Wednesday, July 23, 2014

சமையல் - அசைவம் - மீன் முட்டைப் பொரியல்

மீன் முட்டைப் பொரியல்
             இந்த வார ஞாயிற்றுக்கிழமை எனது பால்ய கால நினைவுகளோடு கரூரில் நிஜமாகவே கழிந்தது.நண்பகல் நேரம் மீன் பிடிப்பதற்காக புஞ்சைப்புகளூர் காவிரி ஆற்றுக்கு சென்றோம்.தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால் ஆற்றின் ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி ஓடிக் கொண்டிருக்கிறது.மற்ற இடங்கள் சகாரா பாலைவனம் போல இருக்கிறது.தண்ணீர் தேங்கிய இடங்கள் கொஞ்சம் ஆழத்துடன் இருக்கவும் கவனமாய் இறங்கினோம்.



மீனவர்களின் வலைக்கு தப்பிய ஒரு சில மீன்கள் எங்கள் கைகளில் அகப்பட காத்துக்கொண்டிருந்தன.தண்ணீரில் வலையை சுற்றிக்கட்டிவிட்டு புதர்களில் கைகளால் மீன்களை பிடிக்க ஆரம்பித்தோம்.எங்களின் கைகளில் சில மீன்கள் மாட்டின.தப்பிச்சென்ற பல மீன்கள் வலையில் மாட்டின.இரண்டு தண்ணீர் பாம்புகள் கூட அகப்பட்டு பரிதாபமாய் உயிர்விட்டன.

பிடிபட்டவை அனைத்தும் கெண்டை மற்றும் ஜிலேபி மீன்களே...அதில் கெண்டை மீன்கள் மட்டுமே கொழுத்துக்கிடந்தன.இப்படியாய் நான்கு கிலோவுக்கும் மேலே பிடித்துவிட்டு கிளிஞ்சல்கள் உதவியால் செதில்களை நீக்கி குடல் அசுத்தங்களை எடுக்கும்போது தான் கெண்டை மீன்கள் அனைத்தும் செனை பிடித்திருப்பது தெரிந்தது.கவனமாய் மீன்முட்டைகளை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டோம் பொரியல் செய்வதற்காக…..



கிட்டத்தட்ட அரைக் கிலோவிற்கும் மேலாக மீன் மூட்டை இருக்கும்.அதை பத்திரப் படுத்தியவுடன் மீன்களை அலசி எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.
இனி மீன் முட்டைப்பொரியல் செய்வதைப் பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 200 கிராம் - பொடியாய் நறுக்கியது
பூண்டு –  10 பற்கள் - பொடியாய் நறுக்கியது
மஞ்சள்தூள் – சிறிதளவு
பச்சைமிளகாய் – இரண்டு மட்டும்
எண்ணைய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு
செய்முறை :
முதலில் எண்ணைய் விட்டு வெங்காயம், பூண்டு பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவேண்டும்.பின் மீன் முட்டையை போட்டு அடிபிடிக்காமல் கிளறவேண்டும்.நன்கு வெந்து உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவேண்டும்.பின் தேங்காய் துருவலை தூவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.கொத்தமல்லி. புதினா தழை இருந்தால் தூவிவிடலாம்.சாப்பிட மிக டேஸ்டாக இருக்கும்




இந்த மீன் சினை கடைகளில் எங்குமே கிடைக்காது,ஆற்றிலோ கடலிலோ ஃபிரஷாக பிடிக்கப்படும் மீன்கள் கருவுற்றிருந்தால் மட்டுமே மீன் சினை கிடைக்கும்.அதை மேற்சொன்ன வகையில் செய்து சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

5 comments:

  1. தண்ணீர் பாம்புகள் ரோஸ்ட் இல்லையா...?

    ReplyDelete
  2. மீன் முட்டைகளை உடைக்கனுமா!? வேணாமான்னு சொல்லவே இல்லியே ஜீவா!!

    ReplyDelete
  3. this is new recipe for me excellent definitely i'll try this recipe...

    ReplyDelete
    Replies
    1. மீன் முட்டை கிடைக்குதா உங்க ஏரியாவுல...

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....