Friday, March 18, 2016

கோவை மெஸ் - சோயா வறுவல், நியூ லட்சுமி மெஸ், மார்க்கெட் பகுதி, ஊட்டி

சோயா வறுவல்
                  நம்ம வேலை ஊட்டியில் நடைபெறுவதால், மாலை நேரங்களில் ஊட்டியில் ஊர் சுற்றுவது வேலை.சில்லென குளிரில் ஜெர்கினை உடுத்தியபடி காலாற நடப்பது சுகம்.ஊட்டி சுற்றுலா பகுதியாதலால் உள்ளூர் மற்றும் வெளிநாடு அம்மணிகள் வேறு அம்சமாய் சுற்றிக்கொண்டிருப்பர்.அது வேறு செம ஜில்லாக இருக்கும்.கார்டன், போட் ஹவுஸ், மார்க்கெட், கமர்சியல் ரோடு, சேரிங்கிராஸ் என முக்கியமான இடங்கள் அனைத்தும் ஊட்டி நகரப்பகுதியில் இருப்பதால் அங்கு எப்பவும் சுற்றுலாவாசிகள் நடமாட்டம் இருக்கும்.கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும், அதே சமயத்தில் அங்கு நிலவுகிற குளிருக்கு இதமாய் சூடாய் ஏதாவது சாப்பிட்டால் சொர்க்கமே பக்கத்தில் இருப்பது போலிருக்கும்.
                          ஊட்டி குன்னூர் போன்ற மலைப்பகுதிகளில் சோயா பெரும்பாலும் மாலை நேர உணவாக தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கிறது.சோயா சில்லி,சோயா வறுவல் என விதவிதமாக சாப்பிடுகின்றனர்.குன்னூரில் ரயில்வே கேட் அருகில் ஒருவர் சூடாய் சில்லி சோயா தள்ளுவண்டியில் போட்டுக்கொண்டிருப்பார்..சில்லி சிக்கன் தோற்று போய்விடும்.அவ்வளவு டேஸ்டாக இருக்கும்.ஊட்டி பகுதியில் நிறைய இடங்களில் சோயா உணவுகள் கிடைத்தாலும் ஊட்டி நகர மக்களின் தேர்வு மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையை சொல்கின்றனர்.
                    அப்படித்தான் இந்தக்கடைக்கு நேற்று சென்றிருந்தேன்.சின்ன கடைதான்.பத்துக்கு பத்து ரூம் தான்.இரண்டு டேபிள்கள் போடப்பட்டு இருக்கின்றன.உள்ளே ஒரு தடுப்பு அறை.அதனுள் சுடச்சுட ரெடியாகி கொண்டு இருக்கிறது சோயா வறுவல்.உள்ளே வருவதும் போவதுமாக ஆட்கள் இருக்க, சிலபேர் உள்ளே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.அந்த ஜோதியில் நானும் ஐக்கியமானேன்.என்ன சாப்பிடலாம் என்று யோசிக்காமல் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சோயா வறுவலையே நானும் சொன்னேன்.

               சூடாய் ஆவி பறக்க சோயா வறுவலை ஒரு பிளேட்டில் வைத்து சூடு தாங்கிக்கொள்ள ஒரு பேப்பரையும் தர, தட்டினை டேபிளில் வைத்து ஸ்பூனால் சோயாவை இரண்டாக பிய்க்க ஆரம்பிக்க, சூட்டோடு சோயாவின் வாசனை நம் நாசியினை அடைந்து உடனே வளர்சிதை மாற்றம் போல, நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.சோயாவை பிய்த்து, சுடச்சுட வாயில் போட்டு மெல்ல, ஆஹா…என்ன சுவை…நாக்கில் உள்ள அத்துணை சுவை நரம்புகளும் எழுந்து நின்று வரவேற்கிறது.காரம், உப்பு, கொஞ்சம் மசாலா என கலந்துகட்டி சுவையை அதிகப்படுத்தியது. சிக்கனுக்கு உண்டான சுவை சோயாவிலும் இருக்கிறது. செம டேஸ்ட்.                   
                    அப்படியே ஒவ்வொன்றாய் பிய்த்து பிய்த்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, பக்கத்துகாரர் சூப் ஊத்துங்க என்று சொல்லவும், அவரது பிளேட்டுக்கு சூப்பினை சூடாய் சோயாவில் ஊற்றினார் கடைக்காரர்.நானும் என்ன அது என்று கேட்க, காளான் சூப் என சொல்ல, எனக்கும் போடுங்க என்றவுடன் சூடாய் எனது பிளேட்டுக்கும் ஊற்றினார்.வெளியே இருக்கின்ற குளிரில் சோயா ஆறிக்கொண்டிருக்க, சூடாய் சூப் ஊற்றவும் மீண்டும் ஆவி பறக்க ஆரம்பித்தது சோயாவில்.நமக்கும் சூடாய் இருக்க, மீண்டும் சோயா விள்ளல் உள்ளே சென்றது.காளான் சூப்புடன் சோயா வறுவலின் மசாலா ஒன்று சேர அது இன்னொரு சுவையைத் தந்தது.சோயா முழுக்க சாப்பிட்டவுடன் ஒரு வித திருப்தி ஏற்பட, கடைக்காரரிடம் ரொம்ப சுவையாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு விடைபெற்றோம்….
                   மார்க்கெட் பகுதியில் பழைய அக்ரஹாரம் ரோட்டின் கார்னரில் இருக்கிறது.மிக அருகிலேயே சண்முகா ஒயின்ஸ் இருக்கிறது.குளிருக்கு இதமாய் இரண்டும் அருகருகே இருப்பது சிறப்பு….
விலை குறைவுதான்.ஒரு பிளேட் 20 ரூபாய்.இதே கடையில் சில்லி சிக்கன், ஈரல் வருவல் என நான்வெஜ் அயிட்டமும் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

  1. சுவன கன்னிபிரியன்March 18, 2016 at 5:00 PM

    பதிவை படித்தவுடன் பசி வயிற்ரை கிள்ளுகின்றது

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....