Showing posts with label மலரும் நினைவுகள். Show all posts
Showing posts with label மலரும் நினைவுகள். Show all posts

Wednesday, February 24, 2016

மலரும் நினைவுகள் : தேர்தல் அனுபவங்கள்

தேர்தல் அனுபவங்கள்
                   என் பால்ய காலம்...அரை டிரவுசர் அணிந்து கொண்டு வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருந்த காலம்.ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.தேர்தல் அறிவிப்பு வந்தாலே போதும் எங்களது கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுவிடும்.ஒவ்வொரு கட்சிக்காரர்களும் அவரவர் கொடிக்கம்பங்களை கட்சி பெயிண்ட் அடித்து ஒரு பொதுவான இடத்தில் நட்டு வைத்து கட்சிக்கொடி தோரணங்களை குறுக்கும் நெடுக்குமாக கட்டி தொங்க விடுவர்.கொடிக்கம்பங்களும் அருகருகே இருக்கும்.பொதுவான இடம் என்பது ரோட்டோரப்பகுதி. பிரச்சாரத்திற்கு வரும் முக்கிய தலைவர்கள் வேனில் நின்றபடியே கொடி ஏத்துவார்கள்.
            அதற்காகவே அத்தனை கட்சி கொடி மரங்களும் ஒரு இடத்தில் அருகருகே வைத்து இருப்பார்கள்.ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டும் இறங்கி வந்து கொடி ஏத்துவர்.எங்கள் கிராமத்திற்கு எம்ஜியார் கருணாநிதி தவிர அரசியலில் உள்ள அத்தனை பிரபலங்களும் வந்து இருக்கின்றனர். அரசியல்வாதிகளை விட நடிகர்களை பார்க்கத்தான் கூட்டம் அலைமோதும்.எப்படியும் இரவு நேரத்தில் தான் ஒவ்வொரு கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்துவிட்டு வருவார்கள்.அவர்கள் வரும் வரை பிரச்சார பாடல்களுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்போம்.

                  சிறுவர்களான எங்களுக்கு ஊரிலுள்ள சுவர்களில் கட்சி சின்னங்களை வரைவது தான் பொழுது போக்கு.போதாக்குறைக்கு கட்சிக்காரர்களும் சொல்லிவிடுவார்கள் ரிசர்வ் பண்ணுவதற்கு.நாங்களும் கரிக்கட்டையை எடுத்து சின்னங்களை வரைய ஆரம்பித்து விடுவோம்.எங்களுக்கு அப்புறம் தான் பக்கா ஸ்பெசலிஸ்ட் ஓவியர்கள் வந்து சின்னங்களை வரைந்து வேட்பாளர் பெயர்களை எழுதிவைப்பார்கள்.அதற்கு முன் சுவர்களில் எங்கள் கைவண்ணம்தான்.
                      இப்போது இருக்கிற மாதிரி நிறைய கட்சிகள் அப்போது இல்லை.இருந்திருந்தாலும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.இரட்டை இலை, உதயசூரியன் அப்புறம் காங்கிரஸ்.இதுமட்டும் தான் தெரியும். சுயேட்சையாக ஒரு சிலர் நிற்பார்கள்.அவர்கள் அந்த தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள்.சட்டமன்ற தேர்தலா இல்லை பாராளுமன்ற தேர்தலா என்று கூட தெரிந்து இருக்க மாட்டோம்.ஆனால் எலெக்சன் என்று வந்துவிட்டால் போதும் எல்லா வகையான சின்னங்களையும் வரைய ஆரம்பித்து விடுவோம்.
                         ஆங்கில எழுத்து M மாதிரி இரண்டு மலையை போட்டு ஒரு வட்டம் போட்டு கதிர்களை வரைந்து விட்டால் உதயசூரியன் ரெடி..அதே மாதிரி இரட்டை இலையும் வரைவது ஈஸிதான்.ஒரு கோடு போட்டு இரண்டு இலைகளை வரைந்துவிட்டால் எம்ஜியார் சின்னம் ரெடி.கை சின்னம் வரைவது கூட மிக எளிதுதான்.கூட இருப்பவனின் வலதுகையை சுவற்றில் வைத்து அவுட்லைன் போட்டு விட்டால் கை சின்னம் ரெடி…
                        இப்படித்தான் கிராமத்தில் இருக்கிற சுவர்களில் கிறுக்கி வைத்துக் கொண்டிருப்போம்.இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.வீட்டுக்காரர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த  கட்சியின் சின்னத்தினை வரைய வேண்டும்.இல்லையெனில் மாத்து தான்..ஒரு சில வீட்டில் சின்னத்தினை மாற்றி வரைந்து விட்டு கன்னாபின்னா பேச்சுக்களை வாங்கியதும் உண்டு.
                 தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தால் போதும் ஊரெல்லாம் கட்சி கொள்கை பாட்டுகள் ஒலிக்க ஆரம்பித்துவிடும்.அதில் முன்னாடி இருப்பது திமுகவின் நாகூர் ஹனிபாவின் வெண்கலக்குரல் தான்.

கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே.

ஓடி வருகிறான் உதயசூரியன்…

பாளையங்கோட்டை சிறையினிலே…..பாம்புகள் பல்லிகள் நடுவினிலே….

இப்படி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்.அதிகம் முணுமுணுத்துக் கொண்டிருப்பது திமுகவின் பிரச்சார பாடல்களைத்தான்.ஆனால் எம்ஜிஆர் கட்சியைப் பொறுத்தளவு அவரது திரைப்பட பாடல்கள் தான் பிரச்சார பாடல்கள்.எம்ஜிஆரின் பாடல்கள் அது ஒரு தனி ரகம்.நாகூர் ஹனிபா குரல் ஈர்த்த அளவுக்கு எம்ஜிஆரின் பாடல்கள் ஈர்க்கவில்லை.மிகவும் கருத்து செறிந்த பாடல்கள் என்றாலும் அதென்னவோ பிடித்ததில்லை. எம்ஜிஆர் படம் மட்டும் விரும்பி பார்ப்போம்.கத்திச்சண்டை மட்டும் எங்களை இரு நாட்டு அரசர்களைப் விளையாட வைத்துக் கொண்டிருக்கும்.எம்ஜிஆர் சினிமாப் பாடல்கள் ஒலித்தாலும் விரும்பிக் கேட்டதில்லை.ஆனாலும் எம்ஜிஆரின் தனிப்பட்ட செல்வாக்கே அவரை தொடர்ந்து முதலமைச்சர் ஆக்கியது.
                  தேர்தல் நாள் அன்று ஊரே திருவிழாக்கோலம் தான்.ஆங்காங்கே கட்சிகளின் தற்காலிக பந்தல், கொடி மற்றும் தோரணைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.அவரவர் கட்சியின் பிரமுகர்கள் வாக்காளர் லிஸ்ட்டை வைத்துக்கொண்டு பூத் சிலிப் தந்து கொண்டிருப்பர்.நாங்களும் எங்கள் பங்குக்கு நாங்களும் பூத் சிலிப்பில் பேர் எழுதிக் கொடுத்துக்கொண்டு இருப்போம்.எப்பவும் போல ரேடியோ அலறிக்கொண்டிருக்கும்.பாதுகாப்புக்கு ஒரு சில காவல் அதிகாரிகள். வாக்குச்சாவடியை நாங்கள் படித்த பள்ளியிலேயே அமைத்து இருப்பார்கள்.பள்ளிக்கூட பென்ச் நாற்காலிகள் போட்டு நான்கைந்து அரசுப்பணியாளர்கள் அமர்ந்து வரிசையாய் வாக்காளர்களுக்கு சின்னங்களை கொடுத்து உள்ளே ஓட்டுப் போட அனுப்புவர்.விரலில் மை வைத்து ஓட்டு போட்ட பெருமிதத்துடன் வெளியில் வருபவர்களை குத்துமதிப்பாக விசாரித்து கொள்வோம்.
              வீட்டில் உள்ள வயசானவர்கள், நடக்க முடியாதவர்களை தூக்கிக்கொண்டு வாக்குச்சாவடிக்கு கொண்டு வரும் பழக்கம் அன்று முதல் இன்றும் தொடர்ந்து கொண்டு வருகிறது.பக்கத்து ஊர்களுக்கும் சேர்த்து எங்களது ஊரிலேயே வாக்குசாவடி அமைத்து இருப்பார்கள்.அதனால் அந்த ஊர்க்காரர்கள் வேன் வைத்து வாக்காளர்களை கூட்டி வந்து கேன்வாஸ் செய்வார்கள்.வாக்கு தினத்தன்று கூட வாக்குச்சாவடி முன் நின்று வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டுக் கொண்டிருப்பர் உள்ளூர் கட்சிக்காரர்கள்.உள்ளூரிலேயே ஒரு சில வீடுகளில் பந்தி பரிமாறிக்கொண்டு இருப்பார்கள்.ஓட்டு போட வருபவர்கள் மூக்கு பிடிக்க தின்றுவிட்டு தான் ஓட்டு சாவடிக்கு செல்வார்கள்.
                    வாக்கு போட்டவுடனோ அல்லது போடுவதற்கு முன்போ பதுக்கி வைத்து இருக்கும் சாராயங்கள் வெளிவரும் இவர்கள் போடுவதற்காக.எப்படியோ எதோ ஒரு வகையில் கேன்வாஸ் செய்துகொண்டே இருப்பார்கள்.கொஞ்சம் லேட்டாகிப் போகிறவர்களின் ஓட்டு இன்னும் இருக்குமா என்றால் அது சந்தேகமே….அதற்குள் கள்ள ஓட்டினை குத்தி இருப்பார்கள்.
              சிறுவர்களான எங்களுக்கு வேறு வேலை இல்லை.அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருப்போம்.எங்களுக்கு பிடித்த கட்சியின் பிட் நோட்டிஸை ஓட்டு போட வருபவர்களிடம் கொடுத்துக் கொண்டிருப்போம்.தேர்தல் முடியும் வரை எங்களுக்கு ஒரே ஜாலியாக இருக்கும்.தேர்தல் முடிந்தவுடன் யார் ஜெயிப்பார் என்று பந்தயம் கட்டுவோம்.என்ன இருந்தாலும் எம்ஜிஆர் தான் ஜெயிப்பார் என்று சொல்கிற அளவுக்கு எங்களுக்கு அவரைப்பிடித்து இருந்தது.அவர் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் என்பெதெல்லாம் தெரியாது,ஆனால் எம்ஜிஆரை பிடிக்கும்.
              தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் அன்று எம்ஜிஆரின் திரைப்படங்கள் எங்கள் ஊர் மைதானத்தில் திரை கட்டி போடுவர்.பாயை எடுத்துக்கொண்டு முன்கூட்டியே இடம்பிடிக்க சென்றுவிடுவோம்.

                  ஆக மொத்தத்தில் சிறுவயதில் தேர்தல் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான விசயமாகவே எங்களுக்கு தெரிந்தது.அப்படிப்பட்ட தேர்தல் நிகழ்வுகள் இன்று ஒரு சடங்காக ஆகி இருக்கிறது.எங்களை பால்ய காலத்தில் மகிழ்வித்த தேர்தல் இன்று சுத்தமாய் இல்லை.தேர்தல் என்றாலே பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கும் நிலைமைக்கு ஆட்சியாளர்கள் வந்துவிட்டனர்.பணத்தை எதிர்பார்த்து வாக்காளர்களும் மாறிவிட்டனர்.. எண்ணிலடங்கா கட்சிகள் பெருகிவிட்டன. வாக்குசீட்டுக்கு பதில் ஓட்டு மெசின் வந்துவிட்டது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என மாறி மாறி ஆட்சியாளர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துவிட்டனர். இலவசங்கள் மட்டுமே நாட்டை ஆளுகின்றன.ஒரு சில நல்லவைகள் நடந்தாலும் நாட்டின் பொருளாதாரம் உயர்கிறதோ இல்லையோ ஆனால் மாறி மாறி ஆளுகின்ற ஆட்சியாளர்களின் பொருளாதார நிலைமை மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது இன்றைய காலகட்டத்தில்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்



 


இன்னும் கொஞ்சம்...

Friday, April 10, 2015

மலரும் நினைவுகள் - சிம்னி விளக்கு

சிம்னி விளக்கு
            நாமக்கல் அருகே ஒரு கிராமத்திலுள்ள கோவிலுக்கு சென்றிருந்த போது அங்கே கடைவிரிக்கப்பட்டிருந்த பல பொருட்களில் இந்த சிம்னி விளக்கும் அடக்கம்.எப்பொழுதோ அடக்கமாகிவிட்ட சிம்னி விளக்கு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை பார்த்தவுடன் பயங்கர ஆச்சர்யம்....இந்த விளக்கு இன்னும் உபயோகத்தில் இருக்கிறதா என்று...அந்த ஆச்சர்யம் முடிவதற்குள் ஒரு வயதான பாட்டி இந்த விளக்கின் விலை கேட்டு வர தமிழகத்தின் ஒரு சில பகுதிகள் இன்னும் இருண்ட பகுதியாகவும் மின்வெட்டின் துணை கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தெரியவருகிறது.
              சிம்னி விளக்கு.....பார்க்கவே மிக சின்னதாகவும், அதில் பொருத்தப்பட்டு இருக்கிற கண்ணாடி குடுவையானது மேலும் கீழும் சிறுத்து நடுவில் கொஞ்சம் பெரிதாய் அகண்டும் ஒரு அழகான அம்மணியின் மேனியழகை ஒப்ப இருக்கும் இந்த குடுவை, அதில் மிக சரியாய் பொருத்தப்பட்டும், ஒரு சின்ன தூண்டுகோல் திரியை ஏற்றுவதற்கும், அடிப்பாகத்தில் எண்ணைய் ஊற்ற உருண்டைப்பகுதியும் இவற்றையெல்லாம் தாங்க ஒரு சின்ன அடிப்பகுதியும் இருக்கிறது.மேலும் அதிக கனமில்லாமல் இருக்கிற ஒரு அற்புத விளக்கு இது.
           முன்பொரு காலத்தில் இரவு நேரத்தில் வீடானது மிகவும் இருட்டாக இருப்பதை தவிர்க்க ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பு போல உபயோகப்படுத்தப்பட்ட விளக்கு இது.200 மில்லி சீமண்ணைய் இருந்தால் போதும் விடிய விடிய எரியும்.மின் வசதி இல்லாத காலத்தில் இந்த விளக்கும் அரிக்கேன் விளக்கும் தான் துணை.இந்த விளக்கின் துணை கொண்டு எத்தனையோ பேர் படித்து இருக்கின்றனர்.நானும் சிறு வயதில் இந்தவிளக்கில் தான் படித்திருக்கிறேன். இருட்டின் பயத்தை போக்க தலைமாட்டுக்கு அருகில் வைத்துக்கொண்டு உறங்கியிருக்கிறேன்.அருகில் உள்ள அடுத்த அறைக்கு செல்லும் போது இந்த விளக்குதான் துணையாய் இருந்திருக்கிறது.
                   பள்ளி முடிந்து வந்தபின் இந்த விளக்கின் கண்ணாடியை எடுத்து விபூதி போட்டு பளிச்சென துடைத்து எண்ணைய் ஊற்றி வைப்பது தினமும் வழக்கப்படியாயிருந்தது.கரண்ட் வசதி வந்தபின்னும் இந்த விளக்கு சின்ன சின்ன உபயோகத்திற்கு பயன்பட்டு வந்தது.இரவு நேரங்களில் திடீரென்று மின்சாரம் போய்விட்டால் உடனடியாக பொருத்தி வைக்கிற விளக்கு இது தான்.கொசுவர்த்தி மேட் வந்தபின்பு இந்த சிம்னி விளக்கின் கண்ணாடியின் மேல் ஒரு பிளேடு வைத்து அதில் கொசு மேட் வைத்து சிறிதாக திரியை வைத்து மெலிதாய் எரியும் படி செய்து கொசுவிரட்டியாக பயன்படுத்தியது ஞாபகத்தில் இருக்கிறது.
                 மண்ணெண்ணைய் அதிகம் புழக்கத்தில் இருந்தபோது இந்த விளக்கு அத்தியாவசியமானதொன்றாக இருந்தது.எப்பொழுது மண்ணெண்னணெய் க்கு தட்டுப்பாடு வந்ததோ அதில் இருந்து இந்த அற்புத விளக்கு மறைய ஆரம்பித்தது.கரண்ட் வசதியும் வர சுத்தமாய் ஒழிந்து விட்டது.ஆனாலும் இன்னும் கரண்ட் வசதியில்லாத  எத்தனையோ வீடுகளில் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எதேச்சையாய் இதை எங்காவது காணும்போது நம் ஞாபகத்திலும்....

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, January 12, 2015

மலரும் நினைவுகள் - பனங்கிழங்கு -


             
                   
             பனைமரத்தில் முற்றிய நுங்குகளை அப்படியே விட்டுவிட்டால் அது பழமாகிவிடும்.அதன் வாசம் ஊரையே தூக்கும்.நன்கு பழுத்த பனம்பழங்கள் தானே உதிர்ந்துவிடும்.சிறுவயதில்இந்த பனம்பழத்தினை பொறுக்க காலையிலேயே கிளம்பிவிடுவோம்.ஒவ்வொரு பனைமரமாய் தேடி எடுத்துவந்து நெருப்பில் சுட்டு சாப்பிடுவோம்.அதன் நெருப்பில் சுடும் மணம் எட்டுபட்டி கிராமத்தையும் தூக்கும்.அதன் சுவை ஆஹா...வாய் மூஞ்சியெல்லாம் பனம்பழத்தின் தடித்த சாறு வடவட வென ஒட்டிக்கொண்டிருக்கும்.பனங்கொட்டையை சப்பி சப்பி சாப்பிடும்போது அதன் நாறுகள் பல்லில் சிக்கி ஒரு சில இம்சையை கூட்டும்.அதை பல்லில் இருந்து எடுக்க கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருப்போம்.

                  சப்பிய கொட்டையை நன்றாய் கழுவி அதை ஒரு வித அழகுபொருளாய் செய்வோம்.பொம்மை போல் பனங்கொட்டையை ஆக்குவோம்.முடி உள்ள சாமியார் போலவும், பிசாசு போன்ற உருவம் கொண்டதுமாய் வரைவோம் அந்த பனங்கொட்டையை..வீட்டின் முகப்பில் மாட்டிவைத்து அழகுபடுத்துவோம்..


                      பனம்பழத்தினை எடுத்துவந்து பதியன்போட்டு ஒரு சில வாரங்களில் முளைத்ததும் பிடுங்கி எடுத்தால் பனங்கிழங்கு ரெடி..அந்த கிழங்குடன் கொட்டையும் இருக்கும்.அந்தகொட்டையை இரண்டாய் பிளக்கும்போது சீம்பு கிடைக்கும் அது இன்னமும் செம டேஸ்டாய் இருக்கும்.பனங்கொட்டையை வெட்டும்போது சீம்பு முகத்தில் எல்லாம் தெறிக்கும்.அதில் அழுகுன சீம்பு கூட அவ்வப்போது வரும்.அதையெல்லாம் துடைத்துவிட்டு கொட்டையை வெட்டுமிடத்தில் உட்கார்ந்திருப்போம்.பிறகு கிழங்கை எடுத்து வேகவைத்து திங்கும்போது நாறுகள் ஏகப்பட்டது வரும்.அதை லாவகமாய் பிய்த்து எறிந்து கிழங்கை சாப்பிடுவோம்.கிழங்கின் சுவை சூப்பராய் இருக்கும்.இப்போதெல்லாம் பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.தென்மாவட்டங்களில் மட்டும் இருக்கின்றன.பனைமரத்தின் பயன்கள பலப்பல..ஆனால் அழிந்துவரும் இனத்தில் இப்போது பனைமரமும்...



மற்ற மலரும் நினைவுகள்  மருதாணி

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 7, 2015

எலந்தை வடை - மலரும் நினைவுகள்


                    டவுசர் போட்ட காலத்தில் மிகவும் விரும்பிச்சுவைத்த ஒரு தின்பண்டம்.தாம்பாளத்தில் பாலிதீன் உறையில் மூடி பள்ளிக்கூட வாசலில் விற்றுக்கொண்டிருப்பார்கள் பாட்டிமார்கள்.கூடவே ஜவ்மிட்டாய், எலந்தை பழம் இப்படி...எலந்தை பழத்தை அளந்து போட ஒரு சிறு உழக்கு ஒண்ணு இருக்கும்.அதை வாங்கி அப்படியே சாப்பிடலாம்.ஒண்ணு ரெண்டுல புழு இருக்கும்.அதை பிதுக்கிவிட்டு சாப்பிடுவோம்.அப்புறம் எலந்தை பழத்தை ஒண்ணு ரெண்டாக அரைத்தோ இடித்தோ கொஞ்சம் இனிப்பு காரம் சேர்த்து வடை போல் தட்டி விற்பார்கள்.பத்து பைசாவிற்கு வாங்கித்தின்ற அனுபவம்.எலந்தை வடையை நன்கு சப்பிச் சுவைத்தபின் எஞ்சியிருக்கும் கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து சாப்பிட்ட அனுபவம் இன்னுமிருக்கிறது ஞாபகங்களாய்..


                     அப்புறம் வடையானது உருமாறி பாக்கெட்டில் எலந்தை ஜாம் ஆக வர அது இன்னும் டேஸ்டாக இருக்க அதிகம் சுவைக்க ஆரம்பித்த ஞாபகம் இன்னும் மிச்சமிருக்கிறது..இதன் கூடவே எலந்தைப் பொடியும் வர அதை கையில் கொட்டி நக்கிய அனுபவமும் உண்டு..பின் அதையே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி ருசித்ததும் உண்டு.எங்காவது பொட்டிக்கடை பக்கம் ஒதுங்கும் போது தொங்கிக்கொண்டிருக்கிற எலந்தை ஜாமை பார்க்கும்போது சிறுவயது ஞாபகங்கள் வர ஆட்டோமேடிக்காய் வாங்கி ருசிக்க தோன்றுகிறது.ரசித்து ருசிக்கையில் நிச்சயம்அதன் சுவை நம்மை பால்ய வயதிற்குள் கொண்டு செல்கிறது.
           
                    பழைய நினைவுகளை மீட்டித்தருகிறது. பள்ளி வகுப்பறைகளில் யார்க்கும் தெரியாமல் சாப்பிடுவதும், பின் கொட்டையை வாயிலிருந்து புயல் வேகத்தில் ஊதி ஜன்னலுக்கு வெளியே துப்புவதிலும், ஜன்னல் அருகிலில்லாத போது டவுசர் பாக்கெட்டில் போட்டு வைப்பதும், இல்லையேல் நம் எதிரியின் புத்தகப்பைக்குள் ஒளித்து வைப்பதுமான நினைவுகள் கண்டிப்பாய் எட்டிப்பார்க்கும்.இப்போது விலை ஒரு ரூபாய்.அதன் ருசியும் மணமும் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை நம் பால்ய கால நினைவுகளைப்போல்...
எங்காவது கிடைத்தால் ருசித்துப்பாருங்கள் உங்களின் பால்ய வயது எட்டிப்பார்க்கும்....கொஞ்சமாவது...

மற்ற மலரும் நினைவுகள்  ஆடியோ கேசட் 

                                                   பாட்டுப்புத்தகம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, July 7, 2014

ஏர்கன் (AIR GUN) துப்பாக்கி - மாஸ்டர் ஐ ( Dominant or Master Eye )

குறிப்பு : ஏர்கன் துப்பாக்கிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.ஒரு துப்பாக்கி வாங்க போனதோடு அந்த கடையின் சகவாசம் முடிந்தது,துப்பாக்கி வேண்டுபவர்கள் பதிவின் கீழே கொடுத்திருக்கும் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்து கொள்ளலாம்.பதிவு எழுதிய எனக்கு போன் செய்ய வேண்டாம்.நன்றி.                

கரூர் அருகே புகழூரில்  EID PARRY INDIA  லிமிடெட்டின் சர்க்கரை ஆலை இருக்கிறது.அருகிலிருக்கும் ஒரு ஊரின் பெயர் செம்படாபாளையம்.கிராமம்.என் அன்னையின் பிறந்த ஊர்.அங்கு என் தாத்தாவின் தோட்டம் இருக்கிறது.பால்யகால வயதில் எங்களது பள்ளி விடுமுறைகள் அனைத்தும் அங்கு தான் கழிந்திருக்கின்றன.சுற்றிலும் வேலியிடப்பட்ட தோட்டத்தின் அருகிலேயே ஓடும் வாங்கல் வாய்க்கால், தோட்டத்தில் இருக்கிற பெரிய கிணறும் ஒரு சில மீட்டர் தூரத்தில் பாய்கின்ற காவிரி ஆறும் எங்களுடைய மீன்பிடி வேட்கையை தணித்து கொண்டிருக்கும்.தோட்டத்தில் பறக்கிற பறவையினங்கள் எங்களின் கவட்டை வில்லுக்கு பலியாகி எங்களுக்கு விருந்தாகி இருக்கும். தென்னையில் கட்டப்பட்டிருக்கும் கள்ளு எங்களின் தாகத்தினை தீர்த்துக் கொண்டிருக்கும்.நெல் வயல் எலிகள் கள்ளுக்கு மேட்சாய் வறுக்கப்பட்டு தொட்டுக்கொள்ளப்பட்டிருக்கும்.அவ்வப்போது வயலுக்கு நீர்பாய்ச்சுவது, களை எடுப்பது, ஆடு மேய்ப்பது வேலிகளில் ஓணான் பிடிப்பது, மரம் ஏறுவது என சிறுவயதின் விடுமுறைக்காலங்களில் தோட்டமே சொர்க்கலோகமாக இருந்தது.
             காலம் உருண்டோட தொடர்புகள் சிறிது சிறிதாக விலகி எப்பவாவது விசேசங்களுக்கு மட்டும் அங்கு செல்வது வாடிக்கையாகிப் போனது.காலப்போக்கில் தாத்தா, அம்மாச்சி இருவரும் காலமாகிவிட தாய்மாமாவின் பராமரிப்பில் தோட்டம் இருந்து வந்தது.சமீபத்தில் அவரும் இறந்துவிட பொறுப்புகள் மாமனின் பையனிடம் வந்து சேர, சிறுவயதிலேயே வேட்டையில் ஈடுபட்டிருந்த என் மாப்பிள்ளை இப்போது முழு நேர விவசாயி ஆகிவிட்டான்.மேலும் தோட்டத்தில் புறா, கோழி, ஆடு, மாடு என வளர்த்தி ஒரு லாபமிக்க விவசாயியாக மாறிவிட்டான். சமீபத்தில் கோவை வந்திருந்தான்.எதற்காக என்றால் ஏர்கன் (AIRGUN) வாங்குவதற்காகவாம்.தோட்டத்தில் வளர்கிற புறாக்கள் அடிக்கடி கம்பி நீட்டிவிடுவதால் அதை அடிப்பதற்கு தேவைப்படும் என்பதற்காக.
             கோவை வந்த அவனை சுந்தராபுரத்தில் இருக்கிற FIRE ARMS என்கிற கடைக்கு கூட்டிச்சென்றேன்.கடையின் தோற்றமே மிக அழகாய் இருந்தது.அடுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் பில்லா படத்தினை ஞாபகப்படுத்தின.பழைய காலத்து துப்பாக்கிகள் பளபளப்புடன் போட்டோ பிரேமில் அழகாய் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.துப்பாக்கி குண்டுகள் ரகம் ரகமாய் ஷோகேஸில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.



              அப்போது ஒரு கனத்த நீண்டகுழல் துப்பாக்கியை தூக்கி வந்த ஒரு வாடிக்கையாளர் டேபிளின் மீது வைக்க எங்கள் முன்னால் அது பிரம்மாண்டமாய் இருந்தது.சின்ன பேட்டரி போன்ற குண்டினை போடக்கூடிய ரகம் அது.ராஜேஷ்குமார் நாவல்களிலும், சினிமாக்களிலும் மட்டுமே துப்பாக்கிகளை பார்த்து இருக்கிறேன்.மிக அருகில் இருக்க எடுத்து தூக்கிப்பார்க்கிறேன்...செம கனம்....தற்பாதுகாப்புக்காகவும் வேட்டைக்காகவும் வாங்கிய அதரபழசு வகையை சார்ந்தது.ஆனாலும் துப்பாக்கி அது.
              அதே போல் இன்னொருவர்...நூறாண்டு பழமை வாய்ந்த ரிவால்வர் அது.ஐந்து புல்லட் சேம்பர் கொண்ட ரகம்.சின்னது தான்.ஆனால் கனமோ அதிகம்.அதை வாங்கி ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன்.
              இப்பொழுது அரசாங்கம் துப்பாக்கிகளுக்கு லைசென்ஸ் வழங்குவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. சாமானியன் எவரும் அதை வாங்கிட முடியாது.பெரும் கோடிஸ்வரர் கூட வாங்க விருப்பப்பட்டால் அதிக பிரயத்தனம் செய்யவேண்டி இருக்கும். அதனால்தான் இந்தக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலான துப்பாக்கிகளை கொண்டு வருகிறார்கள்.
              ஏர்கன் துப்பாக்கிகள் ஆபத்தில்லாத லைசன்ஸ் தேவைப்படாத வகையைச் சேர்ந்தவை.துப்பாக்கி சுடும் பயிற்சி பெற இந்த வகை துப்பாக்கிகள் பயன்படுகின்றன.ஆனாலும் நம்ம ஆட்கள் வேட்டைக்காக இதனை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.மரம் மற்றும் ஃபைபரினால் ஆன துப்பாக்கிகள் தான் இருக்கின்றன.ஏர்கன் துப்பாக்கியை வாங்க முடிவு செய்து அதை பரிட்சித்துப்பார்க்க ஆரம்பித்தோம்.
              கடையின் உரிமையாளரான திரு வெங்கடேஷ் அவர்கள் துப்பாக்கியின் குண்டு செல்லும் தூரம், எவ்விதம் குண்டு போடுவது, எப்படி பராமரிப்பது போன்ற வழிமுறைகளையும் துப்பாக்கியை எவ்வாறு பிடிப்பது, பார்வையை எப்படி பொருளின் மீது குவிப்பது என்று சொல்லிவிட்டு துப்பாக்கியில் புல்லட்டை (pellet) நிரப்பி டர்ட்(DART) போர்டினை குறி பார்த்து சுட்டார்.ஒரு சில அட்ஜஸ்மெண்ட்கள் செய்து விட்டு மீண்டும் சுட்டார்.சரியான இடத்தினை துளைத்தது.
          அடுத்து எங்களின் முறை…. இதுவரைக்கும் துப்பாக்கியை தொட்டது கூட இல்லை. (ஏர்கன்னாக இருந்தாலும்) நரிக்குறவர் துப்பாக்கியில் குண்டு போடும் போது அருகில் இருந்து பார்த்தது. இப்போது தான் தூக்கி தோளில் வைக்கிறேன்.ஆப்ஜெக்டை(OBJECT) பாருங்கள் துப்பாக்கி குழல் வழியே என்கிறார்.நானும் பார்க்கிறேன் ஒன்றும் புலப்படவில்லை.எப்பவும் போல இடது கண்ணை மூடிவிட்டு குறி பார்க்கிறேன்.அந்த குழலில் பொருத்தப்பட்ட துளையில் ஆப்ஜெக்ட் அகப்படவே இல்லை.சார்...போர்ட் தெரியுது...ஆனா இலக்கு ஒண்ணுமே தெரியலை என்கிறேன்.


உடனே ஒரு கேள்வி கேட்டார்...
உங்களோட மாஸ்டர் ஐ எது என்று ?
இருவரும் பேந்த பேந்த முழித்தோம்.பின் அவரே விளக்க ஆரம்பித்தார்.ஒவ்வொருவருக்கும் ஒரு கண் மட்டுமே மிகுந்த சக்தி வாய்ந்ததாக இருக்கும்.அப்படிப்பட்ட கண் தான் மாஸ்டர் ஐ.(Dominant eye )
         ஒரு பொருளை துல்லியமாக குறிபார்த்து சுட மாஸ்டர் ஐ உதவி செய்கிறது.இடதுகண் மாஸ்டர் ஐ ஆக இருக்கும் பட்சத்தில் அவர் இடதுகை அவருக்கு நல்ல பலமுள்ளதாக இருக்கும்.இடது கை பழக்கம் அவருக்கு நல்ல பலனைத்தரும்.அதுபோலவே வலது கண் மாஸ்டர் ஐ யாக இருந்தால் வலது கை நல்ல பலனைத்தரும்.
எப்படி கண்டறிவது?
           உங்கள் ஆட்காட்டி விரலை தூரத்தில் ஏதாவது ஒரு பொருளின்மீது மையப்படுத்துங்கள்.இரண்டு கண்களாலும் பார்க்கும் போது ஆட்காட்டிவிரல் அந்தப்பொருளின் மீது மையமாக இருக்கும்.
இப்பொழுது வலது கண்ணை மூடிவிட்டு இடதுகண்ணால் பார்க்கவும்.பின் இடது கண்ணை மூடிவிட்டு வலதுகண்ணால் பார்க்கவும்.தொடர்ந்து செய்யவும்.எப்பொழுது அந்தப்பொருளின் மீது இருக்கிற ஆட்காட்டி விரல் நகராமல் இருக்கிறதோ அந்த கண் தான் மாஸ்டர் ஐ.

தெளிவா சொல்லணும்னா Master Eye  Dominant Eye இங்க பாருங்க

                 செய்து பார்த்ததில் எனக்கு இடது கண் தான் மாஸ்டர் ஐ.மீண்டும் துப்பாக்கியை ஏந்தினேன்.குண்டினை நிரப்பினேன்.கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது.இலக்கினை குறிபார்த்தேன்.போர்டில் இருந்த வட்டம் மட்டுமே தெரிந்தது.குழலில் இருக்கிற துளையில் இலக்கு தெளிவாக இருக்க, ட்ரிக்கரை அழுத்தினேன்.சிறு சத்தம் தான்.தோட்டா சீறிப்பாய்ந்தது.கணப்பொழுதில் இலக்கை விட்டுவிட்டு அருகில் குண்டுபாய்ந்தது.
முதல்முறைதான்...
இனி போகப்போக சரியாகிவிடும்.

ஏர்கன் வாங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :
திரு.வெங்கடாசலம் : 0422 2674685; 2672251; 98422 22540

வாங்குறவங்க...அப்படியே நம்ம பேரை சொல்லுங்க....அப்பத்தான் நமக்கு வரவேண்டியது வந்து சேரும்.....ஹிஹிஹிஹி...

நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...

Saturday, June 28, 2014

கரம் - 14 ( 28.6.2014)

கரம்:
மலரும் நினைவுகள்
போன வாரம் எங்க கிராமத்துக்கு போயிருந்தேன்.வேறென்ன ...கிடாவெட்டு தான்.மாரியம்மன் திருவிழா.ரெண்டு கிராமங்களுக்கு இடையில் இருந்த தகராறினால் இந்த வருடம் ரொம்பத்தள்ளி திருவிழா கொண்டாடினார்கள். சிறுவயதில் கொண்டாடிய திருவிழா போல் இல்லை.கோவில் பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை.வீடே கதியென்று ஆகிவிட்டது.அதனால் நம்ம வீட்டு வாண்டுகளுக்கு ஏதாவது செஞ்சு தரணுமே அப்படின்னு ஒரு கிலுகிலுப்பை செஞ்சேன்.சின்ன வயதில் செய்து பார்த்தது.ஆனாலும் மறக்கவில்லை. சரியாய் செய்துவிட்டேன்.

தேங்காய் குரும்பியில் ஈர்க்குச்சியை சொருகி அதைச் சுத்தும் போது ஒருவித சத்தம் வரும்.அது கேட்க மிக இனிமையாய் இருக்கும்.அழுகிற குழந்தை கூட தன் அழுகையை நிறுத்தி விடும்.வேக வேகமாக சுத்தும் போது இன்னும் சத்தம் நன்றாக வரும்.நம்ம வாண்டுகளுக்கு ஒரே ஆச்சர்யம்..எங்க இருந்து சத்தம் வருதுன்னு...அதை விட ஆச்சர்யம்..நம்ம அம்மணி கூட அதை இன்னும் ஆச்சர்யமா பார்த்தது தான்..
கிராமங்களில் இது போன்ற சிறு சிறு விளையாட்டுகள் எப்பவும் இருப்பதுதான்.ஆனால் அது இப்போது மாறிக்கொண்டு வருகிறது என்பது வருத்தமே.

நுங்கு வண்டி, கிலுகிலுப்பை, சைக்கிள் ரிம் வண்டி, கில்லி, கோலிக்குண்டு, பனை காத்தாடி, பொன்வண்டு, வெட்டுக்கிளி ஜோஸ்யம் இப்படி எல்லாம் போய்விட்டது. சமீபத்தில் வந்த பூவரசம் பீப்பி படத்தில் கூட பொன்வண்டு காட்டியிருப்பார்கள்.அதைப்பார்த்ததும் இன்னும் ஞாபகம் அதிகமாகவிட்டது.
பொன்வண்டினை பிடித்து அதற்கு கோணக்கா இலையை தருவது, அது போட்ட முட்டையை பத்திரமாய் வைப்பது, கயிற்றில் கட்டி சுத்தும் போது அது பறப்பது, பொன்வண்டு தலைக்கு இடையில் கை நுழைத்து வெட்டுப்பட வைப்பது என எல்லாம் சிறு வயது ஞாபகங்கள்...

கிராமங்களில் இது போன்ற சிறு சிறு சந்தோசங்கள் குழந்தைகளை மகிழ்வித்தன.இப்போதெல்லாம் கிராமங்களில் கூட தொலைந்து விட்டன பால்ய கால விளையாட்டுகள்.நகரத்துக்குழந்தைகள் போல கிராமங்களிலும் வளர்வதுதான் இன்றைய ஆச்சர்யம்.

**********************************

சமீபத்தில் பார்த்த படம்:

ஒரு சில காட்சிகள் நெகிழ வைக்கின்றன
ஒரு சில காட்சிகள் நெளிய வைக்கின்றன..
தாத்தா ராஜ்கிரணின் நடிப்பில் நாம் கண்களை குளமாக்குகிறோம்.
கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும்.
”பாத்து பாத்து ” இந்தப்பாடல் மிகவும் பிடித்திருக்கிறது.அதிகம் கேட்கக்கூடிய பாடல்களில் இது இடம் பிடித்துவிட்டிருக்கிறது.
போன வாரம் கரூர் சென்றிருந்த போது திண்ணப்பா தியேட்டரில் ரொம்ப நாளைக்கப்புறம் செம க்யூ பார்த்தேன்...
நல்ல வசூலைத்தந்திருக்கிறது படம்..

மஞ்சப்பை ...கொஞ்சம் சாயம் போனாலும் உறுதியான தரமான பை......

பார்க்கலாம்....

******************************


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, March 19, 2014

கரம் - 13 ( 19.3.2014)

வாசித்தவை :
திருடன் மணியன்பிள்ளை..
            சமீபத்தில் படித்த புத்தகம்.ஒரு திருடனின் தன் வரலாறு.மிக சுவாரசியமான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தில் தான் செய்த திருட்டுக்கள், அதில் எப்படி மாட்டிக்காமல் தப்பித்தது, எப்படி போலீஸிடம் மாட்டியது என அனைத்தையும் சுவைபட கூறியிருக்கும் விதம் நம்மை புத்தகத்துக்குள் ஒன்றச் செய்கிறது.மைசூரில் ஒரு பெரிய கோடிஸ்வரனாக ஆனதும் கர்நாடக முதல்வருடன் ஹெலிகாப்டரில் பறந்ததும், மிக செல்வாக்காய் இருந்த சமயத்தில் ஒரே நிமிடத்தில் அனைத்தும் இழந்து ஓட்டாண்டி ஆனதையும் மிக சுவைபட சொல்லியிருக்கிறார்.திருடச்சென்ற இடத்தில் உயிரைக் காப்பாற்றிய விதம், திருடிய பணத்தில் மற்றவர்களுக்கு உதவிய விதம், திருடிக்கொண்டிருக்கும் போது மாட்டியவிதம் என படிக்க படிக்க செம திரில்லிங்காக இருக்கிறது.தன் வழக்கில் தானே வாதிட்டு வெற்றியடைவது, ஒரு திருடனாக இருந்தாலும் காவல் நிலையத்தில் பல வருடங்கள் பணியாற்றியது, விலைமாதர்களுடன் தொடர்பு, பல வீடுகளில் தான் செய்த திருட்டு ஆப்ரேசன்கள், இப்படி ஒவ்வொன்றையும் மிகவும் நகைச்சுவையாய் விவரித்து இருக்கிறார்.படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது.பெரிய புத்தகம் தான்.ஆனாலும் பக்கத்துக்கு பக்கம் படிக்க படிக்க இண்ட்ரஸ்டிங்.மொத்தப்பக்கங்கள் 592.மலையாளத்தில் ஜி ஆர் இந்துகோபன் எழுதியுள்ள இந்த புத்தகத்தினை குளச்சல் மு யூசுப் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.விலை 450.00

பார்த்தவை - 1
            நம்ம வீட்டுல 9 மணி ஆச்சுன்னா போதும் எல்லாரும் டிவி முன்னாடி ஆஜராகி விடுவாங்க.அந்த சீரியல் மியூசிக் சாங் போட்டாலே போதும் அப்படியே உருகிடுவாங்க.அப்பப்ப நடு நடுவுல அந்த புல்லாங்குழல் ஒலிக்குமே...சான்சே இல்ல....செம....நெஞ்சம் பேசுதே அப்படிங்கிற சீரியல்தான்.நல்ல ரொமாண்டிக் சீரியல்.ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டருக்கும், பக்கத்து வீட்டு விதவைப் பெண்ணுக்கும் ஏற்படும் காதல், அதைக் காண்பிக்கிற சுவாரஸ்யமான காட்சிகள் என நன்றாக இருக்கிறது.மொழி மாற்றம் செய்த சீரியலாக இருந்தாலும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.நம்மூர் சீரியல் மாதிரி மாமியார் மருமகள் கொடுமை, நாத்தனார் கொடுமை, பொண்டாட்டி கொடுமை, அவன் பொண்டாட்டி கூட இவன் தொடர்பு, இவன் பொண்டாட்டிகிட்ட அவன் தொடர்புன்னு காண்பிக்கிற கள்ள காட்சிகள், தங்கச்சியே அக்கா புருசனை கரெக்ட் பண்றது, அப்புறம் விஷம் வைக்கிறது, ஆக்சிடெண்ட் பண்றதுன்னு ஏகப்பட்ட நீட்டி முழக்கிய காட்சிகள், அப்படின்னு எதுவும் இந்த சீரியல்ல இல்ல.ஆபாசமாகவோ வக்கிரமாகவோ எதுவும் இல்ல.நன்றாகவே இருக்கு.பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிற அனைத்து சீரியலும் நன்றாகவே இருக்கு.இந்த சீரியல் போலத்தான் உள்ளம் கொள்ளை போகுதடா....இதுவும் செம ஹிட்.....(நம்மளையும் சீரியல் பார்க்க வச்சிட்டாங்கப்பா....)

பேசாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே ...
கண் பார்வை மெல்ல தூண்டில் வீசுதே ...

ஏ பூக்கள் எங்கு பூக்கும் போதும் காற்றில் வாசம் வீசுமே...
நான் பேச வந்த வார்த்தை யாவும் கண்கள் இன்று பேசுமே ...

சொல்லாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே ...
நில்லாமல் கண்கள் தூண்டில் வீசுதே ...

ஏ காலம் வந்து மாயம் செய்து நெஞ்சை மாற்றிப் போகுதே ...
என்னுள்ளே இன்று காதல் வந்து கொஞ்சி கொஞ்சிப் பேசுதே...

பேசுதே பேசுதே ஆஹாஹா நெஞ்சமே பேசுதே ஆஹாஹா
பேசுதே பேசுதே நெஞ்சம் பேசுதே ...........


பார்த்தவை - 2
நேற்று சன் டிவில கோயம்புத்தூர் மாப்ளே படம் போட்டிருந்தாங்க.நம்ம இளமைக்கால விஜய் தான் ஹீரோ (இப்பவும் அவரு இளமைதான்). ஹீரோயினா நம்ம தளபதி விஜயை முன்னேற்றுவதற்காக தொடர்ந்து பல படங்களில் தன் கவர்ச்சியை விநியோகம் பண்ணிய சங்கவி.அப்புறம் நம்ம கவுண்டர் கூட நடிச்சிருக்காரு கூடவே செந்திலும்...இதுல என்ன விசயம்னா நம்மகிட்ட ஏர்டெல் டிஷ் தான் இருக்கு.ரிமோட்ல இன்ஃபோ அப்படிங்கிற பட்டனை அமுக்கினா படத்தோட கதை, நடிச்சவங்க பேரு வரும்.அப்படித்தான் இந்த பட்டனை அமுக்கிய போது, நடிச்சவங்க லிஸ்ட்ல சில்க் ஸ்மிதா, செந்தில்னு வந்துச்சி.....அடப்பாவிகளா....ஒரே ஒரு பாட்டுக்கு ஆடின சில்க்கை ஞாபகம் இருக்கு, படம் புல்லா நடிச்ச(?) நம்ம விஜயையே மறந்துட்டாங்களே இந்த நார்த் இண்டியா பசங்க.....


ருசித்தவை :
கோணக்கா.....கோணப்புளியங்கா....
கொடுக்காபுளி....இப்போ வீட்டுக்கு போனபோது வயக்காட்டுல இருந்த மரத்தில் பறிச்சது இந்த கோணக்கா....சாப்பிட்ட போது ஞாபகங்கள் பின்னோக்கி...... சிறுவயதில் சாப்பிட்ட ஞாபகம்.ஊரில் இருக்கிற அத்தனை மரங்களிலும் ஏறியும் கொக்கி போட்டு பறித்தும் சாப்பிட்டிருக்கிறேன். ஆட்டுக்கு தழை வெட்டணும்னா இந்த மரத்துலதான் ஏறுவோம்.அப்ப லட்டு லட்டா தொங்குற கோணக்காவை பறிச்சி டவுசர்ல போட்டுக்குவோம்.வீட்டுக்கு வந்து பொறுமையா சாப்பிடுவோம்.செம டேஸ்டா இருக்கும்.இளஞ்சிவப்பு கோணக்கா தான் செம டேஸ்ட்டா இருக்கும்.கோணக்கா கொட்டைய எடுத்து தோலை அதை காயம்படாம உளிக்கனும்.அதுலயும் போட்டி வைப்போம் யாரு அதிகமா உளிக்கிறாங்கன்னு.அப்படி உளிச்சு எடுத்து தலைகாணிக்கடியில வச்சி தூங்குவோம், அடுத்த நாள் எதுவாகவோ மாறியிருக்கும் என்கிற நம்பிக்கையில்... தாயக்கட்டை விளையாடும் போது இந்த கொட்டையை வச்சி விளையாடுவோம்..........ம்ம்...மலரும் நினைவுகள்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, December 24, 2013

மலரும் நினைவுகள் - எனது கடிதம்

                 புத்தாண்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப வீட்டினுள் இருந்த பழைய பைகள், பெட்டிகளை ஆராய்ந்த போது கிடைத்த ஒரு கடிதம் தான் இது.வேலை தேடிக்கொண்டு இருந்தபோது என்னவளுக்கு எழுதின கடிதம்.இப்போது இதை இணைந்து இருவரும் படித்த போது ஏற்பட்ட மாற்றங்கள் எண்ணிலடங்காதவை.மேலும் எனக்கே ஆச்சர்யம்.. அட...இப்படியெல்லாம் எழுதி இருக்கிறோமா என்று...இது ஒரு மலரும் நினைவுகளே....
                  இந்தக்கடிதம் என்னையும் என் நம்பிக்கையும் சுமந்து கொண்டு உன் மடியில் வந்து விழுகிறது.நம் இருட்டின் முதல் நட்சத்திரம் இன்று முளைத்துவிட்டிருக்கிறது.எந்தத்துறையில் எனக்கு முன்னேற முடியும் என்று நம்பிக்கையிருக்கிறதோ, எந்த்த்துறை நமது லட்சியத்தினை வெகுவிரைவில் ஈடேற்றும் என்று நான் கருதுகிறேனோ அந்தத்துறையில் இன்று காலடி எடுத்து வைத்திருக்கிறேன்.

நான் இன்று முளைக்கத் துடிப்பது உனக்காகத்தான்...
கிளை விரிப்பதும், விழுதிறக்கவும் நான் தவிப்பது உனக்காகத்தான்..
நான் விஸ்வரூபம் எடுக்கத்துடிப்பது என் விலாசம் சொல்ல அல்ல
அந்தஸ்து பேதத்தால் தூரமாக்கப்பட்டுவிட்ட உன்னை தொடுவதற்குரிய நீளம் என் கைகளுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான்....

             உனக்காக என்னென்னவோ செய்யத் துடிக்கிறேன்..எனக்காக நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...உன்னால் எத்தனை எத்தனை காரணங்கள் சொல்லமுடியுமோ அத்தனை காரணங்களையும் சொல்லி காலத்தை நீட்டித்து விடு...இப்போதைய காத்திருப்பின் ஒவ்வொரு நிமிடமும் நமது பொற்காலத்திற்கான அஸ்திவார நிமிடங்கள்...


                  எந்த அந்தஸ்து பேதம் நம் காதலின் கண்களில் இப்போது விரலால் குத்துகிறதோ, அந்த விரல்களே நம் நாளைய மணமாலைகளுக்குப் பூத்தொடுக்கும் என்பது சத்தியமே.

               உன்னைப்பிரிந்து வந்துவிட்ட நான் தான் இப்போது ஆறுதலில்லாத பிரதேசங்களில் அலைந்து கொண்டிருக்கிறேன்..ஆனால் உனக்கு அப்படியில்லை...நீயும் நானும் நடந்து போன நமது தடம் பதிந்த பாதைகள் இன்னும் உன் பாதங்களுக்கு அருகிலேயே இருக்கின்றன...நீயும் நானும் ஒன்றாய்ப் பார்த்த வானமும் இன்னும் உன் தலைக்கு மேல்தான் இருக்கிறது.நீயும் நானும் ஆற்றங்கரை மணல் மேட்டில் ஒருவர் பெயரை ஒருவர் எழுதிப்பார்த்தபோது அவற்றை மனப்பாடம் செய்துகொண்ட நதி இன்னும் நம் பெயரை உச்சரித்துக்கொண்டேதான் ஓடிக்கொண்டிருக்கிறது.


அன்புக்குரியவளே...
              நம் சுவடுகள் உன் அருகில்.....இப்போது கூட நீ தனிமையில் இல்லை..நம் தடயங்களோடுதான் இருக்கிறாய்....
இங்கேயோ உன் நினைவுகளைத்தவிர எதுவும் பக்கத்தில் இல்லை....
               என் ஒவ்வோர் அடியையும் இங்கு அளந்து வைத்துக் கொண்டிருக்கின்றேன்.என் உழைப்பும், என் முயற்சியும், என் முயற்சியிலிருக்கிற தூய்மையும் வெற்றி என்கிற வார்த்தையை மட்டுமே என்னை உச்சரிக்க வைக்கும்.....கூடவே காதலோடு...

                  நான் எந்த மண்ணில் கனவு கண்டேனோ அந்த மண்ணிலேயே நிறைவேறும் நம் காதலின் அடுத்த படி...
நம்பிக்கையோடிரு....நீ ஒன்றும் அசோக வனத்து சீதையல்ல...மிதிலையின் சீதைதான்...வில்லொடிக்க வருவேன் விரைவில்...

ஆனாலும் காதலி....
             உன் ஞாபகங்களின் நெருப்பில் எனது கால்வாசி மேனி கருகிவிட்டது.லட்சியத்திற்காக எந்த ரணத்தையும் ஏற்றுச் சுமக்க நான் சித்தமாயிருக்கிறேன்...உன் கண்கள் எனக்கருகிலேயே இருந்து என்னைக் கவனித்துக் கொள்வதாய் ஒரு பிரமை எப்போதும் எனக்கிருக்கிறது.உன் பார்வைகளின் குளிர்ச்சி என் அடி நெஞ்சில் கிடந்து சில்லிடுகிறது.அந்த ஈர அனுபவத்திலேயே என் வலிகளும் வேதனைகளும் மறந்துவிட்டிருக்கிறது.
நாளைய வெளிச்சத்தினை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன் காதலின் துணையோடு....
            நான் நடக்க நடக்க உனக்கும் எனக்குமான இடைவெளி குறைந்துவிடும்...பிறகு அது மறைந்து விடும்...
அன்பே!
            இந்த காகிதத்தை உன் காதோடு வைத்துக்கேள்...என் மார்புத்துடிப்பு கேட்குமடி உனக்கு.....

கிசு கிசு :எப்படிலாம் எழுதி நம்ம அம்மணியை கரக்ட் பண்ணியிருக்கேன்......1997 ல ஆரம்பிச்ச லவ் 2004ல என்னை பெரும் சோகத்துல ஆழ்த்திடுச்சு....ஆமா...ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டோம்....ஹிஹிஹிஹி

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்




 நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, October 29, 2013

மலரும் நினைவுகள் - சந்தித்த நாள் 29.10.1999

சந்தித்த நாள் - 29.10.1999 - 29.10.2013


இந்த இனிய நாளில் என் இனிய நினைவுகளை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.கடந்த கால சுவடுகளை பார்க்கிற போது நம்மையும் அறியாமல் ஒரு வித ஈர்ப்பு வரும் அப்படிதான் இந்த கவிதையும்...

பொக்கிஷமா வச்சிக்கிட்டு இருந்த ஒரு பையினுள் துழாவியபோது கிடைத்த கணம்  ரொம்ப அருமை ..

இது ஒரு மீள் பதிவுதான்.ஞாபகார்த்தமா இருக்கட்டுமே அப்படின்னு இன்னிக்கு  இந்த பதிவு... சந்தித்த நாள் 


இதே மாதிரி இன்னொன்ணு கூட கிறுக்கியிருந்தேன்....இம்ப்ரஸ் பண்ண...

இஞ்சினீரியங் பயிலும்
என்னவளுக்கு
இதயத்தினை
இரும்பாய் படைத்துவிட்டான்
இறைவன்...
அதனால்தான் என்னவோ
இளகவில்லை
இன்னும்........

அந்த நாள் நினைவுகள் சுகமாக இருக்கின்றது இப்பவும்.வாழ்க்கையினை வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இந்த நினைவுகள் தான்.சுவாசமாய் நிறைந்திருக்கிறது என்றென்றும்...

எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்த இறைவனுக்கு நன்றி...

அப்புறம் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

புத்தாடை உடுத்தி ஜாலியா இருங்க...பார்த்து பட்டாசு வெடிங்க...
கவனம்...பக்கத்துல எப்பவும் ஒரு வாளி தண்ணீர் இருக்கட்டும்.அதே மாதிரி உடல் நலம் குன்றியவர்கள் முதியவர்கள், கர்ப்பிணிகள் இருந்தால் அந்த ஏரியாவில் அதிகம் வெடி வெடிக்காதீங்க...
நல்லபடியா கொண்டாடுங்க...

ஸ்வீட்ஸ் அளவா சாப்பிடுங்க...அதிகமா சாப்பிட்டு ஏதாவது வயித்துல கடா முடா பிரச்சினை வந்தால் தீபாவளி லேகியம் செஞ்சு சாப்பிடுங்க...
இஞ்சி, ஊறவைத்த தனியா மற்றும் சீரகம்  எல்லாவற்றையும் அரைச்சு வெல்லம் சேர்த்து கடாயில் கிளறி நெய் சேர்த்து லேகியம் பதம் வந்தவுடன் ஆறவச்சிடுங்க..அப்புறம் சாப்பிடுங்க...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Tuesday, September 3, 2013

மலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.

அம்மா....அந்த அம்மா இல்லை...என் சொந்த அம்மா... நான் பிறந்த கிராமத்துல ஒரு நாள் எதேச்சையா என்னோட அம்மாகிட்ட பேசிட்டு இருக்கும் போது அவங்க பிறந்த நாளைப்பத்தி சொன்னாங்க.அப்போதான் உரைச்சது நமக்கு.இதுவரைக்கும் ஏன் மறந்து போனோம் என்று மனம் வலித்தது.நாம மட்டும் வருசம் வருசம் தவறாம கொண்டாடுறோம்.அதே மாதிரி மனைவியோட பிறந்த நாள், அவங்க காதலியா இருக்கிற போதும் கொண்டாடி இருக்கிறோம்.இப்போ குழந்தைகள் ஆன பின்னாடி அவங்க பிறந்த நாளை கொண்டாடிட்டு இருக்கோம்.நம்ம கூட இருக்கிற நண்பர்களோட பிறந்த நாளை மறக்காம ஞாபகம் வச்சி கொண்டாடுகிறோம்.போன்லயோ, நேரிலோ இல்லேனா மெயில் ஃபேஸ்புக் இப்படி என்னென்ன வழிகள் இருக்கோ அத்தனைலயும் வாழ்த்துக்கள் சொல்லிடறோம்.ஆனா நம்மை பெற்ற தாய் பிறந்த நாளை கொண்டாடுகிறோமா இல்லேனா ஒரு வாழ்த்தாவது சொல்லி இருப்போமா என்று அன்னிக்குத்தான் மிக அதிகமாக வருத்தப்பட்டேன்.இப்போ சமீபத்துல அவங்க பிறந்த நாள் வர்றது தெரிஞ்சவுடன் கிராமத்துல இருக்குற அம்மாவிற்கு ஆனந்த அதிர்ச்சியினை அளிக்கலாம் என்று சொல்லாமலே கிளம்பினோம் வீட்டிற்கு.
      கரூர் சென்று சின்னதாய் அவர் பெயர் பொறித்த கேக் மற்றும் இன்ன பிற ஸ்வீட் வாங்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தோம்.என்னடா திடீர்னு சொல்லாம கொள்ளாம வர்றீங்க என சந்தோசத்தில் திக்கு முக்காடின அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு கேக் வெட்ட சொன்னோம்.

தன் வாழ்நாளில் முதன் முறையாக பிறந்த நாள் கேக் வெட்டும் அம்மாவை பார்த்த போது அவர்கள் இனி மேல் எதுக்குடா இதெல்லாம் என்று கேட்டாலும் சந்தோசத்தில் திக்குமுக்காடிய அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரவே இல்லை ஆனால் அவர் கண்களில் வெளியேறின கண்ணீர் மட்டும் மிகப்பெரும் ஆனந்தத்தை, அளப்பரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது..வெட்டிய கேக் துண்டுகளை அவருக்கு ஊட்டிய போது ஏற்பட்ட மகிழ்ச்சியினை விவரிக்க வார்த்தைகளே இல்லை.என் மகள் ஹேப்பி பர்த்டே வாழ்த்து பாடியபடியே அவருக்கு கேக் ஊட்ட இன்னும் மெலிதாகிப்போனது மனது.இந்த தருணம் என் வாழ்வில் மிக அரிதானதாகும்.இவ்வளவு நாள் எப்படித்தொலைத்தோம் என்கிற கேள்வி மட்டும் மனதை நெருடியது.
    இத்தனை வருடம் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் என்று தோணலாம்.கிராமங்களில் இது போன்ற பிறந்த நாள் நிகழ்வுகள் அரிதானவை.அதுமட்டுமல்ல…சினிமாவில் மட்டுமே பார்த்து ரசித்த பிறந்தநாள் விழாக்கள் ஆடம்பரமாக தெரிந்தனவே தவிர அதில் இருந்த அன்பு தெரியாமல் போய்விட்டது.வீட்டிற்கே தொலைக்காட்சி வந்தவுடன் தான் இந்த மாதிரி நிகழ்வுகள் தெரிய ஆரம்பித்தன.பணம் காசு புரள ஆரம்பித்தவுடன் தான் நடுத்தர வர்க்கத்தினரும் கொண்டாடினர்.எதுவும் இல்லாத ஏழை பாழைகள் என்ன செய்வார்கள். என்னைப்பொறுத்த வரை எனக்கு எட்டாக்கனியாக இருந்தது பணம், காசு.. கல்லூரி காலத்தில் என் பிறந்த நாளை நானே கொண்டாடினது இல்லை.யாரும் வாழ்த்தியதும் இல்லை.காதல் உண்டான பின்னாடிதான் வாழ்த்து அட்டைகளை பெற ஆரம்பித்தேன்.போனிலே வாழ்த்துச் செய்திகளை கேட்கவும், அவசர கால தந்தி செய்தியினை என் பிறந்த நாளில் வருடம் தவறாது பெறவும் ஆரம்பித்தேன்.அதுமட்டுமல்லாமல் படிக்கிற காலத்தில் நமக்கே காசு கிடைக்காது.அப்புறம் எங்கே கேக் வாங்குவது.எப்படி கொண்டாடுவது..என்னுடைய காலேஜ் வாழ்க்கைக்குப் பிறகு பெறும் போராட்டம்.நிலையான வேலை இல்லாமை, தொடர்ந்த காதல், வீட்டில் எதிர்ப்பு இப்படி நிறைய… அப்படிப்பட்ட சூழ்நிலையில் உழன்று கொண்டிருந்த எனக்கு எப்படி கொண்டாட முடியும்.?
     அப்புறம் சொந்த காலில் நின்று பெற்றோர் ஆசி இல்லாமல் காதல் திருமணம் செய்து இன்று ஏதோ ஒரு வகையில் முன்னேறி, அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டோம்.
அதற்கப்புறம் மாதம் ஒரு முறை வீட்டிற்கு செல்வது வாடிக்கையாகிப் போனது.தினமும் அம்மாவுடன் போனில் உரையாடி வசந்த காலத்தினை மீட்டெடுத்து கொண்டிருக்கிறோம்.இனி எங்களின் வருகை எப்போதும் அவர்களுக்கு ஆனந்தமே.அப்படி போன போது தான் அவர்களது பிறந்த நாள் தெரிந்து வருத்தப்பட்டேன்.ஆனால் இன்று கொண்டாடியதில் அனைத்தும் நிறைவேறிவிட்டது. இது போன்ற தருணங்கள் வாழ்வில் மிக அரிதானவை.ஒவ்வொரு வருடமும் எப்பவும் மீட்டெடுக்க முடியாத வசந்த நினைவுகள்.மிக சந்தோசமாக இருக்கிறது.வாழ்க அம்மா...என்றென்றும்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Friday, November 2, 2012

சந்தித்த நாள் - 29.10.1999 - மலரும் நினைவுகள்

 29 .10 .1999  - 29.10.2012
 இந்த இனிய நாளில் என் இனிய நினைவுகளை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.கடந்த கால சுவடுகளை பார்க்கிற போது நம்மையும் அறியாமல் ஒரு வித ஈர்ப்பு வரும் அப்படிதான் இந்த கவிதையும்...

பொக்கிஷமா வச்சிக்கிட்டு இருந்த ஒரு பையினுள் துழாவியபோது கிடைத்த கணம்  ரொம்ப அருமை .. (சரி நமக்கும் பதிவ தேத்த ஒரு விஷயம் கிடைத்து விட்டது என்ற சந்தோசம்தான் )
படிக்கிற காலத்துல கடித தொடர்பால் ஏற்பட்டது எங்க காதல்.அப்போ வெறும் கடிதம் தான்.முகம் தெரியாமலே இருவரும் காதல் கொண்டோம்.1997  இல் கடித தொடர்பு ஆரம்பித்து 1999 இல்  பார்க்கலாம் என்று முடிவெடுத்து சேலம் பேருந்து நிலையத்தில் முதல் முறையாக இருவரும் சந்தித்து கொண்டோம் .அப்போது ஏற்பட்ட எனது மனநிலையினை கவிதை என்ற பெயரில் வடித்த வரிகள்.
 

 29 .10 .1999

உள்ளங்களை பரிமாற்றி
உயிர்களில் கலந்தவர்கள்
இன்று
விழிகளை சந்தித்த நாள்...

முக்கனிகளுள்
முக்கியத்துவம் பெற்ற
மாங்கனிக்கு பெயர் போன
சேலம் மாநகரம்
எந்தன் இதயக்கனியை
தொலைத்துவிட்ட இடம்
பரபரப்பு மிக்க
பேருந்து நிலையம்...

எத்தனையோ பேர்க்கு நடுவில்
எதிர்பார்ப்புடன்
என்னவளை
எதிர் நோக்கிக்
காத்திருந்தேன்....

அவளா....
இவளா... என்று
இனிதே
இதயத்தினுள்....
நடுக்கத்துடன்
சிறு கலக்கத்துடன்....

என்னையுமறியாமல்
என்னுள்
ஏதோ மாற்றம்....

பணிப்பெண்களுக்கு
இடையில் வரும்
இளவரசியாய்....
விண்மீன் கூட்டங்களுக்கு
இடையில் வரும்
ஒற்றை நிலவாய்
அவள்....

அந்தி நிறத்து
கூந்தலைக் கொண்ட
தேவதையாய்
அவள்...

மை தீட்டும்
மலர் விழிகளுக்கு
மெருகூட்டுவதாய்
அமைந்த கண்ணாடியுடன்
அவள்...

பருவமெய்திய
பாலினும் வெண்மையவள்
பக்கத்தில் வந்தபோது
பனியின் குளிர்ச்சி
பரவசத்துடன்
பதில் கேட்டேன்
மஹாவா..?  என்று

அவளின்
செவ்விதழ்களில்
செந்தேன் மட்டுமல்ல
இன்னிசையும்
இனிதாய் வரும்
என்பதனை
அவளின்
"ஆம்" இல்
அறிந்து கொண்டேன்
இருவரும்
பேச மறந்து
சிலைஆனோம்

இரு ஜோடி விழிகளின்
பார்வையில்
இதயங்கள் பேசினாலும்
அதரங்கள்
அசையவில்லை
ஆயினும்
சூழ்நிலை உணர்ந்து
மௌனத்தை கலைத்தோம்

இந்த நாள்....
நெஞ்சில் நிறைந்தவள்
இன்று
விழிகளுக்கு
விருந்தளித்த நாள்....

கனவில் மட்டுமே
வந்து போனவள்
இன்று
கண்களுக்கு
காட்சியளித்த நாள்

கடிதங்களிலே
காதல் மணம்
வீசியவளின்
பூமுகம்
பார்த்த  நாள்

முகங் காணாது
ஏற்பட்ட காதலின்
முடிவாய்
இன்று
முகம் பார்த்த  நாள்...

நிழலை மட்டுமே
நேசித்த நான்
இன்று
நிஜத்தை கண்ட நாள்

நித்திரையில்
நித்தமும் வந்தவள்
இன்று
நேரில் வந்த நாள்...

வார்த்தைகளாய்
படித்த உன் குரலை
வசந்த கீதமாய்
கேட்ட  நாள்....

எனக்குள்ளே
உருவகித்து இருந்த
உருவத்தை
இன்று
உணர்ந்த நாள்...

உன்
நினைவுகளில்
நலிந்து போனவன்
இன்று
நலமான நாள்...

இதயத்தில்
தொடங்கிய காதல்
இன்று
விழிகளில்
வழிந்த நாள்...

காதல் வரம் கேட்டு
காத்திருந்தவனுக்கு
இன்று
தேவதையின்
தரிசனம்
கிடைத்த நாள்...

இந்த நாள்
என்
வாழ் நாளில் மீப்பெரு
வசந்தத்தை
வருவித்த நாள்...

இந்த காதல்
இனிமையாய்
நிறைவேற
ஆண்டவனை
இனிதே பிரார்த்திக்கின்றேன்...

இப்படி எழுதி என்னவளுக்கு வாழ்த்துக்களை சொன்னேன்.
 
 

கிசுகிசு  :
எப்படியெல்லாம் ஐஸ் வச்சி கவுத்தி இருக்கேன்னு பாருங்க ... இப்போ இப்படி எல்லாம் சொல்ல முடியுமா.....அதான் கல்யாணம் பண்ணியாச்சே ..ஹி ஹி ஹி 
 
நேசங்களுடன்
ஜீவானந்தம்.
 
இன்னும் கொஞ்சம்...

Wednesday, October 3, 2012

மருதாணி - மலரும் நினைவுகள்

மருதாணி....
இதை சொல்லும் போதே அம்மணிகளுக்கு ரொம்ப பிடிக்கும்.மருதாணியை பிடிக்காத அம்மணிகளே இல்லை எனலாம்.இது பெண்கள் மட்டுமல்ல என்னை போன்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஆண்களுக்கும் பிடிக்கும்.
எங்க ஊருல திருவிழா நடக்கும் போது ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொந்தகாரங்க எல்லாம் வருவாங்க.அன்னிக்கு சாயந்திரமே மருதாணி இலை பறிக்க கும்பலா குவிஞ்சு செடிய மொட்டையாக்கி எல்லாத்தையும்  ஆட்டுக்கல்லில் அரைப்பாங்க.
எங்க  வீட்டு மருதாணி செடி
இரவு சாப்பிட்டவுடன் உட்கார்ந்து ஒரு கும்பலே மருதாணி வைக்கும்.இரண்டு கைகளிலும் வச்சிக்கிட்டு ரத்த கண்ணீர் படத்துல எம் ஆர் ராதா வர்ற மாதிரி குஷ்டம் பிடிச்ச கைய வச்சிக்கிட்டு கொஞ்ச நேரம் வெளிய சுத்துவோம்.பாயில படுக்கும் போது மல்லாக்க போட்ட சிக்கன் மாதிரி படுப்போம்.ஆனா காலையில் பார்க்கும் போது கைல ஒரு பொட்டு மருதாணி இருக்காது.எல்லாம் போர்வையிலும் பாயிலயும் ஒட்டி இருக்கும்.அதைவிட ஒரு சில நேரங்களில் சிவந்திடுச்சா என வச்ச ஒரு மணி நேரத்திலேயே கைகளை கழுவி விடுவோம்.காலையில் எழுந்து யார் கை ரொம்ப சிவந்து இருக்கு, யாருக்கு பித்தம் இருக்கு அப்படின்னு ரொம்ப ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்போம்.அம்மணிகள் எல்லாம் உள்ளங்கைல ரவுண்ட் போட்டு சுத்தியும் சின்ன சின்ன புள்ளியா வைப்பாங்க.
     பசங்க ஒரே ரவுண்டு மட்டும் வைத்து புள்ளி வைக்காம தொப்பி போட்டு இருப்பாங்க விரல்களில்.ரொம்ப மகிழ்ச்சியான தருணங்கள் அவை.இதெல்லாம் கிராமத்துல மட்டும் தான்.இப்போ மெஹந்தி அப்படின்னு கண்ட கண்ட கலர்ல எல்லாம் வைக்கிறாங்க.இதனால் சில பேருக்கு அலர்ஜி வரும்.உடம்புக்கு சேராம போய்டும்.
மருதாணி ஒரு மருத்துவ குணம் வாய்ந்த ஒரு செடி.அழகுக்காக மட்டும் இதை பயன்படுத்தவில்லை.இதன் மூலம் பல்வேறு பயன்கள் ஏற்படுகின்றன.
உடல் சூடு தணிக்கவும் கைகளில் மருதாணி இடுவர்.இன்னும் பல தகவல்கள் நம்ம சங்க தலைவர் சங்கவி பிளாக்ல  விரிவா இருக்கு.
கடைகளில் விற்கும் மருதாணி பேஸ்ட்களில் இத்தகைய மருத்துவ குணங்களை எதிர்பார்க்க முடியாது.அலர்ஜி வரும் வாய்ப்பு இருக்கிறது.
 
இப்போ ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு செல்லும் போது மறக்காம அம்மா ஆசையா அரைச்சு என் கையில் வச்சிடுவாங்க.அதுல அன்பு எப்போதும் நிறைந்து இருக்கும். கை சிவக்குதோ இல்லையோ அம்மாவுடைய அன்பு சிவந்து இருக்கும்.
 
எப்பவும் என் கையில் மருதாணி வச்சி இருப்பேன்.நிறைய பேரு கேட்பாங்க.என்ன இது நீங்கலாம் இதை வைக்கிறீங்க அப்படின்னு.. அவங்களுக்கு தெரியுமா இது அம்மா அன்பை கலந்து வச்சது என்று.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...