ஆயுத
பூஜை விடுமுறை தினங்களில் எங்காவது போலாமே அப்படின்னு ஒரு இடத்துக்கு போனது
மதுரையில் இருக்கிற அதிசயம் தீம் பார்க். திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில் அதிசயம் தீம்
பார்க்கின் ஒன்றிரண்டு விளம்பர போர்டுகள், இதைக் கண்டவுடன் இன்னும் இதயத்துடிப்பும் ஆவலும் அதிகமானது.மதுரையின்
நுழைவாயிலான பரவை என்கிற ஊர் வந்தவுடன் கொஞ்ச தூரத்தில் அதிசயம் தீம் பார்க்கினை
அடைந்தோம்.ஆரவாரமின்றி பரபரப்பின்றி இருந்த கார் பார்க்கிங்கில் சில பல கார்கள்
தத்தம் உறவினர்களை உள்ளே அனுப்பிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.நாங்களும்
ஓரமாய் நிறுத்திவிட்டு உள்ளே செல்ல ஆயத்தமானோம்.
தீம்பார்க்கின் உள்ளே நுழையும் குழந்தைகளை, சிறுவர்களை, பெரியவர்களை கவரும் (மிரட்டும்) வண்ணம் ஒரு கொரில்லா குரங்கு சிலை நம்மை வரவேற்கிறது.அடுத்தபக்கம் தீம்பார்க்கின் ஒட்டு மொத்த மினியேச்சர் மாடல் ஒரு கண்ணாடி பேழைக்குள் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
நெரிசலே
இல்லாத டிக்கட் கவுண்டரில் எங்களுக்குண்டான டிக்கெட்டை பெற்றுக்கொண்டு (ரூ 500 பெரியவங்களுக்கு, ரூ 300 குழந்தைகளுக்கு) உள்ளே நுழைந்தோம்
பலத்த ஆச்சரியத்துடன் வந்த எனக்கு அதிசயம் காத்துக் கொண்டிருந்தது. வெறிச்சோடிக்கிடந்த தீம்பார்க் என் ஆவலை ஆயுட்குறைவாக்கியிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்களின் தலை மட்டுப்பட ஆரம்பித்தது.பரந்து விரிந்து கலர்புல்லாய் காட்சியளித்த வாட்டர் கேம்ஸ்கள் ஒரு சில ஆட்களால் விளையாடப்பட்டுக் கொண்டிருந்தது.சுத்தி முத்தி பார்த்தாலும் இருநூறுக்கும் குறைவான ஆட்களே மையம் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு விளையாட்டிலும் பெயரளவுக்கு மட்டுமே தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.அதிலும் ரப்பர் டூயுப்களை இட்டு சந்தோசத்தினை அனுபவித்துக்கொண்டிருந்தனர். அடிக்கிற வெயிலில் தண்ணீரின் குளுமை மாறி சுடு நீராய் ஆரம்பித்து சீக்கிரம் ஆவியாகிக் கொண்டிருந்தது இருக்கின்ற கொஞ்சநஞ்ச தண்ணீரும்.மேலிலிருந்து கீழ் சறுக்கி வரும் விளையாட்டினை கொண்டாட ஒவ்வொருவரும் ரப்பர் ட்யூப்கள், ரப்பர் பேடுகள் சுமந்து கொண்டு மேலேறிக்கொண்டிருந்தனர்.தீம்பார்க்கின் வேலையாட்கள் இருவர் ஒவ்வொரு இடங்களிலும் இருக்கிற கொஞ்ச தண்ணீரிலும் வலை போட்டு பிடித்துக்கொண்டிருந்தனர் சேர்ந்துவிட்ட மிதந்த குப்பைகளை...
பெரிய பெரிய தீம்பார்க்குக்களில் வீகா லேண்ட், பிளாக் தண்டர் போன்றவைகளில் விளையாண்ட அனுபவம் இருப்பதால் என்னவோ இங்கு இந்த நிகழ்வுகளைக்கண்டதும் மனம் வாடிப்போனது. எதிர்பார்ப்பில் வந்த எனக்கு கொஞ்சம்...கொஞ்சமல்ல ..நிறைய ஏமாற்றமே.அதிலும் அம்மணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இல்லாமல் போனது மிக வருத்தமே.....
பசிக்கிற நேரம் வரவும் ஈரத்துடனே சாப்பாட்டு இடத்திற்கு செல்ல, அங்கே வெஜிடபிள் பிரியாணியுடன் ஓடு உரிக்காத முட்டையுடன் வைத்து கொடுத்துக்கொண்டிருந்தனர்.(விலைக்குத்தான்) எங்கள் பங்கிற்கு வாங்கிக்கொண்டு டேபிளை அடைந்தோம்.முட்டையை உரித்து அதை வெஜிடபிள் பிரியாணியில் வைத்து அசைவ பிரியாணியாய் சாப்பிட ஆரம்பித்தோம்.
தண்ணீர் குறைவான காரணத்தினால் அதிகமாய் விளையாட வாட்டர் கேம்ஸ்களில் ஈடுபாடு இல்லாததால் ட்ரை கேம்ஸ் ஆட கிளம்பினோம்.ராட்டினம், கப்பல், ஸ்விங் இது போன்று நிறைய இருக்கின்றன.இயங்குகின்ற விளையாட்டு சாதனங்களை விட பழுது பட்டிருக்கிற சாதனங்கள்தான் அதிகமாக இருக்கின்றன.எது ஓடக்கூடியதோ அதிலே அனைவரும் பயணித்தோம். பாதுகாப்பு என்பது கொஞ்சம் கேள்விக்குறியாக இருக்கிறது அனைத்து விளையாட்டு சாதனங்களிலும்.ஆனாலும் ரசிக்க வைக்கிறது ஒரு சில விளையாட்டுக்கள்.
இருக்கிற
விளையாட்டுக்களை விளையாண்டு விட்டு திரிலியம் என்கிற போர்டு பார்த்து அங்கே
சென்றோம்.மினி தியேட்டர் அது. சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் பார்த்த 6டி, 7டி காட்சிகளை இங்கு 2டியில் காட்ட மனம் இன்னும் பாதிப்படைந்தது.ஆனாலும் ரசிக்க வைத்தது ஒரு
சில காட்சிகள்.புதிதாய் காண்பவர்களுக்கு இது ஒரு அதிசயமே..
அடுத்து போனது போட் ஹவுஸ்...இதிலும் ஒரு சில போட்கள் உதவாக்கரையாக கரை மேல் இருந்தது அதிசயமே..அங்கிருந்த நீந்தக்கூடிய போட்களில் மிதிப்பவை, ஸ்டீரியங் போன்ற ஏதாவது ஒன்று உடைந்திருந்தது அதிசயமே..ஆனாலும் போட் எடுத்துக்கொண்டு நீர் மேல் பயணித்தோம் ஆபத்தில்லாமல்.ஏனெனில் மூன்றடிக்கும் குறைவான ஆழமே இருப்பது அதிசயமே...
மொத்தத்தில்
இது அனைத்தும் அதிசயமே..புதிதாய் வருபவர்களுக்கு மட்டும் இது அதிசயம்.குழந்தைகள்
நீரில் விளையாட எப்போதுமே ஆசைப்படுவார்கள்.அந்த மாதிரி வரும் குழந்தைகளுக்கு இந்த இடம் அதிசயமே.குடும்பத்துடன் வந்து விடுமுறையை கொண்டாட
வருபவர்கள் திரும்பி இனி வருவது அதிசயமே..அதே மாதிரி தள்ளிக்கொண்டு, கரக்ட் பண்ணிக்கொண்டு வரும் நபர்களுக்கு இது ஆகச்சிறந்த
அதிசயம்.(ஏன்னா மக்கள் யாரும் இருக்க மாட்டாங்க) பாதுகாப்பு வசதிகள் என்பது குறைவுதான்.விருப்பம்
இருப்பவர்கள் சென்று வாருங்கள்.
தண்ணீரில் திரில்
ரைடு செல்பவர்கள் தத்தம் நலன் காப்பது முக்கியம்.வளைந்து வளைந்து செல்லும் அனைத்து
வாட்டர் கேமிலும் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கிறது.சறுக்கிவிழும் பகுதியில்
ஆங்காங்கே ஜாயிண்ட் செய்த பிளாஸ்டிக் போர்டுகள் துருத்திக்கொண்டு
நிற்கின்றன.ஆட்களுக்கும் சேதாரம் ஏற்படுவது அடிக்கடி நிகழ்கிறது.
ஒரு
வாட்டர் கேமில் மேலிருந்து ட்யூபில் வைத்து தள்ளிவிடுவார்கள் அது வழுக்கிக்கொண்டு
வளைந்து வளைந்து வரும். ரொம்ப திரில்லிங்காக இருக்கும்.ஆனால் அந்த விளையாட்டினை
பார்க்க நமக்கு படுபயங்கரமாக இருக்கிறது.அன்னிக்கு அப்படித்தான் ஒரு வாலிபர்
மேலிருந்து ட்யூபில் அமர்ந்து வருகிறார்.இங்கிருந்து பார்த்தா வளைந்து வளைந்து
வரும் அந்த கேமில் முதலில் ட்யூப் மட்டும் தான் வருது.ஆளைக்காணோம்.சற்று நேரத்தில்
தவழ்ந்தபடி அந்த வளைவுகளில் தவ்வி தவ்வி வந்து தண்ணீர் குளத்தினுள்
விழுகிறார்.அதற்குள் மேலிருந்து இன்னொருவர் வந்து அவர்மேல் விழுந்த காட்சி
காமெடியாக இருந்தாலும் ஆபத்தாக இருக்கிறது.
இது
போன்ற இடங்களில் முதலுதவி பெட்டி அவசியம்.ஆனால் அது இருப்பதை காணமுடிவதில்லை.
அதுபோலவே ரப்பர் ட்யூப்களும் பஞ்சராகி கிடக்கின்றன.அதற்கு மட்டும் உடனடி முதலுதவி
அளிக்கப்படுகிறது. ஆம்....அதைத்
தைப்பதற்கென்றே ஒரு குழு மரத்தடியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.மனுசங்களுக்கு மட்டும் இல்லை மருத்துவக்குழு
மொத்தத்தில்
காசுக்கு பிடிச்ச கேடு......விலை கூட அதிகம்தான்.பராமரிப்பு கூட அதிசயமாக
நடக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்