே என்று யோசித்தபடியே மெதுவாய் ஸ்டேசனை விட்டு வெளியேறிய போது டூவீலர் டாக்ஸி ஓட்டி ஹிந்தியில் பாத் ஹர்த்த போது கோல்வா பீச் என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் எங்களை டிரிபிள்ஸ் ஆக்கி இரவு நேரத்தில் பீச்சினை நோக்கி பயணித்தோம்..
பனி படரும் குளிரில் டூவீலரின் சத்தம் மட்டுமே கேட்க எந்த வித வாகன்ங்களும் எங்களுடன் போட்டிக்கு வராமல் தனித்தே பயணித்தோம்...இருட்டிய சாலைகளில் இரவினை துணையாகக் கொண்டு பதுங்கிக்கிடக்கின்ற தெருநாய்கள் எங்களுடன் போட்டிக்கு வந்து இயந்திர சக்திக்கு முன்னால் தோற்றுப்போனதை தாங்கமுடியாமல் வெறியுடன் குலைத்த அவைகளின் முன் எங்களின் புறமுதுகை காண்பித்து பயணித்தோம்....அனாதையாய் வெறிச்சோடிக்கிடந்த ரோட்டில் வேகமாய் பயணித்து வெகு சீக்கிரமே கோல்வா பீச் வந்தடைந்தோம்....

பொங்கல் விடுமுறையை ஒட்டி நம்மவர்களின் கூட்டத்தால் லாட்ஜ்கள் ரிசார்ட்கள் நிரம்பி வழிந்தன.டூவீலர் ஓட்டியின் கைங்கர்யத்தால் பீச்சினை ஒட்டி அமைந்துள்ள ஒரு ரிசார்ட்டில் எங்களுக்கு ஒதுங்க இடம் கிடைத்தது.விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்த அந்த அதிகாலை வேளையிலும் எங்கள் கண்களுக்கு ஆபத்பாந்தவனாக தெரிந்தான் ஃபிரீசரில் இருந்த கிங் ஃபிஷர் நண்பன்.....ஒருவனை எடுத்து திறந்து தொண்டையை நனைத்தபோது சில்லென்ற குளிர்ச்சி வந்து சேர்ந்து கொண்டது அகமும் புறமும்....அங்கிருந்து நகர்ந்தபடி ரூம் வந்து சேர, மிச்சத்தினையும் காலி செய்துவிட்டு சீக்கிரம் பீச் செல்லவேண்டிய ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்தோம்.....
தங்கியிருந்த இடத்திற்கும் பீச்சிற்கும் ஒரு சில மீட்டர் தூரமே இருக்க பொடிநடையாய் நடந்து பீச்சினை அடைந்தோம்....



தென்னை மரங்கள் கரையோரம் கடலுக்கு அழகு சேர்த்துக்கொண்டிருந்தது..இன்னும் தன் விடியலை ஆரம்பிக்காத பீச் வெறிச்சோடி கிடந்தது. நேற்றைய பனியால் தற்காலிக உடை உடுத்தி இருந்த பீச்சின் வெண்ணிற மணல், ஆட்கள் வருகையினால் தன் உடைகளை களைய ஆரம்பித்தது... ஆங்காங்கே ஒரு சில பேர் மட்டும் காலை விடியலை ரசிக்க வந்திருந்தனர்....படகுக்காரர்கள் தங்கள் விற்பனையைத் துவக்க ஆரம்பித்து இருந்தனர்.மணல் மேட்டில் படகுகள், வாட்டர் கேம்ஸ் படகுகள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தன.நடுக்கடலினுள் அலைகளின் உதவியால் ஆடிக்கொண்டிருந்த சிறு படகுகள் வாடிக்கையாளர்களை கரையினில் கண்டவுடன் கரைகளை நோக்கி வர தத்தம் ஓனர்களை எதிர்பார்த்து அசைந்து கொண்டிருந்தது.பீச்சோரம் இருக்கின்ற கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்க ஆயத்தமாகினர். ஒவ்வொரு கடைக்கு முன்னும் இருக்கிற சாய்வு நாற்காலிகள் தன் மேல் வெளிநாட்டு அம்மணிகளின் உடல் படும் சுகம் வேண்டி சோபா குஷன் போட்டு காத்துக்கொண்டிருந்தன....




காலை வேளை... சுத்தமான காற்று....மெல்லிய வெயில்...அலையடிக்கும் ஆரவாரமிக்க கடற்கரை...வெண்ணிற மணற்படுக்கைகள்..நம்மைப்போலவே ரசிக்க வந்திருக்கும் வெளிநாட்டு அம்மணிகள் என ரம்மியமாக பொழுது போனது...குளிக்க ஆரம்பித்து விடலாமென்று சில்லென்ற கடல் நீரில் கால் வைத்தபோது குளிர்ச்சி உடம்பெங்கும் பரவியது..மெதுவாய் கடலினுள் நோக்கி நகர உடல் கொஞ்சம் கொஞ்சமாக நனையவும் மூழ்கவும் ஆரம்பித்தது.....எதிர் வரும் அலைகளை தாண்டி அதில் விழுந்து, புரண்டு கடலின் அலைகளோடு விளையாட்டில் ஐக்கியமானோம்.... அவ்வப்போது கடற்பரப்பினையும் பார்த்துக்கொண்டு கடந்து செல்லும் அரைகுறை அம்மணிகளின் அழகிலும் அதிசயத்துக்கொண்டே மும்முரமாய் கடலோடு விளையாடிக்கொண்டிருந்தோம்.

 ரொம்ப நேரம் கடலில் விளையாண்டதில் சீக்கிரம் களைத்துப்போகவே தாகம் தீர்க்க கடைக்கு வந்தோம்.பிரிட்ஜில் நிறைந்து இருந்த கிங் ஃபிஷர் இரண்டை எடுத்து ஒரு ஓரமாய் அமர்ந்து கடலினையும் கடந்து செல்லும் அம்மணிகளையும் ரசித்தவாறே காலி செய்ய ஆரம்பித்தோம்.....
இன்னும் இருங்குங் சாமியோவ்.....................

நேசங்களுடன்
ஜீவானந்தம்
  
இன்னும் கொஞ்சம்...

Monday, August 26, 2013

பயணம் - சிங்கப்பூர் - EAST COAST PARK (ECP) - SINGAPORE, குடில் டேட்டிங், சைக்கிளிங், நீச்சல், பொழுது போக்கு

         ஒரு மதிய வேளை...மனதுக்கு இதமான இடத்துக்கு போவோம் என்றெண்ணி போனது இந்த East coast park பீச்சுக்கு.சிங்கப்பூரின் பெடோக் பகுதிக்கு அருகில் இருக்கிற இந்த பீச்சில் நம்மை புதுப்பித்துக்கொள்ள புத்துணர்ச்சி அடைந்து கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் இருக்கிறது.பொழுது போக்காய் மீன் பிடித்தல், பட்டம் விடுதல், நீச்சலடித்தல், வாட்டர் சர்ஃபிங், சைக்கிளிங், ரோலர் ஸ்கேட்டிங், கேம்ப் எனப்படும் குடில்கள்,நடைபயணம், மனம் ரிலாக்ஸ் ஆக பீச், குடும்பம் குடும்பமாய் கும்மியடிக்க பார்பிகியூ இடங்கள் என எல்லாமாய் இருக்கிறது.




                   பரந்து விரிந்து கிடக்கும் கடலினைப் பார்த்துக்கொண்டே ஓரு ஓரமாய் நடந்து செல்கையில் முதலில் கண்ணில் பட்டது இந்த குடிசைகள் சாரி குடில்கள் தான்.பச்சைப்புல்வெளியில் பசுமையான மரங்களுக்கு அடியில் ஆங்காங்கே நீல கலரில் குடில்கள் வியாபித்து இருந்தன.( நீலக்கலர் என்றதுமே அப்போது அது ஞாபகத்திற்கு வரவில்லை.) ஒரு வேளை நாடோடிக் கூட்டங்கள் தான் நட்டு வைத்து இருக்கின்றனரோ என ஒரு ஆச்சர்யத்தில் நண்பரைக் கேட்க அவர் சொன்னது இன்னும் படு ஆச்சர்யம்.வீக் எண்ட் களில் தள்ளிக்கொண்டு, அள்ளிக்கொண்டு, கட்டிக்கொண்டு, ஓட்டிக்கொண்டு (இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்கோ ) தனிமையைத்தேடி வரும் ஜோடிகள் சல்லாபிக்க சரசமாட சாரி பேசிக்கொள்ள அப்புறம் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள பிரைவசி வேண்டி கட்டிக்கொள்ளும் குடில்கள் தான் அவை.




             எந்த தொந்தரவும் இல்லாமல் போலீஸ்க்கு பயப்படாமல், லாட்ஜ்களுக்கு செலவளிக்காமல் திறந்த வெளியில் குடில் அமைத்து தங்களை புதுப்பித்துக்கொள்ளும் / உணர்ந்து கொள்ளும் இடமாக குடில்களை அமைத்து சல்லாபித்துக்கொண்டு இருக்கின்றனர் கொடுத்த வைத்த குடிமக்கள்.இதுக்கு பேரு தான் குடில் டேட்டிங்கா...? குடில் விலை ஒரு சில டாலர்களில் அடங்கிவிடுவது மட்டுமே.அப்புறம் அம்மணிகளுக்கு பண்ற செலவு தவிர மத்தபடி எந்த செலவுமில்லை.ஆக மொத்தம் குறைந்த விலையில் நிறைந்த சுகம்.கொஞ்சம் பொறாமையோடு பார்த்துக்கொண்டு கடக்கையில் குடிலின் அசைவுகள் நம் உணர்வுகளை கொஞ்சம் அசைத்துப்பார்க்கிறது.



        நம்மூர்லயும் இந்த மாதிரி வசதிகள் வந்துவிட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்.ம்ம்ம்..ஒரு ஏக்கப்பெருமூச்சுதான்....தினத்தந்தி பேப்பரில் வர்ற மாதிரி நிறைய அசைவ செய்திகள் இருக்காது.70 வயசு கிழவியை கெடுத்தது, சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது, அப்புறம் அங்க அவன் கெடுத்தான் இங்க இவன் கெடுத்துட்டான்னு பக்கம் பக்கமா நிச்சயமா நியூஸ் வராது.அதே சமயம் நம்மூர் சட்டம் கொஞ்சம் கடுமையா இருக்க வேண்டும்.கண்டிக்க, தண்டிக்க, துண்டிக்க பாரபட்சம் காட்டாமல் இருந்தால் இதுவும் சாத்தியமே.

      அப்படியே பேசிக்கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு நோட்டமிட்டதில் இந்த பீச் மிக சுத்தமாக இருக்கிறது.எந்த வித அசுத்தங்களோ, குப்பைக்கூளங்களோ இல்லை. பீச் ஏரியாவில் இந்த குடில்கள்  நிறைய இருந்தாலும் அம்மக்களை யாரும் எந்த வித தொந்தரவும் செய்யாமல் இருக்கின்றனர். குடில் இல்லாத மக்கள் குடும்ப குடும்பமாய் அடுப்பு மூட்டி பார்பிக்யூ சமையல் செய்து களிக்கின்றனர்.இன்னும் நிறைய பேர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு பீச்சினை வலம் வருகின்றனர்.இதற்காகவே சைக்கிள் வாடகைக்கு விடும் இடமும் இருக்கிறது.பேமிலி சைக்கிள் எனப்படும் ஒரு சைக்கிளில் குடும்பமே குதூகலமாக பீச்சினை சுற்றி வருகின்றனர்.







            ஒரு சிலர் பட்டம் பறக்க விட்டு கொண்டிருக்கின்றனர்.ஒரு சிலர் கடலில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.நம்மளை மாதிரி ஆட்கள் உலாவரும் அம்மணிகளை ரசித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளைக் கண்டபடி இன்னும் சிலர்.இப்படி ஒவ்வொருவரும் அமைதியான மாலைப் பொழுதினை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செலவிடுகின்றனர். 


       
           நன்றாக திட்டமிட்டு மீன்பிடிக்க இடம், வாட்டர் ஸ்கை செய்ய இடம். புல்வெளிகள், சைக்கிள் ஓட்ட பாதை, நடக்க ஒரு பாதை, மரங்கள், சமைத்து சாப்பிடுவர்களுக்கு டேபிள் என அமைத்து இருக்கின்றனர்.



               எல்லாம் ஆற அமர்ந்து பார்த்து ரசித்தபின் நாங்களும் கடலில் குதித்து எங்கள் களியாட்டத்தினை ஆரம்பித்தோம்.(ம்ம்ம்.என்ன பண்றது எங்களுக்குத்தான் குடில் இல்லையே..ஹிஹிஹி ).

               கடலில் குளித்த பின் நல்ல தண்ணீரில் குளிக்க தனித்தனி ஷவர் வைத்து இருக்கின்றனர்.அங்கேயே உடை மாற்றும் அறைகளும் இருக்கின்றன.டாய்லட் வசதிகளும் இருக்கின்றன.ஆனா நம்ம ஊர் பீச் களை நினைக்கையில் ரொம்ப வருத்தமாக இருக்கிறது.நம்ம கவர்மெண்ட்டுக்கு அவ்ளோ தான் முடியும்.மக்கள் தொகைப்பெருக்கம், லஞ்சம், ஊழல் என எல்லாம் பெருகி இருக்கும் போது என்னத்த செய்யுறது..என்னத்த சொல்றது....

                 இருட்ட துவங்கியவுடன் நடையைக்கட்ட ஆரம்பித்தோம்.செல்லும் போது குடில்களை பார்க்கின்ற போது ஒரு ஏக்கப்பெருமூச்சு வெளிவந்தது என்னவோ உண்மைதான்...ஏன்னா நம்மூர்ல தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதலர்களிடம் கத்தியைக்காட்டி பணம் பறிப்பு, (முடிஞ்சா கற்பையே பறிப்பு), பீச்சில் காதலர்களிடையே போலீசார் மாமூல் வசூல், மகாபலிபுரம் ஈசிஆர் ரோட்டுல போற வர்ற காதலர்கள்கிட்டே வண்டியை மறிச்சு பணம் வசூல் இப்படி நடக்கிறத பார்த்தா சிங்கப்பூர் குடில் வாழ்க்கை எவ்வளவோ தேவலாம்.

கிசுகிசு : குடிலுக்குள்ள தான் போக முடியல...அட்லீஸ்ட் அதுக்கு முன்னாடியாவது நின்னு போட்டோ எடுத்துக்கலாமே அப்படின்னு சிங்கப்பூர் நண்பருடன்.....

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்


ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...