Friday, June 24, 2016

கரம் - 23

பார்த்தது :
உறியடி...செமயா உரிச்சி தொங்க விட்டுட்டாங்க...செம படம்...சாதிவெறியை அப்பட்டமாக உரிச்ச படம்.இடைவேளை சண்டைக்காட்சி செம மாஸ்.அதுவும் சண்டை போட்டுகிட்டே இருக்கும் போது தீடீர்னு சிகப்பு நிற பேக்ரவுண்டில் இடைவேளை போடுவதும், அந்த மியூசிக்கும் பட்டாசு...

படத்தினை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஹேட்ஸ் ஆஃப் இயக்குநர் விஜயகுமார்.தமிழுக்கு நல்ல படத்தினை தந்தமைக்கு...
                         *******************************
ஞாபகச்சிதறல்

2005
               பட்டுக்கோட்டையில் ஒரு வாரம் பணியின் காரணமாக தங்கியிருந்தேன்.அப்போதான் ஐயா படம் ரிலீஸ் ஆனது.முதல் நாள் காலைக்காட்சி போனேன்.சரத்குமார் படம், ஹரி இயக்குநர் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.தியேட்டரில் படத்தின் போஸ்டர்கள் ஒரு சில மட்டும் ஒட்டப்பட்டிருந்தன.எந்த ஒரு பெரிய பிளக்ஸ் பேனரும் நடிகருக்கோ இயக்குநருக்கோ இல்லை.ஆனால் ஒரே ஒருத்தருக்கு மட்டும் வைத்திருந்தனர்.அவர் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
பட்டுக்கோட்டை மைந்தனை வாழ்த்தி அவரது ரசிகர்கள் பட்டுக்கோட்டை காரர்கள் வைத்திருந்தனர்.
                     பட்டுக்கோட்டை பிரபாகரின் ஊஞ்சல் நாவல்கள் மூலம் அவரது எழுத்துக்கள் பரிட்சயம் ஆனது எனது பள்ளிக்காலங்களில்.அவரின் பரத் சுசிலா கதை மாந்தர்கள் பிடித்த போன ஒன்றாகும்.
ஊஞ்சல் இதழுக்கு வருட சந்தா கட்டி படித்த காலங்கள் உண்டு.
               பட்டுக்கோட்டை பிரபாகரை நேரில் சந்திக்க ஆவல் இருந்தது அவரின் நாவல்களை படிக்கும் போது.பத்து பதினைந்து வருடம் கழித்து பதிவர் சந்திப்பில் அவரை நேரில் பார்த்ததோடு சரி..அவரின் கதை வசனத்தில் ஐயா படம் சூப்பராக இருந்தது.பரபரவென சாமி படத்தை கொடுத்த ஹரி இந்தப்படத்தில் அகேலா கிரேன் இல்லாமல் படம் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்..

                           ஒவ்வொரு காட்சியும் மனதை ஈரப்படுத்தியது.எத்தனை தடவை பார்த்தாலும் கண்கலங்க கூடிய வகையில் வசனங்கள், காட்சிகள் இருக்கும்.படம் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று நினைவில் இல்லை..நாயகன் சரத்..அடிதடியில் பார்த்து பழக்கப்பட்டு போன சரத்குமார் அமைதியாய் இரு வேடங்களில் நடித்து மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.
                      அடுத்து நம்ம ஹீரோயின்.இந்த படத்தில் தான் அறிமுகம்.நயன்தாரா.பள்ளி விட்டு வரும் மாணவியாய் நடித்த நயன்தாரா திடிரென்று யூனிபார்மை உருவிவிட்டு மாடர்ன் ட்ரெஸ்ஸில் தோன்றி பாடல் காட்சியில் ஆடிப் பாடியவுடனே..எனது கண்களும் மனதும் நிறைந்து போனது..அன்றில் ஆரம்பித்த நயன்தாரா மோகம் இன்னும் வரை தீரவில்லை.கொழுக் மொழுக்கென்று இருந்த நேரத்திலும் பிடித்த நயன்ஸ் இன்று சிலிம்மாகி ஒல்லியாகிப் போனாலும் பிடிக்கிறது..நான் வயதாகி போனாலும் நயன் இன்னும் பிடிக்கும் என்றே தோணுகிறது..
                               ஒரு வார்த்தை கேட்டு என்ற பாடலில் நயனின் ஆடலும், பாடலின் வரிகளில் பொதிந்துள்ள அர்த்தமும் இன்னமும் ரசிக்க கூடியவை..வருடங்கள் பல கடந்து போனாலும் நயன்தாராவின் அழகு இன்னமும் பிரமிக்க வைக்கிறது...

இன்று கே டிவில் ஒளிபரப்பான ஐயா திரைப்படத்தை பார்த்ததும் ஏற்பட்ட ஞாபக சிதறல்கள்..

வருந்தியது :
இனிய காலை வணக்கம்..
                        இன்னிக்கு கொஞ்சம் நேரத்திலேயே எழுந்தாகிவிட்டது.நேரம் என்றால் மணி நான்கு.பேஸ்ட்டும் ப்ரஷ்ஷுமாய் வீட்டை திறந்து வெளியே வந்தால் காற்று ஜில்லிட அடிக்கிறது.சுத்தமான ஆக்சிஜன் சுவாசிக்க கிடைக்கிறது.தெருவிளக்குகள் அணைவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது.சுற்றுப்புற வீடுகளில் இன்னும் எழுந்திரிக்கவில்லை.ஐந்தரை ஆகியிருந்தால் இந்நேரம் பக்கத்து வீடுகள், எதிர் வீடுகள் ஆளுக்கொரு விளக்கமாற்றையும் வாளியையும் கொண்டு வீதியில் கொஞ்சமும் வீட்டில் கொஞ்சமும் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு கொண்டிருப்பர்.
மணி நான்கானதால் என்னவோ இன்னும் எழுந்திரிக்கவில்லை போலும்.அதிகாலை கனவுகள் பலிக்கும் என்பதினால் யார் யாருடன் டூயட் பாடிக்கொண்டிருந்தனரோ இல்லை மற்ற கனவுகள் ஏதாவது கண்டு கொண்டிருப்பார்களோ என்றும் தெரியவில்லை.
                                சுற்றும் முற்றும் பராக் பார்த்தபடி இருக்கையில் இரண்டு வீடுகள் தள்ளி உள்ள எதிர்வீட்டில் லைட் ஒளிர்ந்தது.கதவை திறந்தபடி வீட்டுக்காரர் வந்தார்.பகலாய் இருந்தால் ஒரு வணக்கம் கிடைத்திருக்கும்.வண்டியை தள்ளி வாசலில் நிறுத்தினார்.அதற்குள் அவரது இல்லாளும் வாசல் பெருக்க கூடிய சாதனங்களுடன் வந்து வீதியை சுத்தம் செய்ய ஆரம்பிக்க, அவர்களது மகள் பள்ளி யூனிபார்மில் கிளம்பி வெளியே வர, தந்தை மகளின் புத்தக பையை வண்டியில் மாட்டிவிட்டு இருவரும் கிளம்ப ஆரம்பித்த போது மணி நான்கரைக்கும் மேல் ஆகியிருந்தது..
அப்பொழுது தான் ஞாபகம் வந்தது.ஓ..அந்த பெண் ஒன்பதாம் வகுப்பு முடிந்து பத்தாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறாள் என்று.
                                  தன் குடும்பத்தினரின் ஆசையை தீர்க்க அதிகாலையிலேயே ட்யூசனுக்கு செல்கிறாள்.ஒரு டாக்டராகவோ எஞ்சினியர்..(இது ஒரு படிப்புன்னு இந்த எண்ணம் இனியும் வராது) ஆகவோ ஆக ரெடியாகிக்கொண்டிருக்கிறாள்..
பாவம்..படிப்பு ஏற வேண்டும், மார்க் வாங்க வேண்டும் என்கிற ஆசையில் தன் சுக துக்கங்களை இழக்கிறாள்..எப்படி இந்தக்குளிரில் ரெடியாகி, காலையில் சாப்பிடாமல் போய், மதிய சாப்பாடு மட்டும் சாப்பிட்டு விட்டு மாலை மற்றுமொரு ட்யூசனை முடித்து விட்டு வரும் இவளின் நிலைமை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.
பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளுக்கு பிள்ளைகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்..
                                            அந்த பள்ளி மாணவியின் நிலை இன்று கஷ்டப்பட்டாலும் நாளை ஒரு நல்ல நிலைமைக்கு வரலாம் என்பதும் உண்மைதான்.இருந்தாலும் ஒரு வித ஆதங்கம் ஏற்படுகிறது..
                             வெளியே வானம் வெளுக்க ஆரம்பிக்கிறது..பறவைகளி்ன் கீச்சுக்குரல்கள் ஆரம்பமாகின்றன...இரை தேடி செல்லும் பறவைகள் வெறும் வாயோடு வருவதில்லை...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

1 comment:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....