Showing posts with label சிக்கன். Show all posts
Showing posts with label சிக்கன். Show all posts

Wednesday, January 9, 2019

கோவை மெஸ் - குழந்தை கடை, C.R பிரியாணி, டவுன்ஹால்,கோவை C.R BIRIYANI, TOWNHALL, KOVAI


C.R பிரியாணி
குழந்தை கடை, டவுன்ஹால்

நிறைய பேரு இந்த கடையப்பத்தி சொல்லி இருந்ததால் நேற்றைய மதியம் இங்கு போய் இருந்தோம்.கடைக்கு முன்னால் சிலர் நின்று கொண்டிருந்தனர்.கூட்டமா இருக்கும் போல என்று நினைத்தபடியே கடைக்குள்ளே எட்டிப் பார்த்தோம்.ரொம்ப சின்ன கடைதான்.நான்கு டேபிள்கள்.மொத்தம் பதினாறு பேர் அமர்ந்து சாப்பிடலாம்.முதல் பந்தி அப்பொழுது தான் ஆரம்பித்திருந்தது.அதனால் அடுத்த பதினாறில் நாங்களும் இருவராய் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.டேபிள்கள் ஒவ்வொன்றாய் காலி ஆக ஆக அடுத்த பதினாறும் ஆக்ரமித்தது அடுத்த பந்தியை.

                  வாழை இலை வைத்து பேப்பர் கப்பில் தண்ணீர் வைக்க, என்ன வேண்டும் என கேட்க பிரியாணி என சொல்ல, காலி ஆகிவிட்டது, பிளைன் தான் என சொல்ல, அதனுடன் வறுவல், குடல் குழம்பு கலக்கி என ஆர்டரிட்டோம்.ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது. பிளைன் பிரியாணி.சீரகசம்பாவின் குருணை அரிசிதான்.ரொம்ப சிறிதாக இருக்கிறது.சாப்பிட கொஞ்சம் சுவையாக இருக்கிறது.மற்றபடி கொஞ்சம் காரசாரமாய் இருக்கிறது.இதற்கு கொடுக்கப்படும் குழம்பு நல்ல காரம்.இரண்டும் காம்பினேசனில் மேட்ச் ஆகிறது.அளவாய் தான் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி இருக்கும் போல.
பிளைன் தான் அதிகமாக ஓடுகிறது.அடுத்த முறை மட்டன் பிரியாணியை சுவைத்துப் பார்க்க வேண்டும்.



                      மட்டன் வறுவல்..திக்கான வறுவல் எல்லாம் கிடையாது.வறுவல் நல்ல பதத்தில் இல்லை.எண்ணிப் பார்த்ததில் எட்டுதுண்டுகள் தான்.அளவும் பெரிதும் சிறிதுமாய் இல்லை.எல்லாம் ஒரே சைசில் இருக்கின்றன.வெங்காயம்தான் அதிகம் இருக்கின்றன.கறி கொஞ்சம் மென்மையாய் இருக்க, காரசாரமாக இருக்கிறது.
குடல் வறுவல்.இதுவும் அதே தான்.குழம்புடனே வந்து சேர்கிறது.வறுவலை இலையில் வைத்தால் குழம்பு ஆறாக ஓடக் கூடாது.திக்கான மசாலா ஆமையை விட மெதுவாய் நகரவேண்டும்.வெறும் மசாலா கலந்த எண்ணைய் தான் லைட்டாய் பிரிய வேண்டும்.அது தான் வறுவலுக்கு உண்டான பதம்.அப்படி இல்லை. குடலுடன் வெங்காயமும் போட்டி போடுகிறது.சுவையாக இருக்கிறது.

                                 குழம்பு கலக்கி சுமார்தான்.செக்க செவேல் என்று வருகிறது.குழம்பின் மணமும் இல்லை முட்டையின் மணமும் இல்லை.சரியான காம்பினேசனில் இரண்டும் இல்லை.மொத்தமாய் நாலைந்து முட்டையை உடைத்து ஊற்றி, குழம்பையும் சேர்த்து,ஒரே தடவையாய் கல்லில் ஊற்றி அங்கு அளவாய் பிரித்து இலைக்கு இலை தருகின்றனர்.அதில் தான் சுவை மிஸ் ஆகிறது. 

                             ஆட்டின் பெரும்பாலான பார்ட்ஸ்கள் இருக்கின்றன.மட்டன் சாப்ஸ், குடல் ஈரல், ரத்தப்பொறியல் என. மதுரை தவிர்த்து தேனி மாவட்டத்தில் கிடைக்கும் சுவை போலத் தான் இருக்கின்றன.ரொம்ப எதிர்ப்பார்ப்போடெல்லாம் செல்ல தேவையில்லை.முனியாண்டி விலாஸில் கிடைக்கும் ருசி தான்.காரசாரமாக கிடைக்கும்.பிரியாணி டேஸ்ட் நார்மல் தான்.சிட்டிக்குள் இருக்கும் ஒரு முனியாண்டி விலாஸ் தான் இது.விலை கோவைக்கு ஏற்றார் போல் இருக்கிறது.
மட்டன் பிரியாணி -120, குடல் -90 வறுவல் -110 ( இது வெறும் எட்டு துண்டுகள் தான்.) பிளைன் - 60 
                        
மதியம் ஒரு மணி சுமாருக்கு சென்றால் ரஷ் ஆக இருக்கும்.ஆற அமர சாப்பிடனும் என்றால் இரண்டரை மணிக்கு மேல் போனால் போதும்.

அமைவிடம் :
டவுன்ஹால் டூ வைசியாள் வீதி செல்லும் போது இடதுபுறம் அங்காளம்மன் கோவில் வீதி. அங்கே ஒரு ஜங்சன்.அதில் வலதுபுறம் இருக்கிறது இந்த கடை.மேலும் விவரங்களுக்கு 
கூகுள் மேப்பிடவும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Saturday, October 27, 2018

கோவை மெஸ் - கொக்கரக்கோ, கவுண்டம்பாளையம் கிளை, கோவை; COCKRACO, KAVUNDAMPALAYAM BRANCH, COIMBATORE


                             நேற்று செ.சி.வானம் படம் பார்த்து விட்டு வெளியே வரும் போதும் மழை தூறிக்கொண்டிருந்தது.மழைக்கு இதமாய் நாவுக்கு காரமாய் சாப்பிடத் தோணியதால் தியேட்டரில் இருந்து யூ டர்ன் அடித்து மெயின்ரோட்டில் உள்ள கொக்கரக்கோ போனோம்.புதிதாக ஆரம்பித்த கிளை இது.பல வருடங்களுக்கு முன்னால் கவுண்டம்பாளையத்தில் நன்கு சக்கை போடு போட ஹோட்டல் இது.அப்பவே கிரில் தந்தூரி என மிக அருமையான சுவையில் கிடைக்கும்.இடையில் பார்ட்னர்ஷிப் பிரச்சினை காரணமாக கவுண்டம்பாளையத்தில் இருந்து வெளியேறியது.அதற்கு பின் கொக்கரக்கோ சிவானந்தா காலனியில் இன்னொரு கிளையை ஆரம்பித்தது.பின் சில வருடம் கழித்து, கவுண்டம்பாளையத்தில் மிக நேர்த்தியாய் தனது மூன்றாவது கிளையை ஆரம்பித்தது.ஹோட்டல் நல்ல இண்ட்ரீயர் அமைப்புடன் விசாலமாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் நிறைய டேபிள்கள் காலியாக இருந்தது.மழைக்கு யாரும் ஒதுங்க வில்லை போல.சாப்பிட வருபவர்களை விட அங்கே வேலை செய்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.நாங்களும் ஒரு டேபிளை ஆக்ரமித்து அமர்ந்தோம்.


                               மெனுகார்டு புக் வடிவில் வர, தந்துவிட்டு வெயிட்டர் காத்திருந்தார் ஆர்டர் வேண்டி...நாங்களும் கொஞ்சம் பத்து நிமிடம் கழித்து வாருங்கள், புக்கை முடித்துவிட்டு கூப்பிடுகிறோம் என சொல்ல அவரும் அங்கிருந்து நகர்ந்தார்.பின் ஆர்டராய் சிக்கன் விங்ஸ், கிரில், சிக்கன் டைனமைட் என பிடித்ததை சொன்னோம்.ஒவ்வொன்றும் சூடாக வந்து சேர்ந்தது.கிரில் சிக்கன் நல்ல காரம்.மழைக்கு ஆஃப்டாக இருந்தது.நன்கு மசாலாக்கள் தூவி இன்னும் காரமாக இருந்தது.மயோனிஸ் மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கிறது.அடுத்து எப்பவும் பிடித்த அயிட்டம் சிக்கன் விங்க்ஸ்.எப்பொழுது கொக்கரக்கோவின் எந்த கிளைக்கு சென்றாலும் மறக்காமல் அதை ஆர்டர் செய்வது சிக்கன் விங்க்ஸ் தான்.அந்தளவிற்கு அதன் சுவை பிடிக்கும்.அதை ஒவ்வொன்றாய் எடுத்து சின்ன சின்ன எலும்புகளை பிரித்து பின் கறியை சாப்பிடுவதில் அப்படி ஒரு அலாதி இன்பம்.



                  அதைப்போலவே சிக்கன் டைனமைட்டும் செம டேஸ்ட்.போன்லெஸ்.பட்டரில் வறுத்தெடுத்திருப்பார்கள் போல.நல்ல சுவை.மெதுவாய் உள்ளிறங்குகிறது.அதற்கப்புறம் நூடுல்ஸ், பட்டர் நான், பரோட்டா என எல்லாம் வரிசையாய் வந்தது.பன் பரோட்டோ மட்டும் ஏமாற்றிவிட்டது.பன் மாதிரி சின்னதாய் இருக்கும் என பார்த்தால் நார்மல் புரோட்டாவை அடித்து துவைத்து கொண்டு வந்து பொசுபொசுவென வைக்கிறார்கள்.சுவையும் சரியில்லை.சைஸும் சரியில்லை.




                                      பட்டர் சிக்கன் கிரேவி நல்ல சுவை.கிரில் மட்டும் சரியான காரம்.அதேபோல் மிக்ஸ்ட் நூடுல்ஸ் இல் வந்த இறால், மீன், சிக்கன் துண்டுகள் அதே போல் கொஞ்சம் காரம். குழந்தைகள் சாப்பிடாமல் ஒதுக்கிவிட்டனர்.பெரியவர்களுக்கு ஓகே ரகம்.நன்றாகவே இருக்கிறது.
                                             காரசாரமா சாப்பிடறவங்களுக்கு இது ஓகே தான்.எதிரில் வேற தமிழக அரசு கடை இருக்கிறது.அதனால் கூட ஒருவேளை காரம் கூடியிருக்கலாம்.
எப்பவும் போல விலை கோவைக்கு ஏற்ற மாதிரி தான் இருக்கிறது.

எப்பவாது இந்தப்பக்கம் வந்தீங்கன்னா கவுண்டம்பாளையம் கிளையிலும் சாப்பிட்டுப் பாருங்கள்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, October 26, 2018

கோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, R.S புரம் கிளை, கோவை. STAR BIRIYANI, R.S.PURAM BRANCH, COIMBATORE


                                 ஞாயிறு.. மதிய நேரத்தில் பொழிந்த மழையினூடே கடையை தேடி பயணித்தோம்.கடை என்பது நம்ம அரசாங்க கடை அல்ல.நல்ல சுவை மிகு உணவைத் தேடி.எப்பொழுதோ கோவையில் தனது கிளையை பரப்பியுள்ள ஸ்டார் பிரியாணி ஹோட்டலுக்கு சென்றோம்.பிரியாணிக்கு புகழ் ஆம்பூர்தான்.அங்கு கிடைக்கும் அதே சுவை இருக்குமென நினைத்து பிரியாணியை ஆர்டரிட்டோம்.



                       சென்னை வேலூர் ஆற்காடு மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரியாணிக்கு பாசுமதி அரிசிதான்.ஆனால் இங்கோ பாசுமதிக்கு பதில் சீரக சம்பா..சம்பாவிற்கென உண்டான சுவையும் இல்லை.சாதம் குழைந்தது போலவே இருக்கிறது. பிரியாணியின் நிறம் மட்டும் கொஞ்சம் ஒத்திருக்கிறது.மட்டன் துண்டுகள் பெரிதாக இருந்தாலும் எலும்புகளே ஆக்ரமிக்கின்றன.பிரியாணி சாப்பி்ட்ட உணர்வே இல்லை.இதற்கு கொடுத்த கத்தரி கட்டா சுவையாக இருந்தது.
பிரியாணி சொல்லிக் கொள்வது போல இல்லை.கடையில் வேலை செய்பவரிடம் அரிசி பற்றி கேட்டால் ஆம்பூரில் சீரகசம்பா தான் போடுகிறார்களாம்.அப்படி இருந்தும் சீரக சம்பாவிற்கென்ற ருசி இல்லை.வேலூர் மாவட்ட பிரியாணி நிறத்தில் தான் இவர்களின் பிரியாணியும் இருக்கிறது.ஆனால் சுவை குறைவாகவே இருக்கிறது.வேலூரில்
டூப்ளிகேட் கடைகள் நிறைய இருந்தாலும் அங்கு இதை விட கொஞ்சம் நன்றாகவே இருக்கிறது.வாணியம்பாடியில், ஆம்பூரில் ஒரு சில கடைகளில் சாப்பிட்டு இருக்கிறேன்.அங்கு சாப்பிட சுவையாகவே இருக்கிறது.ஆனால் இந்த கடையில் நன்றாக வே இல்லை.
           மழைக்கு இதமாய் காரஞ்சாரமாய் இருக்கும் என ட்ரை அயிட்டங்கள் ஆர்டர் செய்தால் அதுவும் நன்றாகவே இல்லை.இறால் ஃபிரை ஏதோ பகோடா சாப்பிட்ட உணர்வைத் தான் தந்தது.ஹைதராபாத் ஃபிரை என்று ஒன்று.அதுவும் நன்றாகவே இல்லை.அதே போல் எக் பிரைடு ரைஸ்..அரிசி அரைவேக்காட்டில்..வடிச்ச சாதத்தில் அப்படியே போட்டு பிரட்டி கொண்டு வந்தது போல இருக்கிறது.கொஞ்சம் கூட ட்ரை ஆகவே இல்லை.




                   சர்வீஸ் சுத்த மோசம்.ஆர்டர் எடுத்ததில் இருந்து பில் வந்தது வரை ரொம்ப ஸ்லோ..இந்த ஞாயிற்றுக்கிழமை பிரியாணிக்கு ஆசைப்பட்டு மோசம் போனது இந்த ஸ்டார் பிரியாணியில் தான்.விலையும் எப்பவும் போலவே கோவைக்கு ஏற்றார்போல இருக்கிறது அதிகமாய்...
இனி அந்தப்பக்கம் தலைவைத்து படுப்போம்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, October 25, 2018

கோவை மெஸ் - சஃபா பிரியாணி, பள்ளப்பட்டி, PALLAPATTI, KARUR


                                   இரண்டு நாட்களுக்கு முன்பு பழனி சென்றுவிட்டு கரூர் வந்தேன்.வரும் வழியில் பள்ளபட்டியில் பிரியாணி சாப்பிடலாம் என்று அங்கு வண்டியை திருப்பினேன்.முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஊர் என்பதால் பிரியாணியும் சுவைமிக்கதாக இருக்கும் என்று நம்பி(?)ப் போனேன்.பள்ளபட்டியில் ஒருவர்க்கு இரண்டு பேராய் விசாரித்தேன்.பிரியாணி எங்கு நன்றாக இருக்கும் என்று.இருவரும் சொல்லி வைத்தது போல ஒரே கடையை சொன்னனர்.அந்த ஊரில் இருப்பதே மொத்தம் மூன்றுகடைகள் தான் போல.மூன்றில் இது நன்றாக இருக்கும் என்று சொல்லியதால் அங்கு போனேன்.
                                             கடை நல்ல கூட்டமாகத்தான் இருந்தது.குல்லா போட்டா பாய்களில் ஒருவர் கல்லாவிலும், ஒருவர் சப்ளையிலும் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தனர்.(முஸ்லீம் கடையாமாம்..)கடை முன்பே தோசைக்கல்லில் புரோட்டா வெந்து கொண்டிருந்தது.காடை, சிக்கன் எல்லாம் மசாலாவில் ஊறி எண்ணையில் பொறிவதற்கு காத்துக் கொண்டிருந்தன. சின்ன கடைதான்.பதினைந்து பேர் அமரக்கூடிய இடவசதி.அனைத்து டேபிள்களும் நிரம்பியிருந்தன.அப்போது காலியான ஒரு சேரில் அமர, பிரியாணியை ஆர்டரிட்டேன்.
                                                   பெரும்பாலோனோர் புரோட்டா சிக்கன் குருமாவை காலி செய்து கொண்டிருந்தனர்.பிரியாணி வந்தது.சம்பா அரிசிதான் அரைகுறை வேக்காட்டில்.
பிரியாணிக்குண்டான மணமும் குறைவுதான்.சிக்கன் துண்டும் மிருதுவற்று இருந்தது.அதற்கு கொடுத்த சிக்கன் குருமாவும் சரியில்லை.கொஞ்சம் வரைக்கும் சாப்பிட்டேன்.முடியவில்லை.அப்புறம் கடைக்காரை கூப்பிட்டு அரிசியின் பதத்தை காட்டிவிட்டு, நம்பி வந்தேன் நல்லாவே இல்லீங்களே என சொல்லி விட்டு பணம் தந்து விட்டு கிளம்பினேன்.


                           அறுபது ரூபாய்க்கு என்ன ஹைதராபாத் பாரடைஸ் பிரியாணியா தரமுடியும்.விலை குறைச்சலா இருந்தாலும் சுவையை தூக்கலா தரமுடியும்.ஆனா விலையும் குறைவு டேஸ்டும் சுத்தமும் இல்லாம இருக்கு.மற்ற இரு கடைகளை முயற்சிக்கலாமா என யோசித்தேன்.முன்பே இந்த கடை நன்றாக இருக்கும் என்று சொன்னதை நம்பி வந்ததால் இந்த நிலைமை.அந்த கடைகள் எப்டியிருக்குமோ..எதற்கு ரிஸ்க்..பேசாமல் கரூர் போய் கரம் சாப்பிட்டுக் கொள்ளலாம் என நினைத்து வண்டியை கிளப்பினேன்.முஸ்லீம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதி..ஒரு பிரியாணி கூட டேஸ்டா கிடைக்க மாட்டிக்குதே...பீஃப் கூட கிடைக்கல அங்கு...தள்ளுவண்டில ஜம்ஜம் பிரியாணின்னு ஒன்ணு நின்னுச்சு..பீஃப் வறுவல் கிடைக்கும் போட்டிருந்தது. பேசாம அங்கயும் ஒரு கை பார்த்திருக்கலாம்...
கடைசியா கரூர் வந்து முட்டை கரம் டேஸ்ட் பார்த்ததில் தான் மனமும் வயிறும் கொஞ்சம் ஆசுவாசமடைந்தது.



நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Saturday, March 25, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் ஜலால் ஃபேமிலி ரெஸ்டாரண்ட், மட்டன் பிரியாணி, கருங்கல், நாகர்கோவில்

               கேரளா சென்றுவிட்டு தமிழ்நாட்டுக்குள் களியக்காவிளை வழியாக உள்நுழைந்தோம்.அங்கிருந்து மார்த்தாண்டம் வழியாக நாகர்கோவில் சென்றுகொண்டிருக்கும் போது தான் குழித்துறை அருகில் தேங்காய்பட்டிணம் என்கிற ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் மீன்பிடி துறைமுகத்தினை பார்த்துவிட்டு வருகையில் மதியம் ஆகி இருக்க, அங்கேயே புதுக்கடை என்கிற இடத்தில் ஒரு ஹோட்டலில் பிரியாணி நன்றாக இருக்கும் என சொல்ல, அருகிலிருந்த உள்ளூர்க்கார நண்பர் கருங்கல் என்கிற ஊரில் பிரியாணி நன்றாக இருக்கும் அங்கே செல்லுங்கள் என வழியனுப்பி வைத்தார்.

              புதுக்கடையில் இருந்து ஒரு பத்து நிமிட பயணத்தில் கருங்கல் என்கிற ஊரை அடைந்தோம்.சின்ன ஊர்தான்.நாகர்கோவிலில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நின்று செல்லக்கூடிய ஒரு பேருந்து நிலையம் அருகில் இந்த ஹோட்டலைக் கண்டோம்.முகப்பில் ஒரு சின்ன ஸ்வீட் ஸ்டால் போல இருக்கிறது.ஆனால் கடைக்கு உள்ளே நுழைந்தால் மிக நீண்டு பரந்து இருக்கிறது. யூனிபார்ம் போட்ட சர்வர்கள் நிறைய பேர்கள் இருக்க, ஒவ்வொரு டேபிளிலும் குடும்பம் குடும்பமாய் நிறைந்திருந்தனர்.இண்டீரியர் மிக மெலிதாய் கண்ணை கவரும் வகையில் இருக்க, ஒருபுறத்தில் பிரியாணி அண்டாக்கள் சுடச்சுட இருக்க, அதிலிருந்து ஆவிபறக்க சூடாய் பிரியாணியை தட்டுக்களில் நிரப்பி டேபிளுக்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர்.
நாங்கள் உள்நுழைந்ததும் வரவேற்ற சர்வர் டேபிளில் அமரவைத்து ஆர்டரை கேட்க, இங்கு என்ன ஸ்பெசலோ அதை கொண்டு வாருங்கள் என சொல்ல, பிரியாணியில் சிக்கன், மட்டன் இருக்கிறது, எது வேண்டும் என கேட்க, மட்டனை சொன்னோம்.

மட்டன் பிரியாணி பின்னே வர மணம் முன்னே வந்து ஆளைத்தூக்கியது.கூடவே மட்டன் கிரேவியும் சில பல துண்டுகளுடன் வந்தது.கேரள தமிழ்நாடு கூட்டு பிரியாணிபோல் வெள்ளை நிற பாசிமதி அரிசியுடன், கொஞ்சம் பொரித்த வெங்காயம் துண்டுகள் மேலே பரவியும், ஓரிரு கலர்களுடன் பாசுமதி அரிசி மணம் மிகுந்து இருக்க, அவித்த முட்டை ஒன்றும் பிரியாணியில் ஒளிந்திருக்க, பிரியாணியின் மத்தியில் மறைந்திருந்த மட்டன் துண்டுகள் எங்கள் கைவிரல்களை எதிர்பார்த்து காத்திருக்க, மணம் நாசியை துளைக்க, நாவின் சுவை மொட்டுகள் விரிய ஆரம்பித்தன.
நாங்கள் எங்கள் வேட்டையை தொடர ஆரம்பித்தோம்.கொஞ்சம் விள்ளல் எடுத்து வாயில் போட, அப்படியே பிரியாணியின் மணம் சுவை நம்மை ஆட்கொண்டது.கைகளில் அதன் மணம் ஏற ஆரம்பித்தது.நாவின் சுவை நரம்புகள் நாட்டியம் ஆட ஆரம்பித்தது.ஐநா சபையில் ஆடிய ஐஸ்வர்யா வின் நடனம் போல் இல்லாமல் மேடை முழுக்க பரவி ஆடும் நம்ம ஊர் குத்தாட்டம் போல் ஆடத்துவங்கின.


               பஞ்சு போல் வெந்திருந்த மட்டன் துண்டுகள் இன்னும் சுவையை கூட்டி நாவின் நரம்புகளின் ஆட்டத்தினை உசுப்பேத்தியது.
கைகளில் மட்டன் சுவையின் மணமும், பிரியாணியின் மசாலா மணமும் மிகவும் ஏறி இருந்தது.பரபரவென கையும் வாயும் இயங்க, தட்டிலிருந்த பிரியாணி மளமளவென காலியாகிக் கொண்டிருந்தது.அவ்வப்போது பிரியாணியின் இலவச இணைப்பாய் வந்த மட்டன் கிரேவி, கொழுப்பு மிகுந்த கறியுடன் நன்கு சுவையாய் இருக்க, அதுவும் ஒரு சேர காலியாகிக் கொண்டிருந்தது.

கை கழுவிய பின்னரும், கைகளில் வாசம் இருக்க, சுவையான பிரியாணியை சுவைத்த திருப்தி ஏற்பட்டது.
குடும்பம் குடும்பமாய் மக்கள் உள்ளே நுழைவதும், திருப்தியாய் உண்ட பின் வெளியேறுவதும் இயல்பாய் நடந்து கொண்டிருந்தது.
ஞாயிறு ஆதலால் செம கூட்டம் வேறு.பக்கத்திலுள்ள ஊர்க்காரர்கள் சமைக்க மாட்டார்கள் போல, மலையாளம் கலந்த தமிழில் சம்சாரித்தபடியே குடும்பம் குடும்பமாய் வந்து கொண்டிருந்தனர்.
நாங்கள் திருப்தியாய் உண்டு முடித்து பில்லை செட்டில் செய்து விட்டு மனதிருப்தியுடன் வெளியேறினோம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்







இன்னும் கொஞ்சம்...

Monday, September 12, 2016

கோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை

                           ஃபேஸ்புக்ல MUDPOT அப்படிங்கிற ஹோட்டலோட அப்டேட்கள் ரொம்ப வந்துட்டு இருந்துச்சு.ஏரியா எங்க இருக்குன்னு பார்த்ததில் நம்ம காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட்ல இருக்குன்னு தெரிந்ததும் அங்க இன்னிக்கு ஆஜரானோம்
                    அன்னபூர்ணா கெளரிசங்கர் பக்கத்துல தான் இந்த ஹோட்டல்.சுத்தியும் பிளக்ஸ் பேனர் அதில் விதவிதமாய் மெனுக்களின் கலர்புல்லான படங்கள் என நம் நாவையும் கண்ணையும் பதம் பார்த்தன.கேரளா பாணியில் இண்டீரியர் பண்ணி இருக்காங்க.மூங்கில் தடுப்புகள் தொங்கவிட்டு ஒரு கேரள உணவகமாக அமைத்து இருக்காங்க.உள்ளே நுழைந்ததும், அப்படியே ஷாக்காகிப் போனோம். மொத்தமும் மூணே டேபிள் தான்…டேபிள் பார்க்க மிக அழகாய் மூங்கிலில் செய்யப்பட்டு இருந்தது.அமர்வதற்கு முன்னால் வாஷ் ரூம் எங்க என்று கேட்டதும், வெளியே இருக்கிறது என்று சொல்லவும், இன்னும் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டது..சரி..சமாளிப்போம் என்றெண்ணி வெளியே வந்து ஹோட்டலை அரை சுற்று சுற்றி, வந்து கை கழுவி விட்டு மீண்டும் உள்ளே வந்தமர்ந்தோம்.
என்ன ஸ்பெசல் என்று கேட்டதும், எல்லா பிரியாணியும் இருக்கிறது என மலையாளத்தில் பறைய, சிக்கன் மலபார் பிரியாணி ஆர்டர் பண்ணினோம்.அடுத்து மீன் பொழிச்சது என்ன இருக்கிறது என கேட்டதில் கரிமீன், அயிலை என பதில் வந்தது.மீன் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என கேட்டதும், உறைந்து கிடந்த ஒரு கரிமீனை எடுத்து வந்து காட்டினார்.காவிரி ஆற்றில் ஃப்ரஷ் ஆக பிடித்து நன்றாய் உப்பு மிளகிட்டு சாப்பிட்ட ஜிலேபி மீனை இங்கு உறைந்து பனிக்கட்டியாக இருப்பதைப் பார்த்தவுடன் மீன் சாப்பிடும் ஆசையே போய்விட்டது. விலையை கேட்டவுடன், ரூ 550 என்று சொல்லவும், மீன் என்று உச்சரிக்க கூட மனமில்லை.இம்போர்ட்டடு மீன் என்று சொல்லிப்பார்த்தார்…சத்தியமாய் காது கேட்கவில்லை எனக்கு அப்போது. சரி மீன் வேண்டாம், சிக்கன்ல ஏதாவது கொடுங்க என்றதும், சிக்கன் 65 தருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார்.மெனு கார்டு என்பது இல்லை.ஐபேட்டை தூக்கிவந்து படம் காட்டுகிறார்கள்...

பாக்கு மட்டையில் அழகாய் வைக்கப்பட்ட சிக்கன் பிரியாணி வந்தது.கூடவே டாஸ்மாக் டம்ளரும்.பிளாஸ்டிக் டம்ளரில் நீர் ஊற்றி வைத்துவிட்டு, கொஞ்சம் ஊறுகாயும், ஆனியன் ரைத்தாவும் வைத்துவிட்டு சென்றார் சர்வர்.
நன்கு கலர்புல் சாதமாய், கிராம்பு ஏலக்காய் மணத்துடன் சாதம் இருக்க, இரு அரை முட்டையுடனும், ஒரு பீஸ் சிக்கன் துண்டு மற்றும் கொஞ்சம் கிரேவியானது கலர்புல் சாதத்தினுள் ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது.சாதம் சாப்பிட சுவையாகத்தான் இருந்தது அதில் இருந்த உலர் திராட்சைகளால்.ஆனால் மலபாருக்குண்டான டேஸ்ட் மிஸ் ஆகி இருந்தது. மேலும் அதில் இருந்த சிக்கன் துண்டோ மிகவும் கெட்டிப்பட்டு இருந்தது.மென்மையாய் இருக்கும் சிக்கன் கூட மெல்லக்கூட முடியாதபடி சவுக் சவுக்கென இருக்க, வெறும் சாப்பாட்டுடன் கிரேவி மட்டுமே ஒத்துழைத்தது.அவ்வப்போது ஊறுகாய் தொட்டுக்கொள்ள, சாதம் கொஞ்சம் காரமாய் தெரிந்தது.
அடுத்து வந்த சிக்கன் 65 தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.சிக்கன் மிகவும் கரடு முரடாய், மென்மையாய் இருக்க கூடிய சிக்கன்,மிகவும் கெட்டியாய், பிய்க்க கூட முடியாமல், அப்படியே கஷ்டப்பட்டு பிய்த்து வாயில் போட்டு மெல்ல கடைவாய்ப்பற்கள் அனைத்தும் வலிக்கின்றன.அந்தளவுக்கு சிக்கன் மோசம்.சிக்கன் 65 என்று சொல்லிவிட்டு இரண்டு லெக்பீஸை தள்ளிவிட்டது எந்தவித சாப்பாட்டு நியாயம் என்று தெரியவில்லை.
சிக்கனை முடிந்தளவு உள்ளே தள்ள போராடினேன்..முடியவில்லை.பிறகு அப்படியே தட்டில் வைத்து விட்டு, பரிமாறியவரிடம் சிக்கனை காண்பித்து, பிய்க்க கூட முடியவில்லை, கறி கெட்டிப்பட்டு இருக்கிறது,  ரொம்ப நேரம் நன்றாக எண்ணையில் வச்சி  செஞ்சி (பொறிச்சி) இருக்கீங்க என்பது மட்டும் தெரிகிறது, அது மட்டுமல்ல சிக்கன் டேஸ்டே இல்லை என்று சொல்லிவிட்டு கை கழுவினேன்..
    பில் வந்த போது கடை நன்றாக அமைத்து இருக்கிறீர்கள், ஆனால் கை கழுவும் இடத்தினை மட்டும் வெளியில் அமைத்து இருக்கிறீர்கள் அதான் மிகப்பெரும் மைனஸ் பாய்ண்ட்.அது மட்டுமல்ல, நன்கு விளம்பரப்படுத்தி இருக்கிறீர்கள் பேஸ்புக்கிலும், பேப்பரிலும்.ஆனால் அந்த அளவு வொர்த்தான டேஸ்ட் இல்லை என்று சொல்லிவிட்டு இனி எப்பொழுதும் இந்தக்கடையை திரும்பிப்பார்க்க கூடாது என்றெண்ணியபடியே வெளியேறினோம்.
           கடையின் இண்டீரியர் மற்றும் விளம்பரங்களில் மட்டும் தான் கவனத்தினை வைக்கிறார்கள்.டேஸ்ட்டில் சுத்தமாக கவனம் வைப்பது இல்லை.ஏதாவது ஹோட்டலில் வேலை செய்துவிட்டு உடனடியாக பணத்தினை புரட்டி எப்படியாவது ஹோட்டலை ஆரம்பித்து விடுகிறார்கள்.பிறகு கஸ்டமர் இல்லாமல் கடை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்…
ஃபேஸ்புக் கில் பகிர்வது நல்ல மார்க்கெட் டிரண்ட் என்பது மட்டும் தெரிகிறது.
உங்களுக்கும் இதே மாதிரி அனுபவம் வேண்டுமென்றால் தாராளமாக செல்லவும்..

              விலை மிக அதிகம்.பஸ்ஸ்டாண்ட்ல வாடகைக்கு இடம் பிடிச்சு கடை நடத்தினா கொஞ்சமாவா பில் பண்ணுவாங்க....
பேசாம வீட்டிலேயே ஒரு கிலோ கறியை வாங்கி பகார்டியோடு கொண்டாடி இருக்கலாம்…




நேசங்களுடன்
ஜீவானந்தம்.



இன்னும் கொஞ்சம்...

வீட்டுச்சமையல் - சும்மா ஒரு டைம்பாஸ் - 1

சும்மா ஒரு பொழுது போக்குக்காக வீட்டில் சமையல் பண்ண ஆரம்பித்தது, இப்போ நிரந்தரமாகி விட்டதுன்னு நினைக்கிறேன்.ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மட்டன், சிக்கன் , மீன் என வகை வகையாய் வாங்கி சமைக்க ஆரம்பித்து கூடவே நம்ம பகார்டியையும் மிக்ஸ் பண்ணியதால் இப்போது அதிகம் வெளி ஹோட்டலுக்கு செல்வதில்லை.ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்வதோடு அடங்கி விடுகிறது.இனி வாராவாரம் நமது பிளாக்கில் ஞாயிறு சமையல் இடம்பெறும்.சும்மா டைம்பாஸ் க்காக.....
கோவை நேர வாசகர்களுக்காக இனி புதிது புதிதாய் சமைத்து வெளியிடப்படும்..சாப்பிடுவது நான் மட்டுமே....

ஆட்டு நுரையீரல்
சிக்கன் லெக் பீஸ்


காவிரி ஆத்து வழுக்கான் கெண்டை.


நேசங்களுடன்
ஜீவானந்தம்..
இன்னும் கொஞ்சம்...

Sunday, March 22, 2015

கோவை மெஸ் - ராய்பூர் தர்பார் ரெஸ்டாரண்ட், திருப்பத்தூர்

              திருப்பத்தூரில் தான் கடந்த ஒரு மாதமாக மையம் கொண்டிருப்பதால் நிறைய ஹோட்டல்களில் சாப்பிடும் அனுபவம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
திருப்பத்தூர் அருகே பிரியாணிக்கு புகழ்பெற்ற மிக முக்கியமான சிறு குறு பெரு நகரங்களான வாணியம்பாடி, ஆம்பூர் வேலூர்  இருப்பதால் திருப்பத்தூரிலும் அதே போன்ற சுவையினை தேடி அலைந்த போது தான் கண்ணில் சிக்கிய ஹோட்டல் ராய்பூர்.
               ஹோட்டல் கொஞ்சம் விஸ்தாரமாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் பொது ஹால், ஏசி ஹால் என பிரித்து வைத்து இருக்கின்றனர். திருப்பத்தூரில் அடிக்கின்ற வெயிலுக்கு ஏசிதான் பெஸ்ட் என்றாலும் நாங்கள் போன அன்று ஏசியின் தற்காலிக சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
எனவே காற்றோட்டமாக பொது ஹாலிலேயே அமர்ந்தோம்.ஹால் காற்றோட்டமாக இருந்தாலும் டேபிள்கள் மக்களால் நிரம்பியிருந்தது.


             தந்தூரி சிக்கன், சிக்கன் 65, மஞ்சூரியன், மட்டன் பிரியாணி, காடை ரோஸ்ட் என அசைவமும் மஸ்ரூம் 65, பேபிகார்ன், என ஒரு சில சைவ மெனுக்களும் விளம்பர போர்டுகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. 

                    மெனு கார்டு தந்ததும் சிக்கன் பிரியாணி தான் ஆர்டர் பண்ணினோம்.. நன்கு வாசத்துடன் பிரியாணி பிளேட்டில் வந்து இறங்கியது. பொலபொலவென்று தங்க நிறத்தில் மின்னிய பாசுமதி அரிசி பார்க்கும் போதே பசியை அதிகப்படுத்திக்கொண்டிருந்தது

நீள நீளமான பாசுமதி அரிசியுடன் சிக்கன் கலந்து ஒருவித சுவையை ஏற்படுத்தி நம் பசியை தூண்டிவிட்டிருந்தது.ஒரு தட்டு நிறைய பிரியாணியுடன் சிக்கன் பீஸ்கள் நிறைந்து தட்டை நிரப்பி இருந்தது.கொஞ்சம் எடுத்து வாயில் வைக்கவும் பிரியாணியின் சுவை நம்மை உள்ளுக்குள் இழுக்கிறது.சாப்பிடுவதே தெரியவில்லை.அவ்வளவு அதிகமாக தெரிந்த பிரியாணி சீக்கிரம் காலியாகி விட்டிருந்தது.இடையே சிக்கன் பீஸ் நன்றாக வெந்து மெலிதாய் பிரிந்து விட்டிருந்தது.உப்பும் உரைப்பும் செமயாக இருந்தது.
கூடவே ஆர்டர் செய்திருந்த தந்தூரி சிக்கனும் உடனே டேபிளுக்கு வர அதுவும் காலியாக ஆரம்பித்து விட்டிருந்தது.


தந்தூரி நன்றாக மெது மெதுவென்று இருக்க வாயில் வைக்க கரைந்து ஓடியது. எலும்பு மட்டும் அவ்வப்போது வெளியே வந்து விழுந்தது வாயிலிருந்து.
கூட வந்த நண்பரின் பையனுக்காக சிக்கன் நூடூல்ஸ் ஆர்டர் செய்து இருந்தோம்.அதை கொஞ்சம் டேஸ்ட் பார்த்ததில் அதுவும் நன்றாக இருந்தது.

கடைசியாக வந்த மெனு காடை...ஜப்பான் காடை....நன்கு செக்க செவந்த நிறத்தில் கால்களை பிய்த்து தின்பதற்கு ஏற்றப்படி மல்லாந்து கிடந்தது.
நன்கு மொறு மொறு வென்று இருக்கிறது கடித்து தின்பதற்கு.சுவையும் அபாரம்.

மொத்தத்தில் அனைத்தும் சூப்பர்.
பிரியாணி செம டேஸ்ட்.உதிரி உதிரியாக மிக சுவையாக இருக்கிறது.அந்த பாசுமதி அரிசி செம டேஸ்ட்.வட மாவட்டங்களில் மட்டும் இந்த பாசுமதி அரிசி பிரியாணிக்காக  பயன்படுத்துகின்றனர்.சுவை நன்றாக இருக்கிறது.
எல்லாம் சாப்பிட்டு பில் மொத்தம் 450 தான் வந்தது.
திருப்பத்தூர் போனீங்கன்னா ஒரு கை பாருங்க….
அடுத்து ஆம்பூர் போறேன்….அங்க ஊர்ப்பட்ட பிரியாணி கடை இருக்கு.எல்லாம் டேஸ்ட் பண்ணிட்டு திரும்ப வர்றேன்..
நேசங்களுடன்
ஜீவானந்தம்.




இன்னும் கொஞ்சம்...