நேற்றைய
மதிய வேளை.நண்பரின் கார சாரமான சாப்பாடு வேண்டுகோளுக்கிணங்க சென்ற இடம் ஸ்ரீகெளரி மெஸ்.செந்தில்
குமரன் தியேட்டர் பின்பக்கம் உள்ள சந்தில் இந்த ஹோட்டல் இருக்கிறது.சின்ன கடை தான்.நீளமான
அமைப்பில் இருக்கிறது.ஒரே நேரத்தில் இருபது, இருபத்தைந்து நபர்கள் உணவருந்தக்கூடிய
வசதி இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் பார்சல் கிடையாது என்கிற அறிவிப்பு போர்டு கண்ணில்
மாட்டுகிறது.கடை ஓனர் உற்சாகமாய் வரவேற்க, உள்ளே தயாராய் மடித்து வைக்கப்பட்ட இலைக்கு
முன்னே அமர வைக்கின்றனர் கடை ஊழியர்கள்.உட்கார்ந்து இலையை விரித்து, தண்ணீர் தெளித்த
உடனே, ஒருவர் தட்டை எடுத்து கொண்டு வந்து நம்முன் நீட்டுகிறார்.மீனின் வகைகளில் வெவ்வேறு
சைஸ்களில் மூன்றும், சிக்கன் வகையில் ஒன்றும் இருக்கிறது.ஒவ்வொரு நாளுக்கும் மீனின்
வகை மற்றும் சைஸ் மாறுபடுமாம் அதே மாதிரி விலையிலும்.நேற்று கிழங்கா மீனும், கெளி என்கிற மீனும், கட்லா மீனும்
காட்சிப்படுத்தி இருந்தனர்.
அடிக்கிற
வெயிலுக்கு இன்னும் காரமா வேற சாப்பிடனுமா என்கிற யோசனை இருந்தாலும், டேஸ்ட்க்காக வாங்கித்தானே
ஆகனும் என்கிற கொள்கையின் அடிப்படையில், கட்லா மீனும், சிக்கன் கிரேவியும் ஆர்டர் செய்தோம்.இலையில்
பொரியல், கூட்டு, ஊறுகாய் என முதல் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாக, சுடச்சுட சாப்பாட்டை
ஒருவர் கொட்டியபடி…(அள்ளி வைப்பதெல்லாம் வேற ஸ்டைல் போல…)போக, இன்னொருவர், மீன் குழம்பா,
சிக்கன் குழம்பா என கேட்டபடியே வர, மீன் குழம்பினை கேட்க, கொஞ்சம் தாராளமாகவே ஊற்றினார்.சுடச்சுடச்
சாதத்துடன் மீன்குழம்பினை பிசைந்து சாப்பிட ஆஹா..மீன் குழம்பு அபாரம்.கொஞ்சம் புளிப்பும்,
காரமும், மீனின் வாசனையும் சேர்ந்து தூக்க, சாப்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் ..இல்லை இல்லை
அதிக அதிகமாய் உள்ளிறங்கியது.கடை ஊழியர்கள் இலையில் சாப்பாடு எப்படா குறையும் என்று
காத்துக்கிடப்பார்கள் போல, கொஞ்சம் குறைந்தாலும் உடனே வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர்.
அடுத்து
ஏற்கனவே வாங்கி வைத்து இருந்த சிக்கன் கிரேவியை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து ஒரு கவளம் வாயில் போட ..செம டேஸ்ட்..கெட்டியான பதத்தில்
தக்காளி,வெங்காயம் நன்கு வெந்து மசாலாவோடு மணந்து சிக்கனின் சாறும் சேர்ந்து இருக்க,
அதை சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட சுவையோ சுவை.சிக்கன் துண்டுகளோ நன்றாக மசாலாவில்
ஊறி பஞ்சு போன்று இருக்க, பிய்த்து சாப்பிட மிக மென்மையாய் இருக்கிறது.சாதம் குறைந்தவுடன்
மீண்டும் சாப்பாட்டை கொட்டிவிட்டு செல்கின்றனர்.சாப்பாடு ஒவ்வொரு முறையும் சூடாக இருப்பது
ஆச்சர்யமே. அதற்குள் மீன் வரவே, கொஞ்சம் கருகியபடி இருந்தாலும் மீனின் சுவையில் ஒன்றும்
மாற்றமில்லை.
சிக்கன்
கிரேவிக்கு அடுத்ததாய் சிக்கன் குழம்பினை சாதத்தின் மேல் ஊற்ற, மிக திக்காய் இருக்கிறது
குழம்பு.மசாலா, தேங்காய் சேர்த்து அரைத்து வைத்த குழம்புதான்.மிக சுவையாக இருக்கிறது.காரம்
உப்பு, மசாலா என எல்லாம் அளவுடனே இருக்க, சாப்பாடும் வஞ்சகம் இன்றி உள்ளே இறங்குகிறது.
வயிறு நிறைவது கூட தெரியாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்க,
ஒரு கட்டத்தில் போதும்னு நினைக்கிறேன் என நண்பரிடம் சொல்லியபோது, அவரிடமிருந்து ஒரு
பெரிய ஏப்பமே பதிலாய் வந்தது.மோரும் ரசமும் இன்னும் பாக்கி இருப்பது தெரிய இன்னும்
கொஞ்சம் அளவாய் சாப்பிடலாம் என்று ரசத்துக்கு கொஞ்சம் வாங்கி சாப்பிட, ரசம் அருமையோ
அருமை.தக்காளி, புளி காம்பினேசனில் ரசம் இன்னும் சாப்பிட தூண்ட, இதற்கு மேல் முடியாது
என்று எண்ணி இலையை மூடிவைத்துவிட்டு மெதுவாய் நகர்ந்தபடி வெளியேறினோம்.நல்லா காரஞ்சாரமா சாப்பிடனும்னா கண்டிப்பா போகலாம்.
சாப்பாடு
ரூ 70.மிக திருப்தியான சாப்பாடு சாப்பிடனும்னா கண்டிப்பா போகலாம்.சைட் டிஷ் வாங்கியே
ஆகணும்கிறது இல்ல.
காந்திபுரம் பஸ்ஸ்டாண்டு செந்தில் குமரன் தியேட்டர் பின்புறம் இருக்கிறது இந்த மெஸ்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்.