Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Thursday, April 6, 2017

கோவை மெஸ் - ஜே பி ரெஸ்டாரண்ட் (JB restaurant ),பொன்மேனி, மதுரை - 16

                  கேரளா போய்ட்டு ரிடர்ன் தமிழ்நாட்டு பார்டர் வழியாய் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை வந்தபோது மழை தூற ஆரம்பித்தது. இரவும் கவிழ்ந்திருக்க, பசியை உணர ஆரம்பித்தது வயிறும் மனமும்.சாப்பிடுவதற்கான ஹோட்டலை அருகிலேயே தேர்ந்தெடுப்போம் என்றெண்ணி மதுரையில் உள்ள நண்பர் பிரகாஷை அழைக்க, அவரோ நானும் பக்கத்தில் தான் இருக்கிறேன், வந்துவிடுகிறேன் என்று சொல்ல, அவருக்காக காத்திருந்தோம்.கடைவீதியில் மதுரை மண்ணின் அம்மணிகள் அந்த மழை நேரத்தில் தென்றலாய் வீச மனம் குளிர் எடுக்க ஆரம்பிக்க, பசி மறைந்து போக நினைக்கையில் தமிழ்வாசி பிரகாஷ் வரவும், அவரும் நனைய ஆரம்பித்தார்.பின் எப்பவும் போல வழக்கமான நலம் விசாரிப்புகளில், எங்கு சாப்பிட போலாம் என்கிற அழைப்பும் இருந்தது.
                   அடுத்த சில நிமிடங்களில் பொன்மேனியில் மெயின் ரோட்டை ஒட்டி பிரியும் ஒரு சின்ன ரோட்டில் இருந்தோம்.கடை முன்பு கூட்டம்.தகர கொட்டகை, மெலிதான விளக்கு வெளிச்சம்.டாஸ்மாக் கடை போன்ற அமைப்பு.ஒருவேளை பழக்கதோஷத்தில் நம்ம கடைக்குத்தான் அழைத்து வந்துவிட்டாரோ என்று நினைக்கையில் கொத்து புரோட்டாவினை தோசைக்கல்லில் கொத்தும் சத்தம் கணீரென்று வர, அட …ஹோட்டலுக்குத்தான் வந்து இருக்கிறோம் போல என்று நினைத்தபடியே உள்ளே நுழைந்தோம்.

                செம கூட்டம். வண்டிகள் வரிசை கட்டி காத்திருக்க, டேபிள்கள் நிரம்பி வழிகின்றன.ஒவ்வொரு டேபிளிலும் கோழிகள் தந்தூரியாகவோ, கிரில்லாகவோ மாறி வாடிக்கையாளர்கள் கையிலும் வாயிலும் இருந்ததை பார்த்தபடியே எங்களுக்கான டேபிளில் அமர்ந்தோம்.
               இரவு வெகுநேரம் ஆகி இருந்ததால் நிறைய அயிட்டங்கள் மிஸ்ஸாகி இருந்தன.கோழியில் தந்தூரி, சில்லி, க்ரில் இவை மட்டுமே இருந்தன.ஆட்டுக்கறியில் சில பார்ட்ஸ்கள் தீர்ந்துவிட்டு இருந்தன.ஆட்டின் அத்தனைப் பகுதியிலும் வெரைட்டி வெரைட்டியாய் கிடைக்கிற இடம் மதுரைதான்.இங்கும் அப்படித்தான்.நேரம் ஆனதால் எல்லாம் காலியாகிவிட்டிருந்தது.
                    சரி இருப்பதை கேட்டு சாப்பிடலாம் என்று சர்வரை அழைக்க, ஓடோடி வந்து வாழை இலையை பரப்பி வைத்துவிட்டு, நீர் தெளித்துவிட்டு, மூன்று கப்புகளில் மட்டன், சிக்கன் குழம்பு, சட்னி வைத்து விட்டு, கறி தோசை, சிக்கன் தோசை இருக்கிறது.மற்றபடி தந்தூரி, கிரில் தான் என சொல்ல, கறி தோசை மட்டும் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தோம்.

                காத்திருந்த நேரத்தினை ஏன் வீணாக்க வேண்டும் என்று கடையை நோட்டமிட்டதில், டேபிள்கள் அனைத்தும் ஆண்களால் நிரம்பி இருந்தது.பேம்லி ரூம் என்று தனியாக இருக்கிறது.அங்கு பெண்கள் குழந்தைகள் என நிரம்பி இருந்தனர்.மாஸ்டர் வெகு மும்முரமாய் தோசைக்கல்லோடு விளையாண்டு கொண்டிருந்தார்.கல்லில் இருந்து எழும் ஆவியின் புகையில் கறியின் மசாலா மணமும், மாவின் வேகும் மணமும் கடை எங்கும் பரவிக்கொண்டிருந்தது, கூடவே அவரின் உழைப்பின் மணமும்.

                ஒவ்வொரு டேபிளிலும் இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாய் அந்நிய பானங்கள் இடம் பெறாது, பொவண்டோ மற்றுமே இருக்க, சிக்கன் தந்தூரி மற்றும் கிரில்க்கு இணையாய் இந்த பொவண்டேவினை பருகி கொண்டிருந்தனர் (இது என்ன டேஸ்ட்டுன்னு தெரியல.நல்ல காரம் சாரமா சாப்பிடற நேரத்தில கேஸ் நிறைந்த பானத்தினை பருகி வயிற்றை நிரப்புவது…)
               கொஞ்ச நேரத்தில் எங்களுக்கு உண்டான தோசை இலையை வந்தடைய, எங்கள் வேலையை ஆரம்பித்தோம்.சூடு நிறைந்த கறி தோசை இலையை பொசுக்க ஆரம்பிக்க, மசாலா மணத்தோடு இலவச இணைப்பாய் வாழை இலையின் சுவையும் ஒன்று சேர மணம் நம் நாசியை துளைக்க, ஆட்டோமேட்டிக்காய் கை இயங்க, தோசையில் ஒரு விள்ளலை பிய்த்து உள்ளே தள்ள, ஆஹா…என்ன ருசி…கூடவே தேங்காய் சட்னியும், மட்டன் குழம்பும் சேர்ந்து தோசையை ஊற வைக்க, எல்லாம் ஒரு புது சுவையினை கொடுக்க, எளிதாய் பிய்த்து உள்ளே தள்ளிக்கொண்டிருந்தோம்.

எலும்பில்லாத மட்டன் கறியும், மசாலாவும் தோசையில் விரவி கிடக்க, முட்டை கலந்த தோசையில் இரண்டும் ஒன்று சேர்ந்து நம் பசியை அதிகப்படுத்த அதை அவ்வப்போது தோசையால் ஆற்றுப்படுத்தி கொண்டிருந்தோம்.ஒரே தோசை தான்.நல்ல ஹெவியாய், தடித்து நல்ல மணத்துடன் இருக்க சீக்கிரம் காலியாகிப்போனது.அதே நேரத்தில் வயிறும் நிறைந்து போனது.பிரகாஷ் சிக்கன் கறி தோசையோடு போராடிக்கொண்டிருக்க, நாங்கள் அடுத்து குருமா கலக்கி ஆர்டர் செய்து முன்னேறிக்கொண்டிருந்தோம்... கலக்கியும் மிக டேஸ்டாக இருந்தது.

லேட்டாய் வந்ததினால் நிறைய அயிட்டங்கள் மிஸ் ஆகிவிட்டன.அதை சாப்பிடவேண்டும் என்பதற்காகவே அடுத்தமுறை செல்லவேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.பார்ப்போம்.

காளவாசல் டூ பழங்காநத்தம் பைபாஸ் செல்லும் வழியில் பொன்மேனி, தினமலர் அவென்யூ கீர்த்தி ஆஸ்பிடல் எதிரில் இருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம்.



இன்னும் கொஞ்சம்...

Tuesday, March 24, 2015

கோவை மெஸ் - வம்சாவளி பிரியாணி, காளவாசல் பைபாஸ் ரோடு, மதுரை

                         போன வாரம் மதுரைக்கு போயிருந்த போது அந்த ஊர்ல இருக்கிற முக்காவாசி ஹோட்டல்களில் சாப்பிட்ட அனுபவம் இருப்பதால் ஏதாவது புது ஹோட்டலில் ட்ரை பண்ணுவோமே அப்படின்னு நைட் ஷிப்ட் போய்ட்டு வந்து குப்புறபடுத்து தூங்கிட்டு இருந்த மதுரை புகழ் தமிழ்வாசி அவர்களை தட்டி எழுப்பி விசாரித்த போது, இருப்பா நானே வர்றேன் என ஒரு பத்து நிமிடத்தில் வந்தார்.
அவர், ” காளவாசல் வழியாக போகும் போது வம்சாவளி என்கிற ஹோட்டல் பார்த்து இருக்கேன், அங்க கூட்டம் அள்ளுது.நானும் அங்க போகனும்னு நினைச்சிகிட்டே இருக்கேன்...அதனால் அங்க போலாமா என கேட்க, அடுத்த இரண்டு நிமிடங்களில் அங்கு இருந்தோம்.ஏனெனில் நாங்க சந்தித்த இடமே அந்த ஹோட்டலுக்கு எதிர்ப்புறம் தான்.அப்புறம் என்ன....அடுத்து ஹோட்டலுக்குள்தான்....
                                  
பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என உள்ளே நுழைந்தோம்.கடையின்
வாசலிலேயே  ஆளுயுரத்திற்கு மிகப்பெரிய போர்டு வரிசை கட்டிய மெனுக்களோடு வரவேற்கிறது.ஆட்டின் அத்தனை ஸ்பேர் பார்ட்ஸும், சிக்கனின் சின்ன சின்ன மெனுக்களும் அதில் இருக்கின்றன.படித்து முடிக்கவே மூச்சு வாங்குகிறது...சின்ன கடைதான்.ஆனால் கொஞ்சம் விசாலமாக இருக்கிறது.நம் முஸ்லீம் அன்பர்கள் நடத்துகின்ற கடை.ஆனால் பெயர் வித்தியாசமாக இருக்கிறது.
கடையில் மொத்தமே ஐந்து டேபிள்கள் தான்.அதில் இரண்டு ஏசிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.அந்த இரண்டு டேபிள்களில் ஒன்று ஒரு பேமிலியால் இடம் பிடிக்கப்பட்டு களை கட்டிக்கொண்டு இருந்தது.நாங்கள் இருவரும் அடுத்த டேபிளில் அமர்ந்து அவர்களின் மெனுக்களை காதில் வாங்கிக் கொண்டிருந்த போது சர்வர் எங்களிடம் வர  என்ன இருக்கிறது என கேட்க, அவருக்கு மனப்பாடமாய் இருந்த மெனுக்கள் வெளியே வர ஆரம்பித்தன...

அவரை பேச விட்டு, பிறகு உங்க கடையின் ஸ்பெசல் என்னவென்று கேட்க, பிரியாணி என்றார்,,,சரி..ஆளுக்கு ஒரு கால் பிளேட் அப்புறம் என்ன சைட் டிஷ் கேட்கலாம் என நினைக்கையில் குடல்பிரை, மூளை பிரை, ஈரல் பிரை இருக்கு என சொல்ல, அனைத்தையும் கொண்டு வர சொன்னோம்.மதுரையில் அடித்த வெயிலுக்கு சிக்கன் செம சூடு என்பதால் அதை சாப்பிடவே இல்லை.
முதலில் வந்தது பிரியாணிதான்.பிரியாணி நல்ல டேஸ்டாக இருக்கிறது.சீரக சம்பா அரிசியில் நன்கு மசாலா பிடித்து செம டேஸ்டாக  இருந்தது.மட்டன் கறியும் நன்றாக வெந்து இருந்தது,முஸல்மான் வீட்டு பிரியாணி எப்படி இருக்குமோ அப்படி இருந்தது,நல்ல சுவை...கால் பிளேட் என்பதால் குறைவாகத்தான் இருக்கிறது.எங்கிருந்துதான் இந்த மாதிரி சின்ன கப் பிளேட்லாம் கண்டுபிடிக்கிறாங்களோ....
அடுத்து வந்தது குடல் பிரை..கொஞ்சம் கிரேவியோடு வர , பிரை பண்ணித்தர சொல்லி திருப்பி அனுப்பினோம்..அதுவும் வந்தது..பிரை பண்ணியதால் நல்ல சுவை இருந்தது.என்ன...குடல்கறியை விட வெங்காயம் தான் அதிகமாக இருக்கிறது,ஏதோ வாசத்திற்காக குடல்கறி போட்டு இருப்பார்கள் போல....ஆனால் சுவை ஓகே...


மூளை பிரை நல்ல சுவையாக இருந்தது.வெங்காயம் போட்டு வறுத்து இருந்த மூளை செம டேஸ்டாக இருந்தது.பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள குடல் வறுவலும், மூளை பிரையும் சூப்பராக இருந்தது.

தமிழ்வாசியின் விருப்பத்திற்கு ஏற்ப ஈரல் பிரை வந்தது,அதுவும் செம டேஸ்ட்,.என்ன..... வாங்கின அனைத்து சைட் டிஷ்சும் கொஞ்சம் கூட எலும்பு இல்லாததால் பல்லுக்கு அதிகம் வேலை இல்லாமல் போய்விட்டது. அனைத்தும் சூப்பராக இருந்தது.




சிக்கன் வகைகளில் புது வித மெனுக்கள் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. சிக்கன் 777  மற்றும் சிக்கன் ஆர் டி எக்ஸ்... இப்படி... என்னங்க....சிக்கன் வெடிக்குமா என கேட்க..அவர் கொஞ்சம் புன்னகை செய்துவிட்டு, நம்மூர் பள்ளிபாளையம்  சிக்கனைத்தான் அப்படி போட்டு இருக்கிறோம் என்றார்.

எல்லாம் திருப்தியாய் சாப்பிட்டு இருக்க, இருங்க சார்,,,சாதம் வச்சி ரசம் ஊத்திக்கிங்க என அன்போடு ஒரு பிளேட் சாதம் வைக்க அதை இருவரும் பகிர்ந்து கொண்டு ரசம் ஊற்றி சாப்பிட மிக சுவையாக இருந்தது.நான்வெஜ் சாப்பிட்ட பின் கொஞ்சம் ரசம் சாப்பிட்டு பாருங்கள்...அதை விட இன்பம் வேறு எதுவும் இருக்காது....நான்வெஜ் சாப்பிட்ட வயிற்றின் ஜீரணத்திற்கு ரசம் சூப்பராக இருக்கும்...

நன்றாய் திருப்தியாக சாப்பிட்டு வெளியே வர வெயில் சுள்ளென்று அடித்தது..வெயிலுக்கு இதமாக ஏதாவது குடிக்கலாமே என்று கிளம்பி விளக்குத்தூண் சென்று பேமஸ் ஜிகர்தண்டாவில் ஒரு கை சாரி...ஒரு வாய் பார்த்தோம் இருவரும்.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Friday, September 19, 2014

கரம் - 15 (19.9.2014)

மேயர் தேர்தல் 


நேற்று கோவையில் மேயருக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.நாம தான் ஜனநாயக கடமையை செவ்வனே செய்வதில் வல்லவர்கள் ஆயிற்றே..அதனால் ரொம்ப சீக்கிரமா பத்து மணிக்கு போனா ஓட்டுச்சாவடி இப்ப இருக்கிற தியேட்டர்கள் போல காத்து வாங்கிட்டு இருக்கு...மக்கள் யாருக்கும் இண்ட்ரஸ்ட் இல்ல போல...சீக்கிரம் ஓட்டு போட்டுட்டு வந்துட்டேன்...போன தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியும் திருவிழா போல இருந்துச்சு..ஆனா நேற்று சுத்தம்...கட்சிக்காரங்களே ஒரு ஈடுபாடு இல்லாம தான் இருந்தாங்க....ஆளுங்கட்சியில் பணப்பட்டுவாடா பக்காவா நடத்திட்டதா ஒரு நியூஸ் வேற....இந்த மாதிரி இடைத்தேர்தல் நடத்தி ஏன் மக்கள் வரிப்பணத்தினை வீணாக்கணும்....பேசாமா ஆளுங்கட்சியே அன்னபோஸ்டா வந்திடலாமே.....கோவையில் இருக்கிற வாக்காளர் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் வாக்களிக்க செல்லவில்லையாம்...அப்புறம் எதுக்கு எலக்சன்..?

***********************************

சமீபத்தில் பார்த்த படங்கள்:
God's Own Country - மலையாளம்.
ரொம்ப நாளைக்கப்புறம் மலையாளத்தில் வந்த நல்ல படம்.ஒரு நாளில் மூன்று பேர் வாழ்வில் நடக்கும் சம்பவம் தான் கதை.பகத், சீனிவாசன், லால் இவங்க மூணு பேரை சுற்றியே படம்.ரொம்ப உணர்வுபூர்வமான கதை.படம் பார்க்கும் போது காட்சிகள் நம்மையறியாமல் நெகிழ வைக்கிறது.அடுத்தடுத்த திருப்பங்கள் என கதை நம்மை படத்தோடு ஒன்றச்செய்கிறது.பகத்பாசில் எப்பவும் போல அட்டகாசம் தான்.எந்தவித கேரக்டர்னாலும் அசத்தலாய் செய்கிற நடிகன்..கண்டிப்பாய் பார்க்கவேண்டிய படம்..

*****************************************

சலீம் - தமிழ்
”நான்” படத்தின் தொடர்ச்சியாய் வந்திருக்கும் இந்தப்படமும் கொஞ்சம் இண்ட்ரஸ்டாக இருக்கிறது.விஜய் ஆண்டனி இரண்டாவது ஹிட் அடித்திருக்கிறார்.மஸ்காரா பாடலும், உன்னைக்கண்ட நாள் முதல் பாடலும் நன்றாக இருக்கிறது.கொஞ்சம் திரில்லர்.இரண்டாவது பாதி விறுவிறுப்பாக செல்கிறது.படம் பார்க்கலாம்.

பதிவர் சந்திப்பு
உலக தமிழ்ப்பதிவர்களின் மூன்றாம் ஆண்டு சந்திப்பு மதுரையில் வருகிற அக்டோபர் மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது.வர விருப்பம் உள்ள பதிவர்கள் இந்த இணைப்புக்கு போய் பேரைப்பதிவு செய்துக்குங்க...ஜிகர்தண்டா தருவாங்களாம்...(டிவிடி இல்ல...ட்ரிங்க்...)



பதிவர் சந்திப்பு - மதுரை


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, November 11, 2013

பயணம் - வைகை அணை, ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டம்

வைகை அணை, தேனி மாவட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன் வடுகப்பட்டி வரைக்கும் போய்ட்டு வந்தேன்.அப்போ வடுகப்பட்டியில் இருந்து வைகை அணை 9 கி.மீ அப்படின்னு நெடுஞ்சாலைத்துறை போர்டு சொல்லவே, அங்கிருந்து வைகை அணை நோக்கி நம்ம சிங்கம் சீறிட்டது.

வைகை அணை செல்லும் வழியில் ஒரு சர்க்கரை ஆலை கண்ணில் தென்பட்டது. ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை. தற்போது பராமரிப்பு பணியில் அது இருப்பதால் அதிக கரும்பு வண்டிகளின் நெருக்கடி இல்லாமல் ரோடும் ஆலையும் அமைதியாக இருக்கிறது.

கொஞ்சதூரத்தில் வைகை அணையின் மீன் பண்ணை வரவேற்றது.மீன் பண்ணையினை பார்வையிட கால அவகாசம் குறைவாக இருந்ததால், வைகை அணையினை மட்டுமே பார்ப்போம் என்றெண்ணி சிங்கத்தினை ஓரம் கட்டிவிட்டு வைகை அணை நோக்கி சென்றோம்.வண்டி நிறுத்தும் இடத்தில் தேனிமாவட்ட சுற்றுலாத்தளங்கள் பற்றின ஒரு போர்டு இருக்கிறது.அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு எத்தனிக்கையில் வைகை அணையில் தற்போது குறைவாகத்தான் நீர் இருக்கிறது என்று சொல்லி வருத்தப்பட்ட நண்பரின் முகம் உடனே பிரகாசமடைந்தது அருகில் இருந்த கல்லூரி பஸ் ஒன்று பக்கத்தில் நிற்கவே.... உள்ளேதான் சுற்றிப்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என மனம் ஆசுவாசமடைந்தது. நுழைவு டிக்கட் 4 ரூபாய் தான்.அதைப்பெற்றுக்கொண்டு உள் நுழைந்தோம்.

முதலிலேயே டைனோசர் ஒன்று ஒய்யாரமாக நின்றுகொண்டு கரையின் இருபுறமும் மிரட்டிக்கொண்டிருந்தது.அணையின் சிறு மதகிலிருந்து வெளிவரும் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.பெரிய மதகினில் இருந்து தண்ணீர் வந்தால் அவ்வளவுதான்..அருகிருக்கும் ஊர்கள் அனைத்தும் வெள்ளக்காடாய் மாறி இருக்கும்.





அருகிலேயே பார்க் ஒன்று இருக்கிறது மிகப்பசுமையாய். சிறுவர்களுக்கென்று ஒரு ரயில் ஓடாமல் இருக்கிறது .அதை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர்.விரைவில் ரெடியாகிவிடும் என்றனர்.
கொஞ்ச நேரம் தண்ணீரின் அழகை ரசித்தபடியே அணை மேலே செல்ல ஆரம்பித்தோம்.மிகப்பிரம்மாண்டமான அணை சுவர்கள் வறண்டு கிடந்தது.ஆனால் தண்ணீர் வரும் வரத்து மிக பசுமையாக இருந்தது.அணையின் மேற்பரப்புக்கு சென்றவுடன் மிக அழகாக இருக்கிறது வைகை அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரின் பசுமை. இருபுறங்களிலும் இருக்கிற பசுமை மரங்கள் அனைத்தும் பார்க்க பரவசமா இருக்கின்றன.



தற்போது அணையில் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் நீரின் அளவு குறைவாகத்தான் இருக்கிறது.ஆனால் வெளியேறும் நீரின் வேகம் அதிகமாக இருக்கிறது.அணையின் நாற்புறங்களும் காண நன்றாகவே இருக்கின்றன.
அப்புறம் அணை மேலே எப்பவும் போல தனிமை வேண்டி காதல் பறவைகள்.பார்க்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.கீழிறங்கி வந்தால் பார்க்கிலும் பறவைகள்...மரத்திலும்....தரையிலும்...
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அக்கம் பக்கம், சுற்று வட்டார மக்கள் என கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.சுற்றுலாவாசிகளுக்கு ஏற்ற இடம்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பாயும் வைகை நதியில் இந்த அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது.மதுரை மற்றும் சுற்றுப்புற மக்களுக்காக குடிநீர், விவசாயத்திற்காக கட்டப்பட்டது..வரலாறை சொல்லணும்ல...
எல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு வருகையில் அங்கே தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு அம்மணியிடம் இருக்கிற மீன்களை ஜிலேபியும் உளுவையும் (ஒரு ஒண்ணரை கிலோ தேறும்)  குறைவான விலையில் வாங்கிக்கொண்டு கிளம்பினோம்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Saturday, October 19, 2013

பயணம் - அதிசயம் தீம்பார்க், மதுரை

                    ஆயுத பூஜை விடுமுறை தினங்களில் எங்காவது போலாமே அப்படின்னு ஒரு இடத்துக்கு போனது மதுரையில் இருக்கிற அதிசயம் தீம் பார்க். திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில் அதிசயம் தீம் பார்க்கின் ஒன்றிரண்டு விளம்பர போர்டுகள், இதைக் கண்டவுடன் இன்னும் இதயத்துடிப்பும் ஆவலும் அதிகமானது.மதுரையின் நுழைவாயிலான பரவை என்கிற ஊர் வந்தவுடன் கொஞ்ச தூரத்தில் அதிசயம் தீம் பார்க்கினை அடைந்தோம்.ஆரவாரமின்றி பரபரப்பின்றி இருந்த கார் பார்க்கிங்கில் சில பல கார்கள் தத்தம் உறவினர்களை உள்ளே அனுப்பிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.நாங்களும் ஓரமாய் நிறுத்திவிட்டு உள்ளே செல்ல ஆயத்தமானோம்.

           
         தீம்பார்க்கின் உள்ளே நுழையும் குழந்தைகளை,  சிறுவர்களை, பெரியவர்களை கவரும் (மிரட்டும்) வண்ணம் ஒரு கொரில்லா குரங்கு சிலை நம்மை வரவேற்கிறது.அடுத்தபக்கம் தீம்பார்க்கின் ஒட்டு மொத்த மினியேச்சர் மாடல் ஒரு கண்ணாடி பேழைக்குள் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

  நெரிசலே இல்லாத டிக்கட் கவுண்டரில் எங்களுக்குண்டான டிக்கெட்டை பெற்றுக்கொண்டு (ரூ 500 பெரியவங்களுக்கு, ரூ 300 குழந்தைகளுக்கு)  உள்ளே  நுழைந்தோம்
              
                      பலத்த ஆச்சரியத்துடன் வந்த எனக்கு அதிசயம் காத்துக் கொண்டிருந்தது. வெறிச்சோடிக்கிடந்த தீம்பார்க் என் ஆவலை ஆயுட்குறைவாக்கியிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்களின் தலை மட்டுப்பட ஆரம்பித்தது.பரந்து விரிந்து கலர்புல்லாய் காட்சியளித்த வாட்டர் கேம்ஸ்கள் ஒரு சில ஆட்களால் விளையாடப்பட்டுக் கொண்டிருந்தது.சுத்தி முத்தி பார்த்தாலும் இருநூறுக்கும் குறைவான ஆட்களே மையம் கொண்டிருந்தனர்.




            
                 ஒவ்வொரு விளையாட்டிலும் பெயரளவுக்கு மட்டுமே தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.அதிலும் ரப்பர் டூயுப்களை இட்டு சந்தோசத்தினை அனுபவித்துக்கொண்டிருந்தனர். அடிக்கிற வெயிலில் தண்ணீரின் குளுமை மாறி சுடு நீராய் ஆரம்பித்து சீக்கிரம் ஆவியாகிக் கொண்டிருந்தது இருக்கின்ற கொஞ்சநஞ்ச தண்ணீரும்.மேலிலிருந்து கீழ் சறுக்கி வரும் விளையாட்டினை கொண்டாட ஒவ்வொருவரும் ரப்பர் ட்யூப்கள், ரப்பர் பேடுகள் சுமந்து கொண்டு மேலேறிக்கொண்டிருந்தனர்.தீம்பார்க்கின் வேலையாட்கள் இருவர் ஒவ்வொரு இடங்களிலும் இருக்கிற கொஞ்ச தண்ணீரிலும் வலை போட்டு பிடித்துக்கொண்டிருந்தனர் சேர்ந்துவிட்ட மிதந்த குப்பைகளை...


   
பெரிய பெரிய தீம்பார்க்குக்களில் வீகா லேண்ட், பிளாக் தண்டர் போன்றவைகளில் விளையாண்ட அனுபவம் இருப்பதால் என்னவோ இங்கு இந்த நிகழ்வுகளைக்கண்டதும் மனம் வாடிப்போனது. எதிர்பார்ப்பில் வந்த எனக்கு கொஞ்சம்...கொஞ்சமல்ல ..நிறைய ஏமாற்றமே.அதிலும் அம்மணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இல்லாமல் போனது மிக வருத்தமே.....
               வந்ததுக்காக கொடுத்த காசுக்காக நாமும் தண்ணீரில் இறங்குவோம் என்றெண்ணி லாக்கர் வாங்கி அதில் துணிமணிகளை பொதித்துவிட்டு நீச்சல் டிரஸ்ஸில் (சத்தியமா டூ பீஸ் தான்.....) செயற்கை அலை வரும் வேவ் குளத்தில் நீராட ஆரம்பித்தேன்.அங்கும் குறைவான தண்ணீரே...அடிக்கிற வெயிலுக்கு இதமாய் இருக்கட்டுமே என்று நீர்யானையாய் தண்ணீரில் மூழ்கியும் மூழ்காமலும் கிடந்தேன்.வருவதும் போவதுமாக இருந்த அம்மணிகளை ரசித்தவாறே தண்ணீரில் தவளையாய் கிடந்தேன்

       
பசிக்கிற நேரம் வரவும் ஈரத்துடனே சாப்பாட்டு இடத்திற்கு செல்ல, அங்கே வெஜிடபிள் பிரியாணியுடன் ஓடு உரிக்காத முட்டையுடன் வைத்து கொடுத்துக்கொண்டிருந்தனர்.(விலைக்குத்தான்) எங்கள் பங்கிற்கு வாங்கிக்கொண்டு டேபிளை அடைந்தோம்.முட்டையை உரித்து அதை வெஜிடபிள் பிரியாணியில் வைத்து அசைவ பிரியாணியாய் சாப்பிட ஆரம்பித்தோம்.


           
தண்ணீர் குறைவான காரணத்தினால் அதிகமாய் விளையாட வாட்டர் கேம்ஸ்களில் ஈடுபாடு இல்லாததால் ட்ரை கேம்ஸ் ஆட கிளம்பினோம்.ராட்டினம், கப்பல், ஸ்விங் இது போன்று நிறைய இருக்கின்றன.இயங்குகின்ற விளையாட்டு சாதனங்களை விட பழுது பட்டிருக்கிற சாதனங்கள்தான் அதிகமாக இருக்கின்றன.எது ஓடக்கூடியதோ அதிலே அனைவரும் பயணித்தோம். பாதுகாப்பு என்பது கொஞ்சம் கேள்விக்குறியாக இருக்கிறது அனைத்து விளையாட்டு சாதனங்களிலும்.ஆனாலும் ரசிக்க வைக்கிறது ஒரு சில விளையாட்டுக்கள்.








இருக்கிற விளையாட்டுக்களை விளையாண்டு விட்டு திரிலியம் என்கிற போர்டு பார்த்து அங்கே சென்றோம்.மினி தியேட்டர் அது. சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் பார்த்த 6டி, 7டி காட்சிகளை இங்கு 2டியில் காட்ட மனம் இன்னும் பாதிப்படைந்தது.ஆனாலும் ரசிக்க வைத்தது ஒரு சில காட்சிகள்.புதிதாய் காண்பவர்களுக்கு இது ஒரு அதிசயமே..

அடுத்து போனது போட் ஹவுஸ்...இதிலும் ஒரு சில போட்கள் உதவாக்கரையாக கரை மேல் இருந்தது அதிசயமே..அங்கிருந்த நீந்தக்கூடிய போட்களில் மிதிப்பவை, ஸ்டீரியங் போன்ற ஏதாவது ஒன்று உடைந்திருந்தது அதிசயமே..ஆனாலும் போட் எடுத்துக்கொண்டு நீர் மேல் பயணித்தோம் ஆபத்தில்லாமல்.ஏனெனில் மூன்றடிக்கும் குறைவான ஆழமே இருப்பது அதிசயமே...

 மொத்தத்தில் இது அனைத்தும் அதிசயமே..புதிதாய் வருபவர்களுக்கு மட்டும் இது அதிசயம்.குழந்தைகள் நீரில் விளையாட எப்போதுமே ஆசைப்படுவார்கள்.அந்த மாதிரி வரும் குழந்தைகளுக்கு  இந்த இடம் அதிசயமே.குடும்பத்துடன் வந்து விடுமுறையை கொண்டாட வருபவர்கள் திரும்பி இனி வருவது அதிசயமே..அதே மாதிரி தள்ளிக்கொண்டு, கரக்ட் பண்ணிக்கொண்டு வரும் நபர்களுக்கு இது ஆகச்சிறந்த அதிசயம்.(ஏன்னா மக்கள் யாரும் இருக்க மாட்டாங்க) பாதுகாப்பு வசதிகள் என்பது குறைவுதான்.விருப்பம் இருப்பவர்கள் சென்று வாருங்கள்.
               தண்ணீரில் திரில் ரைடு செல்பவர்கள் தத்தம் நலன் காப்பது முக்கியம்.வளைந்து வளைந்து செல்லும் அனைத்து வாட்டர் கேமிலும் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கிறது.சறுக்கிவிழும் பகுதியில் ஆங்காங்கே ஜாயிண்ட் செய்த பிளாஸ்டிக் போர்டுகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன.ஆட்களுக்கும் சேதாரம் ஏற்படுவது அடிக்கடி நிகழ்கிறது.
                     ஒரு வாட்டர் கேமில் மேலிருந்து ட்யூபில் வைத்து தள்ளிவிடுவார்கள் அது வழுக்கிக்கொண்டு வளைந்து வளைந்து வரும். ரொம்ப திரில்லிங்காக இருக்கும்.ஆனால் அந்த விளையாட்டினை பார்க்க நமக்கு படுபயங்கரமாக இருக்கிறது.அன்னிக்கு அப்படித்தான் ஒரு வாலிபர் மேலிருந்து ட்யூபில் அமர்ந்து வருகிறார்.இங்கிருந்து பார்த்தா வளைந்து வளைந்து வரும் அந்த கேமில் முதலில் ட்யூப் மட்டும் தான் வருது.ஆளைக்காணோம்.சற்று நேரத்தில் தவழ்ந்தபடி அந்த வளைவுகளில் தவ்வி தவ்வி வந்து தண்ணீர் குளத்தினுள் விழுகிறார்.அதற்குள் மேலிருந்து இன்னொருவர் வந்து அவர்மேல் விழுந்த காட்சி காமெடியாக இருந்தாலும் ஆபத்தாக இருக்கிறது.
              இது போன்ற இடங்களில் முதலுதவி பெட்டி அவசியம்.ஆனால் அது இருப்பதை காணமுடிவதில்லை. அதுபோலவே ரப்பர் ட்யூப்களும் பஞ்சராகி கிடக்கின்றன.அதற்கு மட்டும் உடனடி முதலுதவி அளிக்கப்படுகிறது. ஆம்....அதைத் தைப்பதற்கென்றே ஒரு குழு மரத்தடியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.மனுசங்களுக்கு மட்டும் இல்லை மருத்துவக்குழு

          
மொத்தத்தில் காசுக்கு பிடிச்ச கேடு......விலை கூட அதிகம்தான்.பராமரிப்பு கூட அதிசயமாக நடக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...