Thursday, April 6, 2017

கோவை மெஸ் - ஜே பி ரெஸ்டாரண்ட் (JB restaurant ),பொன்மேனி, மதுரை - 16

                  கேரளா போய்ட்டு ரிடர்ன் தமிழ்நாட்டு பார்டர் வழியாய் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை வந்தபோது மழை தூற ஆரம்பித்தது. இரவும் கவிழ்ந்திருக்க, பசியை உணர ஆரம்பித்தது வயிறும் மனமும்.சாப்பிடுவதற்கான ஹோட்டலை அருகிலேயே தேர்ந்தெடுப்போம் என்றெண்ணி மதுரையில் உள்ள நண்பர் பிரகாஷை அழைக்க, அவரோ நானும் பக்கத்தில் தான் இருக்கிறேன், வந்துவிடுகிறேன் என்று சொல்ல, அவருக்காக காத்திருந்தோம்.கடைவீதியில் மதுரை மண்ணின் அம்மணிகள் அந்த மழை நேரத்தில் தென்றலாய் வீச மனம் குளிர் எடுக்க ஆரம்பிக்க, பசி மறைந்து போக நினைக்கையில் தமிழ்வாசி பிரகாஷ் வரவும், அவரும் நனைய ஆரம்பித்தார்.பின் எப்பவும் போல வழக்கமான நலம் விசாரிப்புகளில், எங்கு சாப்பிட போலாம் என்கிற அழைப்பும் இருந்தது.
                   அடுத்த சில நிமிடங்களில் பொன்மேனியில் மெயின் ரோட்டை ஒட்டி பிரியும் ஒரு சின்ன ரோட்டில் இருந்தோம்.கடை முன்பு கூட்டம்.தகர கொட்டகை, மெலிதான விளக்கு வெளிச்சம்.டாஸ்மாக் கடை போன்ற அமைப்பு.ஒருவேளை பழக்கதோஷத்தில் நம்ம கடைக்குத்தான் அழைத்து வந்துவிட்டாரோ என்று நினைக்கையில் கொத்து புரோட்டாவினை தோசைக்கல்லில் கொத்தும் சத்தம் கணீரென்று வர, அட …ஹோட்டலுக்குத்தான் வந்து இருக்கிறோம் போல என்று நினைத்தபடியே உள்ளே நுழைந்தோம்.

                செம கூட்டம். வண்டிகள் வரிசை கட்டி காத்திருக்க, டேபிள்கள் நிரம்பி வழிகின்றன.ஒவ்வொரு டேபிளிலும் கோழிகள் தந்தூரியாகவோ, கிரில்லாகவோ மாறி வாடிக்கையாளர்கள் கையிலும் வாயிலும் இருந்ததை பார்த்தபடியே எங்களுக்கான டேபிளில் அமர்ந்தோம்.
               இரவு வெகுநேரம் ஆகி இருந்ததால் நிறைய அயிட்டங்கள் மிஸ்ஸாகி இருந்தன.கோழியில் தந்தூரி, சில்லி, க்ரில் இவை மட்டுமே இருந்தன.ஆட்டுக்கறியில் சில பார்ட்ஸ்கள் தீர்ந்துவிட்டு இருந்தன.ஆட்டின் அத்தனைப் பகுதியிலும் வெரைட்டி வெரைட்டியாய் கிடைக்கிற இடம் மதுரைதான்.இங்கும் அப்படித்தான்.நேரம் ஆனதால் எல்லாம் காலியாகிவிட்டிருந்தது.
                    சரி இருப்பதை கேட்டு சாப்பிடலாம் என்று சர்வரை அழைக்க, ஓடோடி வந்து வாழை இலையை பரப்பி வைத்துவிட்டு, நீர் தெளித்துவிட்டு, மூன்று கப்புகளில் மட்டன், சிக்கன் குழம்பு, சட்னி வைத்து விட்டு, கறி தோசை, சிக்கன் தோசை இருக்கிறது.மற்றபடி தந்தூரி, கிரில் தான் என சொல்ல, கறி தோசை மட்டும் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தோம்.

                காத்திருந்த நேரத்தினை ஏன் வீணாக்க வேண்டும் என்று கடையை நோட்டமிட்டதில், டேபிள்கள் அனைத்தும் ஆண்களால் நிரம்பி இருந்தது.பேம்லி ரூம் என்று தனியாக இருக்கிறது.அங்கு பெண்கள் குழந்தைகள் என நிரம்பி இருந்தனர்.மாஸ்டர் வெகு மும்முரமாய் தோசைக்கல்லோடு விளையாண்டு கொண்டிருந்தார்.கல்லில் இருந்து எழும் ஆவியின் புகையில் கறியின் மசாலா மணமும், மாவின் வேகும் மணமும் கடை எங்கும் பரவிக்கொண்டிருந்தது, கூடவே அவரின் உழைப்பின் மணமும்.

                ஒவ்வொரு டேபிளிலும் இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாய் அந்நிய பானங்கள் இடம் பெறாது, பொவண்டோ மற்றுமே இருக்க, சிக்கன் தந்தூரி மற்றும் கிரில்க்கு இணையாய் இந்த பொவண்டேவினை பருகி கொண்டிருந்தனர் (இது என்ன டேஸ்ட்டுன்னு தெரியல.நல்ல காரம் சாரமா சாப்பிடற நேரத்தில கேஸ் நிறைந்த பானத்தினை பருகி வயிற்றை நிரப்புவது…)
               கொஞ்ச நேரத்தில் எங்களுக்கு உண்டான தோசை இலையை வந்தடைய, எங்கள் வேலையை ஆரம்பித்தோம்.சூடு நிறைந்த கறி தோசை இலையை பொசுக்க ஆரம்பிக்க, மசாலா மணத்தோடு இலவச இணைப்பாய் வாழை இலையின் சுவையும் ஒன்று சேர மணம் நம் நாசியை துளைக்க, ஆட்டோமேட்டிக்காய் கை இயங்க, தோசையில் ஒரு விள்ளலை பிய்த்து உள்ளே தள்ள, ஆஹா…என்ன ருசி…கூடவே தேங்காய் சட்னியும், மட்டன் குழம்பும் சேர்ந்து தோசையை ஊற வைக்க, எல்லாம் ஒரு புது சுவையினை கொடுக்க, எளிதாய் பிய்த்து உள்ளே தள்ளிக்கொண்டிருந்தோம்.

எலும்பில்லாத மட்டன் கறியும், மசாலாவும் தோசையில் விரவி கிடக்க, முட்டை கலந்த தோசையில் இரண்டும் ஒன்று சேர்ந்து நம் பசியை அதிகப்படுத்த அதை அவ்வப்போது தோசையால் ஆற்றுப்படுத்தி கொண்டிருந்தோம்.ஒரே தோசை தான்.நல்ல ஹெவியாய், தடித்து நல்ல மணத்துடன் இருக்க சீக்கிரம் காலியாகிப்போனது.அதே நேரத்தில் வயிறும் நிறைந்து போனது.பிரகாஷ் சிக்கன் கறி தோசையோடு போராடிக்கொண்டிருக்க, நாங்கள் அடுத்து குருமா கலக்கி ஆர்டர் செய்து முன்னேறிக்கொண்டிருந்தோம்... கலக்கியும் மிக டேஸ்டாக இருந்தது.

லேட்டாய் வந்ததினால் நிறைய அயிட்டங்கள் மிஸ் ஆகிவிட்டன.அதை சாப்பிடவேண்டும் என்பதற்காகவே அடுத்தமுறை செல்லவேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.பார்ப்போம்.

காளவாசல் டூ பழங்காநத்தம் பைபாஸ் செல்லும் வழியில் பொன்மேனி, தினமலர் அவென்யூ கீர்த்தி ஆஸ்பிடல் எதிரில் இருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம்.



1 comment:

  1. எங்கள் ஊர் உணவகத்தை அறிமுகப்படுதியதற்கு நன்றி சார்.. கோனார் கடை கறிதோசை இங்கு பிரபலம்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....