Monday, August 11, 2014

கோவை மெஸ் - பப்ஸ், கண்ணன் உணவகம், கட்டப்பெட்டு, கோத்தகிரி, ஊட்டி மாவட்டம் ( Kattabettu, Otty)

           கடந்த சனியன்று வேலை விசயமாக ஊட்டி சென்றிருந்தேன்.ஊட்டிக்கு ரெண்டு வழில போலாம்.ஒண்ணு கோத்தகிரி, இன்னொரு வழி குன்னூர்.குன்னூர் வழியா போனா ரோடு ரொம்ப மோசம்..அதிலில்லாம டிராபிக் படு பயங்கரமா இருக்கும்.முன்னால் போற வண்டியோட வாலைப்பிடிச்சிகிட்டே போகனும்.ஹேர்பின் பெண்டுகள் வேற அதிகம்.
             ஆனா கோத்தகிரி வழியா போனா ரோடு அம்சமா இருக்கும்.ஏன்னா கொடநாடுக்கு போற வழி.குண்டு குழியில்லாம ரோடு சும்மா கும்னு இருக்கும்.அதிக டிராபிக் இருக்காது, ஹேர்பின் பெண்டுகளும் கம்மி.வண்டியை அழுத்தி பிடிச்சிட்டு நாம பாட்டுக்கு போலாம்..
              அப்படித்தான் அன்னிக்கு கோத்தகிரி வழியில் சென்றோம்.இருபுறமும் தேயிலைத்தோட்டங்கள்...அடர்ந்த மரங்கள், சில்லென குளிர் காற்று, என ரம்மியமாக இருக்க, ரசித்துக்கொண்டே மலை ஏறிக்கொண்டிருந்தோம். ஓரிடத்தில் நண்பர் பப்ஸ் டீ சாப்பிட்டுவிட்டு போலாம் என சொல்ல, குளிருக்கு இதமாக இருக்கட்டுமே என்று வண்டியினை ஓரங்கட்டினோம்.


                அது கட்டபெட்டு என்கிற ஊர்.கோத்தகிரி தாண்டி ஒரு பிரிவு வருகிறது.குன்னூர்க்கும் உதகைக்கும் தனித்தனியே பாதை பிரிகிறது. அங்கிருந்து உதகை செல்லும் வழியில் ஒரு சில மீட்டர்களில் கட்டபெட்டு ஊர் நம்மை வரவேற்கிறது.அங்கே இருக்கிறது இந்த கண்ணன் உணவகம்.
 
            காரை நிறுத்திவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தால் அந்த ஹோட்டலுக்கு எதிரில் ஒரு மலை முகடு கண்ணுக்கெட்டிய தூரத்தில் பசுமையாய் காட்சியளிக்கிறது.சில்லென சாரலில் சிறுதூறலில் நனைந்து கொண்டே கடைக்குள் காலடி வைத்தோம்.
    உள்ளே நுழைகையில் பப்ஸின் வாசம் நம்மை கட்டிப்போடுகிறது.ஓரமாய் ஓரிடத்தில் அமர, கடந்து சென்ற தட்டு நிறைய பப்ஸ்கள் நம்மை கூடவே இழுத்து செல்கின்றன.சூடாய் பப்ஸ் கடையின் காலி ஷோகேஸிற்கு காட்சிப்பொருளாய் வந்து அமர, சில கணங்களில் காலியாகி மீண்டும் பழைய நிலையை அடைகிறது ஷோகேஸ்.இப்படி சில நிமிடங்களுக்கொரு முறை மறுசுழற்சி நிலையை அடைகிறது ஷோகேஸ்.

              பப்ஸினை முக்கோண வடிவத்தில், செவ்வக வடிவத்தில் தான் பார்த்திருக்கிறேன்..ஆனால் இங்கோ தோற்றத்தில் கொளுக்கட்டை போல் இருக்க, ஒரு புறம் நெளி நெளியாய் சுருட்டப்பட்டு பார்க்கவே அழகாய் இருக்கிறது.
                  எங்களிருவருக்கும் ஆளுக்கொரு பப்ஸ் கிடைத்து சாப்பிட ஆரம்பிக்க, பஞ்சு போன்ற மென்மையாய் மெத்தென்று இருக்க, இரு விரல்களால் கொஞ்சம் பிய்க்க, உள்ளேயிருந்து இளஞ்சூடாய் ஆவி வெளியேற, இலகுவாய் விரல்களில் குடியேறி வாய்க்கு வந்து சேர்ந்தது.சுவையோ அபாரமாய் இருக்க, வாசம் சுற்றுப்புறத்தினை நனைக்க ஆரம்பித்தது.உருளைக்கிழங்கு மசாலாவுடன் சூடும் சேர்ந்து நம் வாயினை சேர சுவை நரம்புகள் புதியதாய் ஒரு உணர்வினை உணர்ந்து கொண்டிருந்தன.

                    இளஞ்சூட்டுடன் கொஞ்சம் கொஞ்சமாய் பிய்த்து சாப்பிட சாப்பிட வாய்க்கு வலிக்காமல் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது.மீண்டும் இன்னொரு பப்ஸ் ஆர்டர் செய்து அந்த அனுபவத்தினை ர(ரு)சிக்க ஆரம்பித்தோம்.கூட டீ யும் சேர்ந்து கொண்டதில் மாலை வேளையில் மழைப்பொழுதில் மிக சுவையாய் இருக்க ஆரம்பித்தது.
                     பப்ஸ் பக்கத்திலிருந்த சமையலறையில் இருந்து வெளிவர எட்டிப்பார்த்ததில் ஒரு குருப்பே தீயாய் வேலை செய்து கொண்டிருந்தது.மைதா மாவினை உருட்டி பிசைந்து நெவிட்டி, அதில் உருளைக்கிழங்கு மசாலாவினை சேர்த்து கலை நயத்தினை அதில் பொறித்து எண்ணையில் போட, பப்ஸ் வெந்து வெளியேற காத்துக்கொண்டிருந்தது.
             பப்ஸ்கள் உடனுக்குடன் வெளியாகி தீர்ந்து கொண்டிருந்தது.வருபவர்கள் சாப்பிட்டு பார்சல் வாங்கிக்கொண்டு செல்கின்றனர்.நாங்களும் எங்கள் பங்குக்கு வாங்கிக் கொண்டோம்..விலை ரொம்ப குறைவுதான்.சுவையோ அதிகம்.
அந்தப்பக்கமாக போனா கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க, உங்களுக்கே பிடிக்கும்.
இடம் – கோத்தகிரி தாண்டி, உதகை, குன்னூர் பிரிவு ரோடு வருகிறது.அதில் உதகை ரோட்டில் சில மீட்டர்களில் கண்ணன் உணவகம் இருக்கிறது.

இதுக்கு முன்னாடி போனது எமரால்டு எஸ்டேட்

நேசங்களுடன்
ஜீவானந்தம்



No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....