Monday, July 14, 2014

பு(து)த்தகம் - சயாம் மரண ரயில்

சயாம் மரண ரயில்:
சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்

               சமீபத்தில் படித்த மனதை உலுக்கிய ஒரு நாவல்.இரண்டாம் உலகப்போர் நடக்கும் போது இந்தியாவை கைப்பற்ற ஜப்பான் தரைவழியாக தன் படைகளை அனுப்ப சயாமிலிருந்து (தாய்லாந்து) பர்மா வரை இருப்புப்பாதை அமைக்க திட்டமிட்டு அதை செயல்படுத்தியது.இந்த இருப்புப்பாதையை அமைக்க போர்க்கைதிகளைப் பயன்படுத்தியது ஜப்பான் ராணுவம்.போர்க்கைதிகளான ஆங்கிலேயர்களை தொழில்நுட்பவேலைக்கு அமர்த்திக்கொண்டது.சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற கடுமையான வேலைகளுக்கு ஆசியத் தொழிலாளர்களை பயன்படுத்தியது.அதில் பெரும்பான்மையோர் மலேசிய தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக இருந்த தமிழர்கள்.
அவர்களை ஏமாற்றியும், நகரங்களில் வாழ்ந்து வந்த மற்ற தொழிலாளர்கள், தெருவில் வருவோர் போவோர் என எல்லாரையும் வலுக்கட்டாயமாக பிடித்து சயாம் ரயில்பாதையை அமைக்க கொண்டு செல்லப்பட்டனர்.
              ரயில்பாதை அமைக்கும் போது சரியாக வேலை செய்யவில்லை எனில் ஜப்பானியர்களால் கொல்லப்படுவதும், மருத்துவ வசதிகள் இல்லாமல் உயிரிழப்பதும், பிரிட்டிஷ் படையினரின் குண்டுவீச்சுக்கு பலியாவதும், பலவித நோய்களுக்கு ஆளாகி இறப்பதும் என தமிழர்கள் கொத்துக்கொத்தாய் இறந்தனர்.ஜப்பானின் அடக்குமுறையினால் பணியிலேயே இறந்தவர்களும், தற்கொலை செய்துகொண்டவர்களும், தப்பித்துச்செல்ல முயன்று ஜப்பான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் இதில் அடக்கம்.

            அவ்வாறு சிக்கிக்கொண்ட ஒரு தமிழ் இளைஞனின் அனுபவங்கள்தான் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.கதைக்களனாக ரத்தம் வடியும் மரணப்பாதையில் நடந்த கொடுமைகள் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.போர்முடிவில் தான் தமிழர்களுக்கு விமோசனம் கிடைத்து அவர்கள் சுதந்திரகாற்றை சுவாசித்தனர்.ஆனால் அதற்குமுன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சத்திற்கும் மேல்.ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னமாகின, நிர்க்கதியாகிவிட்ட குடும்பம், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த பெண்கள் என இவர்களின் வேதனைகள் வெகுகாலம் நீடித்தது.
              மலேசிய எழுத்தாளர் சண்முகம் அவர்கள் சயாம் மரண ரயில் பாதை அமைத்த ஜப்பானியர்களால் தமிழர்கள் அடைந்த கொடுமைகளை நாவல் வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார்.படிக்க சுவாரசியமாக அதே சமயம் நம் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களை நாமும் அறிந்து கொள்ளும் ஒரு வரலாறாக இந்த புத்தகம் இருக்கிறது.தமிழர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
இந்த நூலை தமிழோசை பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.
பக்கம் – 304
விலை – 150.00

இந்த சயாம் மரண ரயில் புத்தகத்தை வெளியிட்ட திரு விஜயகுமார் அவர்களுக்கு நன்றி.

4 comments:

  1. வாசிக்க வேண்டிய நூல்... நன்றி...

    ReplyDelete
  2. ஆம். உலகத் தமிழர்கள் யாவரும் , வாசிக்க வேண்டிய நூல்.மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நாடோடிகள் கலைக்குழு பெயரில் "சயாம் பர்மா மரணரயில் பாதை" என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் ஒரு சோகம் தோய்ந்த கலை வடிவம் தான் "சயாம் பர்மா மரணரயில் பாதை (PG)" ஆவணப்படம்.

    Facebook : https://www.facebook.com/Nadodigalcreations
    IMDB : http://www.imdb.com/title/tt3883834/

    ஆவணப்படம் பற்றிய சில தகவல்கள் :

    தமிழுலகம் அதிகம் அறிந்திடாத ஒரு துயரம் சயாம்(தாய்லாந்து) - பர்மா மரணரயில் பாதை. சிங்கப்பூர் - மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட ரயில்பாதை ஒன்றை அமைத்தது. அதை அமைக்கும் பணியில் 30,000 பிரிட்டீஷ் - ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை இலட்சம் (மலாயாவின் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தொனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.


    ஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இக்கொடியச்சம்பவத்தில் 80,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் குறித்து 64 நிமிடங்கள் கொண்ட ஒரு ஆவணப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.


    மரணரயில்பாதையில் பணியாற்றி உயிருடன் மீண்டு, இன்று தங்களது வாழ்நாளின் இறுதிக்கணங்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவர்கள் பலர் அந்த நினைவலைகளை இப்படத்தில் பகிர்ந்துள்ளனர். மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படும் எவரின் உள்ளத்திலும் ஆழமான காயங்களை உருவாக்கும் பல சம்பவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் பங்கேற்க உரிய ஆவணங்கள்/ஆதாரங்களோடு இப்படம் நிறைவடந்துள்ளது.


    பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகளில் படப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இந்த இரயில்பாதையில் தம் அரிய பிறவியைத் தியாகம் செய்த இலட்சக்கணக்கான ஆசியத்தொழிலாளர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே அமைந்துள்ளது. இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக்காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.


    இப்பணியில் இறந்த (இழப்பீடு உள்ளிட்டச் சலுகைகளைப் பெற்ற) பிரிட்டீஷ்-டச்சு-அமெரிக்காவைச் சேர்ந்த 16000 வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC DAY என்ற பெயரில் நினைவுத்தினங்கள் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகின்றன. 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் பற்றி எவரும் கவலை கொண்டதில்லை.


    SIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.


    நன்றி.


    இப்படிக்கு,
    ராஜ்சங்கர்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....