Sunday, February 15, 2015

பயணம் - மூணாறும் யானையும்...

மூணாறு...
             காதலர் தினத்தை செலிபிரேட் பண்ணலாம்னு நம்ம அம்மணியையும், வாரிசுகளையும் கூட்டிட்டு கொஞ்ச தூரம் ட்ரைவிங் போலாமேன்னு அழைச்சிட்டு போனது மூணாறுக்கு...
             இருபுறமும் பசுமை வேய்ந்த தேயிலைத்தோட்டங்கள்...கண்ணுக்கெட்டும் தூரம் மலை முகடுகள் அனைத்தும் பசுமையை போர்த்திக் கொண்டிருந்தது.வளைந்தும் நெளிந்தும் தேயிலைத்தோட்டத்தின் ஊடாய் செல்லும் மலைப்பாதையில் காரில் ஒலித்த இசையையும், இருபுறமும் உள்ள பசுமையையும் ரசித்துக்கொண்டு சென்று கொண்டிருந்த ஒரு முன் பகல் வேளையில், கொஞ்ச தூரத்தில் வளைவின் முன்பாய் ஆட்கள் கூட்டம், மற்றும் வண்டிகளின் அணிவகுப்பு...என்னவாக இருக்கும் என  யோசித்துக்கொண்டே வேகத்தினை குறைத்து மெதுவாய் முன்னேற, முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்று அதிவேகமாய் ரிவர்சில் வர, என்னவென்று பதைபதைத்து கேட்க, ஆன...ஆன... என்று மலையாளத்தில் பறைந்து விட, பக்கென்று ஆனது...நானும் ரிவர்ஸ் எடுக்கலாமா என்று யோசிக்கையில், இரு வளைவுக்கு முன்னால் இருந்த கூட்டம் சிதறி ஓடத்தொடங்கியது.



            மறைவிலிருந்து வெளியேறிய யானை ஒன்று படு கம்பீரமாய்...வெகு பிரம்மாண்டமாய் ரோட்டில் நடந்து செல்ல கை கால்கள் நடுக்கம் கொண்டன...எங்கே திருப்பி நம் வழியில் வந்துவிடுமோ என கலக்கம் அடைந்தது மனது.எப்பொழுதோ யூ டுபிலும், பேப்பர்களிலும் யானையின் அடாவடிகளைக் கண்டு பயந்திருந்த அந்த ஒரு கணம் நொடிப்பொழுதில் வந்து சென்றது.கொஞ்ச நேரம் அப்படி இப்படி என போக்கு காட்டிக்கொண்டிருந்த யானை சற்று ஓரமாய் ஒதுங்கி நிற்க, வாகனங்கள் வரிசைகட்டி பயந்தபடியே சென்றன.என் முறையும் வந்தது.செல்வது சிங்கத்தில் என்றாலும் யானையைக்கண்டு அதுவும் பூனைபோல் ஊர்ந்து சென்றது.கிடைத்த நொடிப்பொழுதில் கேமராவில் சிக்கிக்கொண்டது யானை.எவ்வளவு பெரிய உருவம்....சிவந்த நாசிகளைக்கொண்ட தும்பிக்கை...நீண்ட தந்தம்...சேற்றில் புரண்ட மேனி...பில்லர் போன்ற கால்கள், லாரி உயரத்திற்கு இருக்கும் அதன் உயரம் என.... கொஞ்சம் பயந்து தான் போனோம்....
              மூணாரில் ஒரு சில மணிகளை கழித்து திரும்பவும் அதே சாலையில் வர, இரண்டு மணி நேரத்திற்கு முன்பாய் யானையின் வருகையால் கலவரப்பட்டு கிடந்த இடம் இப்போது வெறுமையாய் கிடந்தது.மீண்டும் எங்காவது யானை தட்டுப்படுமா என்ற அச்சத்திலேயே வந்து கொண்டிருந்தோம்...கேரள எல்லை முடிந்து தமிழக வனப்பகுதியில் நுழைந்த போது, ஒவ்வொரு எச்சரிக்கைப் போர்டும் கண்ணில் பட, பயந்தபடியே சென்று கொண்டிருந்தோம்.மாலை வேளை நெருங்கிக்கொண்டிருக்க, கொஞ்ச அச்சமுடனே மெதுவாய் வந்து கொண்டிருந்தோம்...சாலையின் ஓரத்தில் எதேச்சையாய் கொஞ்சம் பார்க்க, யானைகள்......குட்டி யானையுடன் ஒரு தாய் யானையும், கொஞ்ச தூரம் பின்பாய் ஒரு பெரிய யானையும் தெரிய காலையில் அனுபவித்த அதே பக்கென்ற அனுபவம் மீண்டும் வர, இருந்தாலும் தைரியமாய் இருந்தோம்...மலைப்பாதை இல்லை...அழுத்தி பிடித்து சென்று விடலாம் என்ற நம்பிக்கை தான்...

கோவில்களில் ஆசிர்வாதம் கொடுக்கும் பழகிய யானையின் பக்கத்திலேயே செல்வதற்கு பயம்...அப்படியிருக்க காட்டு யானையைப்பற்றி சொல்லவா வேணும்....கொஞ்ச நேரம் வண்டியை நிறுத்தி யானையின் அழகை ரசித்துவிட்டு கிளம்பினோம்...

நேசங்களுடன்

ஜீவானந்தம்

1 comment:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....