Showing posts with label காந்திபுரம். Show all posts
Showing posts with label காந்திபுரம். Show all posts

Tuesday, April 5, 2016

கோவை மெஸ் – ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை

                       நேற்றைய மதிய வேளை.நண்பரின் கார சாரமான சாப்பாடு வேண்டுகோளுக்கிணங்க சென்ற இடம் ஸ்ரீகெளரி மெஸ்.செந்தில் குமரன் தியேட்டர் பின்பக்கம் உள்ள சந்தில் இந்த ஹோட்டல் இருக்கிறது.சின்ன கடை தான்.நீளமான அமைப்பில் இருக்கிறது.ஒரே நேரத்தில் இருபது, இருபத்தைந்து நபர்கள் உணவருந்தக்கூடிய வசதி இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் பார்சல் கிடையாது என்கிற அறிவிப்பு போர்டு கண்ணில் மாட்டுகிறது.கடை ஓனர் உற்சாகமாய் வரவேற்க, உள்ளே தயாராய் மடித்து வைக்கப்பட்ட இலைக்கு முன்னே அமர வைக்கின்றனர் கடை ஊழியர்கள்.உட்கார்ந்து இலையை விரித்து, தண்ணீர் தெளித்த உடனே, ஒருவர் தட்டை எடுத்து கொண்டு வந்து நம்முன் நீட்டுகிறார்.மீனின் வகைகளில் வெவ்வேறு சைஸ்களில் மூன்றும், சிக்கன் வகையில் ஒன்றும் இருக்கிறது.ஒவ்வொரு நாளுக்கும் மீனின் வகை மற்றும் சைஸ் மாறுபடுமாம் அதே மாதிரி விலையிலும்.நேற்று கிழங்கா மீனும், கெளி என்கிற மீனும், கட்லா மீனும் காட்சிப்படுத்தி இருந்தனர்.

             அடிக்கிற வெயிலுக்கு இன்னும் காரமா வேற சாப்பிடனுமா என்கிற யோசனை இருந்தாலும், டேஸ்ட்க்காக வாங்கித்தானே ஆகனும் என்கிற கொள்கையின் அடிப்படையில், கட்லா மீனும், சிக்கன் கிரேவியும் ஆர்டர் செய்தோம்.இலையில் பொரியல், கூட்டு, ஊறுகாய் என முதல் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாக, சுடச்சுட சாப்பாட்டை ஒருவர் கொட்டியபடி…(அள்ளி வைப்பதெல்லாம் வேற ஸ்டைல் போல…)போக, இன்னொருவர், மீன் குழம்பா, சிக்கன் குழம்பா என கேட்டபடியே வர, மீன் குழம்பினை கேட்க, கொஞ்சம் தாராளமாகவே ஊற்றினார்.சுடச்சுடச் சாதத்துடன் மீன்குழம்பினை பிசைந்து சாப்பிட ஆஹா..மீன் குழம்பு அபாரம்.கொஞ்சம் புளிப்பும், காரமும், மீனின் வாசனையும் சேர்ந்து தூக்க, சாப்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் ..இல்லை இல்லை அதிக அதிகமாய் உள்ளிறங்கியது.கடை ஊழியர்கள் இலையில் சாப்பாடு எப்படா குறையும் என்று காத்துக்கிடப்பார்கள் போல, கொஞ்சம் குறைந்தாலும் உடனே வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர்.
                    அடுத்து ஏற்கனவே வாங்கி வைத்து இருந்த சிக்கன் கிரேவியை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து  ஒரு கவளம் வாயில் போட ..செம டேஸ்ட்..கெட்டியான பதத்தில் தக்காளி,வெங்காயம் நன்கு வெந்து மசாலாவோடு மணந்து சிக்கனின் சாறும் சேர்ந்து இருக்க, அதை சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட சுவையோ சுவை.சிக்கன் துண்டுகளோ நன்றாக மசாலாவில் ஊறி பஞ்சு போன்று இருக்க, பிய்த்து சாப்பிட மிக மென்மையாய் இருக்கிறது.சாதம் குறைந்தவுடன் மீண்டும் சாப்பாட்டை கொட்டிவிட்டு செல்கின்றனர்.சாப்பாடு ஒவ்வொரு முறையும் சூடாக இருப்பது ஆச்சர்யமே. அதற்குள் மீன் வரவே, கொஞ்சம் கருகியபடி இருந்தாலும் மீனின் சுவையில் ஒன்றும் மாற்றமில்லை.
                     சிக்கன் கிரேவிக்கு அடுத்ததாய் சிக்கன் குழம்பினை சாதத்தின் மேல் ஊற்ற, மிக திக்காய் இருக்கிறது குழம்பு.மசாலா, தேங்காய் சேர்த்து அரைத்து வைத்த குழம்புதான்.மிக சுவையாக இருக்கிறது.காரம் உப்பு, மசாலா என எல்லாம் அளவுடனே இருக்க, சாப்பாடும் வஞ்சகம் இன்றி உள்ளே இறங்குகிறது. வயிறு நிறைவது  கூட தெரியாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் போதும்னு நினைக்கிறேன் என நண்பரிடம் சொல்லியபோது, அவரிடமிருந்து ஒரு பெரிய ஏப்பமே பதிலாய் வந்தது.மோரும் ரசமும் இன்னும் பாக்கி இருப்பது தெரிய இன்னும் கொஞ்சம் அளவாய் சாப்பிடலாம் என்று ரசத்துக்கு கொஞ்சம் வாங்கி சாப்பிட, ரசம் அருமையோ அருமை.தக்காளி, புளி காம்பினேசனில் ரசம் இன்னும் சாப்பிட தூண்ட, இதற்கு மேல் முடியாது என்று எண்ணி இலையை மூடிவைத்துவிட்டு மெதுவாய் நகர்ந்தபடி வெளியேறினோம்.நல்லா காரஞ்சாரமா சாப்பிடனும்னா கண்டிப்பா போகலாம்.
                சாப்பாடு ரூ 70.மிக திருப்தியான சாப்பாடு சாப்பிடனும்னா கண்டிப்பா போகலாம்.சைட் டிஷ் வாங்கியே ஆகணும்கிறது இல்ல.
காந்திபுரம் பஸ்ஸ்டாண்டு செந்தில் குமரன் தியேட்டர் பின்புறம் இருக்கிறது இந்த மெஸ்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்.



இன்னும் கொஞ்சம்...

Tuesday, August 25, 2015

கோவை மெஸ் - பலகாரக்கடை, தள்ளுவண்டிக்கடை, காந்திபுரம், கோவை

             காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டுல இருந்து 100 அடி ரோட்டுக்கு செல்ல ஒன்றிலிருந்து 12 வரைக்கும் பல வீதிகள் இருக்கு.இதுல முதல் 7 வீதிகளில் செல்போன் கடைகளும், பிரிண்ட் பிரஸ்களும் இருக்கு.இந்த வீதிகளில் எண்ணிப்பார்த்தா ஐநூறுக்கும் மேற்பட்ட மொபைல் ஷாப்கள், பிரிண்ட் பிரஸ்கள் தான் இருக்கும்.பேக்கரி மொத்தம் பத்துலிருந்து 15க்குள்ள தான் இருக்கும்.ஒரு மாலை நேரத்தில் ஸ்னேக்ஸ் மாதிரி சாப்பிடனும்னா ஒண்ணும் இருக்காது.பேக்கரியில் தேங்காய்ப்பன்னும், எப்பவோ போட்ட முட்டை பப்ஸ்தான் இருக்கும்.அது நல்லாவே இருக்காது வேற....
                சாயங்கால நேரத்தில் மழை மெலிதா தூறும் போது சூடாய் ஏதாவது பலகாரம் சாப்பிட்டால் எப்படி இருக்கும்.அந்த மெல்லிய மண் வாசனையில், பலகாரங்களின் வாசனை மூக்கைத்துளைத்தால் எப்படி இருக்கும்...எண்ணெயில் பொரியும் கடலை மாவின் வாசனை, அதன் கூட வேகும் வெங்காயமோ, வாழைக்காயோ, அதன் சுவை எட்டுத்திக்கும் பரவி நம் மூக்கினை அடைந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட சுகானுபவத்தினை தருவது தான் இந்த தள்ளுவண்டிக்கடை... 



              காந்திபுரம் இரண்டாவது வீதிக்கும் மூணாவது வீதிக்கும் நடுவுல ஒரு ஜங்சன் இருக்கு.அந்த ஜங்சன் ரோட்டுல ஒரு வயதான பெண்மணி வடை போண்டா, பஜ்ஜி, முட்டைப்போண்டா என பலவித பலகாரங்கள் போட்டு விற்கின்றார்.நான் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக அங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்...எனக்கு அங்கு அதிகம் பிடித்த பலகாரம் என்னவெனில் முட்டை போண்டாதான்.வெந்த அரைமுட்டையை பஜ்ஜி மாவில் நன்கு தோய்த்து எண்ணையில் பொரித்து சுடச்சுட ஆவி பறக்க தட்டில் வைக்கும் போது அந்த போண்டாவின் கடலைமாவு சுவை நம் நாசியில் பரவும் பாருங்கள்.....அது சொர்க்கம்...
                             அந்த முட்டைப்போண்டாவை இரண்டாக பிளந்து சட்னி ஊற்றி தருவார்கள்...அந்த முட்டைப் போண்டாவை சுடச்சுட பிய்த்து அவர்கள் தரும் சட்னியில் தொட்டு சாப்பிட... ஆஹா....ஆஹா... அற்புதம்.ஒட்டுமொத்த நரம்புகளும் சுவை அரும்புகளை இன்னும் முளைக்கவிடும்..மீண்டும் இன்னொரு துண்டை சட்னியில் தொட்டு சாப்பிட இன்னும் கொஞ்சம் வளர ஆரம்பிக்கும் சுவை அரும்புகள்....
அப்புறம், வடை, போண்டா, பஜ்ஜி என ஒவ்வொரு அயிட்ட்த்திலும் ஒவ்வொன்றாய் டேஸ்ட் பண்ணி சாப்பிட்டுவிட்டு கை கழுவினால் மனமும் வயிறும் நிறைந்திருக்கும்...
                 அங்கு சாப்பிடும் நேரத்தில் பேச்சு கொடுப்பேன் அந்த பெண்மணியிடம்...கிட்டத்தட்ட 33 வருடங்கள் ஆகிவிட்டதாம் இந்தக்கடை போட்டு.....ஒரே இடத்தில் இன்று வரை தள்ளுவண்டிக்கடை தான் நடத்தி வருகிறார்கள்..சொந்த ஊர் மதுரையாம்..வேலை பிழைப்புக்காக இங்கு வந்தபோது கணவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடை போட ஆரம்பித்தவர், இன்று தன் மூன்று மகள்களுக்கு நல்ல இடத்தில் நகை நட்டு போட்டு கல்யாணம் செய்து வைத்து இருக்கிறாராம். இப்பொழுது தன் மகனுக்கு ஒரு பிரான்ச் ஒன்றை போட்டு கொடுத்து இருக்கிறார் கல்யாண் சில்க்ஸ் பின்புறம் கார்ப்பரேசன் கடைகள் உள்ள சந்தில்...
             விலை குறைவாகத்தான் இருக்கும் எப்பவும் அவரிடம்.இரண்டு வடை/ போண்டா ஐந்து ரூபாய்.டேஸ்ட் மிக நன்றாக இருக்கும்...
அந்தப்பக்கம் போனாலோ வந்தாலோ சாப்பிட்டு பாருங்கள்...

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 25, 2015

கோவை மெஸ் - பாண்டியன் பிரதர்ஸ் கம்மங்கூழ் ஸ்டால், பவர்ஹவுஸ், காந்திபுரம், கோவை

பாண்டியன் பிரதர்ஸ் கம்மங்கூழ் ஸ்டால், பவர்ஹவுஸ், காந்திபுரம் கோவை
                     பவர்ஹவுஸ் ரோட்டில் ஒரு தள்ளுவண்டியில் கம்மங்கூழ் நன்றாக இருக்கும் என கேட்டு இருப்பதால் ஒரு மதிய வேளை சுள்ளென்ற வெயிலில் சென்றால் குளிர்ச்சியாக இருக்குமே என இன்றைய உச்சிவெயிலில் அங்கு ஆஜரானேன்.கார்களும் டூ வீலர்களும் வரிசை கட்டி நின்று கொண்டிருக்க, அதன் உரிமையாளர்களோ தள்ளுவண்டியை சுற்றி கூட்டமாய் இருக்க ஓவ்வொருத்தர் கைகளிலும் காகித டம்ளர்கள்…கூடவே கடித்துக்கொள்ள ஸ்னேக்ஸ் வகைகளும்…..


                ஒரு தள்ளுவண்டி தான்..இரு பெரிய பானைகள்.வண்டிக்கு பக்கத்தில் ஒரு சின்ன டேபிள்.அதில் அனைத்து வகையான ஸ்னேக்ஸ்களும் வரிசை கட்டி இருந்தன.



                 ரொம்பவும் பிஸியாய் வரிசையாய் வைக்கப்பட்டிருந்த டம்ளர்களில் கொஞ்சம் தயிர், கூட வெங்காயம், பின் கம்மங்கூழ் என ஊற்றி ஆட்டத்தில் பிஸியாக இருந்த பாண்டியன் பிரதர்ஸ்களில் ஒருவரது அசாத்திய வேகம் கண்டு கண்ணிமைக்க மறந்து காத்திருந்தோம்.பிறகு கூட்டத்தில் எப்படியோ அரும்பாடு பட்டு அவரது கவனத்தினை ஈர்த்து இரு டம்ளர் ஆர்டர் செய்து விட உடனடியாய் கம்மங்கூழ் கைக்கு வந்தது.ரொம்ப திக்கான தயிரில், கெட்டியான கம்மங்கூழுடன், சிறிது வெங்காயம் போட்டு டம்ளர் வழிய வழிய நிறைந்த படி இருந்தது.கொஞ்சமாய் வாயில் வைத்து குடிக்க, அமிர்தமாய் இறங்கியது..அடிக்கிற வெயிலில் சில்லென்ற குளிர்ச்சியாய் தொண்டையை நனைத்தது. 
அதற்கு தொட்டுக்கொள்ளவும், கடித்துக் கொள்ளவும் வகை வகையாய் வைத்து இருந்தனர். வடாகம், சுண்டக்காய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல், குடல் வகைகள், மஞ்சள்,  சிகப்பு வர்ணங்களில் உண்டான குடல் வகைகள் என ரொம்ப வெரைட்டிகள் இருக்க, எல்லாத்திலும் ஒவ்வொன்றாய் எடுத்து ஒரு மிடக்கு கம்மங்கூழ், பின் ஒரு கடி என இப்படி ஒவ்வொரு மடக்காய் கொஞ்சம் கொஞ்சமாய் வழுக்கியபடியே உள்ளுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.நன்கு வெந்த கம்பு, கொஞ்சம் கெட்டியாய் கூழாய் குடிக்க சுவையோ சூப்பராக இருக்கிறது.

கம்பு உடலுக்கு மிகவும் நல்லது.அதுவும் இந்த வெயிலுக்கு மிகவும் நல்லது.அந்தப்பக்கம் போனீங்கன்னா ஒரு வாய் சாப்பிட்டு பாருங்க…டேஸ்டை நீங்களே உணர்வீங்க…..ஆரோக்கியமான உணவும் கூட....

இதுக்கு பக்கத்துல தமிழக அரசோட நெய்தல் மீன் வளர்ச்சி விற்பனையகம் இருக்கு...மாலை நேரத்துல போனிங்கன்னா மீன் வறுவல் ஒரு கட்டு கட்டலாம்.....
நெய்தல் மீன் விற்பனையகம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Saturday, February 9, 2013

கோவை மெஸ் - தக்‌ஷின் நவ்ஷிஜான் (Dakshin naushijaan) காந்திபுரம், கோவை

கோவை காந்திபுரம் கற்பகம் காம்ப்ளக்ஸ் எதிரில் இருக்கிற ரோட்டில் கொஞ்ச தூரம் சென்றால் இந்த ஹோட்டலை அடையலாம்.வீட்டினை ஹோட்டலாக மாற்றி இருக்கின்றனர்.வீட்டில் இருக்கின்ற அத்தனை பெட்ரூம் மற்றும் ஹால்களையும் தனித்தனி ரூம் ரூம் ஆக்கி டேபிள் போட்டு இருக்கின்றனர்...மெல்லிய இசை எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது..அத்தனை சுத்தமாக இருக்கிறது அனைத்தும்..
நண்பர்களுக்கு ட்ரீட் தர வேண்டி நானும் நண்பர் கோவை ஆவி அவர்களும் அங்கு சென்றோம்...இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதால் ஒன்று கூடினோம்...
மெனு கார்டினை பார்க்க எல்லாம் புதிது புதிதாக இருந்தது.ஒவ்வொன்றாய் ஆர்டர் பண்ணினோம்...
 
  
சிக்கன்ல நிறைய கபாப் இருக்கு..அதுல ஒண்ணு கல்மி டிக்கா கபாப்...பேரே வாய்ல நுழையமாட்டேன்குது..ஆனா சிக்கன் செம டேஸ்டா நுழையுது... எல்லாம் நார்த் இண்டியன் வகைகள்...அளவு குறைந்த பீஸ்கள்..ஆனால் டேஸ்ட் அதிகம்...அப்புறம் மொகலாய் பரோட்டா...இது செம சாஃப்ட்....சாப்பிட சாப்பிட நன்றாக இருக்கிறது...நம்மூர் புரோட்டா போல பிச்சி போட்டு குருமா விட்டு கலந்து கட்டி சாப்பிட முடியாது...தொட்டாலே பிய்ந்து வருகிறது அவ்ளோ சாஃப்ட்...செம டேஸ்ட்...

சிக்கன் காந்தாரி கபாப்...சிக்கன் புதினா கபாஃப் என ஏகப்பட்ட மெனுக்கள்...அனைத்தும் நன்றாக இருக்கிறது....
இது மட்டன் களாவாட்டி கபாஃப்...என்ன பேருன்னு வாயிலயே நுழையில... மட்டன்  வடை போன்ற அமைப்பில்...அவ்ளோ மெது மெதுன்னு...கையில் எடுக்கவே பிய்ந்து விழுகிறது..ஸ்பூனில் தான் எடுத்து சாப்பிட்டோம்...அவ்ளோ டேஸ்ட்..
வெஜிடபிளில் ஒண்ணு ஆர்டர் பண்ணினோம்...ஹனி ஃபிங்கர் சிப்ஸ்...இது ஃபிங்கர் ஃபிரையை தேனில் பிரட்டி ஃபிரை பண்ணியிருந்தனர்...செம டேஸ்ட்...

இது சிக்கன் ரோல் போன்ற மெனு...ஏதோ சொன்னோம்...ஒரு ட்யூப் போன்று வடிவில் சிக்கன்..இதுவும் செம டேஸ்ட்...மெனுக்கள் அனைத்தும் புதிதாய் இருக்கிறது .சாப்பிட சுவையாய் இருக்கிறது...பில் வரும் வரை..

அதுக்கப்புறம் மட்டன் பிரியாணி, ரைஸ் புலாவ்..என அடுத்த அயிட்டம்....புலாவ் நன்றாக இருக்கிறது...மட்டன் பிரியாணி மட்டன் தனியாக ரைஸ் தனியாக இருக்கிறது...பாசுமதி ரைஸ் தான்....சுவை நம்மூர் பிரியாணி போன்று இல்லை...சாப்பிட்டு பார்க்கலாம்...
சுவை அதிகம் ஈர்த்தது என்பதினாலும் நல்ல சூழல் அமைப்பினை கொண்டு இருப்பதாலும் தொடர்ந்து மூன்று முறை சென்றுவிட்டேன்...விலை கொஞ்சம் அதிகம் தான்..ஆயினும் சுவை நன்றாக இருக்கிறது.ஒவ்வொரு வார இறுதியிலும் பிரியாணி பபே, மற்றும் பஃபே திருவிழா இருக்கிறது....போனால் செம கட்டு கட்டலாம்...அதிக நான் வெஜ் வகைகள் பஃபே மெனுவில் இருக்கின்றன...

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Tuesday, January 1, 2013

கோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்..
 ------------------------------------------------------------
இந்த வருடத்தின் முதல் பதிவை கோவை மெஸ் வழியாக கொஞ்சம் அசைவத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.அப்பொழுது தான் வருடம் முழுக்க நல்லா புல் கட்டு கட்டலாம்.....என நினைக்கிறேன்...
------------------------------------------------------------

கோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை

இந்த கடை பகலில் மீன் வியாபாரமாகவும், சாயந்திரம் முதல் இரவு 10 மணி வரை ஒரு மினி ஹோட்டலாகவும் நடக்கிறது.மதியம் மீன் குழம்பு சாப்பாடு என தனி ஹோட்டலாக இந்த கடையின் பின்புறம் நடக்கிறது..

சாயந்திரம் நேரம் இந்த வழியாக செல்லும் போது அடிக்கும் மீன் வாசனை இந்த கடைக்கு நம்மை அழைத்து செல்லும்.ஏற்கனவே நிறைய தடவை இங்கு சாப்பிட்டு இருக்கிறேன்.
அனைத்து வித மீன்களும் மசாலாவுடன் ஊறிக் கொண்டு நம்மை வாங்க சொல்லி தூண்டும்.கூடவே விலைப்பட்டியலுடன்...

வரிசையா இருக்கிற மீனை வேடிக்கை பார்த்துட்டு அப்படியே கொஞ்சம் விலையையும் பார்த்துட்டு எது நல்ல பெரிய மீனா இருக்கோ அதை ஆர்டர் பண்ணினோம்..அதுக்கு முன்னாடி நண்டு சூப்.....சுட..சுட...அதை ஊதி ஊதி குடிப்பதில் தான் எத்தனை சுகம்....சின்ன கப் தான்...ஆனா விலை அதிகம் பண்ணிட்டாங்க...
இந்த கடையின் ஸ்பெசல் என்னவென்றால் நண்டு சூப்....மிக டேஸ்டாக இருக்கும்..தனியாக நண்டு வறுவலும் கிடைக்கும்...கடைக்கு நுழையும் முன்பே ஒரு பக்கம் பாத்திரத்தில் கொதித்துக்கொண்டு இருக்கும் சூப்..அடுத்த பக்கத்தில் எண்ணையில் நீந்தி கொண்டிருக்கும் மீன்கள்....

கடை ரொம்ப சின்னது தான்...ஆனா விற்பனை அமோகம்..எப்பவும் கூட்டம் இருந்துகிட்டே இருக்கும்.ஆர்டர் பண்ணிட்டு உட்கார்ந்தா சுடச்சுட நம்ம இடத்திற்கு வரும்..மீனுக்கு தொட்டுக்கொள்ள கொத்தமல்லி சட்னி வைப்பாங்க..அது செம டேஸ்டா இருக்கும்...
கடை முழுக்க கலர் கலர் விலைபட்டியல் இருக்கிறது.இட்லிக்கு மீன் குழம்பும் இருக்கிறது.தனியாக குழம்பும் பார்சல் கிடைக்கிறது.
டெய்லியும் விலை மாறும் மீனின் அளவை பொறுத்து...சுவை நன்றாக இருக்கும்.பார்சல் வாங்கி செல்லும் கூட்டம் அதிகமாக இருக்கும்.நண்டு சூப் சளி இருமல், ஜலதோசம் தீர இதை பருகினால் போதும்.

இந்த கடை காந்திபுரம் நூறடி ரோட்டில் இருக்கிறது கல்யாண் சில்க்ஸ் எதிரில் ஆறாவது வீதியின் நுழைவில்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்..


இன்னும் கொஞ்சம்...