Showing posts with label லட்டு.பெருமாள். Show all posts
Showing posts with label லட்டு.பெருமாள். Show all posts

Thursday, September 28, 2017

கரம் - 30

உப்புக்கண்டம் எனப்படும் உலர்கறி.

                   கிடா வெட்டும் போது பின்னாட்களில் உபயோகப்படுத்துவதற்காக பச்சைக்கறியில் கொஞ்சம் எடுத்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கயிற்றில் கோர்த்து வெயிலில் காயவைத்து விடுவர்.


                பதினைந்து நாள் வெயிலிலும் நிழலிலும் காய்ந்த பின்னர் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்வர்.தேவையான நாட்களில் சிறிது எடுத்து வெந்நீரில் அலசி ஊறவைத்து அம்மிக்கல்லால் தட்டி குழம்புக்கு பயன்படுத்துவர்.இதன் குழம்பின் சுவையே தனிச்சுவையாக தெரியும்.இந்த குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து வைத்தால் இன்னும் டேஸ்ட் மிக நன்றாக இருக்கும்.நன்கு வெந்த இந்த உப்புக்கண்ட கறியும் சுவையில் தனியாய் தெரியும்.பல்லில் அரைபடும் போது கறியின் மணமும் சுவையும் செமயாக இருக்கும்.ஆதிகால மனிதன் வேட்டையாடிய மிருகங்களை உப்பிட்டு பதப்படுத்தி வைப்பான்.அந்த முறைதான் இதுவும்.நகர்ப்புறங்களில் இந்த உப்புக்கண்டம் எங்குமே கிடைக்காது.கிராமங்களில் மட்டும் தான் கிடைக்கும்.அதுவும் விற்பனைக்கு இருக்காது.காது குத்து, கிடா வெட்டு, திருவிழா மற்றும் முக்கிய விசேஷங்களில் வெட்டப்படும் ஆடுகளின் கறியை தேவைக்கேற்ப எடுத்து உப்புக்கண்டம் போட்டு வைப்பர்.ஒரு வருடம் வரைக்கும் கூட தாக்கு பிடிக்கும் இந்த உப்புக்கண்டம்.பின்னாட்களில் என்றாவது ஒருநாள் தேவைக்கேற்ப காரசாரமாக குழம்பு வைத்து உண்பது வழக்கம்.


திருப்பதி லட்டு :
                திருப்பதி என்றாலே பாலாஜிதான் ஞாபகம் வரும் என்று சொல்பவர்கள் கொஞ்சம் குறைவுதான்.முதலில் லட்டும் அடுத்து மொட்டையும் தான் உடனடி ஞாபகம் வரும்.திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் பிரசாதம் லட்டு உலகப்பிரசித்தம்.கோவிலில் தரப்படும் லட்டு மிகுந்த சுவை (?) உடையதாக இருக்கிறது.பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் எடை 180 கிராம் இருக்கும்.இது புரோக்தம் லட்டு என்று அழைப்பார்கள்.

                 முந்திரி ஏலக்காய் திராட்சை மற்றும் நெய்யின் மணம் தூக்கலாக இருக்கும்.லட்டு கவுண்டரின் வரிசையில் லட்டினை வாங்க வரிசையில் நிற்கும் போது லட்டின் மணம் நம் நாசியெங்கும் பரவி, சுவை நரம்புகளை தட்டி எழுப்பி உமிழ் நீரை சுரக்க ஆரம்பித்து வைத்துவிடும்.கவுண்டரை நெருங்க நெருங்க மணம் நம் சுவாசத்தை ஆட்கொண்டுவிடும்.வாங்கி ஒரு விள்ளல் பிய்த்து வாயில் போட்டால், திருப்பதி வெங்கடாசலபதியை நேரில் கண்ட பரவசம் நம்முள் ஏற்படும்.லட்டின் சுவை நாம் நாவில் நாட்டியமாடும்.எடுத்த கைகளில் மணம் தாண்டவமாடும்.. அந்தளவுக்கு சுவை கொண்டது இந்த திருப்பதி பிரசாதம்.


சிக்கன் வறுவல்:
                        வாணலியில் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு போட்டு வெங்காயத்தை வதக்கி, இஞ்சி பூண்டு அரைச்சு போட்டு நன்கு வதக்கி, பின் கழுவின சிக்கனை போட்டு வதக்கி, பின் கொஞ்சம் உப்பு போட்டு சில்லி பிளேக்ஸ் போட்டு கொஞ்ச வேக விட்டு, அப்புறம் கொஞ்சம் தக்காளி, மஞ்சள், மல்லித்தூள். சிக்கன் மசாலாத்தூள்( தேவைப்படின் ) போட்டு நன்கு வேகவிடனும்.தேவையான உப்பை சேர்த்துக்கனும்.எண்ணையில் கறி சுருண்ட பதத்திற்கு வந்த பின் மிளகுத் தூளை சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் பிரட்டி, ட்ரையா எடுத்து புதினா கொத்தமல்லி தூவி இறக்கினா சுவையான சிக்கன் வறுவல் ரெடி..தேங்காயை கீத்து கீத்தா மெலிசா அறிஞ்சி போட்டாலும் இன்னும் சுவை தூக்கும்.வெறும் மிளகு மட்டும் போட்டாலும் செம டேஸ்டா இருக்கும்...இந்த மழைக்கு செம காரத்துடன் சிக்கனோட  பகார்டி ஒரு பெக் போட்டா ஆஹா...சொர்க்கம்...பக்கத்துல தான்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Monday, November 30, 2015

கோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில், திருப்பதி, பகுதி - 1

திருப்பதி பயணக்கட்டுரை:

                   அடாது மழையிலும் விடாது பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.நீண்டு செல்லும் இரு கம்பிவேலிகளுக்கு இடையில் மழையின் சாரலில் நனைந்தும், நனையாமலும் சென்று கொண்டிருந்தோம்.செல்லும் வழியில் 300 ரூபாய் தரிசனம், விஐபி தரிசனம் என இரு வழிகள் பிரிக்கப்பட்டு பக்தர்கள் பிரிக்கப்படுகின்றனர்.அங்கு நமது டிக்கெட் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுப்பப் படுகின்றனர்.அங்கும் நம்மை சோதனை செய்கின்றனர்.வெகு தூரம் சென்று கொண்டிருந்தோம் வளைந்தும் நெளிந்தும்.....ஓரிடத்தில் எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை நின்று கொண்டிருக்க, அங்கிருந்து எங்களின் பயணம் வெறும் அங்குலமாக மாறியது.நாங்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்க, அவ்வப்போது கோவிந்தா....... கோவிந்தா என்கிற கோஷம் அதிர ஆரம்பித்தது....செல்லும் வழியில் பக்தர்களை தங்க வைப்பதற்கான அறைகள் நிறைய இருக்கின்றன.கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து இடங்களிலும் பொருத்தி வைத்து சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

                                     சென்று கொண்டிருக்கும் வரிசையில் ஆங்காங்கே பாதுகாப்பு சோதனை வளையங்கள்.பக்தர்கள் இன்னும் கூடுதலாக சோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகின்றனர்....கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரிசையில் மெதுவாய் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தோம்.கடைசியாய் எம்பெருமான் வீற்றிருக்கும் மண்டபத்தில் நுழைய ஆரம்பித்தோம்.பக்தர்கள் கூட்டம் நெருக்கித்தள்ள ஆரம்பிக்கிறது.அப்போது ஏற்படும் தள்ளுமுள்ளுவை சகித்துக்கொண்டு கோவிந்தா..... கோவிந்தா... என கோஷம் போட்டுக்கொண்டு திருப்பதி ஏழுமலையானை மனமுருக வேண்டிக் கொண்டோம்...அதற்குள் ஜர்கண்டி...ஜர்கண்டி ...என தெலுங்கில் உத்தரவு வர அங்கிருந்து நகர்ந்தோம்....

                   திருப்பதி ஏழுமலையானை சந்தித்த மகிழ்ச்சியில் அங்கிருந்த மண்டபம் ஒன்றில் அமர்ந்து கொண்டோம்...பின் அங்கிருக்கும் ஒரு சில தெய்வங்களை வணங்கிவிட்டு, வெளியேறினோம்.அடுத்து லட்டு கவுண்டர்.... ஒரு மண்டபத்தில் இருபுறமும் ரயில்வே கவுண்டர் மாதிரி வரிசையாய் டிக்கட் கவுண்டர்.நாம் வைத்திருக்கும் தரிசன டிக்கெட்டினை வாங்கி பார்கோட் ரீட் பண்ணி டிக்கெட்டுக்கு உண்டான லட்டினை தருகின்றனர்.லட்டினை பெற்றுக்கொண்டு வெளியே வர திருப்பதி மலையின் மழையோடு கூடிய சுதந்திர காற்றினை சுவாசிக்க ஆரம்பித்தோம்...

                 பின் மெதுவாய் நடக்க ஆரம்பித்து கோவிலுக்கு உள்ளே நாம் கொடுத்து வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே இருக்கும் கவுண்டரில் வாங்கிக்கொண்டு எங்களின் தங்குமிடத்திற்கு சென்றோம்....
மாலை ஆறு மணிக்கு கோவில் வரிசையில் செல்ல ஆரம்பித்து, திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு வர இரவு 9 மணி ஆகிவிட்டது.மிக சிறப்பான தரிசனம்...என்ன கொஞ்ச நீண்ட தரிசனம்...பெருமாளை சந்திப்பது என்ன அவ்வளவு சுலபமா...?என்னதான் தள்ளு முள்ளு, நெருக்கடி இருந்தாலும் மீண்டும் அவரை சந்திக்க வேண்டி விரும்புகிறது.இனி அடுத்த முறை அவரை பார்க்க செல்லவேண்டும்...
திருப்பதி ஏழுமலையானை தரிசித்தபின், அலர்மேல்மங்கை தாயார் திருக்கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.திருப்பதி அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.

திருப்பதி செல்ல ஒரு சில முன்னேற்பாடுகள்: 

1) திருப்பதி செல்ல திட்டமிடுபவர்கள் ஆன்லைனில் தரிசன நேரம் புக் செய்து கொள்ளலாம்.செல்லும் நாள், நேரம் ஆகியவற்றை உங்கள் புகைப்படத்தோடு பதிவு செய்து கொள்ளலாம்.லட்டுகள் கூட எத்தனை வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளலாம்.
2) திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்குவதற்கும் ஆன்லைனில் புக் செய்து கொள்ளவேண்டும்.இல்லையேல் திருப்பதியில் தங்கிக்கொண்டு பின் மேல் திருப்பதிக்கு செல்லலாம்.

3) தங்குவதற்கு அறை கிடைக்க வில்லை எனில் திருப்பதி மலையில் இலவச அறைகள் இருக்கின்றன.லாக்கர் வசதிகள் உள்ளன.அங்கு தம் பொருட்களை வைத்துவிட்டு தரிசனம் செய்ய கிளம்பலாம்.

4)தங்களின் உடைமைகள், செல்போன், காலணிகள் இவைகளை லாக்கரிலேயே விட்டு செல்வது நல்லது.

5)செல்போன், உடைகள் மறந்து எடுத்துச் சென்றால் தரிசனம் செல்லும் வழியில் லாக்கர் வசதி இருக்கின்றன.அங்கு ஒப்படைத்து விட்டு, தரிசனம் முடிந்தபின் கோவிலுக்கு வெளியே வந்து பெற்றுக்கொள்ளலாம்.கையோடு ஏதாவது துணிப்பை இருப்பின் நல்லது.

6)லட்டு வாங்க கவர் அங்கேயே பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இல்லையேல் கையில் பை இருந்தால் நல்லது.

7)மாதவா இல்லம் என்கிற தங்குமிடத்தில் பாய், போர்வை வாங்கிக்கொண்டு இரவு தூங்கிக்கொள்ளமுடியும்.இல்லையேல் வெளியே வாடகைக்கு பாய் போர்வை கிடைக்கும்,அதை வாங்கிக்கொண்டு இரவை கழித்துக்கொள்ளலாம்.

8)தங்குமிடங்கள் அனைத்தும் அத்தனை சுத்தம்..24 மணி நேரமும் பணியாளர்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

9) பொது தரிசனம் என்கிற இலவச தரிசனத்தில் போனால் எப்படியும் ஒரு நாள் அல்லது இரு நாள் ஆகிவிடும்.ஆனாலும் சாப்பாடு, குடிநீர் வசதிகள், கழிவறை போன்ற வசதிகள் இருக்கின்றன.

பத்திரமாய் பாதுகாப்பாய் திருப்பதி செல்ல வாழ்த்துக்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Sunday, February 22, 2015

வாட்ஸ் அப் தகவல்கள் - 3

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே!ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா? ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. * ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார். 

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது. 

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம். 

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன. 

[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.]


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...