Thursday, February 19, 2015

கோவை மெஸ் - ரப்சி ரெஸ்டாரண்ட் ( Rapsy Restaurant, Munnar ) , மூணாறு

ரப்சி ரெஸ்டாரண்ட் ( Rapsy Restaurant, Munnar ) , மூணாறு
                      மூணாறு இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த மலைத்தொடர்கள் கொண்ட அழகிய கோடை மலைவாசஸ்தலம்.கண்ணுக்கு பசுமையையும், உடலுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு இனிமையையும் ஒரு சேர தரும் சுற்றுலாத்தலம்.நாங்கள் போன அன்று காதலர் தினம் வேற.ஏற்கனவே அம்மணிகளால் நிரம்பி செமயாக இருக்கும்.அன்று சொல்லவா வேண்டும்... புதிதாய் மணமுடித்தவர்கள் தங்கள் ஹனிமூனை சிறப்பிக்க வந்து குவியும் இடம் வேறு... ஜோடி ஜோடியாய் காதலர்கள்..வெள்ளைக்கார அம்மணிகள், இரண்டு நாள் விடுமுறையை கழிக்க ஜோடியாய் புறப்பட்டு வந்து இயற்கையையும், இரவில் குளிரையும்(?) அனுபவிக்க வந்தவர்கள் என எங்கும் நீக்கமற நிறைந்திருந்தனர்.குழந்தை குட்டிகள் என குடும்பத்தோடு வந்திருப்பவர்கள், குட்டீஸ்களை கவனித்து கொள்ள பெரியவர்களையும் சேர்த்து கொண்டு வந்தவர்கள் என மூணாறே பரபரப்புடன் இருந்தது.

                   நாங்கள் வந்த நேரம் பசி வயிற்றைக் கிள்ளிய மட்ட மத்தியான நேரமாதலால், கண்முன்னே காட்சியளித்த அம்மணிகள் கொஞ்சம் மங்கலாக தெரியவே, தெம்பாய் பார்க்க கொஞ்சம் ஏதாவது அள்ளிப்போட்டுக்கொள்ள வேண்டுமே என மூணாறின் வாசியான ஒருத்தரிடம், எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும் என வினவ, ரப்சிக்கு போங்கள், எல்லாம் சுவையாக இருக்கும் என சொல்ல, அங்கே ஆஜரானோம்.
              மூணாறின் மெயின் பஜாரில் இருக்கிறது இந்த ஹோட்டல்.கொஞ்சம் சிறிய ஹோட்டல் தான்.ஆனால் நன்றாக வைத்திருக்கிறார்கள்.இண்டீரியர் அமைப்பு நன்றாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும், பாதிக்கும் மேல் ஃபாரினர்கள்.கூடவே அயல்நாட்டு அம்மணிகள் அரை குறை ஆடையோடு (நம்மூர் ராமராஜன் பனியன் மற்றும் டிரவுசர் போட்டுக்கொண்டு)....அவ்வப்போது நம்மூர் அம்மணிகளும் வந்து போக ஹோட்டல் களை கட்டியது.எங்களுக்கு தோதான இடத்தில் அமர, மெனுகார்டு வர நிறைய அயிட்டங்கள் வெளிநாட்டுக்காரர்களுக்கு ஏற்றபடி இருக்க, (ஸ்பானிஷ் ஆம்லேட், மெக்சிகன் சல்சா, இஸ்ரேல் சாக்ஸ்குகா..(என்ன டிஷ்ஷோ))அப்போது தான் புரிந்தது ஏன் அயல்நாட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என.....
                     ஃபாரின் உணவுகள் எதுவும் நமக்கு செட்டாகாது என்கிற படியால் நம்மூர் உணவுகளையே ஆர்டர் செய்ய ஆரம்பித்தோம். நம்ம அம்மணியும் ட்ராவல் அதிகமாக இருப்பதால் நான்வெஜ் ஏதும் வேண்டாமென சொல்லிவிட, என் பங்குக்கு மீன் கறியும், பீப் பிரையும், கொஞ்சம் சாதமும் ஆர்டர் செய்தேன்.குட்டீஸ்களுக்கு நூடூல்ஸ், சிக்கன் பிரியாணியும் ஆர்டர் செய்து விட்டு, கண்முன் நிழலாடிய அம்மணிகளை பார்த்துக்கொண்டிருந்த சில நிமிடங்களில் ஒவ்வொன்றாய் வர ஆரம்பித்தது.

வெளியே பரவிய குளிர் உள்ளுக்கும் பரவ ஆரம்பித்த நேரத்தில் சூடாய் சாதம் இருக்க, மஞ்சள் நிறத்தில் எண்ணை மிதக்க மீன் குழம்பு இருக்க, அதில் மீன் மிதந்து கொண்டிருந்தது.சூடான சாதத்தில் கொஞ்சம் மீன்குழம்பை  ஊற்றி பிசைந்து சாப்பிட ஆரம்பிக்க, சுவை நம் நாவில் பரவி, காரமும், புளிப்பும், மீன் வாசனையும் நம்முள் கலக்க, மெய் மறந்து போனேன்.கொஞ்ச கொஞ்சமாய் சாதத்துடன் மீன்குழம்பை ஊற்றி பிசைந்து ரசித்து ருசித்து சாப்பிடவும், அவ்வப்போது குழம்பில் வெந்த மீனினை அப்படியும் இப்படியும் திருப்பி முள்ளை விடுத்து கறியினை சாப்பிட சாப்பிட, பக்கத்திலிருந்த அயல்நாட்டுக்கார அம்மணியின் கண்களில் ஒரு வித காரம் தென்பட்டது என்னவோ உண்மைதான்...மீனின் முள்ளை மொத்தமாய் வாயில் வைத்து சப்பி ஒரு இழுப்பு இழுத்து இருக்கின்ற கொஞ்ச நஞ்ச காரம், புளிப்பு சுவையை சப்பி கீழே வைக்க, காரசாரமான முள் நிறைந்த மீனினை இப்படியும் சாப்பிட முடியுமா என ஆச்சர்யப்பட்டு பார்த்தது அந்த இரு ஜோடி விழிகள்...

அடுத்து வந்த பீஃப் பிரை நன்றாக வெந்து, செம டேஸ்டில் இருக்க, இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு இறங்க ஆரம்பித்தது.சிறிது நேரத்தில் இரண்டும் சுத்தமாய் காலியானது.
குட்டீஸ்களுக்கு வந்த பிரியாணியின் சைட் டிஷ் ஆக இருந்த கேரளாவின் சம்பந்தி (சட்னி) செம டேஸ்டாக இருந்தது.கேரள பிரியாணி நமக்கு கொஞ்சம் ஆகாது.மசாலா சாதத்துடன் தனியாக சிக்கன் கிரேவிமாதிரி வைத்து தருவதால் அதன் டேஸ்ட் எனக்கு கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும்.




              மற்றபடி அனைத்தும் சூப்பர். ஹோட்டலில் காலி டேபிளே பார்க்க முடியவில்லை.சாப்பிட்டு முடித்தவுடன் உடனே நிறைந்து கொள்ளும்.
டூரிஸ்ட் பிளேஸ் என்பதால் விலை அதிகம் என்பது இல்லை.நார்மலான விலைதான்.தைரியமாக சாப்பிட செல்லலாம்.
சாப்பிட்டு முடித்து தெம்பாய் பில் கொடுத்துவிட்டு வெளியேற, கடந்து சென்ற அம்மணிகள் கொஞ்சம் தெளிவாய் தெரிய ஆரம்பித்தனர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்


.









2 comments:

  1. ஆனாலும் உங்கள் தெளிவு ரொம்ப பிடிச்சிருக்கு.... ஹா.... ஹா....

    ReplyDelete
  2. ”கடந்து சென்ற அம்மணிகள் கொஞ்சம் தெளிவாய் தெரிய ஆரம்பித்தனர்” ............ வீட்டுக்கார அம்மணி கொஞ்சம் மங்கலா தெரிய ஆரம்பிச்சுருப்பாங்களே ! ! ! ! ! ! !.....ஹி...ஹி......ஹி.....

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....