Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Wednesday, June 8, 2016

கரம் - 22

கோவையின் டிராபிக்...
இப்போது சென்னை போல் மாறிக்கொண்டிருக்கிறது கோவை.கோவையின் அனைத்து ரோடுகளிலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒன்வே ஆக்கி வைத்து இருக்கின்றனர்.மேம்பால பணிகளும், மின்கம்பி பதிப்பு வேலைகளும் நடப்பதால் நிறைய இடங்களில் பள்ளங்கள் தோண்டி வைத்து இருக்கின்றனர். எல்லா ரோடுகளிலும் மிகுந்த ட்ராபிக் ஏற்படுகிறது.வாகனப்பெருக்கம் வேறு அதிகமாகி விட்டதால் ஒவ்வொரு சிக்னலிலும் பல நிமிட நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.அதுவும் மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம்.ரோடே வெள்ளக்காடாக ஆகி வாகனங்கள் மிதந்தபடியே செல்லும்.இப்போது மழைக்காலம் வேறு ஆரம்பித்து இருப்பதால் கோவை நகரம் வாகன நெரிசலால் ஸ்தம்பிக்க போவது உறுதி.

தள்ளுவண்டிக்கடை:
கவுண்டம்பாளையம் சிக்னல்
மாலை நேரத்தில் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கிற இந்த சிக்னல்ல, கொஞ்ச நஞ்ச நேரத்தில் நிற்கிற வாகன ஓட்டிகளின் நாசியானது நிச்சயம் ஒரு சுவையான, வாசனை மிகுந்த மணத்தினை உணர்வார்கள் கூடவே பசியையும்.. அதுவும் மழைக்காலத்தில் வாசனை ஊரைக்கூட்டும்.
காரணம் சிக்னலின் இருபுறமும் தள்ளுவண்டிக்கடை இருக்கிறது.சுடச்சுட போண்டா, பஜ்ஜி, வடை முட்டைப்போண்டா, பக்கோடா ன்னு விதவிதமா போட்டுத்தள்ளுவாங்க.
கடலை எண்ணையின் வாசத்துடன் மாவு எண்ணையில் பொரிகிற வாசமும் ஊரைக்கூட்டும்.
அதுவும் வெங்காய பக்கோடா செம வாசமா இருக்கும்.சாப்பிட்டா அப்படியே நாக்கு நரம்புகளை உசுப்பேத்தும்.அவ்ளோ டேஸ்டா இருக்கும்..

விலையும் கம்மிதான்..
சிக்னல் அருகே எதிர் எதிர் இரண்டு கடைகள் இருக்கின்றன. காந்திபுரம் செல்லும் வழியில் சிக்னல் அருகே இருக்கும் கடை செம டேஸ்ட்..

பார்த்த படம்

இப்போதெல்லாம் தியேட்டருக்கு போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டன.ஆனாலும் மொபைலில், டிவிடியில் படங்களை பார்த்து கொண்டிருக்கிறேன்.எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கிறேன்.

சமீபத்தில் மருது பார்த்தேன்.பழைய கதை..ஒன்றும் சுவாரஸ்யமில்லை. இந்தப்படத்தையே  முழுதாய் பார்க்க மூன்று நாட்கள் ஆனது.

மலையாளத்தில் மகேஷிண்ட பிரதிகாரம், டார்விண்டே பரிணாமம்,ஆக்சன் ஹீரோ பிஜி பார்த்தேன்.இதுல ஆக்சன் ஹீரோ பிஜி தான் நல்லா இருந்தது.
நிவின்பாலி செம...படமும் பிடிச்சது.

பு(து)த்தகம்:

சமீபத்தில் இடக்கை, வலம் வாசித்தேன்.இரண்டும் வரலாற்று நாவல்கள்.இதில் இடக்கையை விட வலம் மிக நன்றாகவே இருக்கிறது.நரிவேட்டை பற்றின குறிப்புகள் மிகுந்த ஆர்வத்தையும், ஆச்சர்யத்தையும் தருகின்றன.படிக்க சுவராஸ்யமான நாவல் வலம். இதன் எழுத்தாளர் விநாயக முருகன்.
 
இடக்கையை பொறுத்த வரை ஒளரங்கசீப் வரலாற்று கதை.மன்னர் இறந்ததுக்கு அப்புறம் ஏற்படும் பிரச்சினைகள், குருட்டுத்தனமான அதிகாரம் கொண்ட மன்னனின் ஆட்சியின் அவலங்கள்,சாதாரண குடிமகனான இடக்கை பழக்கம் கொண்ட ஒருவனின் கதையோடு வரலாற்று கதை.இதன் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

இப்போது புதிதாக ஆங்கில நாவல்களை வாசிக்கலாம் என்றிருக்கிறேன்.Dongri to Dubai, The Taj conspiracy, RIP, The page 3 murders, இப்படி நான்கு நாவல்களை வாங்கியிருக்கிறேன். எப்போது படித்து முடிப்பேன் என்று தெரியவில்லை.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Monday, January 25, 2016

கரம் - 20

கரம்
படித்தது :பு(து)த்தகம்
மெளனத்தின் சாட்சியங்கள் :
கோவையில் இரு அமைப்புகளுக்கு  ஏற்பட்ட மோதலே கொலை, குண்டுவெடிப்பு, கலவரம் என நீண்டு கோவையை சின்னா பின்னமாக்கிவிட்டது.இந்த குண்டுவெடிப்பு நிகழ்வினை நாவலாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.சிறையிலிருந்து விடுதலையாகும் ஒரு அப்பாவி முஸ்லீம் இளைஞனின் பார்வையில் கதை விரிகிறது.இரு மதங்களின் போர்வையில் நடத்திய ஒரு பயங்கர நிகழ்வு இந்த கோவை குண்டுவெடிப்பு.இதற்கு பலியானது அப்பாவிகள்தான்.கோவைக்கு ஏற்பட்ட தீராத களங்கமும் இந்த குண்டு வெடிப்பினால்தான்.
கோவை பெரிய கடை வீதி, டவுன்ஹால், கோட்டைமேடு, உக்கடம் பகுதிகளில் உள்ள இந்து முஸ்லீம் வியாபாரிகளின் தொழில் போட்டியே இந்த கலவரத்திற்கு காரணம் என்றும் அறியப்படுகிறது..
இந்த கலவரக்காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறார் எழுத்தின் வடிவில்..பதபதைக்கிறது படிக்க படிக்க....
பார்த்தது :
2015 இறுதியில் தியேட்டருக்கு சென்று பார்த்த படம் பூலோகம்...
படம் மிக அருமை..ஒரு சேனலின் அதிபருக்கும், குத்துச்சண்டை வீரருக்கும் நடக்கும் யுத்தமே இந்த பூலோகம்...படம் மிக நன்றாக இருக்கிறது...

2016 இல் தியேட்டருக்கு சென்று பார்த்த முதல் திரைப்படம்
தாரை தப்பட்டை...
பாலாவின் அதே டிரேட் மார்க் படம்..செம...சின்ன சின்ன ஹாஸ்யங்களுடன் நன்றாகவே இருக்கிறது.நிறைய விமர்சனங்களை படித்து தொலைத்ததினால் என்னவோ ஹீரோ எப்போ வில்லனின் குரல்வளையை கடிப்பான்......கொல்வான் என்கிற எதிர்பார்ப்பு வந்து தொலைக்கிறது.இனி சத்தியமாய் விமர்சனம் படிக்கவே கூடாது.ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கிறது.எந்த மாதிரி மனநிலையில் அவன் படம் பார்க்கிறான் என்பதை பொறுத்து படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.என்னைப் பொறுத்த வரையில் படம் நன்றாகவே இருக்கிறது.அதிக வன்முறை, ஆபாசம் என்பதெல்லாம் இல்லை.எங்கள் ஊரில் குறவன் குறத்தி ஆட்டம் ஆடுவார்கள்.அது இன்னும் மோசமாக இருக்கும்.இந்தப்படத்தில் அப்படி ஒன்றும் ஆபாசம் இல்லை.

பாலாவின் ட்ரேட்மார்க் சோடை போகவில்லை.

ருசித்தது:
பனங்கிழங்கு:
நம்ம தோட்டத்துல விளைஞ்சது....

இப்போது பனங்கிழங்கு அரிய பொருள் ஆகிக்கொண்டு வருகிறது.பனைமரம் அழிப்பு காரணமாக இது அதிகம் கிடைப்பது இல்லை...தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இது கிடைக்கிறது.
பனஞ்சீம்பு..
கிழங்கை தோண்டி எடுக்கும் போது அதனுடன் உள்ள கொட்டையை இரண்டாக வெட்டினால் அதில் சீம்பு கிடைக்கும்.சாப்பிட சுவையாக இருக்கும்.இதுவும் மிக அரிதான மருத்துவ குணம் வாய்ந்த பொருள்...சாப்பிட்டுப்பார்த்தால் கொஞ்சம் இனிப்பும், உப்பும் கலந்த மாதிரி இருக்கும்.ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயரை சொல்கிறார்கள் இதற்கு.


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, July 14, 2014

பு(து)த்தகம் - சயாம் மரண ரயில்

சயாம் மரண ரயில்:
சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்

               சமீபத்தில் படித்த மனதை உலுக்கிய ஒரு நாவல்.இரண்டாம் உலகப்போர் நடக்கும் போது இந்தியாவை கைப்பற்ற ஜப்பான் தரைவழியாக தன் படைகளை அனுப்ப சயாமிலிருந்து (தாய்லாந்து) பர்மா வரை இருப்புப்பாதை அமைக்க திட்டமிட்டு அதை செயல்படுத்தியது.இந்த இருப்புப்பாதையை அமைக்க போர்க்கைதிகளைப் பயன்படுத்தியது ஜப்பான் ராணுவம்.போர்க்கைதிகளான ஆங்கிலேயர்களை தொழில்நுட்பவேலைக்கு அமர்த்திக்கொண்டது.சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற கடுமையான வேலைகளுக்கு ஆசியத் தொழிலாளர்களை பயன்படுத்தியது.அதில் பெரும்பான்மையோர் மலேசிய தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக இருந்த தமிழர்கள்.
அவர்களை ஏமாற்றியும், நகரங்களில் வாழ்ந்து வந்த மற்ற தொழிலாளர்கள், தெருவில் வருவோர் போவோர் என எல்லாரையும் வலுக்கட்டாயமாக பிடித்து சயாம் ரயில்பாதையை அமைக்க கொண்டு செல்லப்பட்டனர்.
              ரயில்பாதை அமைக்கும் போது சரியாக வேலை செய்யவில்லை எனில் ஜப்பானியர்களால் கொல்லப்படுவதும், மருத்துவ வசதிகள் இல்லாமல் உயிரிழப்பதும், பிரிட்டிஷ் படையினரின் குண்டுவீச்சுக்கு பலியாவதும், பலவித நோய்களுக்கு ஆளாகி இறப்பதும் என தமிழர்கள் கொத்துக்கொத்தாய் இறந்தனர்.ஜப்பானின் அடக்குமுறையினால் பணியிலேயே இறந்தவர்களும், தற்கொலை செய்துகொண்டவர்களும், தப்பித்துச்செல்ல முயன்று ஜப்பான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் இதில் அடக்கம்.

            அவ்வாறு சிக்கிக்கொண்ட ஒரு தமிழ் இளைஞனின் அனுபவங்கள்தான் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.கதைக்களனாக ரத்தம் வடியும் மரணப்பாதையில் நடந்த கொடுமைகள் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.போர்முடிவில் தான் தமிழர்களுக்கு விமோசனம் கிடைத்து அவர்கள் சுதந்திரகாற்றை சுவாசித்தனர்.ஆனால் அதற்குமுன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சத்திற்கும் மேல்.ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னமாகின, நிர்க்கதியாகிவிட்ட குடும்பம், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த பெண்கள் என இவர்களின் வேதனைகள் வெகுகாலம் நீடித்தது.
              மலேசிய எழுத்தாளர் சண்முகம் அவர்கள் சயாம் மரண ரயில் பாதை அமைத்த ஜப்பானியர்களால் தமிழர்கள் அடைந்த கொடுமைகளை நாவல் வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார்.படிக்க சுவாரசியமாக அதே சமயம் நம் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களை நாமும் அறிந்து கொள்ளும் ஒரு வரலாறாக இந்த புத்தகம் இருக்கிறது.தமிழர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
இந்த நூலை தமிழோசை பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.
பக்கம் – 304
விலை – 150.00

இந்த சயாம் மரண ரயில் புத்தகத்தை வெளியிட்ட திரு விஜயகுமார் அவர்களுக்கு நன்றி.
இன்னும் கொஞ்சம்...

Tuesday, April 1, 2014

பு(து)த்தகம் - திருடன் மணியன்பிள்ளை

திருடன் மணியன்பிள்ளை
                திருப்பூர்ல நடந்த புத்தக கண்காட்சிக்கு போயிருந்தபோது வரிசையா ஒவ்வொரு ஸ்டால்களா பார்த்துட்டு வந்திட்டு இருந்தேன்.காலச்சுவடு அரங்கில் இருந்த திருடன் மணியன்பிள்ளை புத்தகம் என் கண்களை ஈர்த்தது.எடுத்து ஓரிரண்டு பக்கங்கள் புரட்டவே மிக சுவாரஸ்யமாக இருக்க, வாங்கிக்கொள்ளலாம் என மனது தீர்மானித்தது.ஆனால் புத்தகத்தின் சைஸ் கொஞ்சம் மிரட்டவே, எப்படி இவ்ளோ எடையோடு தூக்கிக்கொண்டு இன்னும் பல ஸ்டால்களை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்குமே என நினைத்து மணியன்பிள்ளையை கடைசியாய் சந்திக்கலாம் என்றெண்ணி விட்டு கிரிவலம் சுத்துவது போல் அனைத்து ஸ்டால்களையும் சுத்திவிட்டு வந்தால் மணியம்பிள்ளை புத்தகம் காணவில்லை.அதற்குள் யாரோ ஆட்டையை போட்டுவிட்டார்கள்.....சாரி..... வாங்கிக்கொண்டு விட்டார்கள்.... காலச்சுவடு ஆட்களிடம் கேட்டபோது புத்தகம் இனி சென்னையில் இருந்துதான் வரும், ஓரிரு நாட்களாகிவிடும் என சொல்லிவிட்டனர். மீண்டும் திருப்பூர் வந்து வாங்க வேண்டுமா என யோசித்து விட்டு வெளியேறிவிட்டேன்.ஒரு நல்ல புத்தகத்தை தவறவிட்டுவிட்டோமோ என்று மனது கிடந்து துடித்தது. ஆனாலும் இந்தப்புத்தகத்தினை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று வீட்டிற்கு வந்தவுடன் ஆன்லைனில் தேடியபோது நம்மபுக்ஸ் தளத்தில் கிடைத்தது.உடனே ஆர்டர் போடவும்,  அடுத்த அரைமணி நேரத்தில் கன்பர்மேசனுக்காக ஒரு போன் கால் பொள்ளாச்சியில் இருந்து.பிறகு தான் தெரிந்தது நம்ம புக்ஸ் பொள்ளாச்சியில் இருப்பது என்று..அடுத்த நாளே புரபஷனல் கொரியரில் வீடு தேடி வந்தார் திருடன் மணியன்பிள்ளை.

          புரட்ட ஆரம்பித்ததில் நேரம் போனதே தெரியவில்லை.மொத்தம் 590 பக்கங்கள்.ஒவ்வொரு நாளும் கிடைக்கிற நேரத்தில் படிக்க ஆரம்பித்து மொத்தமாய் தீர்ந்து போனது.பிறகு சமயம் கிடைக்கும்போதெல்லாம் இன்னும் புரட்ட ஆரம்பித்தேன்...புரியாத ஓரிரு விசயங்களும் இன்னும் ஆழமாய் புரிந்து போனது.எப்பொழுது படித்தாலும் சுவாரஸ்யங்கள் அகலாமல் இருப்பதே இந்த புத்தகத்தின் சிறப்பு.ஒரு திருடன் தன் வரலாறாக வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி விவரித்து இருப்பதால் அந்த திருடன் மேல் மதிப்பையும் அனுதாபத்தினையும் அளிக்கிறது.

            கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வாழ்த்துங்கல் என்கிற ஊரில் கொடுந்தற என்கிற பிரபல குடும்பத்தில் பிறந்த ஒரு திருடனின் கதை தான் இந்த புத்தகம்.சிறுவயதில் தந்தையை இழந்தவுடன் மொத்தமும் மாறிப்போன ஒரு வளர்ந்த பையனின் வரலாறு.படிக்கின்ற காலத்தில் குடும்பச்சூழல் மாறிவிட்டதால் சிறு திருட்டில் ஆரம்பித்து பின் கேரளாவில் புகழ்பெற்ற பிரபல திருடனாக மாறி, மைசூரில் மிகப்பெரும் கோடிஸ்வரனாகி, கர்நாடக முதல்வரோடு ஒரே ஹெலிகாப்டரில் பயணித்து, அமைச்சராவதற்கு முன்னால் போலீஸிடம் பிடிபட்டு, ஒரே நொடியில் கோடிஸ்வரனாகி இருந்த சலீம்பாஷா என்கிற மணியன்பிள்ளை ஏழ்மையாகி, தண்டனை பெற்று, இப்போது திருந்தி வாழும் ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறுதான் இந்த புத்தகம்.

              இந்த புத்தகத்தில் இவர் விவரித்து இருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக சுவாரஸ்மானவை.ஒரு வீட்டில் திருடச்சென்று மாட்டிக்கொண்டது, திருடிய பொருட்களை போலிஸ்காரர்களிடமே கொடுத்தது, கூட இருக்கும் நண்பர்களுக்காக திருடி உதவி செய்தது, தன்னைப்பழிவாங்கிய போலீஸ், நீதிபதி வீடுகளில் ஆபரேசன் நடத்தியது என அனைத்தும் மிக சுவாராஸ்யமே....

            இந்தப்புத்தகம் ஒரு திருடனின் இயல்பை, சமூகத்தினால், நீதிமன்றத்தால், காவல்துறையால் பாதிக்கப்பட்ட ஒருவனது வாழ்க்கையை விவரிக்கிறது.மற்றபடி திருட்டை ஊக்கப்படுத்தியோ, குற்றம் செய்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகயோ இல்லை.தன் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பொதிந்து கிடக்கிற உண்மைகளை காலங்கெட்டு உணர்ந்து பார்த்து இப்போது நம்மை உணர வைக்கிற எழுத்துக்களை இந்த புத்தகத்தில் காணலாம்.

               ஒவ்வொரு திருடனுக்கும் ஒவ்வொரு குணாதியசங்கள் உண்டு.பல திருடன்கள் மணியன்பிள்ளைக்கு நண்பர்களாக இருக்கின்றனர்.(திருடனுக்கு திருடன் தானே நண்பன்).இப்படி ஒவ்வொருவரும் திருடச்செல்லும் வீட்டில் திருடியபின்பு நன்கு சாப்பிட்டுவிட்டு பண்ட பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வருவது, நன்றாக குளித்துவிட்டு பவுடர்லாம் பூசி உடைகளை மாற்றி ஒரு ஜெண்டில்மேனாக வெளிவருவது,பிடிக்காத நபர்களின் வீட்டில் நடுக்கூடத்தில் மலம் கழித்துவிட்டு வருவது என ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் அதை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது, நீதிமன்றத்தில் தன் தாயை அவமானப்படுத்தி, வேண்டுமென்றே தனக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி வீட்டில் திருட முயற்சித்து முடியாமல் போக தன் நண்பனை விட்டு அவர்க்கு உடல் நலம் குன்றச்சொன்னது என ஒவ்வொரு நிகழ்வும் ஒரு காட்சியைப்போல மனக்கண்களில் விரிகிறது.

             இந்தப்புத்தகம் முழுவதும் ஒரு குடும்பத்தின் வறுமை, அதன் காரணமாக திருட்டு வாழ்க்கைக்கு நுழைந்தது, திருடனின் சாகசங்கள், அவன் வாழ்ந்தவிதம், போலீசில் துன்பப்பட்டது, தன் வழக்கில் தானே ஆஜராகி வாதிட்டது, கல்யாணம், நட்பு, விபச்சாரிகளுடன் தொடர்பு, பக்கத்து மாநிலத்தில் ஏழைப்பங்காளன் ஆனது, கோடிஸ்வரன் ஆகி ஏழையானது,  சிறைத்தண்டனை, நன்னடத்தை காரணமாக போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றியது என அனைத்து நிகழ்வுகளும் ஒரு திரைப்படம் போல கண்முன் தெரிகிறது.

              திருடச்சென்ற வீட்டில் ஏற்பட்ட அனுபவம், மாட்டிக்கொண்ட அனுபவம் எனப்பலவும் விரவிக்கிடக்கிறது....வெகு நேரம் நீண்ட சண்டையில் கெட்டியாக பிடித்த ஒரு வாலிபனை கத்தியால் குத்திவிட்டு தப்பித்து, அடுத்தநாள் அவன் உயிரோடிருக்கிறானா என்பதை அறியும் பொருட்டு விசாரித்ததில், அவன் மிஸ்டர் பாத்திமா காலேஜ் என்றும், அவனுடைய மாமா கொல்லம் சர்க்கிள் என்பதும், பிற்காலத்தில் அவர் ஒரு ஐபிஎஸ் ஆகி தன்னைச் சந்தித்தது என எல்லாம் விரிவாய் சொல்லியிருக்கிறார். திருடச்சென்ற இடத்தில் தற்கொலை செய்யவிருந்த ஆளைக்காப்பாற்றியது, திருடிய பணத்தில் பிறர்க்கு உதவியது, திருடிய பணத்தில் ஆடம்பரமாய் வாழ்ந்தது என அனைத்தும் படிக்க படிக்க சுவாரஸ்யமே....
              ஒவ்வொரு திருட்டு அனுபவத்திலும் ஒரு பாடம்..ஒரு தத்துவம் என நன்றாகவே உணர்ந்திருக்கிறார் நமக்கும் உணர்த்தியிருக்கிறார்  எழுத்தாளர். இந்தப்புத்தகம் முழுக்க முழுக்க சுவாரஸ்யமான சம்பவங்கள், மனதைப்பிழியும் சோகங்கள் என எல்லாம் இருக்கிறது.மலையாளிகளுக்கு இயல்பாகவே பேசும்போது ஒரு நக்கல் தொனி, காமெடி வெளிப்படும்.அதுதான் இந்தப்புத்தகத்திலும் நிறைய இருக்கிறது.பேச்சும் தொனியினை எழுத்தினில் நகைச்சுவையாக கொண்டிருப்பதில் இந்தப்புத்தகம் படிப்பதற்கு சுவையாக இருக்கிறது.

              இந்தப்புத்தகத்தினை பற்றி இன்னும் எழுதலாம்.அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.காலச்சுவடு வெளியீட்டில் வந்திருக்கும் இந்தப்புத்தகம் ஜி.ஆர் இந்துகோபன் எழுதி, தமிழில் குளச்சல் மு யூசுப் மொழிபெயர்த்துள்ளார்.விலை 450.00, மொத்தப்பக்கங்கள் 590

இந்த தன்வரலாறு படித்ததில் இருந்து அந்த திருடன்(ர்) மணியன்பிள்ளையை சந்திக்க ஆவல் ஏற்பட்டிருக்கிறது...விரைவில் சந்திப்பேன் என்கிற நம்பிக்கையில்.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Tuesday, January 15, 2013

புத்தக அறிமுகம் - கோவை பதிவர்கள் கவிதை தொகுப்பு


பு(து)த்தக அறிமுகம்:1
நம்ம கோவையை சேர்ந்த பெண் கவிஞர் அகிலா அவர்களால் எழுதப்பட்ட ஒரு கவிதை தொகுப்பு...
இவரின் கவிதையை படிக்கும் போது ஒரு வித இனம் புரியாத தாக்கம் ஏற்படுகிறது.வலி மிகுந்த உணர்ச்சியினை தாங்கி வெளி வந்து இருக்கும் இவரது கவிதைகள் நமக்கு புது வித அனுபவமே...
எனக்கு 82 உனக்கு 76 என்கிற தலைப்பில் இவர் படைத்து இருக்கிற வார்த்தைகளின் வீரியம் இன்னும் நெஞ்சுக்குள் நிழலாடுகிறது. இணைபிரியாத தம்பதிகளின் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம்.....
நான் மரித்து நீ உலகில்...
நீ மரித்து நான் உலகில்
யோசித்துப்பார்க்கிறேன்..
இரண்டில் எது சரியென்று...
இரண்டுமே சரியில்லை
இருவரும் மரித்து
நம் உலகில்
நாம் எப்போதும் போல்
ஒன்றாகவே....
என்னை கண்கலங்க வைத்த கவிதை...இந்த தொகுப்பிற்கு ஒரு மணி மகுடமாய் இந்த கவிதை ஒன்றே போதும்...
புத்தகத்தின் விலை - ரூ 70
இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல...ஒரு சிறந்த ஓவியரும் கூட...இவரின் படைப்புக்கள் இவரை உயர்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை...

பு(து)த்தக அறிமுகம்:2
இவரும் நம்ம கோவையை சேர்ந்தவரே..இவரின் வார்த்தை பிரயோகத்தினை  எழுத்தில் பார்த்தால் இவர் ஒரு பெண் கவிஞர் என்பதே தெரியாது.முதிர்ச்சியடைந்த வார்த்தைகளின் தெரிவுகள் புதிதாக இருக்கிறது.
பெண் கவிஞர் என்றால் காதல் ரசம்  சொட்டும் என்று நினைத்திருக்கிறேன்.இந்த தொகுப்பில் மெளனத்தின் இரைச்சலாக காதலை கொஞ்சம் ஊறுகாயாக தொட்டு விட்டு சமூகத்தின் அவலங்களை சாடி இருக்கிறார்.
சாதி எனப்படும் உயிர்க்கொல்லியை சாடி இருக்கிறார் கனமான வார்த்தைகளால்..
பட்டம் என்கிற தலைப்பில் பெண்கள் இன்னும் சிறைக்கைதிகள்தான் என்பதை உணர்த்தியிருக்கிறார்..
சுதந்திரம் என்பது இன்னும் பெறவில்லை....சாதி மதம் இனம் என்ற அடிமை சங்கிலியை அறுக்காமல் அது இல்லவே இல்லை என்பதை சொல்லியிருக்கிறார்..
புத்தகத்தின் விலை - ரூ 70 
இவர் ஒரு கல்லூரியில் பணிபுரிகிறார்.முனைவர் பட்டம் மேற்கொண்டும் வருகிறார்.இவரின் அடுத்த கவிதை தொகுப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்த இரண்டு கவிதை தொகுப்புக்களும் சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் கிடைக்கும்.
கோவையில் கிடைக்குமிடம்:
155, முதல் தளம், ஹரி பவன் அருகில், 4வது வீதி, காந்திபுரம், கோவை,  தொடர்புக்கு 98944 01474

கிசுகிசு : நானும் தான் புத்தகம் போட்டு இருக்கேன்...நானே எனக்கு விமர்சனம் பண்ணினா நல்லாவே இருக்காது.அதனால....யாராவது ...?
( அதுக்கு அமெளண்ட் தனியா வந்திடும்..) ஹி ஹி ஹி ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...