Tuesday, June 21, 2016

கோவைக்கு புதுசு - மல்டி லெவல் கார் பார்க்கிங் (Multi level car parking) - குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கோவை (GKNM hospital, coimbatore)

கோவைக்கு புதுசு               
         கடந்த ஞாயிறு அன்று அவினாசி ரோட்டில் அமைந்துள்ள குப்புசாமி நாயுடு (GKNM) மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.எனது சித்தப்பா அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அங்கு அட்மிட் ஆயிருந்தார்.அவரை பார்த்து விட்டு வருவதற்காக சென்றிருந்தேன். அவினாசி ரோட்டில் இருந்து அந்தப்பக்கம் இருக்கிற ரோடு வரை மருத்துவமனை பரந்து விரிந்து இருக்கிறது.காரில் சென்றதால் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மருத்துவமனை பார்க்கிங்கில் நுழைய முயல, அங்கிருந்த செக்யூரிட்டி, அந்த பார்க்கிங் போங்க என்று சொல்லவும், வண்டியை மருத்துவமனைக்குள் திருப்பினேன்.ஒரு லெஃப்டும் ரைட்டும் போட்டு உள்ளே நுழைய ஒரு பணியாளர், சார்…ஒட்டுநர் மட்டும் உள்ளே போங்க ..மற்றவர்கள் இங்கேயே இறங்கிக்கொள்ளுங்கள் என்றார்.
              வண்டியில் இருந்தவர்கள் இறங்கிக்கொள்ள, நான் மட்டும் உள்ளே நுழைந்தேன்.டோக்கன் கொடுக்க ஒரு பூத் இருக்க, அதற்கு முன் வண்டியை நிறுத்த, உள்ளிருந்தவர் வண்டி எண் எல்லாம் செக் செய்து விட்டு டோக்கன் ஒன்றினை கொடுத்தார்.கூடவே A 16 ல் நிறுத்துங்க என்றார்.சரி என்றபடியே வண்டியை கிளப்பினேன்.ஒரு பெரிய ஷெட்…கார்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தபடி இருக்க, எனது வாய் ஆ  வென ஆச்சர்யத்தில் பிளந்தது.
             
              கீழ் வரிசையில் பல கார்களும், மேல் வரிசை, அதற்கும் மேல் வரிசை என நான்கு வரிசைகள் இருக்க, அனைத்திலும் கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. A , B, C  என மூன்று தளங்கள்.ஓவ்வொரு தளத்திலும் ஐந்து வரிசைகள்.கார்கள் செங்குத்தாக மேல் செல்கின்றன.கிடை மட்டமாகவும் செல்கின்றன.அனைத்தும் லிஃப்ட் வசதியில் நடக்கின்றன.ஆச்சர்யப்பட்டுக் கொண்டே எனக்கான இடத்தில் வண்டியை நிறுத்தினேன்.பக்கத்தில் கார்கள் கீழிறங்குவதும் மேல் ஏறுவதுமாக இருந்தன.





                  அருகில் இருந்த பணியாளரை ஆர்வத்துடன் கேட்க, கிட்டத்தட்ட 350 கார்கள் ஒரே நேரத்தில் நிறுத்திவைக்கலாம் என்றும், எந்த வரிசையில் இருந்தாலும் 10 நிமிடங்களுக்குள் காரை வெளியே எடுத்து விடலாம் என்றும் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.
             இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் நிச்சயம் கோவைக்கு புதுசு.டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் இந்த வசதிகள் இருக்கின்றன என்பதை கேள்விப்பட்டும், ஒரு சில திரைப்படங்களில் பார்த்தும் இருக்கிறேன்.ஆனால் முதன் முறையாக கோவையில் இந்த வசதியினை உபயோகப்படுத்தி பார்த்து இருக்கிறேன்.குறிப்பிட்ட மணி நேரம் வரைக்கும் ரூ 30, அதிக நேரம் என்றால் ரூ 60 மட்டும் வசூலிக்கின்றனர்.காரில் வரும் டிரைவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க, ஒரு தனி அறை ஒன்றினை அமைத்திருக்கின்றனர்.
                   இந்த மல்டிலெவல் கார்பார்க்கிங் வசதியை மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கார்களை பாதுகாப்பாக ஒரே இடத்தில் நெருக்கடி இன்றி நிறுத்தவும், கார்கள் வெயில் மழை போன்ற இயற்கை சூழல்களால் பாதிப்படையாமல் இருக்கவும், மிகப்பெரும் இடவசதியை சுருக்கி, குறைந்த இடத்தில் நிறைய கார்களை நிறுத்தும் அமைப்பினை ஏற்படுத்திக் கொடுத்த குப்புசாமி நாயுடு மருத்துவமனை நிர்வாகத்திற்கு மிகப்பெரும் நன்றி.
இந்த மாதிரி நகரத்தில் நிறைய மல்டி லெவல் கார் பார்க்கிங் இருந்தால் ரோட்டில் நன்கு இடவசதி கிடைக்கும்.காரை கன்னாபின்னாவென்று நிறுத்திவிட்டு ஷாப்பிங் செல்ல மாட்டார்கள்.அதே போல் அதிக கார்கள் நிற்கக்கூடிய இடத்தின் தேவையும் குறையும்.
                 இதெல்லாம் முடித்து விட்டு அடுத்த விஸிட் ஆக கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள கங்கா மருத்துவமனைக்கு சென்றேன்.கோவிலை வலம் வருவது போல் ஒரு முறை சுற்றி வந்தவுடன், அங்கிருந்த செக்யூரிட்டி, பக்கத்து காலி இடத்தில் எங்களது கார்பார்க்கிங் இருக்கிறது அங்கே நிறுத்திக் கொள்ளுங்கள் என்றார்.அங்கே போனால் கார்கள் வெட்டவெளியில் நிற்கின்றன.ஒருவர் காரை முன்னும் பின்னும் எடுக்க முயன்று கொண்டிருந்தார்.அவர் முயற்சி முடிந்து காரை நிறுத்தியவுடன், பிறகு நான் முயன்று கொண்டிருக்க ஆரம்பித்தேன்.ஒருவழியாய் காரை நிறுத்தி விட்டு வெளியே வர, ரூ 10 ஐ தந்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றேன்…
             கோவையில் குப்புசாமி மருத்துவமனையில் மல்டி லெவல் ஆட்டோமேடிக் கார்பார்க்கிங் ஐ நிறுவியுள்ள நிறுவனம் SIEGER.
           
       கார் இருக்கிறவங்க சும்மா ஒரு ட்ரிப் போய்ட்டு வாங்க...மருத்துவமனைக்கு....... நோயோடு அல்ல........காரோடு.......

நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

  1. மதுரையில், ஒரு பிரபல பட்டு ஜவுளி மாளிகை சில வருடங்களுக்கு முன்பே இதை அறிமுகப்படுத்தி விட்டது !காரை சில நிமிடங்களில் எடுத்து விடலாம் ,பட்டுச் சேலையைத்தான் ....:)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...கோவைக்கு இது புதுசு சார்....ஜவுளி கடையில் எத்தனை கார்க்கு தெரியல.ஆனா இங்க 350 கார்...அதைத்தான் சொல்லி இருக்கேன்.கோவையிலும் சென்னை சில்க்ஸ்ல இருக்கு.அதிகபட்சம் 2 கார்னு நினைக்கிறேன்.

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....